Published : 12 Apr 2021 11:09 AM
Last Updated : 12 Apr 2021 11:09 AM

தமிழ்ப் புத்தாண்டு பிலவ வருட ராசி பலன்கள்: கும்ப ராசி வாசகர்களே (14.04.2021 முதல் 13.04.2022 வரை)

zodiac-benefits

மஞ்சளும், மலரும் கொண்டு துதிக்கா விட்டாலும், நெஞ்சில் நினைப்பதே போதும் என்றெண்ணும் நீங்கள், ஆர்ப்பாட்டம் அலங்காரம் இல்லாமல் அமைதியாக எதையும் சாதிப்பீர்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உதவிகேட்டு வந்தவர்களுக்கு வாரி வழங்கும் நீங்கள் கொடுத்துச் சிவந்த கைகளையுடையவர்கள். உங்கள் ராசிக்கு மூன்றாவது ராசியில் இந்த பிலவ ஆண்டு பிறப்பதால் முடியாததை முடித்துக் காட்டுவீர்கள். பாதியிலேயே நின்றுபோன காரியங்கள் உடனே நிறைவேறும். தைரியம் பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. சாதாரண நிலையிலிருந்து சாமான்ய நிலைக்கு முன்னேறுவீர்கள். பேச்சிலிருந்த முணுமுணுப்பு, சலிப்பு நீங்கும். தன்னம்பிக்கையுடன் பேசுவீர்கள். நிர்வாகத் திறமை கூடும்.

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு வாரிசு உண்டாகும். சித்திரை, வைகாசி மாதங்கள் கொஞ்சம் அலைச்சலைத் தந்தாலும் வளர்ச்சியையும் தரும். மனைவியையும், மனைவி வழி உறவினர்களையும் அனுசரித்துப் போகவேண்டியது வரும். வீடு கட்டுதல், நண்பர்கள், உறவினர்கள் வீட்டு விஷேசங்களை முன்னின்று நடத்துவதால் செலவுகள் அதிகரிக்கும்.


இந்த ஆண்டு முழுக்க குருபகவான் சாதகமாக இல்லாததால் முன்கோபம் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். உடல் அசதி, சோர்வு, எதிலும் ஒருவித சலிப்பு, சிறுநீரகத் தொற்று, காய்ச்சல், வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி வந்துச் செல்லும். நேரம் கடந்து சாப்பிடுவதை தவிர்க்கப்பாருங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். நீண்ட நாட்களாகச் செல்ல வேண்டுமென நினைத்திருந்த கோவில்களுக்கு குடும்பத்தாருடன் சென்று வருவீர்கள்.

20.3.2022 வரை ராசிக்கு நான்கில் ராகு நிற்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவு, தாய்வழி உறவினர்களிடையே பகைமை வரக்கூடும். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. கேது 10-ல் நிற்பதால் உத்தியோகத்தில் படபடப்பு, காரியத்தடைகள் வரும். செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். 21.3.2022 முதல் ராகு மூன்றில் நுழைவதால் எதிலும் வெற்றியுண்டாகும். புதிய முயற்சிகள் பலிதமாகும். வீடு கட்டும் பணி பணப்பற்றாக்குறையால் பாதியிலேயே நின்றுப் போனதே, இனி வங்கிக் கடன் பெற்று வீட்டை கட்டி முடிப்பீர்கள். கேது, ஒன்பதாம் வீட்டுக்குள் நுழைவதால் இதுவரை உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். ஆனால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். உங்களின் பிடிவாதக் குணத்தை மற்றவர்களுக்காக மாற்றிக் கொள்வது நல்லது.

இந்தாண்டு முழுக்க சனி 12-ல் மறைந்து விரையச் சனியாகத் தொடர்வதால் வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்துபோகும். தூக்கம் குறையும். தன்னம்பிக்கை குறையும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். அவருக்கு முதுகு த் தண்டில் வலி, பல், முழங்கால், மூட்டு வலி வந்து செல்லும். தாய்வழி உறவினர்களுடன் பனிப்போர் வெடிக்கும். சகோதரர்கள் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள்.

ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் புதிய வீடு , மனை வாங்குவீர்கள். காற்றோட்டம் நிறைந்த வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சியில் வெற்றி கிட்டும். பொது நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களின் பேச்சைக் கேட்டு அனைவரும் வியப்பார்கள். எதிர் வீட்டுக்காரர்களுடன் இருந்த சண்டை, சச்சரவு விலகும். சுமுகமான நட்புறவு கொள்வீர்கள். வெளியூர்ப் பயணம் ஆதாயம் தரும்.

வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை நவீன உத்தியால் விற்றுத் தீர்ப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்கள் கடை தேடி வருமளவிற்கு கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். சித்திரை, மாசி, பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளைப் போட்டு போட்டியாளர்களைத் திக்குமுக்காட வைப்பீர்கள். பங்குதாரர்களின் தொந்தரவுகள் குறையும். உத்தியோகத்தில் சித்திரை, வைகாசி, பங்குனி மாதங்களில் புதிய பதவிகள் வரும். உயரதிகாரி உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். சக பணியாளர்களின் சொந்த விஷயங்களில் தலையிட்டுப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பீர்கள். கணினித் துறையினருக்கு வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். இந்தத் தமிழ் புத்தாண்டு சின்னச் சின்ன முடக்கங்களையும், சங்கடங்களையும் தந்தாலும், எதிர்பாராத திடீர் முன்னேற்றங்களும், உயர்ந்த அந்தஸ்தும் தேடித்தருவதாக அமையும்.

பரிகாரம்

பௌர்ணமி திதி நாளில் பெருமாள் கோவிலில் அருள்பாலிக்கும் தாயாருக்கு ஜவ்வாது அபிஷேகம் செய்து வணங்குங்கள். மாதுளம் பழம் தானமாகக் கொடுங்கள்.


ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்கும்ப ராசிபரிகாரம்Zodiac benefitsராசி பலன்கள்தமிழ்ப் புத்தாண்டுபிலவ வருட ராசி பலன்கள்Astrology

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x