மேஷம் ராசியினருக்கான ஜூன் மாத பலன்கள் முழுமையாக | 2024
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், சூரியன், குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன், ராகு என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றங்கள்: 09-06-2024 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-06-2024 அன்று சுக்கிர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-06-2024 அன்று சூரிய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26-06-2024 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: எந்த ஒரு வேலையையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்து வெற்றிபெறும் மேஷராசியினரே! இந்த மாதம் மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரலாம். உணவு கட்டுப்பாட்டில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களை மாதத்தின் மத்திய பகுதியில் செய்வது நல்ல பலன் தரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரத்து திருப்தி தரும். ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பது கடினம். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம்.
குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். ராசியில் இருக்கும் புத்திகாரகன் புதனால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். பெண்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன்தரும். பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரத்தால் முன்கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. அரசியல் துறையினருக்கு வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
செலவை குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்தின் மூலம் மனமகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீண்கவலையை தவிர்ப்பது நல்லது.
அஸ்வினி: அடுத்தவர் ஆலோசனையை கேட்டாலும் முடிவில் சொந்த அறிவில் செயல்படுவீர்கள். வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். செலவு அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம்.
பரணி: அடுத்தவருக்கு உதவப்போய் வீண் பிரச்சினையில் சிக்கிக் கொள்ள நேரலாம் கவனமாக இருப்பது நல்லது. புதிய நட்பு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
கார்த்திகை 1ம் பாதம்: வியாபாரம் தொடர்பான அலைச்சலும் புதிய ஆர்டர் பற்றிய கவலையும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் நீண்டநாட்களாக இருக்கும் பிரச்சினை தீரும்.
பரிகாரம்: முருகனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி மனஅமைதி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 20, 21 | அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13, 14
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
