Last Updated : 27 Oct, 2023 02:08 AM

 

Published : 27 Oct 2023 02:08 AM
Last Updated : 27 Oct 2023 02:08 AM

கும்பம் ராசியினருக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் | 30.10.2023 - 19.05.2025 

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

வாய்மையே வெல்லும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடைய நீங்கள், நாட்டு நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உலக விஷயங்களை உன்னிப்பாகக் கவனிக்கும் நீங்கள், எப்போதும் தொலைநோக்குச் சிந்தனை உள்ளவர்கள். விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போனதில்லை என்கிற கொள்கையை கடைப்பிடிக்கும் நீங்கள், மற்றவர்களின் ஆளுமைக்கு கட்டுப்பட்டு செயல்பட மாட்டீர்கள்.

ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து கொண்டு புதிய திருப்பங்களையும், விஐபிகளின் நட்பையும், பணவரவையும் கொடுத்துவந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் வந்து அமர்வதால் தடைபட்டுப்போன பல காரியங்கள் இப்போது கைகூடி வரும். ஆனால் வாக்கு ஸ்தானத்தில் நுழைந்திருப்பதால் சமயோஜிதமாகப் பேசி சங்கடங்களில் சிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். பேச்சில் கவனம் தேவை. குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் சிறப்பாக நடக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பிள்ளைகள் உங்களை புரிந்து கொள்வார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 6.7.2024 வரை ராகுபகவான் செல்வதால் குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 6.7.2024 முதல் 15.3.2025 வரை ராகு பகவான் செல்வதால் உங்களிடம் மறைந்துகிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

குரு பகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 15.3.2025 முதல் 19.5.2025 வரை ராகு பகவான் செல்வதால் பேச்சால் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும். வாகன வசதியுண்டு. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். ராசிக்கு 2-ம் வீட்டில் ராகு நிற்பதால் வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

அண்டை வீட்டாரிடம் குடும்ப விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் பழைய பிரச்சினைகளை தீர்க்க புது வழி கிடைக்கும். புது யுக்திகளை கையாளுவீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கான்ட்ராக்ட், கமிஷன் மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் தொல்லை தந்த மேலதிகாரி இனி நட்புறவாடுவார். உங்களின் பொறுப்புணர்வைக் கண்டு புதிய பதவி, சலுகைகள் தருவார். கணினி துறையிலிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். வசதிகள் பெருகும்.

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து தந்தைக்கு உடல்நலக் குறைவையும், கருத்துமோதல்களையும், சொத்துப் பிரச்சினை களையும் தந்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு எட்டில் வந்தமர்கிறார். கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் மன நிம்மதியுண்டு. குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனைவியிடம் விட்டுக் கொடுத்து போகவும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 4.3.2024 வரை கேது பகவான் சஞ்சாரம் செய்வதால் கமிஷன், ரியல் எஸ்டேட் மூலம் லாபம் உண்டு. யாரையும் நம்பி முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 4.3.2024 முதல் 8.11.2024 வரை கேது பகவான் சஞ்சாரம் செய்வதால் பயணங்கள் அதிகரிக்கும். பழைய உறவுகளை விசேஷங்களில் சந்தித்து மகிழ்வீர்கள். சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 8.11.2024 முதல் 19.5.2025 வரை கேது செல்வதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள்.

திருமணம் கூடி வரும். தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். கேது ராசிக்கு 8-ல் வந்தமர்வதால் முன் கோபம் அதிகமாகும். எளிதாக முடிக்க வேண்டிய வேலையை போராடி முடிக்க வேண்டியது வரும். அரசு காரியங்களை முடிப்பதில் தடுமாற்றம் இருக்கும். ஆன்மிகச் சிந்தனை, பொது அறிவு, யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு வரும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

பெண்கள் இனி கவனத்துடன் செலவு செய்ய வேண்டும். அநாவசிய செலவுகளை குறைத்து, அவசியமான செலவுகளை மட்டும் செய்வது நல்லது. வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களை தள்ளி வையுங்கள். மாணவ மாணவிகளே! ஏனோ தானோ என்று படிக்காமல் ஆர்வத்துடன் படிக்கப் பாருங்கள். இந்த ராகு - கேது மாற்றத்தில் கேதுவால் செலவுகளும், வீண்பயமும் ஏற்பட்டாலும் ராகுவால் பிரச்சினைகளை சமாளிக்கும் சக்தியும், செல்வமும் செல்வாக்கும் உண்டாகும்.

பரிகாரம்: புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள திருமயத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பேரையூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் நாகராஜன் பூஜித்த ஸ்ரீ நாகநாதரையும், ஸ்ரீ பிரகதாம்பாளையும் வணங்குங்கள். காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு உதவுங்கள். பிரச்சினைகள் குறைந்து வெற்றி கிட்டும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x