Published : 23 Apr 2024 03:05 PM
Last Updated : 23 Apr 2024 03:05 PM

குருப் பெயர்ச்சி: கன்னி ராசியினருக்கு எப்படி? - 01.05.2024 முதல் 13.04.2025 வரை

கனிவான விசாரிப்பால் மற்றவர்களையும் கவர்ந்திழுப்பவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து உங்களுக்கு பணத் தட்டுப்பாட்டையும், பிள்ளைகளால் பிரச்சினைகளையும், குடும்பத்தில் நிம்மதியற்றப் போக்கையும் உருவாக்கிய குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை 9-ம் வீட்டில் இருக்கிறார். குருபகவான் 9-ம் வீட்டுக்குள் நுழைவதால் உங்கள் வாழ்க்கையில் பல திருப்பங்களும், யோகங்களும் அடுத்தடுத்து நடக்கும்.

ஈகோ பிரச்சினையாலும், உறவினர்களின் சூழ்ச்சியாலும் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வருமானம், வசதி, வாய்ப்புகள் கூடும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் நோய் விலகும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். அழகு, ஆரோக்கியம் கூடும். கணவர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார். பல வரன் வந்தும் ஒரு வரனும் அமையவில்லையே என்று தவித்த உங்களுடைய மகளுக்கு நல்ல வரன் அமையும். திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள்.

பிள்ளைகளிடம் இருந்து வந்த பிடிவாதப் போக்கு நீங்கும். மாமனார், மாமியார் வகையில் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். நாத்தனார், மச்சினரின் உதாசீனப் போக்கு மாறும். உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். குரு 3-ம் வீட்டை பார்ப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள். சகோதர பாசம் அதிகரிக்கும். குரு 5-ம் வீட்டை பார்ப்பதால் நிம்மதி உண்டு. ஆழ்ந்த உறக்கம் வரும். செல்வாக்குக் கூடும்.

குருபகவானின் நட்சத்திர பயணம்: 1.5.2024 முதல் 13.6.2024 வரை உங்கள் விரயாதிபதி சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். இடவசதியில்லாத வீட்டிலிருந்து நல்ல வீட்டுக்கு மாறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

13.6.2024 முதல் 19.8.2024 வரை மற்றும் 28.11.2024 முதல் 10.4.2025 வரை உங்களின் லாபாதிபதி சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர் பணவரவு உண்டு. ஷேர் லாபம் தரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு.

சொத்துப் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். அடுத்தடுத்த விஷேசங்கள், உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். சிலர் இருக்கும் வீட்டில் கூடுதல் அறை கட்டுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வழக்குகள் சாதகமாகும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும்.

20.8.2024 முதல் 27.11.2024 வரை மற்றும் 10.4.2025 முதல் 13.4.2025 வரை உங்களின் திருதிய அட்டமாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் அடுத்தடுத்த பயணங்களால் அலைச்சல் இருக்கும்.

இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு உஷ்ணத்தால் உடல்நலக் குறைவும், சிறு விபத்தும் வந்து நீங்கும். அனாவசியமாக கோபப்பட்டு யாரிடமும் கெட்ட பெயர் எடுக்காதீர்கள். புதிதாக சொத்து வாங்குவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும்.

வியாபாரத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்த நிலை மாறும். அதிரடி லாபம் உண்டு. ஷேர் மூலமாகவும் பணம் வரும். புதிய பங்குதாரரை சேர்ப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

அதிகாரிகள் உதவுவார்கள். அதிக சம்பளத்துடன் புது வேலையும் கிடைக்கும். ஆக மொத்தம் பலவிதப் பிரச்சினைகளாலும் வாடி, வதங்கிப் போயிருந்த உங்களின் வாழ்வில் வசந்தத்தை உண்டாக்குவதாக இந்த குரு மாற்றம் இருக்கும்.

பரிகாரம்: வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் – பேரம்பாக்கம் செல்லும் வழியில் உள்ள தக்கோலம் எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில் ‘உத்கடி’ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் அர்ச்சனை செய்து, தீபம் ஏற்றி வணங்குங்கள். மூட்டை தூக்கும் தொழிலாளிகளுக்கு உதவுங்கள். எதிலும் வெற்றி கிட்டும்.

(நிகழும் குரோதி வருடம் சித்திரை மாதம் 18-ம் நாள், புதன்கிழமை, 01.05.2024 கிருஷ்ண பட்சத்து, அஷ்டமி திதி, திரு வோண நட்சத்திரம், சுபம் நாமயோகம், பாலவம் நாமகரணத்தில், நேத்திரம் ஜுவனம் நிறைந்த சித்தயோக நன்னாளில் பிரகஸ்பதியாகிய குருபகவான் சர வீடான மேஷ ராசியி லிருந்து ஸ்திர வீடான ரிஷப ராசிக்குள் மதியம் 1 மணிக்கு பெயர்ச்சியாகிறார்.)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x