Published : 12 Apr 2021 11:09 AM
Last Updated : 12 Apr 2021 11:09 AM

தமிழ்ப் புத்தாண்டு பிலவ வருட ராசி பலன்கள்: மீன ராசி வாசகர்களே (14.04.2021 முதல் 13.04.2022 வரை)

சுற்றியிருக்கும் அழுக்குகளைத் தின்று சுத்தம் செய்யும் மீனைப்போல மற்றவர்களின் துன்பங்களை, துயரங்களை ஏற்றுக் கொள்ளும் சுமை தாங்கிகளே! போலியாக வாழாமல், ஆடம்பரத்துக்கும் ஆசைப்படாமல் இருப்பதை வைத்து சந்தோஷப்படும் நீங்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர்கள். உங்கள் ராசிக்கு சந்திரன் இரண்டில் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் இங்கிதமாகப் பேசி, முடியாததையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள்.

அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் தேடி வருவார்கள். வேற்றுமொழிக்காரர்கள் உதவுவார்கள். உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் போது இந்த பிலவ வருடம் பிறப்பதால் இடைவிடாது போராடி வெற்றி பெறுவீர்கள். சாதுர்யமாகவும் சமயோஜிதமாகவும் யோசித்து பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வி.ஐ.பி.க்கள் உதவுவார்கள். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். புதிய வாகனம் அமையும். தள்ளிப் போன திருமணப் பேச்சுவார்த்தை கூடி வரும்.

20.3.2022 வரை ராகு மூன்றில் நிற்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்விகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். கேது ஒன்பதாமிடத்தில் நிற்பதால் தந்தையாருக்கு மருத்துச் செலவுகள் வந்த வண்ணம் இருக்கும். 21.3.2022 முதல் வருடம் முடியும் வரை ராகு இரண்டில் நுழைவதால் வீண் படபடப்பு, பேச்சில் கடுகடுப்பு, பதற்றம் அதிகரிக்கும். கேது 8-ல் நுழைவதால் விபத்து, திடீர்ப் பயணங்கள் வரக்கூடும். கல்யாணம், சீமந்தம், புது மனை புகுவிழா, காதணி விழா என வீட்டில் விசேஷங்கள் நடக்கும். வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். எதிர்த்துப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். வி.ஐ.பி.க்கள் நண்பராவார்கள்.

இந்தப் புத்தாண்டு தொடக்கம் முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும் வரை 12-ம் வீட்டில் குரு அமர்வதால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்து் செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தகுந்த ஆதாரமில்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு அவர்களைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப உணவு முறைகளை அமைத்துக் கொள்வது நல்லது.

தந்தையாருக்கு நெஞ்சு வலி, அசதி, சோர்வு வந்துப் போகும். அவருடன் அவ்வப்போது மனத்தாங்கல் வரும். ஆனால் 14.9.2021 முதல் 12.11.2021 வரை குருபகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால் தொட்டது துலங்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். கோவில் கும்பாபிஷேகத்துக்குத் தலைமை தாங்குவீர்கள். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். எங்கு சென்றாலும் வரவேற்பு அதிகரிக்கும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள்.

உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சனியும் பலம் பெற்று அமர்ந்திருப்பதால் உங்களைத் தலைநிமிர வைக்கும். செயலில் வேகம் கூடும். வருமானம் உயரும். பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். அழகு, இளமை கூடும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை முடித்துப் புதிய வீட்டில் குடிபுகுவீர்கள். அனுபவபூர்வமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள்-. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். கடன் பிரச்சினைகள் ஓயும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஐப்பசி, பங்குனி மாதங்களில் வீடு, மனை வாங்குவீர்கள். குடும்ப வருமானம் உயரும். உங்களால் வளர்ச்சியடைந்தவர்கள், பக்கபலமாக இருப்பர். முன்கோபத்தைக் குறையுங்கள். பணம் கொடுக்கல் - வாங்கலில் கவனம் தேவை. யாருக்காவும் ஜாமீன் கையெழுத்து இட வேண்டாம். கெட்ட கனவுத் தொல்லை, தூக்கம் இன்மை வந்து போகும். அக்கம் பக்கத்தாரின் அன்புத் தொல்லைகள் விலகும். பழைய வாகனத்துக்குப் பதில் நவீன ரக வாகனத்தில் உலா வருவீர்கள்.

வியாபாரத்தில் போட்டியாளர்களைத் திக்குமுக்காட வைக்கும்படி சில அதிரடி திட்டங்களைச் செய்வீர்கள். விளம்பர உத்தியால் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளை அசல் விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் கடையை விரிவுபடுத்துவீர்கள். சிலர் சொந்த இடத்துக்கு மாறுவார்கள். புதிய பங்குதாரர்களைச் சேர்ப்பீர்கள். பழைய பாக்கிகளும் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி அவ்வப்போது விமர்சனங்களும், குறைகளும் வந்த வண்ணம் இருக்கும். ஆவணி, புரட்டாசி மாதங்களில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மார்கழி மாதத்தில் சம்பள உயர்வுடன் சலுகைகளும் உண்டு. கணினித் துறையினருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். சின்னச் சின்னத் தடுமாற்றங்கள் இருந்தாலும் புகழ் கூடும். சம்பள பாக்கி கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு. இந்த பிலவ ஆண்டு ஒருபக்கம் அனுபவ அறிவையும், செலவையும் தந்தாலும், மற்றொருபக்கம் திடீர் வருமானத்தையும், செல்வாக்கையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

பிரத்யங்கரா தேவியை அமாவாசை திதி நாளில் சென்று கதம்ப பொடி அபிஷேகம் செய்து வணங்குங்கள். கமலாப் பழம் தானமாகக் கொடுங்கள்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x