

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் குரு (வ) - பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சனி, ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் - என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: எதைப் பறறியும் கவலைப்படாமல் நடப்பது நடக்கட்டும். எல்லாம் அவன் செயல் என்று எண்ணும் மேஷ ராசியினரே இந்த மாதம் நீண்ட நாட்களாக இழுத்து வந்த சுப பலன் உண்டாகும். எந்த ஒரு வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பண வரத்தை அதிகப்படுத்தும். தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள்.
கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.
பெண்களுக்கு எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பண வரத்து கூடும். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம்.
வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும், மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். விளையாட்டு மற்றும் போட்டிகள் சாதகமாக பலன் தரும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.
அஸ்வினி: இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம். சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றி கொள்வீர்கள்.
பரணி: இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண் விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சில சமயம் விரக்தி ஏற்படலாம். ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் கடந்த காலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுப நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமையில் முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்சனைகளும் தீரும். காரிய வெற்றி உண்டாகும் | சந்திராஷ்டம தினங்கள்: 18, 19 | அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11, 12 |
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் - களத்திர ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு - லாப ஸ்தானத்தில் சந்திரன் - என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: உலக அனுபவ ஞானம் உடைய ரிஷப ராசியினரே நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். இந்த மாதம் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவு உண்டாகும். உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும்.
தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். செலவு அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவி செய்ய போய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை. எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல் துறையினருக்கு சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மேற்படிப்பு படிக்கும் ஆர்வம் உண்டாகும். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப் பற்றாக் குறையை சந்திக்கலாம். சனி சஞ்சாரத்தால் ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.
ரோகிணி: இந்த மாதம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சி தான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த மாதம் சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகா லட்சுமியை தீபம் ஏற்றி வழிபட்டு வர செல்வம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் | சந்திராஷ்டம தினங்கள்: 20, 21 | அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14 |
மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி, ராகு - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: எந்த ஒரு காரியத்தையும் விடா முயற்சியுடன் செய்யும் மிதுன ராசியினரே இந்த மாதம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். ஆரோக்கியம் சம்பந்தமான வீண் மனக் கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பண வரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.
தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். வாக்கு வன்மையால் அனுகூலம் உண்டாகும்.
அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். சனி சஞ்சாரத்தால் வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பை உண்டாக்கினாலும், ராசிநாதன் பலத்தால் பாதிப்பை உண்டாக்காமல் காப்பாற்றி வருவார். இனிப்பும் கசப்பும் மாறிமாறி இன்றைய பலன்கள் இருக்கும்.
திருவாதிரை: இந்த மாதம் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.
பரிகாரம்: பெருமாளை துளசியால் அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வணங்க கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும் | சந்திராஷ்டம தினங்கள்: 22, 23, 24 | அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17 |
இந்த மாதம் கிரகங்களின் நிலை
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.