Published : 28 Aug 2021 05:11 PM
Last Updated : 28 Aug 2021 05:11 PM

அனுஷம், ஆந்தை, தோடு, தாமரை, ஜிமிக்கி;  உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 23

- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்

சென்ற வாரம் விசாகம் நட்சத்திரம் பற்றி விரிவாகக் கண்டோம். இந்த வாரம் அனுஷம் நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் தெளிவாகவும் விரிவாகவும் காணலாம்.

அனுஷம்
அனுஷம் என்பது வான மண்டலத்தில் விருச்சிக ராசி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரம். நாம் கண்களில் காணும்போதும் கோயில் மணி போலவும், ஜிமிக்கி கம்மல் போலவும், தாமரை போலவும், ஆந்தை போலவும் காட்சி தரும். ஆகவே இதன் வடிவமாக கோயில் மணி, ஜிமிக்கி கம்மல், தாமரை, ஆந்தை ஆகியவற்றைக் கூறலாம்.

இதன் அதிபதி சனி கிரகம். இது சிவப்பு நிறத்தில் மேல்வானத்தில் பிரகாசமாக காணப்படும் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு சனி திசையே முதலில் தொடங்கும். இந்த ராசியில் செவ்வாய் பலம் பெறுகிறது மற்றும் சந்திரன் பலம் இழக்கிறது. ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு சந்திரன் நீச்சம் அல்லது பலம் இழப்பது நன்மையானது அல்ல. எனவே இவர்கள் எந்தமாதிரியான தெய்வங்களை வணங்கவேண்டும் என்று பார்க்கலாம்.

கர்ணனின் குண்டல ரகசியம்
கர்ணனின் ஜென்ம நட்சத்திரம் பூரட்டாதி. அதன் சம்பத்து நட்சத்திரம் உத்திரட்டாதி, அனுஷம் மற்றும் பூசம். இதில் பூரட்டாதியின் பூர்வ ஜென்ம சம்பத்து நட்சத்திரம் அனுஷம். இதன் வடிவம் குண்டலம்.

அதனால்தான் கர்ணனுக்கு பிறக்கும் போதே சூரியனால் குண்டலங்கள் கொடுக்கப்பட்டன. இது அவனது பூர்வ ஜென்ம புண்ணிய பலனாகக் கிடைத்த ஒன்றாகும். இது கர்ணன் உடலில் இருக்கும் வரை புகழ், செல்வங்களைக் கொடுத்தது.

பீஷ்மரின் கொடி - தாரை ரகசியம்
மஹாபாரதத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனது தாரை வடிவங்களை சரியாகப் பயன்படுத்தியது. அதற்கு உதாரணமாக குருக்ஷேத்திரப் போரில் அவர்கள் உபயோகித்த கொடிகளில் இருக்கும் உருவங்களை அறியலாம். நமக்கு ஏற்கெனவே தெரிந்த அர்ஜுனன் தேரில் இருக்கும் அனுமன் உருவம் பற்றி ஏற்கெனவே விளக்கி இருந்தேன்.

இன்னொரு உதாரணமாக, பீஷ்மரது தேரின் மீது இருக்கும் கொடியில் பனைமர உருவம் பதிக்கப்பட்டு இருக்கும். பீஷ்மரின் ஜென்ம நட்சத்திரம் உத்திராடம். பனைமரம் என்பது அனுஷ நட்சத்திர வடிவம். உத்திராடத்தின் திரிஜென்ம சாதக தாரை அனுஷம். சாதக தாரை என்பது நமக்கு சாதக சூழல் உருவாக்கும் நட்சத்திரமாகும்.

கர்ணன் தனது கொடியில் சங்குவடிவத்தைப் பதித்திருந்தான். சங்கு என்பது பரணி வடிவம். கர்ணனின் நட்சத்திரம் பூரட்டாதி. பரணி என்பது பூரட்டாதிக்கு பிரதியாக்கு தாரையாக வரும். அதாவது சிக்கல் தரும் தாரை. ஆகவே கர்ணன் போரில் பல சிக்கல்களை சந்தித்து வீரமரணம் அடைந்தான்.

பனைமர உருவத்தை அனுஷம், கேட்டை, விசாகம், உத்திரட்டாதி, ரேவதி, பூரட்டாதி, பூசம், ஆயில்யம், புனர்பூசம் நண்பர்கள் பயன்படுத்தி நற்பலன்களைப் பெறலாம்.

உத்திராடம், கார்த்திகை, உத்திரம் நட்சத்திர நண்பர்கள் இவற்றைப் பயன்படுத்தி நீண்ட கால சிக்கலுக்குத் தீர்வு காணலாம்.

மகாலக்ஷ்மி வாகனம் - ஆந்தை - தாரை ரகசியம்

அனுசத்தின் வடிவம் ஆந்தையாகும். மகாலட்சுமி யின் வாகனமாக வட இந்தியாவில் வழிபடப்படுகிறது.

வெள்ளை ஆந்தை வாகனத்தில் மகாலட்சுமி இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பாற்கடலில் இருந்து மகாலட்சுமி மற்றும் காமதேனு தோன்றியது உத்திரட்டாதி நட்சத்திரம் என்பதால், இவர்களின் நட்சத்திரங்கள் உத்திரட்டாதி நட்சத்திரம் ஆகும். அனுஷம் மற்றும் உத்திரட்டாதி நட்சத்திர அதிபதி சனி ஆகும்.

அனுஷம் என்பது உத்திரட்டாதியின் திரிஜென்ம நட்சத்திர வடிவம் ஆகும். பெரும்பாலும் தெய்வ உருவங்கள் தனது நட்சத்திரத்திற்குரிய சம்பத்து அல்லது ஜென்ம தாரை வடிவங்களையே வைத்திருக்கின்றனர்.

ஆகவே அனுஷம், உத்திரட்டாதி, பூசம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் ஆந்தை வடிவத்தை உபயோகித்து பாதுகாப்பைப் பெறலாம்.

விசாகம் , பூரட்டாதி, புனர்பூசம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் ஆந்தை வடிவத்தை உபயோகம் செய்து செல்வவளம் பெறலாம்.

ரேவதி, கேட்டை, ஆயில்யம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் ஆந்தை வடிவத்தை உபயோகம் செய்து நல்வழி பெறலாம்.

சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் ஆந்தை வடிவத்தை உபயோகம் செய்து காரிய சித்திகளைப் பெறலாம்.
உத்திரம், கார்த்திகை, உத்திராடம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் ஆந்தை வடிவத்தை பயன்படுத்தி சாதக சூழல்களைப் பெறலாம்.

இதுவரை அனுஷம் நட்சத்திரம் பற்றி அறிந்தோம். இனி வரும் கட்டுரையில் கேட்டை நட்சத்திரம் பற்றி அறியலாம்.

- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x