Last Updated : 01 Jan, 2024 03:55 PM

 

Published : 01 Jan 2024 03:55 PM
Last Updated : 01 Jan 2024 03:55 PM

மேஷம் முதல் மீனம் வரை - 12 ராசிகளுக்கான 2024 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

மேஷம்: வாக்குறுதி என்பது சத்தியத்துக்கும் மேலானது, என்பதை உணர்ந்த நீங்கள் சொன்ன சொல் தவறமாட்டீர்கள். இனிய வார்த்தைகள் இரும்புக் கதவையும் திறந்துவிடும் என்பதை புரிந்த நீங்கள் சுவையான பேச்சில் சொக்க வைப்பீர்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் நேரத்தில் பிறப்பதால் அடிப்படை வசதிகள் உயரும். புதிய திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமாகப் பேசி பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் தொடர்வதால் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். பொது விழாக்கள், கல்யாண, கிரஹப்பிரவேச சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். புதன் 8-ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் நண்பர்கள், உறவினர்கள் மத்தி யில் செல்வாக்கு கூடும். வருடம் பிறப்பு முதல் 30.4.2024 வரை குருபகவான் உங்கள் ராசியில் ஜென்ம குருவாக நீடிப்பதால் அடுக்கடுக்காக வேலையிருந்துக் கொண்டேயிருக்கும். வருங்காலத்தைப் பற்றிய பயம் வந்து நீங்கும். வீட்டிலும், வெளியிலும் சிலர் உங்களை புறக்கணிப்பது போலத் தோன்றும்.

அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். சிறுசிறு அவமானங்கள் நெருங்கிய நட்புவட்டாரத்தில் வரக்கூடும். அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். குருபகவான் 1.5.2024 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு விலகி 2-ம் வீட்டில் அமர்வதால் சோர்வு, களைப்பு நீங்கும். உங்கள் கோபம் குறையும். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவு நீங்கி அமைதி திரும்பும். ஈகோ பிரச்சினையால் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். தள்ளிப் போன கல்யாணம், சீமந்தம் நல்ல விதத்தில் முடியும்.

வங்கிக் கடன் கிடைத்து புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். உங்கள் மகளுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து வரன் அமையும். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். அநாவசிய செலவுகள் இனி குறையும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். அதிக சம்பளம், சலுகையோடு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணர்வார்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

இந்த ஆண்டு முழுவதும் ராகு 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் மறைமுக ஆதாயம் உண்டாகும். மின்சார, சமையலறை சாதனங்கள் பழுதாகும். திடீர் பயணங்களும், அலைச்சல்களும் அதிகரிக்கும். இக்காலகட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். வழக்கில் அலட்சியம் காட்டாதீர்கள். கேது பகவான் வருடம் முடியும் வரை 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிப் பெறுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். எல்லா வசதிகளும் நிறைந்த வீட்டுக்கு குடிபுகுவீர்கள்.

வியாபாரிகளே! புதிதாக தொழில் தொடங்கும் ஆசையில் மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம். ஜனவரி, பிப்ரவரி, நவம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். லாபமும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களே! மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பதவி உயர்வு உண்டு. இந்த புத்தாண்டு திடீர் வளர்ச்சியையும், பிள்ளைகளால் நிம்மதியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: மதுரை மாவட்டத்தில் அருள்பாலிக்கும் மீனாட்சி அம்மனை சென்று வணங்குங்கள். சாலை விபத்தில் சிக்கியவருக்கு உதவுங்கள். கடன் பிரச்சினை தீரும்.

ரிஷபம்: பிறர் செய்ய முடியாத சவாலான காரியங்களை சாதித்துக் காட்டுவதில் வல்லவர்களான நீங்கள், சிறந்த பேச்சாளர்கள். சுற்றியிருப்பவர்களின் சுகத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் நீங்கள், பல நேரங்களில் தாமரை இலைத் தண்ணீர் போல் இருப்பீர்கள். உங்கள் ராசியை சுக்ரனும், புதனும் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணவரவும் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் கைகூடும். வாகனம் வாங்குவீர்கள். பாதியிலேயே நின்ற வீடு கட்டும் பணி இனி தொடங்கும்.

உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். பணம் வரத் தொடங்கும். வழக்கு சாதகமாகும். வருடம் பிறக்கும் போது ராசிக்கு 8-ல் செவ்வாய் மறைந்திருப்பதால் சின்ன சின்ன விபத்துகள் வரும். முன்கோபம் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் மனக்கசப்புகள் வரும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொத்துப் பிரச்சினை ஏற்படலாம். 30.4.2024 வரை குரு 12-ம் வீட்டில் இருப்பதால் சின்ன சின்ன செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக வெளியிலும் கொஞ்சம் கடன் வாங்க வேண்டியிருக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பூர்வீக சொத்தில் பாகப்பிரிவினை நல்லவிதத்தில் முடியும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும்.

1.5.2024 முதல் வருடம் முடிய உங்கள் ராசிக்குள்ளேயே குரு அமரப் போகிறார். எனவே உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். எதற்கெடுத்தாலும் கோபப்படுவதெல்லாம் இனி கூடாது. இரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும். உணவில் உப்பு, காரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கோபத்தை பிள்ளைகளிடம் காட்ட வேண்டாம். உணர்ச்சிவசப்படாமல் எந்த முடிவும் எடுப்பது நல்லது. விருந்தினர், உறவினர் வருகை அதிகரிக்கும். இந்த ஆண்டு முழுவதும் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் நிற்பதால் பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். சகோதர சகோதரிகள் பாசமாக நடந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். ஸ்பெக்குலேஷன் வகைகள் மூலம் பணம் வரும்.

கேது பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் இந்த ஆண்டு முழுக்க தொடர்வதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். அவர்களின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள். தாய்மாமன் வகையில் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடனை குடும்பத்துடன் சென்று முடிப்பீர்கள். இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் தொடர்வதால் உங்களின் திறமைகள் வெளிப்படும். பணபலம் கூடும். பொது விழாக்கள், கல்யாண, கிரஹப்பிரவேச சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் வளரும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். நட்பு வட்டம் விரியும்.

வியாபாரிகளே! இந்த வருடத்தின் முற்பகுதி அமோகமாக இருக்கும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். பற்று வரவும் உயரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பர். உத்தியோகஸ்தர்களே! இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து உங்கள் கை ஓங்கும். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் சம்பள உயர்வு, பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். சிலருக்கு புது வேலை அமையும். உயரதிகாரிகள் மனம் விட்டு பேசுவார்கள். இந்த ஆண்டு எதிர்பாராத திருப்பங்களையும், சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும் அமைத்துத் தருவதாக இருக்கும்.

