

முன் வைத்த காலைப் பின் வைக்காத நீங்கள், சொன்ன சொல் தவற மாட்டீர்கள். மனதுக்குப் பிடித்துவிட்டால் கணக்கு பார்க்காமல் வாரி வழங்குவீர்கள். சட்டதிட்டம் அறிந்து பேசும் நீங்கள், சாமான்ய மக்களைவிட எளிய மக்களுக்கு அதிகம் உதவுவீர்கள்.
ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை ஒரு வேலையையும் செய்ய விடாமல் முடக்கிப் போட்ட ராகுபவான் இப்போது ஒன்பதாம் வீட்டில் வந்தமர்வதால் முடியாமல் கிடப்பில் கிடந்த பல காரியங்களை இனி முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள். பணவரவு உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். குல தெய்வ வழிபாட்டை நிறைவேற்றுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.
ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 6.7.2024 வரை ராகு பகவான் சஞ்சாரம் செய்வதால் எதிர்பார்த்த பணம் வரும். கோயில் திருவிழாவில் முதல் மரியாதை கிடைக்கும். சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 6.7.2024 முதல் 15.3.2025 வரை ராகுபகவான் செல்வதால் இக்கால கட்டங்களில் பணப் பற்றாக்குறை, எதிர்மறை சிந்தனை, சிறுசிறு நெருப்பு காயங்கள், வீண் டென்ஷன் வந்து போகும்.
குரு பகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 15.3.2025 முதல் 19.5.2025 வரை ராகு பகவான் சஞ்சாரம் செய்வதால் வி.ஐ.பியின் நட்பு கிட்டும். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் வேலைச்சுமையும், வீண்பழி நீங்கும். தள்ளிப் போன பதவி உயர்வு இனி உண்டு. கலைத் துறையினரின் படைப்புகள் பாராட்டப்படும். வராமலிருந்த சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும்.
கேதுவின் பலன்கள்: கேது பகவான் இப்போது மூன்றாவது வீட்டில் வந்தமர்கிறார். குடும்பத்தில் சந்தோஷம் கரை புரளும். சங்கடங்கள் தீரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். சொந்த ஊரில் உங்களை மதிப்பார்கள். இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாக முடியும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். உதாசீனப்படுத்திய உறவினர்கள், நண்பர்கள் இனி தேடி வருவார்கள்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 4.3.2024 வரை கேது பகவான் செல்வதால் எதிர்பாராத திடீர் முன்னேற்றம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 4.3.2024 முதல் 8.11.2024 வரை கேது செல்வதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவிகள் கிடைக்கும். சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 8.11.2024 முதல் 19.5.2025 வரை கேது செல்வதால் எதிலும் சிக்கனமாக இருங்கள். தடாலடியாக எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். பெண்களுக்கு முன்னேற்றமான நல்ல பலன்களே நடக்கும். அன்பாக பேசி பல காரியங்கள் சாதிப்பீர்கள். கணவருக்கு வேண்டிய உதவிகள் செய்வீர்கள். பதவி உயர்வு உண்டு.
வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்தும், புதிய வாய்ப்புகள் வந்தமையும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த பகை நீங்கி நட்புறவாடுவீர்கள். கணினி துறையினருக்கு அதிக சம்பளத்துடன், சலுகையுடன் புதிய வாய்ப்புகள் தேடி வரும். இந்த ராகு - கேதுப் பெயர்ச்சி துவண்டு, சோர்ந்து போயிருந்த உங்களை உற்சாகப்படுத்துவதுடன் எங்கும் எதையும் சாதிக்க வைக்கும்.
பரிகாரம்: ஈரோடுக்கு அருகேயுள்ள கொடுமுடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ள ஊஞ்சலூர் எனும் தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ நாகேஸ்வரரை வணங்குங்கள். அகதிகளுக்கு உதவுங்கள். நினைப்பதெல்லாம் நிறைவேறும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |