Last Updated : 16 Apr, 2024 09:01 PM

 

Published : 16 Apr 2024 09:01 PM
Last Updated : 16 Apr 2024 09:01 PM

மகரம் ராசி - குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 முழுமையாக

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) சனி பகவானை ராசிநாதனாகக் கொண்ட மகர ராசி அன்பர்களே! நீங்கள் வாதாடுவதில் வல்லவர்கள். கிரகநிலை - சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது பாக்கிய ஸ்தானம் - லாப ஸ்தானம் - ராசி ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு: நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீகுரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 18-ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 01.05.2024 அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும் - புதன்கிழமையும் - திருவோண நக்‌ஷத்ரமும் - சுப நாமயோகமும் - பவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

மகரம் ராசியினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த குரு பெயர்ச்சியில் மந்தமான நிலை மாறும். தெளிவாக திட்டமிட்டு உடனுக்குடன் செயல்படுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு மன உற்சாகத்தையும் தைரியத்தையும் கொடுப்பீர்கள். இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வசீகரமான பேச்சும் மிடுக்கான நடையும் உங்களின் தன்னம்பிக்கையைப் பறைசாற்றும். கிடைக்க வேண்டியவை தானாகவே கிடைத்துவிடும்.

வழக்கு விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். குழந்தைகள் பிறந்து வம்சம் விருத்தியாகும். குடும்பத்தில் உற்றார், உறவினர்கள் முழுமையான ஆதரவைத் தந்து உங்களின் கைகளை பலப்படுத்துவார்கள். அதேநேரம் எதிலும் அவசரமும் பரபரப்பும் வேண்டாம். தவறு செய்பவர்களிடம் கூட்டு சேர வேண்டாம். அவர்களிடமிருந்து சுமுகமாக விலகிவிடவும். கடினமான உழைப்புக்கு நடுவே சற்று ஓய்வெடுத்துக்கொள்ளவும். மற்றபடி முன் அறிமுகம் இல்லாதவர்களும் உங்களுக்கு உதவுவார்கள்.

பண வசதிக்கு எந்தக் குறைவும் ஏற்படாது. என்றாலும் கடினமாக உழைக்க வேண்டி வரும். சிலருக்கு அனாவசியச் செலவுகள் செய்ய நேரிடலாம். அதனால் மனச் சோர்வுக்கு ஆளாகாமால் உங்கள் வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். உடல் நலத்தில் அக்கறை காட்டவும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. உற்றார், உறவினர்கள் ஒன்றுமில்லாத விஷயத்தைக் கூடப் பெரிதுபடுத்தி விடுவார்கள். எனவே அவர்களிடம் எச்சரிக்கை தேவை. பிள்ளைகளுக்கு சிறிது பின்னடைவு ஏற்படும். செய்தொழிலில் அகலக்கால் வைக்க வேண்டாம். மற்றபடி கோயில்களில் நடைபெறும் விசேஷ பூஜைகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். சகோதர சகோதரிகளிடம் ஏற்பட்ட பிணக்குகளைப் பேசித் தீர்த்துக் கொண்டு உறவுகளைப் புதுப்பித்துக்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் சற்று காலதாமதத்துடனே பரிசீலிப்பார்கள். எனவே பொறுமையுடனும் பொறுப்புடனும் நடந்துகொள்ளவும். மற்றபடி முடிவு சாதகமாகவே அமையும். வேலையில் திருப்தி காண்பீர்கள். வெளியூர் பயணங்களைச் செய்வீர்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். இதனால் அலுவலகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். வியாபாரிகளுக்கு முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வியாபாரம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும். சிறிய சிரமங்களுக்குப் பிறகே புதிய குத்தகைகள் கிடைக்கும். சிலருக்கு கால்நடைகளால் நல்ல லாபம் கிடைக்கும். பால் வியாபாரம் நன்றாக நடக்கும்.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். மேலிடத்தின் ஆதரவு இருப்பதால் புதிய பதவிகளைப் பெற்று மகிழ்வீர்கள். உங்களின் புகழும், செல்வாக்கும் உயரும். தொண்டர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். கலைத்துறையினருக்கு பழைய ஒப்பந்தங்களை முடித்துக்கொடுப்பதில் சிரமங்கள் ஏற்படும். என்றாலும் கடினமாக உழைப்பீர்கள். ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். அனைத்து விஷயங்களையும் நன்றாக முடித்துவிடுவீர்கள். அதேநேரம் கடினமாக உழைக்க வேண்டி வரும். உங்களின் விடா முயற்சியை சக கலைஞர்கள் பாராட்டுவார்கள். அவர்களால் சில வாய்ப்புகளும் கிடைக்கும்.

பெண்மணிகள் கணவரால் பாராட்டப்படுவார்கள். இதனால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும். அவர்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.

உத்திராடம் - 2, 3, 4 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியால் பணம் கையாளும் போது கவனத்துடன் இருப்பது நன்மை தரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். குழந்தைகளின் கல்வி பற்றிய கவலை குறையும். எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம் உண்டாகும். மனக் குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் பேச்சின் இனிமையால் எடுத்த காரியம் கைகூடும். சுப பலன்கள் உண்டாகும்.. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆனால் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

திருவோணம்: இந்த பெயர்ச்சியால் தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள்.

அவிட்டம் - 1, 2 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியால் உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.. மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும் முடிப்பீர்கள். சுவாரசியமான நபர்களை சந்திக்கும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் திறமைகளை அவர்களிடம் எடுத்துக் காட்டுவதன் மூலம் நல்ல வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். பொறுப்புகள் மாறும். அதிக கவனத்துடன் பொறுப்புகளை கையாள வேண்டும். மேலிடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும் | சிறப்பு பரிகாரம்: அருகம்புல்லை அருகிலிருக்கும் விநாயகருக்கு சாத்தி வழிபடவும் | சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீம்கணபதயே நம” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும் | அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 | அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன் | அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x