பரிகாரம்: கோயம்புத்தூர் மாவட்டம், ஓதிமலை எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகுமார சுப்ரமணியரை சென்று வணங்குங்கள். நோயுற்றிருக்கும் ஏதேனும் ஒரு நோயாளிக்கு மருந்து மாத்திரை வாங்கிக் கொடுங்கள்.

மிதுனம்: நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டக் கூடாது என்பதை அறிந்த நீங்கள், உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதவர்கள். செய்நன்றியை ஒருபோதும் மறவாத நீங்கள், தன்னை எதிரியாக நினைத்தவர்களுக்கும் நல்லதே நினைக்கும் குணம் படைத்தவர்கள்.

உங்கள் ராசிக்கு தைரிய வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் எதையும் தள்ளிப் போடாமல் தெளிவாக முடிவெடுப்பீர்கள். ரத்த அழுத்தம், நீரிழிவு நோயெல்லாம் கட்டுப்பாட்டுக்குள் வரும். இளைய சகோதர வகையில் இருந்த சிக்கல்கள் தீரும். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 30.4.2024 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிலே வலுவாக காணப்படுவதால் திடீர் பணவரவு உண்டு. நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். மூத்த சகோதரர் உதவ முன்வருவார். பெரிய பதவிகள் தேடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு கட்டும் பணியை தொடர்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பழைய கடனில் ஒருபகுதியை தீர்க்க வழி பிறக்கும்.

1.5.2024 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 12-ம் வீட்டில் சென்று மறைவதால் திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளையும் பார்க்க வேண்டி வரும். அநாவசிய செலவுகளை குறைக்கப் பாருங்கள். முன்பின் அறியாதவர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். ஆனால் வீடு, மனை விற்பது வாங்குவது லாபகரமாக முடிவடையும். நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ராகு பகவான் இந்த வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பெரிய பதவிகள் தேடி வரும். சிலர் புது வேலைக்கு மாறுவீர்கள்.

கேது பகவான் இந்த வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் வாகன விபத்துகள், காரியத் தாமதம், வீண் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். அவருடன் வீண் விவாதங்களும் வந்து போகும். அவ்வப்போது மற்றவர்களைப் போல நம்மால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என வருந்துவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். சனி பகவான் இந்த வருடம் முழுக்க வரை ராசிக்கு 9-ம் வீட்டில் தொடர்வதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். தந்தையின் உடல் நிலை பாதிக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். அக்கம் -பக்கம் வீட்டாருடன் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும்.

வியாபாரிகளே! மார்ச் மாதத்திலிருந்து கணிசமாக லாபம் உயரும். வேலையாட்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்காதீர்கள். பழைய சரக்கு விற்றுத் தீரும். பழைய பாக்கிகளும் வசூலாகும். சலுகை திட்டங்கள் மூலம் புது வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பீர்கள். பங்குதாரர்கள் அவ்வப்போது புலம்பினாலும் ஒத்துழைப்பார்கள். ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதுக் கிளைகள் தொடங்கும் வாய்ப்பும் வரும். கமிஷன், உணவு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களே! 1.5.2024 முதல் வீண் பழிகளை சுமக்க வேண்டி வரும்.

நேரம், காலம் பார்க்காமல் உழைத்தும் கடைசியில் மிஞ்சியதென்னவோ கெட்ட பெயர் தான் என்று அலுத்துக் கொள்ள வேண்டி வரும். உங்களை பாடாய்படுத்திய உயரதிகாரி இடம் மாறுவார். நல்ல மேலதிகாரி பணியில் வந்து சேர்வார். புது சலுகைகளும் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் வேறு நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். ஜூன், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் சம்பள உயர்வு உண்டு. இந்த புத்தாண்டு சின்ன சின்ன ஏற்றத்தாழ்வுகளையும், செலவுகளையும் கொடுத்து வந்தாலும் உங்களின் வளர்ச்சி பணிகள் தொய்வில்லாமல் தொடர்வதாக அமையும்.

பரிகாரம்: கடலூர் மாவட்டம், எழுமேடு எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபச்சைவாழியம்மனை சென்று வணங்குங்கள். ஆதரவற்ற மாணவியின் கல்விக் கட்டணத்தை செலுத்துங்கள். செல்வம் பெருகும்.

கடகம்: எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாது சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்ந்து சமயோஜித புத்தியுடன் பேசும் நீங்கள் அடங்கி எழுபவர்கள். தும்பைப் பூப்போல சிரிப்பு, துடிப்பான செயல்திறனும் கொண்ட நீங்கள், நம்பி வந்தவர்களை ஒருபோதும் கை விட மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு தன வீடான 2-ம் வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் சோர்ந்து முடங்கி போயிருந்த உங்கள் உள்மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். ஒத்து வராத, உதவாத, உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். 30.4.2024 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் தொடர்வதால் அதுவரை வேலைச்சுமை அதிகமாக இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். பழைய கடன் பிரச்சினைகள் அவ்வப்போது மனசை வாட்டும். ஊர் பொது விவகாரங்களில் உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்வீர்கள். உத்தியோகத்திலும் மறைமுக எதிர்ப்புகளும், இடமாற்றங்களும் வரக்கூடும். எனவே அலுவலகத்தில் அதிக பேச்சை தவிர்ப்பது நல்லது. 1.5.2024 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் லாப வீட்டில் அமர்வதால் எதிர்பாராத திடீர் பணவரவு உண்டு. ஏதோ ஒன்றை இழந்ததைப் போல இருந்தீர்களே! அந்த நிலை மாறி உற்சாகம் அடைவீர்கள்.

தீவிரமாக வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலைக் கிடைக்கும். தற்காலப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள். மூத்த சகோதரர் பகையை மறந்து வலிய வந்து பேசுவார். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். சித்தர்கள், மகான்களின் ஆசி கிட்டும். மருத்துவ சிகிச்சைக்குப் பின்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையே என வருந்தினீர்களே! இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். மகனின் திருமணத்தை விமர்சையாக நடத்துவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வங்கிக் கடனில் ஒரு பகுதியை தீர்ப்பீர்கள்.

