Last Updated : 26 Oct, 2023 01:21 PM

 

Published : 26 Oct 2023 01:21 PM
Last Updated : 26 Oct 2023 01:21 PM

ரிஷபம் ராசியினருக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் | 30.10.2023 - 19.05.2025

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

கொள்கையை விட்டுக் கொடுக்காத நீங்கள், மற்றவர்களின் சுதந்திரத்தில் ஒருபோதும் தலையிட மாட்டீர்கள். எப்போதும் நியாயத்தின் பக்கம் நின்று கொண்டு அதர்மத்தை எதிர்த்துப் போராடுவீர்கள். வாக்குறுதி தந்துவிட்டால் அதை நிறைவேற்றும் வரை ஓயமாட்டீர்கள்.

ராகுவின் பலன்கள்: இதுவரை உங்களின் ராசிக்கு பனிரெண்டில் அமர்ந்து கொண்டு காரியத் தடைகள், மன உளைச்சல், சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியாமை என அடுக்கடுக்காக பல சிக்கல்களையும், நெருக்கடிகளையும் கொடுத்து வந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான பதினோராம் வீட்டுக்கு வருவதால் புத்துணர்ச்சியும், புதிய முயற்சிகளில் வெற்றியையும் தருவார். இனி கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி, சந்தோஷம் நிலவும். பிள்ளைகள் உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். அரைகுறையாக பாதியிலேயே நின்று போன பல வேலைகளை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள். கன்னிப் பெண்களின் அலட்சியப் போக்கு மாறும். அரசியல்வாதிகள் இழந்த பதவியைப் பெறுவார்கள்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 6.7.2024 வரை ராகு பகவான் செல்வதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவினங்கள் இருந்தாலும் அவர்களால் அந்தஸ்து உயரும். சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 6.7.2024 முதல் 15.3.2025 வரை ராகுபகவான் செல்வதால் தந்தைவழி சொத்து கைக்கு வரும். நெடுநாள் கனவான வீடு, வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும்.

குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 15.3.2025 முதல் 19.5.2025 வரை ராகு பகவான் சஞ்சாரம் செய்வதால் வீண் அலைச்சல், உடல்நலக் குறைவு, மூத்த சகோதர வகையில் கருத்து மோதல், சிறுசிறு விபத்து வந்து நீங்கும். கூட்டுத் தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு விலகும். சம்பள உயர்வு உண்டு. கணினி துறையினருக்கு வேலைச்சுமை குறையும். கலைத் துறையினருக்கு வேற்று மொழி வாய்ப்புகளும் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து ஓரளவு பணவரவையும், வி.ஐ.பிகளின் நட்பையும், கொஞ்சம் அலைச்சல், டென்ஷனையும் கொடுத்து வந்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய வீடான ஐந்தாம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்கள் புகழ் கூடும். சொந்த வீடு கட்டுவீர்கள்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 4.3.2024 வரை கேது பகவான் செல்வதால் இக்காலகட்டத்தின் முற்பகுதி கொஞ்சம் சவாலாக இருக்கும். பிற்பகுதியில் ஓரளவு பணவரவு உண்டு. மிருகசீரிஷம் நட்சத்திரக்காரர்கள் இக்காலகட்டத்தில் விபத்துகள், ஏமாற்றங்கள், ஆரோக்கிய குறைவு களை சந்திக்க வேண்டி வரும்.

சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 4.3.2024 முதல் 8.11.2024 வரை கேது செல்வதால் இக்காலகட்டத்தில் ரோகிணி நட்சத்திரக்காரர்கள் யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 8.11.2024 முதல் 19.5.2025 வரை கேது செல்வதால் வீண் கவலை, விரயம், அநாவசியச் செலவு, சோம்பல், தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் இக்கால கட்டத்தில் யாரையும் எளிதில் நம்பி ஏமாறாதீர்கள். தொல்லை கொடுத்து வந்த மூத்த அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே நிலவிவந்த பனிப்போர் நீங்கும். உத்தியோகத்தில் வெகு நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் இனி உங்களைத் தேடி வரும். இந்த ராகு - கேது பெயர்ச்சியில் கேதுவால் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டாலும், ராகுவால் அதிரடி முன்னேற்றமும் எதையும் சாதிக்கும் திறமையும் உண்டாகும்.

பரிகாரம்: மயிலாடுதுறை, தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள திருக்களாஞ்சேரி எனும் இத்தலத்தில் மூலவர் சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ நாகநாதரை வணங்குங்கள். பழைய பள்ளிக்கூடம் அல்லது கோயிலை புதுப்பிக்க உதவுங்கள். அதிர்ஷ்டம் பெருகும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x