Published : 27 Oct 2021 18:45 pm

Updated : 27 Oct 2021 18:45 pm

 

Published : 27 Oct 2021 06:45 PM
Last Updated : 27 Oct 2021 06:45 PM

2021 - 2022 குருப்பெயர்ச்சி பலன்கள் ; மேஷ ராசி அன்பர்களே! வியாபாரம் பெருகும்; நல்ல வேலை நிச்சயம்; குடும்பத்தில் மகிழ்ச்சி; கடனெல்லாம் தீரும்! 

guru-peyarchi-2021-2022-mesham

-’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


மேஷ ராசி அன்பர்களுக்கு வணக்கம்.


இந்த குருப்பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களான உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை தரும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

மேஷ ராசி அன்பர்களே!


உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் குருபகவான் வர இருக்கிறார். இதுவரை பத்தாமிடத்தில் இருந்து சில சோதனைகளைத் தந்திருப்பார். இப்போது லாப ஸ்தானமான 11-ஆம் இடத்திற்கு வந்து பலவித நன்மைகளையும் தரப்போகிறார். இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த அனைத்து விஷயங்களையும் இப்போது எந்தவிதத் தடையும் இல்லாமல் நிறைவேற்றி தரப்போகிறார்.

குடும்பத்தில் ஏற்பட்டிருந்த ஒரு சில சச்சரவுகள் அதனால் ஏற்பட்ட பிரிவுகள் அல்லது வேலை தொடர்பாக குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருந்த சூழல் போன்றவை அனைத்தும் இப்போது மாறப்போகிறது. குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவார்கள். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். மனவருத்தங்கள் அகலும்.

இல்லத்தில் சுப விசேஷங்கள் நடைபெறும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் ஆன தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவருடைய திருமணத்திற்காக பல விதத்திலும் முயற்சி எடுத்து சோர்ந்து போனவர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக இப்போது உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும், திருமணம் நடந்தேறும். மிக மிக முக்கியமாக விவாகரத்து ஆனவர்களுக்கு இப்போது நல்ல விதமாக மறுமணம் நடக்கும்.

சொத்து தொடர்பான பிரச்சினைகளில் இருந்தவர்களுக்கு இப்பொழுது சொத்துப் பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வந்து பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் தொடரும். சொந்த வீடு வாங்கும் முயற்சி மிக எளிதாக நிறைவேறும், அதற்குத் தேவையான பண உதவி, வங்கிக் கடன் போன்றவை மிக எளிதாகக் கிடைக்கும். பூர்வீகச் சொத்துகளை விற்றுப் புதிய சொத்துகள் வாங்கும் யோகம் ஏற்படும்.

இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். ஏற்கெனவே பணியில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், வேலையில் அழுத்தம் போன்ற பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது மனநிறைவான இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். தாமதப்பட்டு வந்த ஊதிய உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய ஊக்கத் தொகை வந்து சேரும். உங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் தவறான கருத்துருவாக்கங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்து உங்கள் மீதான மதிப்பு மரியாதை உயரும்.

சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு கடுமையான அலைச்சலும், ஒருவிதமான மன உளைச்சலும் ஏற்பட்டிருக்கும். இனி லாபத்தைத் தவிர வேறு எதையும் பார்க்க மாட்டீர்கள். தொழிலில் லாபம் பலவிதத்திலும் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு போல உங்களுடைய உற்பத்தி பொருட்களுக்கு சந்தையில் மதிப்பு உயர்ந்து லாபம் பல மடங்காகப் பெருகும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வேறு தொழில் நிறுவனங்களை கைப்பற்றக் கூடிய அளவிற்கு வளர்ச்சி இருக்கும். தொல்லை தந்த எதிரிகள் காணாமல் போவார்கள். தொழில் தொடர்பாக சந்தித்த வழக்குகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக மாறும். அதன் மூலமும் நஷ்ட ஈடு போன்ற ஆதாயங்கள் கிடைக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும்.

தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பழைய இயந்திரங்களை மாற்றி புதிய இயந்திரங்கள் வாங்குவீர்கள். புதுப்புது தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். வெளிநாடு தொடர்பு உடைய தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் காத்திருக்கின்றன. கடந்த இரண்டு வருடங்களாக முடங்கிக் கிடந்த ஏற்றுமதி தொழில் இப்போது மிக விரைவாக முன்னேற்றப் பாதைக்கு சென்று, மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியைக் கொடுக்கும். மிகப்பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை அனைவருக்கும் ஆதாயம் தரக்கூடிய அளவில் வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். கிளைகள் தொடங்கும் வாய்ப்புகள் உண்டாகும். வியாபார நிமித்தமாக ஏற்பட்டிருந்த கடன்கள் அனைத்தும் தீரும். அதேபோல வியாபார வளர்ச்சிக்குத் தேவையான வங்கிக் கடன் உதவியும் எளிதாக கிடைக்கும். அத்தியாவசிய பொருட்கள் வியாபாரம் முதல் ஆடம்பரப் பொருட்கள் வியாபாரம் வரை இருக்கக்கூடிய அனைத்து வியாபாரிகளுக்கும் ஆதாயம் பல மடங்காக பெருகும். தேங்கிக்கிடந்த பொருட்கள் அனைத்தும் விறுவிறுப்பாக விற்பனையாகும்.

விவசாய பொருட்களும் விவசாய உற்பத்தி சார்ந்த அனைத்து பொருட்களும் நல்ல விலைக்கு விற்று உழவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். விவசாயத்திற்கு தேவையான நவீன இயந்திரங்கள் வாங்குவது முதல் விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவது வரை அனைத்தும் மிக சிறப்பான நன்மைகளைத் தரக் கூடியதாக இருக்கும்.

பெண்களுக்கு அதிக நன்மைகளை தரக்கூடிய அற்புதமான குருப்பெயர்ச்சியாக இருக்கப்போகிறது. ஆடை ஆபரணச் சேர்க்கை முதல் நல்ல வேலைவாய்ப்பு, சுயதொழில் தொடங்குவது, திருமணம் நடப்பது, குடும்பத்தினருடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படுவது போன்ற பலவிதமான நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். குறிப்பாக பத்திரிகை ஊடகத் துறையில் இருப்பவர்கள், இசைக் கலைஞர்கள் போன்றவர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் காத்திருக்கிறது. சொந்த வீடு வாங்கும் கனவு இப்போது நனவாகும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். மிகச் சிறந்த நன்மைகளை குருபகவான் நிச்சயமாக தருவார் என்பதை நம்பலாம்.

திரைப்படக் கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள், இசை விற்பன்னர்கள் போன்றவர்கள் அற்புதமான ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். வருமானம் பல மடங்காக பெருகும். உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரக்கூடிய அளவில் வருமானம் இருக்கும். கடன் என்பதே இல்லாத நிலை ஏற்படும். சொத்து சேர்க்கை ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து கிடைத்துக்கொண்டே இருக்கும். மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் காணாமல் போகும். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு மரியாதை உயரும். அரசு விருதுகள், அரசு அங்கீகாரம் போன்றவை கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர் கல்வி பயில்பவர்களுக்கு விரும்பிய கல்வி கிடைக்கும். தேர்வுகளில் மிகச்சிறந்த மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெறுவீர்கள். உயர்கல்வி முடிந்த உடன் வேலை வாய்ப்பு மிக எளிதாக கிடைக்கும். குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பு பலருக்கும் கிடைக்கும். அரசு உத்தியோகத்திற்கு தேர்வு எழுதியவர்கள் அனைவருக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

மேஷராசிக்காரர்களுக்கு பலவிதத்திலும் நன்மைகளை தரக் கூடியவர் திருச்செந்தூர் முருகப் பெருமான். அது குரு ஸ்தலமும் கூட..! எனவே மேஷ ராசிக்காரர்கள், திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை வணங்கி வந்தால் மேலும் பலவித நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க வளமுடன்.
***************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!

2021 - 2022 குருப்பெயர்ச்சி பலன்கள் ; மேஷ ராசி அன்பர்களே! வியாபாரம் பெருகும்; நல்ல வேலை நிச்சயம்; குடும்பத்தில் மகிழ்ச்சி; கடனெல்லாம் தீரும்!குருப்பெயர்ச்சிகுருப்பெயர்ச்சி பலன்கள்குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 - 2022சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்ஜோதிடம்பலன்கள்மேஷம் - குருப்பெயர்ச்சி பலன்கள்MeshamMesha rasiMesha rasi palangalGuru peyarchiGuru peyarchi 2021 - 2022 mesham

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x