புது வீட்டில் குடி புகுவீர்கள். ராகு இந்த வருடம் முழுவதும் 9-ம் வீட்டில் அமர்வதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கேது 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். தாயாரின் உடல் நிலை சீராகும். விலை உயர்ந்த ஆபரணங்கள், ரத்தினங்கள் வாங்குவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள், தொழிலதிபர்கள் உதவுவார்கள். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று புது இடம் வாங்குவீர்கள். வருடம் முழுவதும் அஷ்டமத்துச் சனி தொடர்வதால் முன்கோபம், பதட்டம், சிறு சிறு ஏமாற்றம், வீண் பழி வந்து செல்லும்.

மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். முன்யோசனை இல்லாமல் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. வியாபாரிகளே! சந்தை நிலவரம் குறித்து முழுமையான அறிவு கிடைக்கும். உணவு, கெமிக்கல், ஏற்றுமதி - இறக்குமதி, மர வகைகளால் அதிக ஆதாயமடைவீர்கள். ஆர்வமுள்ள வேலையாட்கள் அமைவார்கள். கடையை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். ஜனவரி, மே, ஜூன் மாதங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். புது கிளைகள் தொடங்குவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். பெரிய பதவியில் அமர்த்தப்படுவீர்கள். மூத்த அதிகாரி அடிக்கடி விடுப்பில் செல்வதால் அந்தப் பதவிக்குரிய பணிகளையும் திறம்பட முடித்து எல்லோரையும் வியக்க வைப்பீர்கள். அரசு நிறுவனங்களில் பணியாற்றும் சிலர் விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு தனியார் நிறுவனங்களுக்கு தாவுவீர்கள். இந்தப் புத்தாண்டு குரு பகவானின் ஆதரவால் சாதிக்கும் ஆண்டாக அமையும்.

பரிகாரம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லுக்குறிக்கையில் வீற்றிருக்கும் கால பைரவரை சென்று வணங்குங்கள். வாய்ப் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள்.

சிம்மம்: நல்லதோ, அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முடித்துக் காட்டுவதில் வல்லவர்கள். எங்கும் எதிலும் முதலிடம் பிடிக்க எண்ணும் நீங்கள், யாருக்காகவும் எதற்காகவும் உங்களின் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு புதனும், சுக்ரனும் சாதகமான வீட்டில் நின்றுகொண்டிருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் நண்பர்களின் உதவி கிடைக்கும். காற்றோட்டம், தண்ணீர் வசதி அதிகமுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வேற்று இனத்தவர்களின் ஆதரவு கிட்டும். குலதெய்வ கோயிலை புதுப்பிப்பீர்கள்.

உங்கள் ராசியிலேயே இந்தாண்டு பிறப்பதால் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அடுக்கடுக்காக செலவுகள் இருக்கும் என்றாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. அடிக்கடி உடல் நிலை பாதிக்கும். மெடிக்ளைம் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் ராசியை குருபகவான் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். குடும்பம் இன்ப மயமாகும். புகழ், கவுரவம் கூடும். வேலை கிடைக்கும். சொந்த - பந்தம் மதிக்கும்படி பெரிய பதவிகளும் தேடி வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். வெளிநாட்டு பயணம் நீங்கள் எதிர்பார்த்தபடி அமையும். அக்கம் - பக்கம் வீட்டாருடன் இருந்த மோதல் நீங்கும். மனைவி பிள்ளைகளுடன் பேசி மகிழவும் நேரம் ஒதுக்குவீர்கள்.

30.4.2024 வரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குரு நிற்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். வங்கியில் வாங்கியிருந்த கடனை அடைப்பீர்கள். ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் உதவுவார்கள். கோயில் கும்பாபிஷேக திருப்பணி கமிட்டியில் இடம் பிடிப்பீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு, கிரஹப்பிரவேசம் என பல விசேஷங்களிலும் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். 1.5.2024 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் குருபகவான் தொடர்வதால் எதிலும் அலட்சியமாக இல்லாமல் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள்.

அடுத்தவர்களை தாக்கிப் பேச வேண்டாம். முக்கிய வேலைகளை பிறரை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். பிள்ளைகளின் நட்பு வட்டங்களை கண்காணியுங்கள். ஆண்டு முழுவதும் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 8-வது வீட்டில் வந்தமர்கிறார். கேது பகவான் 2-வது வீட்டில் வந்தமர்கிறார். தந்தையார் ஸ்தானத்தை விட்டு ராகு விலகுவதால் அவருடன் இருந்த மனக்கசப்புகள் விலகும். கேதுவால் வாக்குவாதங்கள் இருக்கும். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம்.

கூடுதலாக சில மொழிகளை கற்றுக் கொள்வீர்கள். பொது அறிவுத் திறன் வளரும். இளைய சகோதரர் உங்களை மதிப்பார். இந்த ஆண்டு முழுவதும் 7-ம் வீட்டில் சனிபகவான் தொடர்வதால் கணவன் - மனைவிக்குள் குழப் பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். எச்சரிக்கையாக இருக்கவும். உடம்பில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து குறையும். வியாபாரிகளே! தேங்கிக்கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களை கவர சலுகை திட்டங்களை அறிவிப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். மே மாதத்தில் வியாபாரத்தை விரிவுப்படுத்த புதிய தொடர்புகள் கிடைக்கும்.

அதிரடி லாபங்களும் உண்டாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகஸ்தர்களே! பதவி உயர்வு கிடைக்கும். எல்லோரும் மதிப்பார்கள். மேலதிகாரியின் ஒத்துழைப்பு இனி கிடைக்கும். காலம் தாழ்த்தாமல் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். முக்கிய பதிவேடுகளை கவனமாக கையாளுங்கள். இந்த புத்தாண்டு கட்டுக்கடங்காத செலவுகளை தந்து, கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளினாலும், மற்றொரு பக்கம் மகிழ்ச்சியையும், வெற்றியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் பத்ரகாளியை சென்று வணங்குங்கள். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.

கன்னி: பிரச்சினைகளை கண்டு அலட்டிக்கொள்ளாத நீங்கள், எதுவாக இருந்தாலும் சந்திக்க ஒருபோதும் தயங்கமாட்டீர்கள். எளிமையான வாழ்க்கையும், எதார்த்தமான பேச்சும் கொண்ட நீங்கள், மனசாட்சிக்கு மதிப்பளித்து நடப்பவர்கள். சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரத்தில் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் பிரச்சினைகளை சமாளிக்கும் தைரியம் பிறக்கும். கோபம் குறையும். செலவுகள் அடுத்தடுத்து வரும். கணவர் ஆதரவாகப் பேசுவார். குடும்பத்தில் சந்தோஷம் வரும். உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் செலவுகள் உங்களை துரத்தும். பயணங்களும், அலைச்சல்களும் அடுத்தடுத்து இருக்கும்.

