

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) - கிரகநிலை: ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, சூர்யன், சந்திரன் - சுக ஸ்தானத்தில் புதன் (வ) - பாக்கிய ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரக மாற்றம்: மே 04 - அன்று புதபகவான் வக்ர நிலைமையில் மேஷ ராசிக்கு மாறுகிறார். மே 15 - அன்று சூர்ய பகவான் ரிஷப ராசிக்கு மாறுகிறார். மே 17 - செவ்வாய் பகவான் மீன ராசிக்கு மாறுகிறார். மே 24 - சுக்கிர பகவான் மேஷ ராசிக்கு மாறுகிறார்.
பலன்கள்:
எதிர்காலத்தை மனதில் கொண்டு திட்டமிட்டு செயலாற்றும் கும்ப ராசியினரே! இந்த மாதம் அடுத்தவர்களுக்கு உதவப் போய் அதனால் அவதிப்பட நேரலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பணிபுரியும் இடத்தில் ஆயுதங்களைக் கையாளும்போதும் கவனம் தேவை. செலவு அதிகரிக்கும். மனதில் இருந்த உற்சாகம் குறையும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலைப் பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.
குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் கணவன்மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை.
பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம்.
மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்து டன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.
அவிட்டம்:
இந்த மாதம் எந்தச் சூழ்நிலையிலும் பதட்டம் அடையவே கூடாது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய அனுகூலம் கிடைக்கப் பெறுவார்கள். புத்திசாதுர்யத்தால் காரிய நன்மை பெறுவார்கள். பண உதவி செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனையை வாழ்க்கைத்துணையுடன் செய்யுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.
சதயம்:
இந்த மாதம் வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலிடத்தில் உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்களது செயல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். பயணங்கள் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். சுயநலம் பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
பூரட்டாதி:
இந்த மாதம் உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் வந்து சேரும். பதவியையோ, பணத்தையோ எதிர்பாராமல் உங்களால் முடிந்த அளவிற்கு பிறருக்கு நன்மை செய்யுங்கள். நீங்கள் எடுக்கும் காரியங்களில் அவ்வப்போது தடைகள் வந்தாலும் கவலை கொள்ளாதீர்கள். எல்லாம் தாமதமானாலும் நல்லபடியாகவே நடக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானுக்கு எள் சாதம் நைவேத்தியம் செய்து காகத்திற்கு வைக்க கஷ்டங்கள் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: மே 12, 13
அதிர்ஷ்ட தினங்கள்: மே 23, 24
******************************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |