Published : 30 Dec 2021 12:53 PM
Last Updated : 30 Dec 2021 12:53 PM

மகரம், கும்பம், மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! ஜனவரி 5ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)


கிரகநிலை:
ராசியில் சனி, புதன், சுக்ரன் (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் கேது, செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரக நிலவரம் உள்ளது.

பலன்கள்:

விறுவிறுப்பாக எதையும் செய்யும் திறன் படைத்த மகர ராசி அன்பர்களே!

உங்கள் பேச்சிலும், செயலிலும் வேகம் இருக்கும். இந்த வாரம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். மனோ தைரியம் உண்டாகும். எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. எதிர்ப்புகள் நீங்கி உதவிகள் கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நன்மை தரும். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிக உழைப்பின் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டி இருக்கும்.

மாணவர்கள் கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: சிவபெருமான் மற்றும் நவக்கிரகங்களை வணங்கி தீபம் ஏற்றி வழிபட்டு வர எதிர்ப்புகள் விலகும். பிரச்சினைகளில் சுமுக முடிவு உண்டாகும். தைரியம் கூடும்.
**********************


கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)


கிரகநிலை:
ராசியில் குரு - சுக ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் கேது, செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி, புதன், சுக்ரன் (வ) என கிரக நிலவரம் உள்ளது.

பலன்கள்:

திறமையையே மூலதனமாக வைத்து வாழ்வில் உயர்ந்த நிலைக்குச் செல்லும் கும்ப ராசி அன்பர்களே!

இந்த வாரம் வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் எச்சரிக்கை தேவை.

குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சினைகளில் சாதகமான முடிவே உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுர்யமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தகத் திறமை அதிகரிக்கும். பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.

மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.

பரிகாரம்: சித்தர்களை வணங்க குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பணக் கஷ்டம் குறையும்.
**********************


மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)


கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது, செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் சனி, புதன், சுக்ரன் (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரக நிலவரம் உள்ளது.

பலன்கள்:

பக்குவமாக எடுத்து சொல்லி எதிரில் இருப்பவர்களை திருப்தியடையச் செய்யும் குணமுடைய மீன ராசியினரே!

இந்த வாரம் பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். ஆனால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது.

குடும்பத்தில் சுமுகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம். வீண் செலவுகள், கவுரவக் குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது.

தொழில் வியாபாரத்தில் மெத்தனப் போக்கு காணப்பட்டாலும் தேவையான பணவரத்தும் இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல், காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். பேச்சைக் குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையைத் தரும்.
மாணவர்களுக்கு கல்வியில் மெத்தனப் போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும்.

பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு தொண்டு செய்வதும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவதும் கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும். காரியத்தடை நீங்கும்.
***********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x