30.4.2024 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 8-வது வீட்டில் மறைந்திருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும் இருந்தாலும் எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். சொந்த-பந்தங்களுக்காக அலைய வேண்டி வரும். கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். 1.5.2024 முதல் வருடம் முடிய உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குருபகவான் அமர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வருங்காலத்தை மனதில் கொண்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களிடம் கடன் வாங்கி நீண்ட நாள்களாக ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள்.

தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். பாதியில் முடங்கிக் கிடந்த வீடு கட்டும் பணி முழுமையடையும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். பூர்வீக சொத்தை சீரமைப்பீர்கள். தாய்வழியில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாடு பயணம் சாதகமாக அமையும். இந்த வருடம் முடிய உங்கள் ராசிக்குள் கேதுவும், 7-ம் வீட்டில் ராகுவும் அமர்கிறார்கள். கேது ராசிக்குள் வருவதால் தலைச் சுற்றல், குமட்டல், நாக்கில் கசப்பு வந்து நீங்கும். சில நேரங்களில் முன்கோபத்தால் எடுத்தெறிந்து பேசுவீர்கள். நேரம் கிடைக்கும் போது யோகா, தியானம் செய்யத் தவறாதீர்கள். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. 7-ம் வீட்டில் ராகு அமர்வதால் கணவன் - மனைவிக்குள் சந்தேகத்தால் அடிக்கடி சண்டை வரும். மனைவிவழி உறவினர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-வது வீட்டிலேயே வலுவாக இருப்பதால் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கக் கூடிய மனோ பலம் உங்களுக்கு கிடைக்கும். விஐபிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளே! முடங்கிக் கிடந்த நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள். பழைய கடையை புதுப்பித்து விரிவுப்படுத்துவீர்கள். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வாடிக்கை யாளர்களை அதிகப்படுத்த சில விளம்பர யுத்திகளை கையாளுவீர்கள். கூட்டுத் தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வருவார்கள்.

உத்தியோகஸ்தர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உங்களுக்கு இன்னல்கள் கொடுத்த அதிகாரி மாற்றப்படுவார். புதிய அதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார். இழுபறியாக இருந்த பதவியுயர்வு இப்போது கிடைக்கும். சம்பளம் கூடும். பிப்ரவரி, மார்ச், ஆகஸ்ட் மாதங்களில் பெரிய வாய்ப்புகள் தேடி வரும். இந்தப் புத்தாண்டு உங்களின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவதாகவும், அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கி சமூகத்தில் அந்தஸ்தை தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரிலிருந்து 7கிமீ தொலைவில் உள்ள அழிசூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅருளாலீசுவரரை சென்று வணங்குங்கள். ஏழைக் கன்னிப்பெண்ணின் திருமணத்துக்கு உதவுங்கள்.

துலாம்: பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயின் அருமை பெருமைகளை அறிந்த நீங்கள், தாய்நாட்டையும் நேசிப்பீர்கள். உடுத்தும் உடையையும், உள்ளிருக்கும் மனதையும் வெள்ளையாக வைத்துக் கொள்ளும் நீங்கள் யாருக்கும் தீங்கு நினைக்கமாட்டீர்கள். உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அதிரடி மாற்றங்கள் உண்டாகும். முடங்கிக் கிடந்த நீங்கள் முழு மூச்சுடன் பாடுபட்டு முன்னேறுவீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். இழுபறியாக இருந்த வேலைகள் விரைந்து முடியும். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள்.

மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். 30.4.2024 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் குரு நிற்பதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்களை பேசி தீர்ப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். வசதி வாய்ப்புகள் இருந்தும் வீட்டில் விளையாட ஒரு குழந்தை இல்லையே என தவித்த பெற்றோருக்கு அழகான வாரிசு உருவாகும். பிள்ளைகளால் சமூகத்தில் மதிக்கப்படுவீர்கள். தடைபட்ட கல்யாணப் பேச்சு வார்த்தை கூடி வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வங்கிக் கடன் கிடைத்து புது வீட்டை கட்டி முடித்து குடிபுகுவீர்கள்.

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மூத்த சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். புது வேலை கிடைக்கும். தாய்வழியில் அனுகூலம் உண்டாகும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். 1.5.2024 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 8-ம் வீட்டில் மறைவதால் கணவன் -மனைவிக்குள் வீண் சந்தேகம் வரும். திடீர் செலவுகள் வந்து போகும். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். குடும்பத்தில் வரும் சின்ன சின்ன பிரச்சினைகளை எல்லாம் பெரிதாக்க வேண்டாம். திடீர் பயணங்களும், அலைச்சல்களும் வந்துப் போகும். அரசாங்க அதிகாரிகள், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும்.

சித்தர் பீடங்களுக்கு மறவாமல் செல்லுங்கள். குலதெய்வ கோயிலை புதுப்பிப்பீர்கள். எதிர்பார்த்த அயல்நாட்டு பயணம் தாமதமாகி முடியும். வழக்கை நிதானமாக கையாளுங்கள். ரத்த அழுத்தம், சளித் தொந்தரவு, இனம் தெரியாத கவலைகள் வந்து போகும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்காதீர்கள். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது நல்லது. முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும் போது ஒருமுறைக்கு பல முறை படித்துப் பார்த்து கையெழுத்திடுங்கள். அண்டை - அயலாருடன் அளவாகப் பழகுங்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பாதீர்கள்.

இந்த வருடம் தொடக்கம் முதல் வருடம் முடிய உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் ராகு அமர்வதால் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். தாம்பத்யம் இனிக்கும். தடைபட்ட கல்யாணம் நல்லவிதத்தில் முடியும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கேது உங்கள் ராசியை விட்டு விலகுவதால் நோய் விலகும். எதிலும் ஆர்வம் பிறக்கும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மற்றவர்கள் மீதிருந்த சந்தேகங்கள் நீங்கும். புண்ணிய தலங்கள் செல்வீர்கள். கௌரவப் பதவிகள் கிடைக்கும்.

