Published : 18 Jun 2021 04:30 PM
Last Updated : 18 Jun 2021 04:30 PM

உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 17 - பூரம் நட்சத்திரத்தின் வடிவங்கள், தெய்வங்கள்! 

- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்

சென்ற வாரம் மகம் நட்சத்திரம் பற்றி விரிவாகக் கண்டோம். இந்த வாரம் நாம் பூரம் நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும்
தெளிவாக மற்றும் விரிவாகக் காணலாம்.

பூரம்
பூரம் நட்சத்திரம் சிம்ம ராசி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரம். சிம்ம ராசி என்பது கால புருஷ சக்கரத்தின் ஐந்தாம் பாவம் என்பதால், சிறப்பு பெறும் ராசியாக
இருக்கிறது.

இந்த நட்சத்திரம் வானத்தில் வெறும் கண்ணால் காணும் பொழுது “கண்” வடிவத்தில் காணப்படும். மேலும் இது அமரும் சிம்மாசனம் போலவும் காட்சியளிக்கும்.
ஆடிப் பூரம் என்றால் நம் நினைவுக்கு வருவது ஆண்டாள். அமுதமான தெய்வ பக்தி கொண்ட இவரது பாடல்கள் உலகம் இருக்கும் வரை போற்றத்தக்கது. ஆண்டாள்
அவர்கள் தனது கையில் கிளி வைத்தபடி போல காட்சியளிக்கிறார்.

கிளி என்பது அஸ்வினி நட்சத்திர வடிவம் என்பதை அறிவோம். பூரம் நட்சத்திரத்தின் திரி ஜென்ம பரம மித்ர தாரை அஸ்வினி என்பதால் கிளி அவருடைய கையில்
அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திர நபர்கள் ஆண்டாள் வழிபாடு செய்து வர, சர்வ சம்பத்துக்களைப் பெறலாம். பூரம், பரணி, பூராடம் நட்சத்திர நபர்கள் ஆண்டாள் வழிபாடு செய்து வர, மன உறுதி பெறலாம்.

உத்திரம், உத்திராடம், கார்த்திகை நட்சத்திர நபர்கள் ஆண்டாள் வழிபாடு செய்து வர, நல்வழி கிடைக்கப் பெறலாம்.
பூசம், அனுஷம், உத்திரம் நட்சத்திர நபர்கள் ஆண்டாள் வழிபாடு செய்து வர, காரிய சித்தி பெறலாம்.

திருவாதிரை, ஸ்வாதி, சதய நட்சத்திர நபர்கள் ஆண்டாள் வழிபாடு செய்து வர, காரியத்தில் வெற்றி பெறலாம்.

ஆடிப்பூரம் வளையல்

வளை என்பதன் தமிழ் அர்த்தம் பாம்புப்புற்று என்பதாகும். பாம்புப் புற்று என்பது பூச நட்சத்திர வடிவம். அதன் நட்சத்திர அதிதேவதை புத்திரகாரகனான குரு. மேலும்
பூசத்தின் விருட்சம் அரசமரம் . எனவே ஆடிப் பூர நன்னாளில் அரசமரத்தடியில் இருக்கும் பாம்புப்புற்றுக்குச் சென்று அங்கிருக்கும் அம்மனுக்கு வளையல் சமர்ப்பித்து
வணங்கி, திருமணமான பெண்ணுக்கு அந்த வளையல் அணிவித்தல் பூச நட்சத்திர அதிதேவதை குருவின் அருள் கிடைக்கும் என்று அறியலாம்.

இது சிறப்பான குழந்தைப் பேறு மற்றும் சந்ததி விருத்திக்கான பரிகாரம்.

ஆடிப் பூரம் அன்று சூரியன் பூசத்தில் இருக்கும். எனவே குருவின் ஒளிகிரணங்களை பூமிக்குச் செலுத்தும். எனவே ஆடிப் பூர நட்சத்திர நாளில் பூச நட்சத்திர அதிதேவதை
குருவின் அருள் கிடைக்கும் என்று அறியலாம்.

