தனுசு ராசியினருக்கான செப்டம்பர் மாத பலன்கள் முழுமையாக | 2025

தனுசு ராசியினருக்கான செப்டம்பர் மாத பலன்கள் முழுமையாக | 2025
Updated on
2 min read

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றங்கள்: 11.09.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து புதன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 14.09.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15.09.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 16.09.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து சூரியன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 29.09.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து புதன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: எந்த நேரத்திலும் தகுதி குறையாமல் செயல்படும் தனுசு ராசியினரே நீங்கள் உயர்ந்த எண்ணங்களை உடையவர்கள். இந்த மாதம் பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். சுப பலன்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆனாலும் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும்.

குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் ஆணையை மீறி தனி கவனம் கொடுக்க வேண்டாம். தொகுதி மக்களிடம் நெருங்கி பழகுவது அவசியம். கலைத்துறையினருக்கு வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அயராத உழைப்பால் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.

மூலம்: இந்த மாதம் மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். சந்திரன் சஞ்சாரம் உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும். வீண் செலவுகள் உண்டாகும்.

பூராடம்: இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

பரிகாரம்: குருவிற்கு சாமந்தி மலரை சமர்பித்து வியாழக்கிழமையில் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன் - வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 17, 18 | அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12 |

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in