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 5-ம் வீட்டில் தொடர்வதால் பிள்ளைகள் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் பேசுவார்கள். உயர் கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களைப் பிரிவார்கள். தாய்மாமன் வகையில் செலவுகள் இருக்கும். சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். குலதெய்வக் கோயிலுக்கு மறக்காமல் சென்று வாருங்கள். வியாபாரிகளே! உங்களுக்கு பின்னால் தொழில் தொடங்கியவர்கள் கூட முன்னேற்றமடைந்தார்களே! வட்டிக்கு வாங்கி கடையை விரிவுபடுத்தி நட்டப்பட்டீர்களே! இனி உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் லாபமீட்டுவீர்கள். ஜனவரி, ஜூன், ஜூலை மாதங்களில் லாபம் அதிகரிக்கும். ஆகஸ்ட் மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலையாட்களின் தொந்தரவு குறையும். வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். கெமிக்கல், கமிஷன், வாகன உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பிரச்சினைகள் ஓயும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களே! ஓடி ஓடி வேலை பார்த்தும் கெட்டப் பெயர்தானே கிடைத்தது! இனி அந்த அவலநிலை மாறும். மேலதிகாரிக்கு ஆலோசனை வழங்கும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். ஜூன், ஜூலை மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்த பனிப்போர் நீங்கும். கேட்ட இடத்துக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வருவீர்கள். முனகிக் கொண்டிருந்த உங்களை இந்தப் புத்தாண்டு முழக்கமிட வைப்பதுடன் கூடாபழக்க வழக்கங்களிலிருந்து உங்களை விடுவிப்பதாகவும், வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தை தொடங்குவதாகவும் அமையும்.

பரிகாரம்: திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவீரஆஞ்சநேயரை சென்று வணங்குங்கள். துப்புரவு பணியாளருக்கு உதவுங்கள். ஏற்றம் உண்டாகும்.

விருச்சிகம்: ஆன்மிகம் முதல் அறிவியல் வரை அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் நீங்கள், நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள். மென்மையும், விட்டுக்கொடுக்கும் மனமும், எல்லோருக்கும் உதவும் குணமும் கொண்ட நீங்கள், மற்றவர்களை வழி நடத்துவதில் வல்லவர்கள். உங்களுக்கு 10-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பதவி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு எதிர்பார்த்தது போல வேலை அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். குருபகவான் 30.4.2024 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில நேரங்களில் வீண் டென்ஷன், மன உளைச்சல், வேலைச்சுமை, வீண் பழி, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள்.

எதிரிகளில் சிலர் நண்பர்களாவார்கள். உள்மனதில் ஒருவித போராட்டம் எழும்பும். திட்டமிட்ட காரியங்களை இரண்டு மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டி வரும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனில் ஒருபகுதியை கொடுத்து முடிப்பீர்கள். குலதெய்வ கோயிலை புதுப்பிப்பீர்கள். தங்க ஆபரணங்கள், வீட்டுப் பத்திரங்களை கவனமாக கையாளுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். உறவினர்கள், நண்பர்களுடன் அதிக உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். குருபகவான் 1.5.2024 முதல் 7-ம் வீட்டில் அமர்வதால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். சோர்ந்துக் கிடந்த நீங்கள் உற்சாகமாவீர்கள்.

எதிலும் ஆர்வம் பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முழுமையடையும். வீட்டில் தாமதமான சுப நிகழ்ச்சிகள் இனி கோலாகலமாக நடக்கும். தம்பதிக்குள் இருந்த சந்தேகம், ஈகோ பிரச்சினைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. தள்ளிப் போன வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். மகளுக்கு இருந்த கூடாப்பழக்கம் விலகும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும். வீட்டை கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தாயாருக்கு இருந்த நெஞ்சு வலி நீங்கும். செலவுகளை குறைத்து இனி சேமிக்கத் தொடங்குவீர்கள். பூர்வீகச் சொத்திலிருந்த பிரச்சினை தீரும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். நினைத்திருந்த டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

இந்த வருடம் முடிய ராகுபகவான் 5-ம் வீட்டிலும், கேது 11-ம் வீட்டிலும் தொடர்வார்கள். ராகுவால் கனவுத் தொல்லை, பிள்ளைகள் விஷயத்தில் அலைச்சல் வந்து செல்லும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். வயிற்று வலி, தோல் நோய் வரக்கூடும். அசைவ, கார உணவுகளை தவிர்த்து விடுங்கள். தாய்மாமன் வகையில் மனத்தாங்கல் வரும். கேதுவால் திடீர் யோகங்களும், பணவரவும் உண்டாகும். மூத்த சகோதரர்கள் உதவுவார்கள். கௌரவப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை உணர்ந்து தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். இந்தாண்டு முழுவதும் சனிபகவான் உங்கள் சுகஸ்தானமான 4-ம் வீட்டிலேயே தொடர்வதால் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வாகனம் அடிக்கடி பழுதாகும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

தாயாருக்கு சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். தாய்வழி சொத்தை விற்று புது சொத்து வாங்குவீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வேற்றுமதத்தினர் உதவுவார்கள். இலவசமாக அறிமுகமாகும் கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விடாதீர்கள். வியாபாரிகளே! சந்தை நிலவரம் அறிந்து புது முதலீடு செய்வது நல்லது. முன் பின் அனுபவம் இல்லாத துறையில் மற்றவர்களை நம்பி கைப்பொருளை இழக்க வேண்டாம். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். அனுபவம் மிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். ரியல் எஸ்டேட், பதிப்பகம், இரும்பு, துரித உணவு வகைகளால் லாபம் பெறுவீர்கள். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.

ஏப்ரல் மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். புரிந்து கொள்ளாமல் அவ்வப்போது பிரச்சினை செய்த கூட்டுத்தொழில் பங்குதாரர்கள் இனி பணிந்து போவார்கள். பழைய பங்குதாரர்களும் தேடி வருவார்கள். உத்தியோகஸ்தர்களே! எதற்கெடுத்தாலும் உங்களை குறை சொல்லுவதற்கென்றே இருந்த கூட்டம் காணாமல் போகும். இனி உங்களின் மதிப்பு மரியாதை கூடும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது வாய்ப்புகள் வரும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். ஏபரல் மாதத்தில் அயல்நாட்டு நிறுவனங்கள் அழைக்கும். இந்தாண்டு முழுவதும் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். உங்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்கும் தள்ளுபடியாகும். இந்த புத்தாண்டு திட்டமிட்டு செயல்பட வைப்பதுடன், சிக்கனத்தையும் கடைப்பிடிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்: மதுரை மாவட்டம், பசுமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீவிபூதி விநாயகரை சென்று வணங்குங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட ஏதேனும் வாங்கிக் கொடுங்கள். மகிழ்ச்சி தொடங்கும்.