பெண்ணிற்கு செய்யும் வளைகாப்பு கூட, புத்திரகாரகன் குரு அதிதேவதையாக வரும் பூச நட்சத்திர வளையல் அணிவிக்கும் வழக்கம் அடிப்படையில் அமைந்ததே ஆகும்.
பூரமெனும் சிங்க வடிவம் பூரம் நட்சத்திரம் சிம்ம ராசியில் மத்திமம் நட்சத்திரமாக அமைந்திருக்கிறது. பல்குனி நட்சத்திர மண்டலத்தில் பூர்வ பல்குனி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. பூர்வ என்றால் முந்தைய என்று பொருள்.

ஆகவே பல்குனி நட்சத்திர மண்டலத்தில் முந்தைய பகுதியைக் குறிப்பிடுவது பூரம் நட்சத்திரம் ஆகும். இது காமாட்சி மற்றும் பார்வதி தேவியின் நட்சத்திரமாக அமைந்திருக்கிறது. வானில் பார்ப்பதற்கு நாற்காலி போலவும் அரியாசனம் போலவும், ஊஞ்சல் போலவும் காட்சி அளிக்கும். பூரம் நட்சத்திரம் வானில் பார்ப்பதற்கு அமர்ந்திருக்கும் சிங்கம் போல காட்சியளிக்கும். ஆகையால் பூரம் நட்சத்திர நபர்கள் அம்மன் முன் இருக்கும் சிங்கத்தை வழிபாடு செய்வது அவசியம். இது அமர்ந்த நிலையிலிருக்கும் நந்தி வடிவம் கொண்டதால் பிரதோஷ வழிபாடு மிக மிக அவசியம்.

இந்த நட்சத்திரம் ஊஞ்சல் வடிவமாதலால், அம்பாளுக்கு செய்யப்படும் ஊஞ்சல் உற்ஸவம் காணுதல் மிகவும் உசிதம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களின் ஜாதகத்தில் செவ்வாயின் நிலை பலமாக இருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை செவ்வாய் பாதிக்கப்பட்டால் கடுமையான செவ்வாய் தோஷத்தை உருவாக்கிவிடுகிறது.

கண்ணபுரம் எனும் சமயபுரம் சமயபுரத்தின் பழங்கால பெயர் கண்ணபுரம் என்பதாகும். சமயபுரம் மாரியம்மனின் மற்றொரு பெயர் கண்ணாத்தாள் என்பதாகும். சமயபுரம் மாரியம்மனுக்கு கண் மலர் சமர்ப்பிக்கும் வழக்கம் இன்றைக்கும் இருக்கிறது. இது சக்தி வாய்ந்த பரிகாரமாக கருதப்படுகிறது.

சமயபுரம் மாரியம்மனின் அவதார நட்சத்திரம் திருவாதிரை. திருவாதிரை நட்சத்திரத்தின் சாதக தாரைகள் பூரம், பூராடம், பரணி ஆகும். ஆகவே பூர நட்சத்திர
வடிவான கண் வடிவங்களை, சமயபுரம் மாரியம்மனுக்கு சமர்ப்பிக்கும் வழக்கம் நிலவி வருகிறது.

திருவாதிரை, சுவாதி சதயம் நட்சத்திர நபர்கள் சமயபுரம் மாரியம்மனுக்கு கண் வடிவங்களை சமர்ப்பித்து வழிபட்டு வர நீண்ட காலம் தடைபட்ட காரியங்கள் சுபமாக
நிறைவேறும்.

இதுவரை பூரம் நட்சத்திரம் பற்றி அறிந்தோம். அடுத்து வரும் கட்டுரையில் உத்திரம் நட்சத்திரம் பற்றி அறியலாம்.

- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x