Published : 24 Dec 2022 06:34 PM
Last Updated : 24 Dec 2022 06:34 PM

புத்தாண்டு ராசிபலன்கள் 2023 - ரிஷபம் ராசியினருக்கு எப்படி?

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - லாப ஸ்தானத்தில் குரு - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது.

கிரக மாற்றங்கள்: 29-03-2023 அன்று தொழில் ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் விரைய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு புதிய முயற்சிகள் எதிர்பார்த்தபடி நடக்கும். கவலை வேண்டாம். கற்றறிந்த மேலோர் கவுரவிக்கப்படுவர். தாயாரின் நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலை உண்டாகும். பொதுவாக எவ்வளவு தான் சங்கடங்கள் ஏற்படுமானாலும் உங்கள் அந்தஸ்துக்கும் குந்தகம் ஏற்படாது. எந்தச்சங்கடங்களையும் சமாளிக்கும் ஆற்றலுக்கும் பஞ்சமிராது. பணக்கஷ்டம் உருவாக இடமில்லை. ஆனால், சிலர் விஷயத்தில் மனக்கஷ்டம் உருவாக இடமுண்டு. எனவே கவனமுடன் பேசுவது அவசியம்.

திடீர் பொருள் வரவுக்கு வாய்ப்புண்டு. தெய்வபலம் சிறப்பாக இருப்பதால் எல்லாமே சீராக அமைய வாய்ப்புண்டு. பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்கவும் இடமுண்டு. வேலை இல்லாதோருக்கு அதற்கான வேளை கனிந்து வரும். திடீர் பொருள் வரவுக்கும் வாய்ப்புண்டு. அதே போல் திடீர் செலவுக்கும் இடமுண்டு.

வியாபாரிகளுக்கு அலைச்சல் தவிர்க்க முடியாமல் போகலாம். நல்ல லாபம் பெறுவதற்கு அரும்பாடுபட வேண்டியிருக்கும். இதனால் அதிருப்தி ஏற்படலாம். கவலை வேண்டாம். உங்களின் விடா முயற்சியால் நீங்கள் உங்கள் வெற்றியை அடைவீர்கள். புதிய வாடிக்கையாளர்களும் கிடைப்பார்கள். இதனால் உங்கள் தொழில் விரிவடையும்.

அரசியல்வாதிகளுக்கு முன்விரோதம் காரணமாக சிறு தொந்தரவுகள் உண்டாகவும் இடமுண்டு. அரசாங்க விரோதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். நேர்மையாகவும், கவனமுடனும் நடந்து கொள்வதன் மூலம் இந்த பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

கலைத்துறை சுறுசுறுப்படையும். தினசரி பணிகளை மட்டும் செய்து வாருங்கள். அன்றாட வாழ்வு நலம் பாதிக்காது. பிரச்சினை ஏதும் உருவாக இடமில்லை. ஓரிரு நன்மைகள் உண்டாக வழியுண்டு. மற்றப்படிக்குப் பலவிதமான சங்கடங்களை எதிர்நோக்க வேண்டிய காலம் இது.

பெண்கள் 'தானுண்டு தன் வேலை உண்டு' என்றிருப்பது அவசியம். தாயாரின் நலனில் அக்கறைச் செலுத்தவேண்டியது அவசியம். தங்களுடைய நற்பெயரைக் காத்துக் கொள்வதில் மிக்க கவனமாக இருக்கவேண்டும். இல்லையேல் பழிச்சொல்லுக்கு ஆளாகவேண்டிய நிலை உண்டாகலாம். மாணவர்கள் கல்விப்பயனைச் சீராகப்பெற தடையில்லை. பொறியியல் துறை, விவசாயத்துறை போன்றவற்றில் புதிய முயற்சிகள் இப்போது கைகொடுக்கும்.

கிருத்திகை 2, 3, 4 ம் பாதங்கள்: இந்த ஆண்டு உங்களுடைய வேலைகள் தடங்கலின்றி நடக்க வாய்ப்புண்டு. முதலாளி - தொழிலாளி உறவு சலசலப்புக்குள்ளாகலாம். விவசாயிகளுக்கு கஷ்டம் ஏதும் உருவாகாது. பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் சிறு சிறு கஷ்டங்கள் எந்த உருவிலாவது வரலாம். சமாளித்து விடுவீர்கள். கவலை வேண்டாம். கற்றறிந்த மேலோருக்கு உரிய கவுரவம் கிடைக்கத் தடையிருக்காது. காதல் விவகாரம் தற்போது வேண்டாம். பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. கடிதப்போக்குவரத்தில் கண்ணியம் காப்பது அவசியம்.

ரோகினி: இந்த ஆண்டு பல கஷ்டங்களும் உண்டாகும். ஆனால் இந்தக் கஷ்டங்களை குரு அருளால் நீங்கள் இலகுவாக சமாளிக்கவும் இயலும். கொடுக்கல் - வாங்கலில் நிதானம் இருக்கட்டும். விவசாயிகளுக்கு முன்விரோதம் காரணமாக ஒரு வழக்கு ஏற்படலாம். இதனை சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள முயலுங்கள். வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு. பொறியியல், விஞ்ஞானம் கணிதம் போன்ற துறைகளில் உள்ளோருக்கு உற்சாகம் தரக்கூடிய நேரமாக இருக்கும். கலைத்துறையில் சாதகமான போக்கு காணப்படும். இயந்திரத் தொழிலில் சம்பந்தமுடையோர் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்: இந்த ஆண்டு கலைத்துறைச் சம்பந்தப்பட்ட பணிகளில் அவ்வப்போது சிறுசிறு தடங்கல்கள் ஏற்பட்டு பிறகு சீரடைய வாய்ப்புண்டு. பொருளாதார சங்கடம் இருக்காது. இயந்திரப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏற்றம் ஏற்படும். காவல் - ராணுவத்தினருக்கு ஆதாயம் உண்டு. நண்பர்கள் நல்லவர்களை இனம்கண்டு பழகினால் தொல்லை இராது. விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். கலைத்துறையில் கலகலப்பான சூழ்நிலை உருவாகுமானாலும் சங்கடங்களும் இருந்து வரும். பொதுவாக பணக்கஷ்டம் அந்தஸ்துக் குறைவு போன்றவை ஏற்படாது. குடும்பத்தில் லஷ்மிகரம் நிலைத்திருக்கும்.

பரிகாரம்: முடிந்த வரை வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு

மற்ற ராசிகளுக்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023:

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

வீடியோ வடிவில் காண:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x