தனுசு: சேமித்து வைப்பதில் தேனீக்களைப்போலவும், செலவழிப்பதில் ஒட்டகத்தைப் போலவும் குணம் கொண்ட நீங்கள், சரியென பட்டதையே செய்வீர்கள். சகதியில் கல்லை விட்டெறிந்தால் அது தன் மேலேதான் தெறிக்கும் என்பதை உணர்ந்த நீங்கள் கெட்ட நண்பர்களை அறவே ஒதுக்கிவிடுவீர்கள். உங்கள் ராசிக்கு 9-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் முடங்கியிருந்த நீங்கள், விஸ்வரூபம் எடுப்பீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். எந்த காரியத்தை தொட்டாலும் ஆரம்பம் நன்றாக இருந்தது, ஆனால் முடிவுகள் மோசமாக இருந்ததே என்று வருந்திய நிலை மாறும். பிள்ளைகளால் கவலைகளும், செலவுகளும் வந்த நிலை மாறி, இனி அவர்களால் மரியாதை கூடும்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். வீடு, மனை வாங்குவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சில பிரச்சினைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். குழப்பங்கள் நீங்கி, குடும்பத்தில் அமைதி நிலவும். கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அவர்களின் சாதனைகள் மிகவும் உயர்வாகப் பேசப்படும். மகளுக்கு வெகுநாட்களாக தேடி அலைந்த வரன் பார்க்கும் படலம் இப்போது முடியும். நல்ல மணமகன் வந்தமைவார். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.

உடன் பிறந்தவர்களின் ஒத்து ழைப்பால், பூர்வீக சொத்து பிரச்சினைக்கு முடிவு வரும். சொந்த ஊரில் மதிப்பு மரியாதை கூடும். தாயாரின் உடல் நலம் சீராகும். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். அக்கம் பக்கத்தினரிடம் அளவாகப் பேசிப் பழகவும். குடும்பப் பிரச்சினைகளை அடுத்தவர்களிடம் கூறுவதை நிறுத்தினால் நன்மை உண்டாகும். கர்ப்பிணிகள் அதிக பாரம் சுமக்கக் கூடாது. வாகன ஓட்டிகள் அதிக எச்சரிக்கையுடன் வாகனத்தில் செல்ல வேண்டும். சாலையைக் கடக்கும்போது அலைபேசியில் பேசிக் கொண்டும், பாட்டு கேட்டுக் கொண்டும் செல்வதைத் தவிர்க்க வேண்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் இறங்கலாம். புதிய படிப்பு படிப்பதிலும் ஆர்வம் வரும்.

வேலையில்லாதவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும். பாதியில் முடங்கிக் கிடந்த வீடு கட்டும் பணி முழுமையடையும். மூத்த சகோதரர், சகோதரிகளுடன் இருந்து வந்த பனிப்போர் நீங்கி, பாசமழை பொழிவார்கள். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும். குருபகவான் 1.5.2024 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் சென்று மறைவதால் வீண் டென்ஷன், விரயம், ஏமாற்றம், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கணவன் - மனைவிக்குள் சந்தேகம், விவாதங்கள் வந்து போகும்.

பணத் தட்டுப்பாட்டை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். ஆன்மிகச் சிந்தனை, பொது அறிவு, யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். யாருக்காகவும் பைனான்ஸில் பணம் வாங்கித் தரவேண்டாம். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். உங்களின் கையெழுத்திட்ட வங்கிக் காசோலையையும், சொத்துப் பத்திரத்தையும் மற்றவர்களை நம்பி ஒப்படைக்காதீர்கள். இந்த ஆண்டு முழுக்க ராகு 4-ம் வீட்டிலும், 10-ம் வீட்டில் கேதுவும் அமர்கிறார்கள். 4-ம் வீட்டில் ராகு அமர்வதால் தாயாருக்கு நெஞ்சு வலி, சர்க்கரை நோய் வரக்கூடும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.

வீடு வாங்கும் போது சொத்துக்குரிய தாய்பத்திரத்தை கேட்டு வாங்குங்கள். 10-ல் கேது அமர்வதால் வேலைச்சுமை, வீண் பழி வந்துசெல்லும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். சனிபகவான் இந்த வருடம் உங்கள் ராசிக்கு 3-வது வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அனுபவ அறிவை பயன்படுத்தி சில பிரச்சினைகளுக்கு எதார்த்தமான தீர்வு காண்பீர்கள். வேற்றுமதத்தினர் உதவுவார்கள். வழக்கால் பணம் வரும். எதிர்பார்த்த விலைக்கு பழைய சொத்தை விற்பீர்கள். வியாபாரிகளே! மார்ச், மே மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் லாபம் இரட்டிப்பாகும்.

சொந்த இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக செயல்படுவீர்கள். தள்ளிப் போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பெரிய நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் இறங்கி அதிக லாபம் ஈட்டுவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, ஷேர், சிமெண்ட், செங்கல், உணவு வகைகளால் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பிரச்சினை தந்த பங்குதாரரை மாற்றுவீர்கள். புதிய யுக்திகளைக் கையாண்டு, வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். உத்தியோகஸ்தர்களே! அதிகாரிகளால் பந்தாடப்பட்ட நிலை மாறும். செல்வாக்கு இருந்தும் நீங்கள் விரும்பிய இடம் மாற்றம் கிடைக்காமல் திண்டாடிய நிலை இனி மாறும். மே, டிசம்பர் மாதங்களில் புது சலுகைகள், சம்பள உயர்வு உண்டு. மேலதிகாரியிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகி நட்புறவாடுவீர்கள். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இந்த புத்தாண்டு உங்களின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதாகவும், வசதி, வாய்ப்புகளையும் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: சரபேஸ்வரரை சென்று வணங்குங்கள். காது கேளாதவர்கள், வாய் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். பிணிகள் அகலும்.

மகரம்: பிறர் செய்ய முடியாத சவாலான காரியங்களை ஏற்று சாதித்துக் காட்டுவதில் வல்லவர்களான நீங்கள், சிறந்த பேச்சாளர்கள். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டும் நீங்கள், அன்பின் அடையாளமாக இருப்பவர்கள். ராசிக்கு லாப வீட்டில் சுக்ரனும், புதனும் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் உற்சாகமாக பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் வி.ஐ.பிகளிடமிருந்து கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடனுதவியும் கிட்டும். வழக்கு சாதகமாகும். கணவர் உங்களுக்கு முழு சுதந்திரம் தருவார். பிள்ளைகளின் பொறுப்பற்ற போக்கு மாறும். உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள்.

