Published : 01 Dec 2021 12:05 pm

Updated : 01 Dec 2021 12:05 pm

 

Published : 01 Dec 2021 12:05 PM
Last Updated : 01 Dec 2021 12:05 PM

பூரட்டாதி, வாள், மனித தலை, மீன், கர்ணன், சல்லியன்! உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 31

ungal-natchatirangal-varam-arulum-deivangal-31

- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்


சதயம் எனும் சதாபிஷா நட்சத்திரம் பற்றி விரிவாகக் கண்டோம். இந்த வாரம் நாம் பூரட்டாதி எனும் பூர்வ பத்ர பாதா நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் தெளிவாக மற்றும் விரிவாகக் காணலாம்.


பூரட்டாதி எனும் பூர்வ பத்ர பாதா


பூரட்டாதி என்பது வானத்தில் கும்ப ராசி மற்றும் மீன ராசி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரம் ஆகும். நாம் காணும் போது இரு வாள்கள் போலவும், இரு மனித தலைகள் போலவும், ஒற்றை மீன் போலவும் காட்சி அளிக்கும். ஆகவே இதன் வடிவமாக இரு வாள்கள், இரு மனித தலைகள், ஒற்றை மீன் ஆகியவற்றைக் கூறலாம்.

இதன் அதிபதி குரு கிரகம் ஆகும். இது வெளிர் மஞ்சள் நிறத்தில் மேல்வானத்தில் பிரகாசமாக காணப்படும் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு குரு திசையே முதலில் தொடங்கும். இந்த ராசியில் சனி பலம் பெறுகிறது. ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு சனி மற்றும் குரு பலம் இழப்பது நன்மையானது அல்ல. எனவே இவர்கள் எந்த மாதிரியான தெய்வங்களை வணங்கவேண்டும் என்று இந்தக் கட்டுரையில் காணலாம்.


சல்லியனின் முக்கியத்துவம் - தாரை விளக்கம்


மஹாபாரதத்தில் சல்லியன் முக்கிய கதாபாத்திரம் ஆகும். இவன் பாண்டுவின் இரண்டாவது மனைவி மாதுரியின் சகோதரன். ஆகவே சல்லியன் பாண்டவர்களின் மாமன் ஆவான்.

திறமையான போர்வீரனான சல்லியன் குருக்ஷேத்திரப் போரில் பாண்டவர்களுக்கு உதவச் செல்லும் வழியில், கவுரவர்கள் தந்திரமான முறையில் உணவு உபசரிப்பு செய்தனர். உணவு உண்டபின் துரியோதனன் தனது படைகளுடன் இணைந்து போர் செய்யுமாறு சல்லியனை அழைத்தான். சல்லியன் "உண்ட வீட்டிற்கு ரெண்டகம் செய்வதில்லை’ என்று துரியோதனனுக்கு போரில் உதவ முடிவு செய்தான்.

கர்ணனின் நட்சத்திரம் பூரட்டாதி ஆகும். சல்லியனின் நட்சத்திரம் உத்திராடம் ஆகும்.

கர்ணனுக்கு சல்லியன் சாதக தாரையாக வருவதால், துரியோதனன் சல்லியனை கர்ணனின் தேரோட்டியாக இருக்கும்படி கேட்டு கொண்டான். இருப்பினும், உத்திராடத்திற்கு பூரட்டாதி பிரதியக் தாரை ஆகும். பிரதியக் என்பது அனுகூலத்தின் எதிர்ப்பதமாகும். ஆதாவது சிக்கல் தரும் தாரை என்று பொருள்.
சல்லியன் ஒரு அரசர் ஆவார். அவருக்கு தாழ்ந்த குலத்தில் பிறந்த கர்ணனுக்கு தேரோட்டியாகப் போகிறோமே என்ற எண்ணம் இருந்தது. ஆகவே வெறுப்புடன் கர்ணனுடன் பயணித்தான் சல்லியன்.

இந்திரன் யாசகம் கேட்ட கர்ண கவசம்


மஹாபாரதப் போரில் பீஷ்மரின் இறப்புக்குப் பின் கர்ணன் போர்ப்படைகளுக்கு தலைமை வகித்தான். பீஷ்மருக்கு சற்றும் குறையாத வீர சாகசங்களைப் புரிந்தான். மேலும் அவனது கவச குண்டலங்கள் அவனை பாதுகாத்தன. கர்ணனின் நட்சத்திரம் பூரட்டாதி ஆகும். பூரட்டாதியின் சம்பத்து தாரை அனுஷம் ஆகும். அனுஷத்தின் வடிவம் குண்டலமாகும். அதுபோலவே விசாகம் அவனது ஜென்ம தாரை ஆகும். ஜென்ம தாரை ஒருவருக்கு பாதுகாப்பை வழங்கும். ஆகவே விசாகத்தின் வடிவான கவசம் கர்ணனை காயமின்றி காக்க சூரியனால் கொடுக்கப்பட்டது.

இதை அறிந்தே துரியோதனன் கர்ணனை தனக்கு நண்பனாக்கி கொண்டான். போரில் கர்ணனை அர்ஜூனன் வெல்ல அவனது கவச குண்டலங்கள் அரணாக இருந்தன. அதனால் கிருஷ்ணர், இந்திரனை அழைத்து, கவச குண்டலங்களை தானமாகக் கேட்டு கவர்ந்து வரும்படி அனுப்பி வைத்தார்.

