

மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி, ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: வாக்கு வாதத்தில் திறமையுடைய அதே வேளையில் மனசாட்சிக்கும் இடம் கொடுத்து நடக்கும் மகர ராசி அன்பர்களே இந்த மாதம் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் காரிய தடை தாமதம் ஏற்படலாம். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படுத்தும். வீண் பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம்.
வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. சுக்கிரன் சஞ்சாரத்தால் வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. கடன் தொல்லை தலை தூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச் சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். தடைபட்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கு இடையே மன வருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.
வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பெண்களுக்கு எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்களில் கவனம் தேவை. கலைத் துறையினருக்கு யோககாரகன் சுக்கிரன் ராசிநாதன் சனிக்கு கேந்திரம் பெறுவதால் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். அரசியல்துறையினருக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மேலிடம் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். சக மாணவர்களுடன் நிதானமாக பழகுவது நல்லது.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் உங்களது சொல்படி நடப்பது மனதுக்கு இதம் அளிக்கும். செயல்திறன் அதிகரிக்கும். சில நேரங்களில் உங்கள் வார்த்தைகளால் பிரச்சனை வரலாம்.
திருவோணம்: இந்த மாதம் எந்த சூழ்நிலையிலும் பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். யாருக்காவது ஏதேனும் வாக்குறுதிகள் கொடுத்திருந்தால் அவைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள். திருமணத்திற்கு நல்ல வரனாக அமையும். தொழில் வியாபாரம் சுறுசுறுப்படையும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த மாதம் உங்கள் வியாபார விரிவாக்கம் செய்வது பற்றி ஆலோசனை மேற்கொள்வீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். முதலீடு செய்வதற்குண்டான பண வசதி வந்து சேரும். கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாக குறையும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தங்கள் பங்காளிகளிடம் பரிவுடன் நடந்து கொள்ளவும்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 7, 8 | அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29 |
கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் சனி, ராகு - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: சிறிய வேலையாக இருந்தாலும் அதிகமான உழைப்பைச் செலுத்தும் குணமுடைய கும்ப ராசி அன்பர்களே இந்த மாதம் குறிக்கோளற்ற வீண் அலைச்சல் உண்டாகலாம். தைரியம் அதிகரிக்கும். ஜீரண கோளாறுகள் ஏற்படலாம். உடல் சோர்வு உண்டாகும். பணம் பல வழிகளிலும் செலவாகும். காரிய தாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண் மனக்கவலை நீங்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலைப் பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் கணவன்மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை. பெண்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம். கலைத்துறையினருக்கு கிரகசூழ்நிலை சாதகமாக இல்லாததால் சோம்பேறிதனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். எங்கு இருந்தாலும் ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள்.
புதன் மனநிம்மதியை தருவார். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். அரசியல் துறையினருக்கு உங்கள் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். செயல் திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். மனதில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். இனிமையான வார்த்தை களால் சிக்க லான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் எந்த சூழ்நிலையிலும் பதட்டம் அடையவே கூடாது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய அனுகூலம் கிடைக்க பெறுவார்கள். புத்திசாதூரியத்தால் காரிய நன்மை பெறுவார்கள். பணம் கொடுத்து உதவி செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனை வாழ்க்கைத் துணையுடன் செய்யுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.
சதயம்: இந்த மாதம் வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலிடத்தில் உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்களது செயல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். பயணங்கள் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். சுயநலம் பார்க்காமல் உழைக்க வேண்யதிருக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் வந்து சேரும். பதவியையோ, பணத்தையோ எதிர்பாராமல் உங்களால் முடிந்த அளவிற்கு பிறருக்கு நன்மை செய்யுங்கள். நீங்கள் எடுக்கும் காரியங்களில் அவ்வப்போது தடைகள் வந்தாலும் கவலை கொள்ளாதீர்கள். எல்லாம் தாமதமானாலும் நல்லபடியாகவே நடக்கும்.
பரிகாரம்: அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று பைரவருக்கு விளக்கு ஏற்றி வழிபட நன்று. கடன் தொல்லை அகலும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 9, 10 | அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 30, 31 |
மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இளகிய மனம் கொண்ட மீன ராசி அன்பர்களே நீங்கள் பொதுச்சேவையில் நாட்டம் உடையவர்கள். இந்த மாதம் கிரகங்கள் அனைத்தும் உங்களுக்கு அனுகூலமாக இருக்கிறது. மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும். மனதில் தைரியம் பிறக்கும். சுக்கிரன் சஞ்சாரம் வாக்கு வன்மையால் ஆதாயத்தை பெற்று தரும். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும். கலைத்துறையினருக்கு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களை செய்யுங்கள்.
வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. உபதொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும். அரசியல்துறையினருக்கு மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். உங்கள் வசம் உள்ள ஆவணங்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த மாதம் வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். பணப் புழக்கம் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மேலிடத்திடம் இருந்து பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர் மத்தியில் மதிப்பு கூடும்.
உத்திரட்டாதி: இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் பெறும். வீண் அலைச்சல் ஏற்படலாம். சில நேரங்களில் நிர்பந்தத்தின் பேரில் விருப்பமில்லாத வேலை செய்ய நேரலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் மனஸ்தாபங்கள் உண்டாகும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.
ரேவதி: இந்த மாதம் எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நன்மை தரும். நல்ல விஷயங்கள் நிகழும். நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் தொல்லை ஒழியும். தம்பதிகளிடையே அன்பு மலரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை சேர்ப்பீர்கள். தடைபட்ட திருமணம் கைகூடி வரும். மனப்பிரச்சனைகள் விலகும்.
பரிகாரம்: தினமும் வீட்டில் பஞ்சமுக தீபம் ஏற்றி தரிசித்து வர மன அமைதி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 11, 12, 13 | அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6 |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.