Published : 07 May 2021 10:32 AM
Last Updated : 07 May 2021 10:32 AM

உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் - 10

- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்

சென்ற வாரம் கார்த்திகை நட்சத்திரம் பற்றி விரிவாகக் கண்டோம். இந்த வாரம் ரோகிணி நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் தெளிவாக மற்றும் விரிவாகக் காணலாம்.

ரோகிணி

ரோகிணி நட்சத்திரம் வான மண்டலத்தில் தேர், வண்டி, கோயில், ஆலமரம், ஊற்றால், சகடம் போன்ற தோற்றத்தில் காணப்படும். இதற்கு வடமொழியில் சக்கரம் என்ற பொருளுண்டு. ரோஹிணி என்ற நட்சத்திரம் வானில் இளம் சிவப்பு நிறத்தில் பளிச்சிடும் வண்ணத்தில் காணப்படும்.

இந்த நட்சத்திரம் பெண் ராசியாகிய ரிஷபம் என்ற ராசி மண்டலத்தில் நடுவில் இருக்கும் நட்சத்திரம். இதற்கு தமிழில் சகடம் என்ற பெயருண்டு. சகடம் என்றால் தேர்ச் சக்கரம் என்று அர்த்தம். மேலும் வேறு பரிமாணத்தில் இந்த நட்சத்திர மண்டலத்தைக் காணும்போது வானத்தில் ஊற்றால் போல தெரியும். ஊற்றால் என்றால் கோழிக் குஞ்சுகளைப் பாதுகாக்க மூடி வைக்க உபயோகப்படும் கூடையின் பெயர். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை பிரம்மா என்று ஜோதிடம் கூறுகிறது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீ கிருஷ்ணர், பகவான் பரசுராமர் மற்றும் மஹாவதார் பாபாஜி ஆகியோர். இதில் பிறந்த அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் ஆன்மிகம் மற்றும் ஆத்ம சாதனைகளில் நாட்டம் கொண்டிருப்பதைக் காணமுடியும். ரோகிணி நட்சத்திர அதிபதி சந்திரன்.

இந்த நட்சத்திர மண்டலத்தில் சந்திரன் இருக்கும்போது உச்சம் பெற்ற நிலையில் இருக்கும். ரோகிணி நட்சத்திரத்தின் வடிவம் சக்கரம் என்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்கள் அதிகம் பயணம் செய்பவர்களாகவும், அதேசமயம் கலை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்களாகவும் காண முடிகிறது.

ரோகிணி நட்சத்திரமும் ஸ்ரீ கிருஷ்ணரும்

ஒருவர் தனது ஜென்ம நட்சத்திர வடிவத்தை தனக்கு ஆபத்து ஏற்படும் நேரத்தில் உபயோகம் செய்யலாம் என்பதை பல முறை கூறி இருக்கிறேன். அதனை நிரூபிக்கும் இன்னொரு புராண நிகழ்வு ஸ்ரீகிருஷ்ணன் "கோவர்த்தன மலையை கொண்டு இடையர்களை காத்தது"

கிருஷ்ணனின் ஜென்ம நட்சத்திரம் ரோகிணி. இதன் வடிவம் ஊற்றால். ஊற்றால் என்பதன் அர்த்தம் கோழிக்குஞ்சுகளை மூடி வைக்கும் அகன்ற கூடை என்பதாகும். ரோகிணி நட்சத்திரத்திற்கு ஊற்றால் நட்சத்திரம் என்ற தமிழ்ப் பெயரும் உண்டு.

காரணம் இந்த நட்சத்திரம் அகன்ற கூடை போன்ற தோற்றம் தருவதாகும். கோவர்த்தன மலை பார்ப்பதற்கு அடைகாக்கும் அகன்ற கூடையை கவிழ்த்து வைத்ததைப் போன்ற தோற்றம் தரும்.

மழை வரவேண்டி யாதவ குலத்தினர் இந்திரனை வணங்கும் வழக்கம் கொண்டிருந்தனர். இதை அறிந்த கிருஷ்ணர் பரம்பொருளை வணங்குதலை விடுத்து இந்திரனை வணங்குதல் கூடாது என்று இந்திர பூஜையை தடுத்தார். இதனால் இந்திரனுக்கு கிருஷ்ணரின் மீதும் யாதவ குல மக்கள் மீதும் கடும் கோபம் உண்டானது. இந்திரன் இடையர்களின் மேல் பெரும் மழை பொழியச் செய்தார். அந்த பெருமழையைக் கண்டு நடுங்கிய மக்கள் கிருஷ்ணரிடம் தஞ்சம் அடைந்தனர். இந்த கடும் மழையில் இருந்து தங்களையும் கோகுல கால்நடைகளையும் காக்கும் பொருட்டு வேண்டினர். அந்த சமயத்தில் கிருஷ்ணர் தன்னையும் இடையர்களையும் கோவர்த்தன மலையை ஊற்றால் (கோழி மற்றும் குஞ்சுகளை மூடி வைக்கும் கூடை) போன்று மாற்றிக் கொண்டு, தன்னிடம் சரண் புகுந்த மக்களை மழையில் இருந்து காத்தார்.

மஹாஅவதார் பாபாஜியின் முத்ரா ரகசியம்

மஹாஅவதார் பாபாஜி பிறந்த நட்சத்திரம் ரோகிணி. இந்த நட்சத்திரத்தில் மட்டுமே சந்திரன் உச்சமடைகிறார். ரோகிணிக்கு அடுத்து இருக்கும் நட்சத்திர மண்டலம் மிருகசீரிடம். இந்த நட்சத்திரம் வானில் பார்ப்பதற்கு மான் தலை போல தெரியும். மிருகசீரிடம் நட்சத்திரம் ரோகிணி, அஸ்தம் மற்றும் திருவோணத்திற்கு வளம் மற்றும் சகல சம்பத்துகளைத் தரும் நட்சத்திரம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். .

நாம் அனைவரும் பாபாஜியின் கையில் இருக்கும் முத்ராவை பற்றி ரஜினிகாந்த் நடித்த ’பாபா’ படம் மூலம் அறியலாம். இந்த முத்திரை “அபான முத்ரா” என அழைக்கப்படுகிறது. உடலில் இருக்கும் மந்தவாயு பிரச்சினைகளை சரிசெய்யும் வல்லமை கொண்டது.

இந்த முத்திரையானது மிருகசீரிட நட்சத்திர வடிவான மான் தலை வடிவம் கொண்டது. இந்த முத்ராவை பாபாஜி அடிக்கடி பயன்படுத்தி தமது ஆன்மிக வளத்தை பெருக்கிக் கொண்டார் என்பதை அறியலாம்.

எனவே இந்த முத்திரையை கீழ்க்கண்ட நட்சத்திரக்காரர்கள் உபயோகித்து பயன்பெறுங்கள்.

ரோகிணி, திருவோணம், அஸ்தம், திருவாதிரை, சதயம், சுவாதி, சித்திரை, அவிட்டம் மற்றும் மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள், இந்த முத்திரையப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த முத்ரா வடிவம் ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நோய் போக்கும் வல்லமை கொண்டது.

இந்த முத்திரை கொண்ட மஹாஅவதார் பாபாஜியை நமக்கு அறிமுகம் செய்த ரஜினிகாந்த் அவர்கள் திருவோண நட்சத்திரம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த அத்தியாயத்தில் மிருகசீரிட நட்சத்திரத்தைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்!

- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x