Published : 16 Apr 2021 03:46 PM
Last Updated : 16 Apr 2021 03:46 PM

உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் - 8

- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்


இதுவரை எழுதிய கட்டுரைகளுக்கு ஆதரவு தந்த நண்பர்களுக்கு மிக்க நன்றி. சென்ற வாரம் அஸ்வினி நட்சத்திரம் பற்றி விரிவாகப் பார்த்தோம்.

இந்த வாரம் பரணி நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் விரிவாகப் பார்க்கலாம்.

பரணி

பரணி என்றால் முக்கோணம் என்று பெயர். பரணி நட்சத்திரத்திற்கு தமிழில் அடுப்பு என்ற பெயருண்டு. பூமியில் இருந்து பார்க்கும்போது அடுப்பு போலவும் அல்லது அகண்ட முக்கோணம் போலவும் அதேசமயம் பெண் யோனி போலவும் தெரியும் நட்சத்திர மண்டலம் பரணி ஆகும். ஜோதிடத்தில் ஆயுள்காரகன் எனும் சனி கிரகம் நீச்சம் பெறும் நட்சத்திரம் இதுவாகும். ஆகவேதான் எமபயம் போக்க பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

பரணி நட்சத்திரத்தின் அதி தேவதை துர்கை என்கிறது ஜோதிடம். துர்கை எவ்வாறு அதிதேவதையாக வரையறுக்கப்பட்டது என்பதைக் காணலாம். பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு சிறுவயதில் சுக்கிர திசை ஆரம்பிக்கும்.

இதை குட்டி சுக்கிர திசை என்று ஜோதிடர்கள் கூறுவது உண்டு. சுக்கிர திசைக்கான காலங்கள் மொத்தம் இருபது ஆண்டுகள் ஆகும். சுக்கிரன் கால புருஷ சக்கரத்தின் களத்திர காரன் என்பதால், சிலருக்கு சுக்கிர திசை காமத்தையும் அல்லது காதலையும் தருவதற்கு சாத்தியம் அதிகம். ஆகவே பரணி நட்சத்திரத்திற்கு அதி தேவதையாக துர்கை அல்லது காமாட்சி அமைந்திருக்கிறார்கள். துர்கை என்னும் சொல்லுக்கு சம்ஸ்கிருதத்தில் "வெல்லமுடியாதவள்" என்று பொருள். தமிழில் வெற்றிக்கு உரியவள் என்று பெயர்.

துர்கை என்ற சொல் துர்கம் என்ற சம்ஸ்கிருத வார்த்தையில் இருந்து மருவியது. துர்கா என்ற சொல்லைப் பிரித்தால் துர் + கா என்று பிரிக்கலாம். துர் என்றால் தீய சக்தி என்று பொருள். கா அல்லது ஹா என்றால் வெல்பவள் என்று பொருள்.

இனி, பரணி நட்சத்திரத்திற்கான சுப தாரைகளைப் பார்க்கலாம். கீழ்க்கண்ட சுப தாரைகள் பரணி நட்சத்திற்குரியவை.

⦁ பரணி - ஜென்ம தாரை
⦁ கார்த்திகை - சம்பத்து தாரை
⦁ புனர்பூசம் - சாதக தாரை
⦁ மூலம் - பரம மைத்திர தாரை
⦁ விசாகம் - சாதக தாரை

துர்கை உருவத்தில் இருக்கும் சுப தாரைகள் காணலாம்.

⦁ நெற்றிக்கண் - பரணி
⦁ திரிசூலம் - பரணி
⦁ வாள் - கார்த்திகை
⦁ வில் - புனர்பூசம்
⦁ பாசம் - மூலம்
⦁ கோடரி - விசாகம்
⦁ கேடயம் - விசாகம்
⦁ அங்குசம் - மூலம்

எருமைத்தலைக்கு மேல் நிற்கும் துர்கையின் ரகசியம்

பரணி நட்சத்திரத்தின் அதிதேவதை துர்கை. பரணியில் ஆயுட்காரகன் சனி நீச்சம். எனவே சனியின் காரகத்துவமான எருமைத் தலையின் (மகிஷனின் தலை) மீது ஏறி மிதித்து நிற்கிறாள் துர்கை.

எருமையின் இரண்டு கொம்புகள் நடுவே காட்சி தருவார் துர்கை. இங்கே இரண்டு கொம்புகள் என்பது கார்த்திகை நட்சத்திர வடிவமாகும். கார்த்திகை நட்சத்திரம் பரணியின் சம்பத்து தாரை ஆகும்.

⦁ கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திர நண்பர்கள் துர்கை அம்மனை ராகுகாலத்தில் வணங்கி வருவது சிக்கல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும்.
⦁ பரணி, பூராடம், பூரம் நட்சத்திர நண்பர்கள் துர்கை அம்மனை ராகுகாலத்தில் வணங்கி வந்தால் உடல் ஆரோக்கியம் பெறலாம்.

⦁ அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திர நண்பர்கள் துர்கை அம்மனை ராகுகாலத்தில் வணங்கி வருதல், சர்வ சம்பத்துகளையும், செல்வத்தையும் தரும்.

⦁ உத்திரட்டாதி, அனுஷம், பூசம் நட்சத்திர நண்பர்கள் துர்கை அம்மனை ராகுகாலத்தில் வணங்கி வருதல், காரியத்தில் வெற்றியைத் தரும்.

⦁ சதயம், சுவாதி, திருவாதிரை நட்சத்திர நண்பர்கள் துர்கை அம்மனை ராகுகாலத்தில் வணங்கி வந்தால் நீண்டநாள் பிரச்சினைகளுக்கு விரைவிலேயே தீர்வு கிடைக்கும்.

அடுத்து... கார்த்திகை நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரைகள் பற்றியும் அவர்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள் பற்றியும் பார்க்கலாம்.

- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x