Published : 11 Jun 2021 14:27 pm

Updated : 11 Jun 2021 14:27 pm

 

Published : 11 Jun 2021 02:27 PM
Last Updated : 11 Jun 2021 02:27 PM

மகம் ஜகம் ஆளுமா? உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 16

ungal-natchatirangal-varam-arulum-deivangal-16

ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்

ஆயில்யம் நட்சத்திரம் பற்றி கடந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்த்தோம். இந்த வாரம் நாம் மகம் நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் தெளிவாகவும் விரிவாகவும் காணலாம்.


மகம்
வானத்தில் சிம்மராசி மண்டலத்தில் காணப்படும் முதல் நட்சத்திரம் மகம். இது இரவில் கிரிடம் போலவும், கோயில் கோபுரம் போலவும், கலப்பை போலவும் காணப்படும். மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது ஆகும். சூரியன் ஆட்சி பெறும் ராசியான சிம்மத்தில் முதன்மையான நட்சத்திரம் என்பதாலும் இதன் வடிவம் கீரிடம் என்பதாலும் இதைக் கொண்டே மகம் ஜெகம் ஆளும் என்ற பழமொழி உருவானது.

வல்லவனுக்கு (தர்ப்பை) புல்லும் ஆயுதம்

வல்லவனுக்கு (தர்ப்பை) புல்லும் ஆயுதம் பழமொழிக்கான புராணக் கதையும், அதனுள் இருக்கும் நட்சத்திர சூட்சுமமும் பார்க்கலாம். இலங்கை அசோகவனத்தில் சீதையைக் கண்டு கணையாழி கொடுத்த அனுமன்... சீதையிடம் சொன்னார் ’அன்னையே, உங்களை சந்தித்ததற்கான அடையாளமாக ஏதாவது ஒன்றை ராமபிரபுவிடம் தந்தருள வேண்டும்’; என்றார். அதற்கு தனது சூடாமணியைக் கொடுத்துவிட்டு, ராமபிரபுவிற்கும் தனக்கும் மட்டுமே தெரிந்த ஒரு நிகழ்வை அனுமனிடம் சீதை விவரித்தார்.

வனவாசத்தின் போது ராமர், ’என் மடியில் உறங்கிக்கொண்டிருந்த சமயம், காகம் ஒன்று எனது மார்பில் கொத்தி காயம் ஏற்படுத்தியது. அதைப் பெரிதாக எடுக்காமல்,
மண்கட்டியால் விரட்டி பின், என்னவருடன் அளவளாவிக்கொண்டிருந்தேன். அசதியில் இருந்ததால் ஸ்ரீராமர் எனது மடியில் படுத்து உறங்கினார்.
அப்போது மீண்டும் அங்குவந்த அதே காகம் என்னைக் கொத்தி காயப்படுத்தியது.

அப்போதுதான் தெரிந்தது அது காகமல்ல காகவடிவில் வந்ததது இந்திரனின் மகனான காகாசுரன் என்று! அயர்ந்து கண்ணுறங்கும் ராமரின் தூக்கம் கலையக்கூடாது
என்பதற்காக, எனது மார்பில் கொத்தி காகம் காயப்படுத்தினாலும் அசையாமல் இருந்தேன். பலமுறை மார்பில் கொத்தியதால், எனது ரத்தத் துளிகள் சிதறி ராமர்
மேல் பட்டு தூக்கத்தில் இருந்து கண் விழித்தார்.

என் மார்பில் உண்டான காயத்தை கண்டு கடும்கோபம் கொண்ட ராமர், அங்கிருந்த தர்ப்பைப் புல்லின் மீது பிரம்மாஸ்திர மந்திரத்தைக் கூறி அதை ராம பாணமாக
மாற்றி காகாசுரன் மீது ஏவினார். ராம பாணத்திலிருந்து தப்பிக்க பலரின் உதவியை நாடினான் காகாசுரன். யாரும் உதவாத நிலையில் என்னிடமே சரணடைந்தான்.
தனது தவறை உணர்ந்து தன்னைக் காக்குமாறு கெஞ்சினான் காகாசுரன். சரணடைந்தவனைக் காப்பது சான்றோர் குணம் என்பதால், ராமரைச் சரணடைய
காகாசுரனை வலியுறுத்தினேன். அதுபோல, சரணடைந்த காகாசுரனை ராமர் மன்னித்தாலும், பிரம்மாஸ்திரமான ராம பாணம் காமப்பார்வை கொண்ட
காகாசுரனின் ஒற்றைக் கண்ணை காயப்படுத்தியோடு அவனை விட்டுவிட்டது’ என்று அந்த நிகழ்வை நெகிழ்ச்சியுடன் கூறி முடித்தார்.

அனுமனே, இந்தக் கதையை ராமனிடம் சென்று கூறினால் என்னை சந்தித்து பேசியதை நினைத்து ரகுகுல திலகம் மகிழ்ச்சி கொள்வார் எனக் கூறினார். அருகே உள்ள
வெற்றிலைக் கொடியிலிருந்து வெற்றிலைகளை அனுமனின் தலையில் வைத்து, சிரஞ்ஜீவியாக வாழ்வாய் என ஆனந்தக் கண்ணீருடன் ஆசீர்வாதம் செய்தார் அன்னை
சீதை.

