Published : 23 Sep 2021 08:04 PM
Last Updated : 23 Sep 2021 08:04 PM

மகரம், கும்பம், மீனம்; இந்த வாரம் உங்களுக்கு எப்படி?

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)


கிரகநிலை:
ராசியில் சனி (வ), குரு (வ) - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் புதன்(வ), செவ்வாய், சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

இந்த வாரம் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதைத் தவிர்த்து நிதானமாகப் பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும்.

எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். கவனம் தேவை. குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. பணவிஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசி அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.

எதிர்பார்த்த பணம் தாமதப்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் மன வருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை உருவாகலாம். எச்சரிக்கை தேவை.

பெண்களுக்கு கோபத்தைத் தவிர்த்து நிதானமாகப் பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக முடியும். மாணவர்கள் திட்டமிட்டு பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
*******************************************************************************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)


கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் புதன்(வ), செவ்வாய், சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் கேது - அயனசயன போக ஸ்தானத்தில் சனி (வ), குரு (வ) என கிரகநிலை உள்ளது.

இந்த வாரம் அறிவுத் திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருப்பது நல்லது.
மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை. பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சினைகள் குறையும். அதன் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திசாதுர்யம் அதிகரிக்கும்.

வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டுப் பேசி அதன் பிறகு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தை குறைப்பது நல்லது.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளி போடுவது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சினை வராமல் தடுக்கும்.

பெண்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியம் நிறைவேறும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். மேல் படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சக மாணவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.

பரிகாரம்: முருகப் பெருமானை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
*******************************************************************************


மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)


கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் புதன்(வ), செவ்வாய், சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ), குரு (வ) என கிரகநிலை உள்ளது.

எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்பட்டு வரும் மீன ராசியினரே!

நீங்கள் காலத்தை வீணாக்க மாட்டீர்கள். இந்த வாரம் பொருள் சேர்க்கை உண்டாகும். சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்காது. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இட மாற்றம் ஏற்படும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம் கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். பிள்ளைகள் வழியில் செலவு உண்டாகலாம். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட அதிகமான லாபம் தரும். ஆனால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும்.

பெண்கள் பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையை செய்து முடிக்க காலதாமதமாகலாம். வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: தினந்தோறும் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வலம் வருவது.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
*******************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x