புத்தாண்டு பிறக்கும் போது குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் இனந்தெரியாத கவலைகள் வந்துப் போகும். தாயாருக்கு கை, கால் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். செலுத்த வேண்டிய வரிகளை தாமதப்படுத்த வேண்டாம். புதியவர்களை நம்பி பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சித்தர்களை சந்தித்து அருள் ஆசி பெறுவீர்கள். நெருக்கமானவர்கள் சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள்.

வாகனத்தை கொஞ்சம் கவனமாக இயக்குங்கள். விபத்துகள் நிகழக் கூடும். மன அமைதி பெற ஆன்மிகம், யோகா, தியானத்தில் ஈடுபடுவது நன்மை பயக்கும். குரு பகவான் 1.5.2024 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டிலேயே தொடர்வதால் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். வறண்டிருந்த பணப்பை கொஞ்சம் நிரம்ப ஆரம்பிக்கும். நீண்ட காலமாக தடைபட்டிருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். கல்வியாளர்கள், ஆன்மிகவாதிகளின் நட்பு கிடைக்கும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடன் இருந்து வந்த கருத்து மோதல்களும் விலகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளின் சாதனைகளால் மதிப்பு, மரியாதை கூடும்.

அவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மகளுக்கு ஏதோ ஒரு வகையில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்போது கூடிவரும். மகன் குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார். விலகிச் சென்ற சொந்த - பந்தங்கள் மனம்மாறி வலிய பேசுவார்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு குடிபுகுவீர்கள். சொத்து விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்களுக்கு அதிரடியான தீர்வு காண்பீர்கள். மூத்த சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டினரால் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.

இந்த வருடம் முடிய உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 9-ம் வீட்டில் கேதுவும் அமர்கிறார்கள். ராசிக்கு 3-ம் வீட்டில் ராகு அமர்வதால் சொத்து வாங்குவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். சவால்களை சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். வழக்குகள் சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். 9-ம் வீட்டில் கேது அமர்வதால் தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அடிமனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். தூக்கம் வரும். கொடுக்கல் - வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். தந்தையாரின் உடல் நலம் பாதிக்கும். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் அனைவரும் உங்கள் உதவியை நாடி வருவார்கள்.

நீண்டகால கனவான வீடு, மனை வாங்கும் திட்டம் நிறைவேறும். தெலுங்கு, மலையாளம் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சாதுக்கள் உதவுவார்கள். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். யாரையும் நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். நீங்களே களத்தில் இறங்கி வேலை செய்வது நல்லது. இல்லத்துக்கு தேவையான நவீன மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வருட ஆரம்பம் முதல் வருடம் முடியும் வரை பாதச் சனி தொடர்வதால் வீண் அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சில விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். அடுக்கடுக்கான வேலைகளால் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும்.

வெளிமாநிலப் புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்து போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். உங்கள் நிலை தெரியாமல் உறவினர்கள், நண்பர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வியாபாரிகளே! பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். ஏப்ரல், மே மாதங்களில் பாக்கிகள் வசூலாகும். புதுத் தொடர்பு கிடைக்கும். வேலையாட்களால் மறைமுகப் பிரச்சினைகள் வந்து நீங்கும். ஜூன் மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உணவு, மருந்து, இரும்பு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் பெருகும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் அரசால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தை தவறவிடாதீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! வேலைச்சுமை அதிகமாகும். மேலதிகாரி உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நிதானிப்பது நல்லது. சட்டத்துக்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். மே, ஜூன் மாதங்களில் வேற்றுநாட்டு நிறுவனங்கள் மூலம் புது வாய்ப்புகள் வரும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் சம்பளம், சலுகை கூடும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். இந்த வருடம் வேலைச்சுமையையும், திடீர் பயணங்களையும் தந்தாலும், பணவரவையும், புகழ், கவுரவத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம், அய்யாவாடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரத்யங்கரா தேவியை சென்று வணங்குங்கள். செங்கல் சூளை அல்லது கல்குவாரியில் வேலை செய்யும் கூலித்தொழிலாளிக்கு உதவுங்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கும்பம்: எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாது சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்ந்து சமயோஜித புத்தியுடன் பேசும் நீங்கள் அடங்கி எழுபவர்கள். அமைச்சராக இருந்தாலும் ஆண்டவனாக இருந்தாலும் தவறை தட்டிக் கேட்பவர்கள் நீங்கள். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அழகு, இளமைக் கூடும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். நீண்ட நெடுநாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் முடியும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். வருட ஆரம்பம் முதல் 30.4.2024 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால் கடினமாக உழைத்து இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். சுபச் செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும்.

கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் போன்ற அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். வெளிநாடு செல்வீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு பல இடத்தில் வரன் பார்த்தும் நமக்கு ஏற்ற சம்பந்தம் கிடைக்கவில்லையே என்ற நிலை மாறி, இனி நல்ல வரன் அமையும். மகளின் கூடா நட்பு விலகும். லேசான தலை சுற்றல், சலிப்பு, முன்கோபம், சில காரியங்களில் தடைகள் வந்துச் செல்லும். உறவினர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த வில்லங்கம் விலகும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை போராடி பைசல் செய்வீர்கள். மற்றவர்களின் அறிவுரைகளை முழுமையாக நம்பி அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டாம். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் சிலர் உங்களுக்கு உதவ முன்வருவார்கள்.

குருபகவான் 1.5.2024 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்கிறார். எனவே மன உளைச்சல், மறைமுக எதிர்ப்பு, வீண் விமர்சனம், மூட்டு வலி, சிறு சிறு அவமானங்கள் வரக்கூடும். எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களுடன் உரசல்கள் வரும். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் பின்னடைவு ஏற்படும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். கடன் தொந்தரவுகள் அதிகரிக்கும். மற்றவர்களின் தவறான போக்கை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம்.