நட்சத்திர ரகசியம்

சீதையின் நட்சத்திரம் மகம். அதன் பிரத்யக்கு ( சிக்கல்) தாரை அவிட்டம். காகம் என்பது அவிட்டம் நட்சத்திர வடிவம். ஆகவே சீதைக்கு காகம் சிக்கல் கொடுத்தது.
தர்ப்பைப் புல் என்பது மூல நட்சத்திர வடிவத்தைக் குறிக்கும். மூலம் நட்சத்திரம் ராமரின் நட்சத்திரமான புனர்பூசத்தின் க்ஷேம தாரை என்பதால், காகாசுரனை
வதைக்க தர்ப்பை புல்லை பயன்படுத்தினார்.

மேலும் அவிட்ட வடிவான காகாசுரனுக்கு மூலம் சாதக தாரை என்பதால், உயிரைப் பறிக்காமல் வெறும் கண்ணை மட்டுமே பறித்தது. மூலம் என்பது கேதுவை
அதிபதியாகக் கொண்ட நட்சத்திரம் என்பதால், தர்ப்பைப் புல் பாணம் அதே கேதுவை அதிபதியாக கொண்ட இன்னொரு நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் உதித்த
சீதையை ஆபத்தில் இருந்து காத்தது.

தாய் வராஹி - கலப்பை - தாரை ரகசியம்

ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தின் அடுத்த நட்சத்திரம் அவருக்கு அனைத்துச் செல்வங்களையும் வழங்கும் சம்பத்து நட்சத்திரம் ஆகும். அந்த நட்சத்திர வடிவத்தை
தன் கையில் கொண்ட தெய்வத்தை அல்லது அந்த வடிவத்தை நம்முடன் பிறர் பார்க்கும் வண்ணம் வைத்திருக்கும்போது புகழ் மற்றும் செல்வ வளம் வருவதை
அறியலாம். அதை உணர்த்தும் வண்ணமே குறிப்பிட்ட ஜென்ம நட்சத்திரத்தில் பிறந்த தெய்வங்கள் அதற்குரிய சம்பத்து நட்சத்திர வடிவங்களைத் தன்னுடன்
வைத்திருக்கின்றனர்.

ஆனி அமாவாசைக்கு அடுத்துவரும் வளர்பிறை பஞ்சமியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் உதித்தவர் அன்னை வராஹி. எனவே இவரது நட்சத்திரம் ஆயில்யம் எனலாம்.
ஆயில்யம் என்பது புதனின் நட்சத்திரம். இதன் வடிவம் படம் எடுத்த பாம்பு என்பதாகும்.
அன்னை வாராஹியின் சம்பத்து நட்சத்திரம் மகம். மகம் என்பதன் வடிவம் நாஞ்சில். அல்லது கலப்பை அல்லது நுகம். இந்த வடிவத்தை அன்னை வாராஹியிடம்
எப்பொழுதும் காணலாம்.

எனவே ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்சத்திரமாகக் கொண்ட நண்பர்கள், வராஹி வழிபாடு செய்து வளம் பெறுங்கள்.
சோழச் சக்கரவர்த்தி ராஜராஜ சோழன் நட்சத்திரம் சதயம் என்பதை அறிவோம்.

அவரின் 13 நட்சத்திர வடிவாக இந்த ஆயில்யம் நட்சத்திரம் வருகிறது. ஆயில்யம் என்பது சதயம், திருவாதிரை மற்றும் சுவாதிக்கு க்ஷேமம் அதாவது நலம் தரும்
நட்சத்திரம். எனவே ராஜராஜ சோழனுக்கு கருவூரார் வராஹி வழிபாட்டை பரிந்துரைத்தார். அதுபோலவே தஞ்சை பெரிய கோயிலில் அன்னை வாராஹிக்கு
பெரிய சிற்பம் தயார் செய்து வழிபாடு செய்து வந்தார் ராஜராஜ சோழன். அதனால் பெரிய புகழும் பெற்றார்.

நன்மை பெறும் நட்சத்திரங்கள்

ஆயில்யம், கேட்டை, ரேவதி, அனுஷம், உத்திரட்டாதி, பூசம், திருவோணம், அஸ்தம் மற்றும் ரோகிணி, மகம், அஸ்வினி மற்றும் மூலம்.
மேற்கண்ட நட்சத்திரத்தில் பிறந்து தனது ஜாதகத்தில் ராகுவின் 1, 5, 9, 12 ல் குரு அமைய பெற்ற ஆண்கள், மேற்கண்ட நட்சத்திரத்தில் பிறந்து தனது ஜாதகத்தில்
ராகுவின் 1, 5, 9, 12 ல் சுக்கிரன் அமையப்பெற்ற பெண்கள் வராஹி வழிபாடு செய்ய அதிவிரைவாக பலன் கிடைப்பதை அறியமுடிகிறது.

மேற்கண்ட நட்சத்திரத்தில் பிறக்காமல், தனது ஜாதகத்தில் ராகுவின் 1, 5, 9, 12 ல் குரு அமைய பெற்ற ஆண்கள், மேற்கண்ட நட்சத்திரத்தில் பிறக்காமல் தனது ஜாதகத்தில்
ராகுவின் 1, 5, 9, 12 ல் சுக்கிரன் அமையப்பெற்ற பெண்கள் ஆகச்சிறந்த பக்திமூலம் அன்னையின் அருள் பெற முடியும்.

அடுத்த கட்டுரையில் பூரம் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் காணலாம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

மகம் ஜகம் ஆளுமா? உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 16உங்கள் நட்சத்திரங்கள்வரம் அருளும் தெய்வங்கள்ஜோதிடம்ஜோதிடத் தொடர்ஜோதிட பலன்கள்நட்சத்திரங்கள்நட்சத்திர தாரைகள்MagamUngal natchatirangalVaram arulum deivangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x