

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) முயற்சியை முதுகெலும்பாக கொண்டவர்களே. குடிசையில் வாழ்ந்தாலும், கோபுரமாய் சிந்திப்பவர்களே. எதிலும் அழகையும், நேர்த்தியையும் விரும்பும் நீங்கள், பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்கமாட்டீர்கள். பணம், பதவி பார்த்து பழகாமல் அனைவரையும் அளவுக்கு அதிகமாக நேசிப்பீர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் 6-ம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகத்தை அள்ளித்தருவார். மனஇறுக்கம், கோபத்தில் இருந்து விடுபடுவீர்கள். இனி உங்களின் வாழ்க்கை பாதையை சீராக அமைத்துக்கொள்ள நல்ல வாய்ப்புகள் அமையும். பக்குவமாகப் பேசி பல காரியங்களை கச்சிதமாக முடிப்பீர்கள். பிள்ளைப்பேறு கிட்டும். மனைவி உறுதுணையாக இருப்பார். தடைபட்டுவந்த குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் மூன்றாம் வீட்டை பார்ப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கவுரவம் கூடும். சனிபகவான் 8-ம் வீட்டை பார்ப்பதால் வாகனங்களை இயக்கும்போது அலைபேசியில் பேச வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள்.
மகான்களின் தரிசனம் கிடைக்கும். சனிபகவான் 12-ம் வீட்டை பார்ப்பதால் வராது என்று நினைத்திருந்த பணமும் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் திருதியஸ்தானாதிபதியும் - அஷ்டமாதி பதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சகோதரர்களால் மன உளைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.
15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் மதிப்பு, மரியாதை கூடும். கல்யாணம், காதுகுத்து என வீடு களைகட்டும்.
07.04.2024 முதல் 29.03.2025 வரை உங்கள் சுக-சப்தமாதிபதியான குருபகவானின் பூரட்டாதி நட்சத்தி ரத்தில் சனிபகவான் செல்வதால் வீடு மாறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
இல்லத்தரசிகளே! தாம்பத்யம் இனிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! உங்களை நம்பி மேலதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். கல்யாணம் கூடிவரும். பெற்றோர் உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள்.
வியாபாரிகளே, அதிரடி லாபம் கிடைக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். பங்குதாரர்கள், வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள்.
உத்தியோகஸ்தர்களே, இனி உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் நல்ல வேலையில் சென்று அமர்வீர்கள். எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பளம் உயர்வு எல்லாம் உண்டு. கணினி துறையில் இருப்பவர்களுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய புதிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த சனிப் பெயர்ச்சி எங்கும் எதிலும் திடீர் யோகங்களையும், எதிர்பாராத வெற்றிகளையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: தஞ்சாவூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரகதீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற முதியோருக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். மேன்மேலும் முன்னேறுவீர்கள்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |