துலாம், விருச்சிகம், தனுசு: ஜனவரி மாத ராசி பலன்கள்

துலாம், விருச்சிகம், தனுசு: ஜனவரி மாத ராசி பலன்கள்
Updated on
5 min read

துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சனி, ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: அனைவரிடத்திலும் சரிசமமாக நடந்து கொள்ளும் துலா ராசி அன்பர்களே நீங்கள் சிக்கனத்தை கடைபிடிப்பதில் கவனம் செலுத்துவது நன்மையைத் தரும். அதிக விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் உடையவர்கள். இந்த மாதம் கஷ்டம் நீங்கி சுகம் உண்டாகும். பண வரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக் கரம் நீட்டுவார்கள்.

நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்.

பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி வரலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கு இடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். அரசியல்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பதவிகள் சம்பந்தமான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த மாதம் கடன் பிரச்சனை தீரும். பண வரத்து அதிகரிக்கும். எதையும் நிர்ணயிக்கும் திறன் குறையலாம். பண வரத்து தாமதப்படும். கையிருப்பு கரையும். மற்றவர்களுக்காக உதவி செய்யும் போது வீண் பழி சொல் கேட்க நேரலாம். கவனமாக இருப்பது நல்லது. உடல் சோர்வும் ஏற்படலாம்.

சுவாதி: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும். பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து கொள்வது நல்ல பலன் தரும். பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள மூன்றாம் நபர் தலையீடு வேண்டாம். தசாபுக்தி அனுகூலமிருந்தால் சுபநிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும்.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த மாதம் பரம்பரைச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். பெண் நண்பர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் பழகுங்கள். அவர்களால் சில பிரச்சனைகள் எழலாம். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் இழுபறியான நிலை காணப்படும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் மகா லட்சுமியை வழிபட்டு வர பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29 | அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22 |

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சனி, ராகு - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: எடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் செய்யும் திறன் படைத்த விருச்சிக ராசி அன்பர்களே நீங்கள் அவசரத்தை விட்டுவிட்டு நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. இந்த மாதம் எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும், எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கு இடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். பெண்களுக்கு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பண வரத்து திருப்தி தரும். கலைத்துறையினருக்கு தனாதிபதி குருவின் சஞ்சாரம் பண வரத்தை அதிகப்படுத்தும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும்.

சூரியனுடன் ராசியாதிபதி செவ்வாய் இருவரும் சேர்ந்து இருப்பதால் அனைவருடனுடம் அனுசரித்து செல்வது நல்லது. அரசியல்துறையினருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகலாம். மேல்மட்டத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

விசாகம் 4ம் பாதம்: இந்த மாதம் உங்கள் மேல் முழு நம்பிக்கை கொண்டு உங்கள் வேலைகளை நீங்களே செய்யுங்கள். எவ்வளவு தான் கஷ்டம் வந்தாலும் நீங்கள் வேலையை விடுவது நன்மையில்லை. உப தொழில் செய்யும் விருப்பமுடையவர்கள் தாராளமாக இன்று ஆரம்பிக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீணாக உழைக்க நேரிடும்.

அனுஷம்: இந்த மாதம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதற்குள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற சிறந்த வேலை கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும் பொதுவில் நன்மையே நடக்கும்.

கேட்டை: இந்த மாதம் எதிலும் நல்லது கெட்டதை நிர்ணயிக்கும் திறமை குறையும். அடுத்தவர் பிரச்சனை தீர்க்க உதவி செய்வதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் உழைத்த அளவுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். பொறுமையாக உங்கள் கடமைகளைச் சரியாக செய்யவும். உடன் பணிபுரிவோரால் மிகுந்த நன்மைகள் உண்டாகும்.

பரிகாரம்: வள்ளி தேவசேனா சமேதராக உள்ள முருக பெருமானை அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30, 31 | அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24, 25 |

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி, ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: நேர்மையாகவே அனைத்து காரியங்களையும் சாதித்து கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே நீங்கள் சோம்பலை ஒதுக்கி விடுவது உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இந்த மாதம் மன உறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் இருந்த தடைகள் நீங்கும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேலோங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மனை வாங்குவதற்கான தடைகள் அகலும். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள். பெண்களுக்கு திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவு உண்டாகும். கலைத்துறையினருக்கு உடன் பணி புரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. எனவே அனுசரித்து செல்வது நல்லது.

எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பண வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் சுக்கிரன் சஞ்சாரத்தால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும். அரசியல்துறையினருக்கு நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இந்த கால கட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பண வரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும்.

மூலம்: இந்த மாதம் உங்களின் மனதிடம் அதிகரிக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். ஆரம்பரச் செலவை குறைக்கவும். அவ்வப்போது ஒருவித சோர்வு ஏற்படலாம். அதை தகுந்த நபர்களிடம் திட்டமிட்டு சரி செய்யவும். எந்தப் பிரச்சனையானாலும் பொறுமையுடனும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும் செயல்படுங்கள்.

பூராடம்: இந்த மாதம் அடுத்தவரை நம்பி காரியங்களை செய்வதை தவிர்ப்பது நன்மை தரும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மனக்கவலை அகலும். யாருடைய அதிகாரத்துக்கும் கட்டுப்படாமல் தனித்தன்மையுடன் விளங்குவீர்கள். தடைபட்ட பணம் வந்து சேரும். பயணங்கள் உண்டாகும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த மாதம் வழக்கு சம்பந்தமான விஷயங்களில் நன்மை ஏற்படும். உங்களது செயல்கள் மற்றவர்களை கவரும் விதத்தில் இருக்கும். ஆனால் மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டிருக்கும். மற்றவர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர போட்டிகள் குறையும். மனம் தெளிவடையும். எதிர்பார்ப்பு நிறைவேறும் |அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 5, 6 | அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27 |

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

துலாம், விருச்சிகம், தனுசு: ஜனவரி மாத ராசி பலன்கள்
துலாம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு 2026 எப்படி? | புத்தாண்டு பலன்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in