இந்த வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் ராகுவும், 8-ல் கேதுவும் அமர்வதால் அவசர முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள். குடும்பத்தில் அவ்வப்போது கூச்சல், குழப்பங்கள் வந்து நீங்கும். படபடப்பு, முன்கோபம், பார்வைக் கோளாறு, தூக்கமின்மை வந்து விலகும். பேச்சில் கடுமையைக் குறைத்து எதிலும் நிதானமாக இருக்கவும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் பொறுப்பில்லாத்தனத்தை நினைத்து வருந்துவீர்கள். அவர்களின் போக்கிலேயே சென்று திருத்தப் பாருங்கள். அடுக்கடுக்கான செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அக்கம் - பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். உறவினர்களில் சிலர் பழசை மறந்து பேசுவார்கள்.

வருடம் முழுவதும் ஜென்மச் சனி தொடர்வதால் பழைய பிரச்சினைகள் தலை தூக்கும். கணவன் - மனைவிக்குள் சின்னச் சின்ன சண்டைகள் வந்து போகும். பெரிதாக்க வேண்டாம். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். எதிராளி அடிக்கடி வாய்தா வாங்குவதால் வழக்கில் தீர்ப்புத் தள்ளிப் போகும். பெரிய பதவியில் இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கி பேச வேண்டாம். பணவரவு இருந்தாலும் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரிகளே! மே, ஜூன் மாதங்களில் கணிசமாக லாபம் உயரும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள்.

வாடிக்கையாளர்களை கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள். பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். ஹோட்டல், கட்டிட பொருட்கள், கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகஸ்தர்களே! உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். புதிய பதவி தேடி வரும். மே, அக்டோபர், டிசம்பர் மாதங்களில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும். சக ஊழியர்கள் குறை கூறும் அளவுக்கு நடந்து கொள்ளாதீர்கள். இந்த புத்தாண்டு, முதல் முயற்சியில் எதையும் முடிக்க முடியாமல் போனாலும் தொடர்முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் சாதிக்க வைக்கும்.

பரிகாரம்: கோயம்புத்தூர் மாவட்டம், கொழுமம் எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீகல்யாண வரதராஜரை சென்று வணங்குங்கள். புற்று நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவுங்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மீனம்: கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்பதை உணர்ந்த நீங்கள், அதிகம் தெரிந்திருந்தும் அலட்டிக் கொள்ள மாட்டீர்கள். மறப்போம் மன்னிப்போம் என்றிருக்கும் நீங்கள், சண்டைக்காரர்களைக் கூட சந்தோஷப்படுத்துவதில் வல்லவர்கள். உங்கள் 6-வது ராசியில் ஆடம்பரமாக இந்தாண்டு பிறப்பதால் தயக்கம், தடுமாற்றம், பயம் எல்லாம் நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குருபகவான் 30.4.2024 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால் செலவுகள் அடுத்தடுத்து இருக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.

உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை உணர்வார்கள். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். கடனாகவும், கைமாற்றாகவும் பணம் புரட்டி புது வீடு கட்டி குடி புகுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். எதிரும், புதிருமாக பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் தன் தவறை உணர்வார்கள். வெளிமாநில புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள்.

அரசாங்கத்தாலும், அரசியல்வாதிகளாலும் ஆதாயம் உண்டு. மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். நிலுவையில் இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குருபகவான் 1.5.2024 முதல் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால் சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். தைரியம் கூடும். எதிர்ப்புகள் அடங்கும். என்றாலும் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத அளவுக்கு வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வசதி, செல்வாக்கைக் கண்டு தவறானவர்களுடன் நட்புறவாட வேண்டாம்.

நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். தாய்வழி உறவினர்களுடன் இணக்கமாகச் செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்ப்பதால் அவர்களின் தன்னம்பிக்கை வளரும். நண்பர்களுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்வீர்கள். எதைச் செய்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து முடிவெடுக்கவும். ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் வருடம் முடியும் வரை அமர்கிறார்கள். எனவே மனக்குழப்பம், பேச்சில் தடுமாற்றம், எதையோ இழந்ததைப் போல் ஒரு வித கவலைகள், பதட்டம், தலைச்சுற்றல், பல் வலி வந்து நீங்கும். மனைவிக்கு கர்ப்பப்பை கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். மனைவிவழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.

மகன் அல்லது மகளுடன் வெளிநாடு சென்று வருவீர்கள். வேற்று இனத்தவர்கள் உதவுவார்கள். குலதெய்வம் கோயிலை புதுப்பிப்பீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வீடு கட்ட வங்கிகளில் பணம் வாங்கியிருந்தவர்கள் சில தவணைகளை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாத அளவுக்கு தர்ம சங்கடத்தில் மூழ்கக் கூடும். இந்த ஆண்டு முழுக்க விரயச் சனி தொடர்வதால் வருங்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனதை வாட்டும். முக்கிய பிரமுகர்கள், ஆன்மிகவாதிகள், சித்தர்களின் அறிமுகம் கிடைக்கும். எல்லோருக்கும் நல்லது செய்தும் கெட்டப் பெயர்தான் மிஞ்சும். சிலர் உங்களைப் பற்றிய வதந்திகளை பரப்பிவிடுவார்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரிகளே! ஜனவரி மாதத்தில் திடீர் லாபம் உண்டு. வியாபாரத்தை பெருக்க விளம்பரமும் செய்வீர்கள். மே, ஜூன் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கடையை விரிவுபடுத்துவீர்கள்.

பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வங்கிக்கு கட்ட வேண்டிய கடனை முறையாக செலுத்துவீர்கள். வேலையாட்கள் பொறுப்புணர்ந்து நடந்துக் கொள்வார்கள். புரோக்கரேஜ், எண்டர்பிரைசஸ், செங்கல், பேக்கரி, வாகன உதிரிபாகங்களால் ஆதாயம் அடைவீர்கள். டிசம்பர் மாதம் முதல் கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களே! வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் ஆதரவான பேச்சால் நிம்மதி அடைவீர்கள். இடமாற்றம் இருந்தாலும் மீண்டும் அதே இடத்தில் வந்தமர்வீர்கள். ஜனவரி மாதத்தில் தகுதி உயரும். ஜூன் மாதத்தில் புது வாய்ப்புகளும், பதவிகளும் அமையும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். இருந்தாலும் அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்கள் இனி மதிப்பார்கள். இந்த வருடம் பணபலத்தை உயர்த்துவதாகவும், பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் அமையும்.

பரிகாரம்: அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபிரகதீஸ்வரரை சென்று வணங்குங்கள். தந்தையில்லா பிள்ளைக்கு உதவுங்கள். மன நிம்மதி உண்டாகும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x