இந்திரனின் நட்சத்திரம் கேட்டை. பூரட்டாதிக்கு கேட்டை விபத்து தாரை ஆகும். ஆகவே கிருஷ்ணர் சரியாக இந்திரனை தேர்ந்தெடுத்து, இந்திரனை சக்ரன் என்ற பிராமண வேடம் பூண்டு கர்ணனிடம் செல்ல வைத்தார்.

சக்ரன் என்ற பெயரில் இந்திரன் கர்ணனை சந்தித்தான். கர்ணனுக்கு இந்திரன் விபத்து தருபவனாக இருந்த போதிலும், கர்ணனுக்கு இந்திரன் மித்ர தாரையாக வருகிறான். ஆகையால் வருவது இந்திரன் என தெரிந்தபோதிலும், தனது மித்ர தாரை நண்பர் என்பதால், அவன் கேட்ட யாசகத்தை தர முனைந்தான். மாறாக தனக்கு ஒரு சக்தி பெற்ற ஆயுதம் தர வேண்டும் என்ற கோரிக்கையை இந்திரனிடம் வைத்தான் கர்ணன். தனது கவச குண்டலங்களை இழக்கத் துணிந்த கர்ணனுக்கு, இந்திரனின் சக்தியை உள்ளடக்கிய "வாசவி" என்ற பாணத்தை கொடுத்துச் சென்றான் இந்திரன். கவசமின்றி இருந்த கர்ணன், கடுமையாக போரிட்டு பின் வீரமரணம் அடைந்தான்.
உங்களுக்கு விபத்து தாரையாக வருபவர்களுக்கு நீங்கள் மித்ரன் என்பதை மனதில் கொள்ளுங்கள். ஆகையால் விபத்து தாரை நபர்களால் உங்களுக்கு நன்மைகள் அதிகம் விளைவதில்லை.

மஹாபாரதப் போரில் கர்ணன், சல்லியனை தேரோட்டியாகவே பார்த்தான். ஆகவே கர்ணன் சல்லியனை ஒருமையில் அடிக்கடி அழைத்தான். கர்ணனின் நட்சத்திரத்திற்கு சல்லியன் நட்சத்திரம் சாதக தாரை ஆகும். ஆகவே சல்லியன் தேரோட்டியாக இருக்கும் வரை, போரில் அனைத்தும் கர்ணனுக்கு சாதகமாகவே அமைந்து கர்ணனின் கை ஓங்கி இருந்தது. கர்ணன் அடிக்கடி ஒருமையில் அழைத்து சல்லியனை கோபமுறச் செய்ததால், சல்லியன் வேகமாக தேரை ஒட்டிச் சென்று குழியில் தள்ளினான். அப்போது சல்லியனை கோபமாக திட்டினான் கர்ணன்.

நமக்கு உதவ வரும் சாதக தாரை நண்பர்களிடம் நாம் சற்று பணிந்தே செல்லவேண்டும். மாறாக நாம் அவர்களை உதாசீனப்படுத்த, நமது சாதக சூழலை சிக்கலாக மாற்றிவிடுவார்கள். கர்ணன் தனது சாதக தாரையில் உதித்த சல்லியனை திட்டியதால், சல்லியன் குழியில் விழுந்த தேரை அப்படியே விட்டுவிட்டு கர்ணனுக்கு உதவாமல் தேரில் இருந்து இறங்கி, எங்கோ சென்று மறைந்தான். கர்ணனின் சாதக தாரை நபர் சல்லியன், அங்கிருந்து சென்றவுடன், கர்ணனுக்கு, குரு பரசுராமர் அளித்த சாபம் வேலை செய்ய ஆரம்பித்தது, அவரது சாபப்படி, கர்ணனுக்கு தெய்வீக அஸ்திரங்களை பயன்படுத்தும் மந்திரங்கள் மறந்து போயின. கர்ணன் அங்கிருந்து வெளியேற, தன் தேரை குழிக்குள் இருந்து வெளியேற்ற முயலும்போது கிருஷ்ணனின் ஆணைப்படி அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.


ஆகவே நமது சாதக தாரை நபர்கள் நமக்கு உதவி செய்யும்போது, அவர்களை பணிவுடனும் மரியாதையுடனும் நடத்துங்கள். பெரும்பாலும் உங்கள் ஏழரை, அஷ்டம, அர்த்த அஷ்டம, கண்டக சனி காலங்களில் சாதக மற்றும் க்ஷேம தாரை நபர்கள் உதவி செய்ய வருவார்கள்.


சாதக தாரை என்பது உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து எண்ணி வரும் 6, 15, 24 நட்சத்திரங்கள் ஆகும்.

க்ஷேம தாரை என்பது உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து எண்ணி வரும் 4, 13, 22 நட்சத்திரங்கள் ஆகும்.

இதுவரை பூரட்டாதி நட்சத்திரம் பற்றி அறிந்தோம். இனி வரும் கட்டுரையில் உத்திரட்டாதி நட்சத்திரம் பற்றி தெளிவாக அறியலாம்.


• வளரும்

***************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!

பூரட்டாதி வாள் மனித தலை மீன் கர்ணன் சல்லியன்! உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 31பூரட்டாதி குணங்கள்உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 31ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்ஜோதிடம்PooratadhiUngal natchatirangal varam arulum deivangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x