Published : 12 Apr 2021 11:09 AM
Last Updated : 12 Apr 2021 11:09 AM

தமிழ்ப் புத்தாண்டு பிலவ வருட ராசி பலன்கள்: மகர ராசி வாசகர்களே (14.04.2021 முதல் 13.04.2022 வரை)

வேர்கள் பலமாக இருந்தால் தான் புதிய இலைகளும், பூக்களும், காய்களும் கனியும் என்பதை அறிந்த நீங்கள், கோபுரத்தில் இருந்தாலும் அஸ்திவாரத்துக்கு அடிக்கடி நன்றி கூறுவீர்கள். தனக்கென எதையும் எடுத்து வைத்துக் கொள்ளாத நீங்கள், வாழ்க்கைச் சதுரங்கத்தில் சாதுர்யமாக காய்நகர்த்தும் ராஜதந்திரிகள்.

உங்கள் ராசிக்கு நான்கில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் புதிய சிந்தனைகள் பிறக்கும். பிள்ளைகளின் நெடுநாள் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். அவர்களின் வருங்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்கள் மகனுக்கு பல இடங்களில் மணமகள் பார்த்தும் நமக்கு ஏற்ற சம்பந்தம் இல்லையே என வருந்தினீர்களே! இனி மணப்பெண் அமையும். எதிர்த்துப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். புதிய நண்பர்களும் அறிமுகமாவார்கள். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

இந்தப் புத்தாண்டு தொடக்கம் முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி வருடம் முடியும் இரண்டாம் வீட்டிலேயே அமர்வதால் குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் கலகத்தை ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். மருந்து, மாத்திரைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். படித்து, பட்டம் வாங்கியும் கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலையில்லாமல் திண்டாடினீர்களே! புதிய வேலை அமையும்.

சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். ஆனால் 14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு உங்கள் ராசிக்குள்ளே அமர்ந்து ஜென்ம குருவாக இருப்பதால் பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். மஞ்சள் காமாலை, காய்ச்சல், காது வலி வரக்கூடும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது. லாகிரி வஸ்துக்களைத் தவிர்ப்பது நல்லது. சிலர் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழும்.

20.3.2022 வரை கேது 11-ம் வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். தயக்கம், தடுமாற்றம் நீங்கும். ஆன்மிகவாதிகள் அறிமுகமாவார்கள். கடந்த வருடத்தில் வாட்டி வதைத்த பிரச்சினைகளுக்கெல்லாம் இப்பொழுது தீர்வு கிடைக்கும். குடும்பத்தாருடன் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவு என்றே நாட்கள் நகர்ந்ததே, இனி பாசம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். 21.3.2022 முதல் வருடம் முடியும் வரை நான்கில் ராகு நுழைவதால் வேலைச்சுமை வாட்டியெடுக்கும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். வாகனம் தண்டச்செலவு வைக்கும். கேது 10-ம் வீட்டுக்குள் வருவதால் உத்தியோகத்தில் எதிர்ப்புகள், திடீர் இடமாற்றம், வேலைச்சுமை, அதிருப்தி வந்து நீங்கும்.

இந்தாண்டு முழுக்க சனிபகவான் ராசியிலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வீடு வாங்குவீர்கள். சிலர் புதுமனை புகுவீர்கள். என்றாலும் ஜென்மச் சனியாகந் தொடர்வதால் உடல்நலம் பாதிக்கும். வாயுப் பதார்த்தங்கள், அசைவ, கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. செரிமானக் கோளாறு, வயிறு உப்புசம், அசதி, சோர்வு வந்து செல்லும். வழக்கை நினைத்துக் கவலையடைவீர்கள். தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களுடன் பழகிக் கொண்டிருக்காதீர்கள்.

புரட்டாசி மாதத்தில் இருந்து மகிழ்ச்சி தங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வழக்குகளில் நிதானம் தேவை. மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். பழகியவர்களுக்குக் கூட ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வாயுத் தொந்தரவு, தலை சுற்றல் வந்து போகும். யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.

வியாபாரத்தில் ஆனி, ஆடி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. அசல் வந்தால் போதும் என்று நினைத்திருந்த உங்களுக்கு வியாபாரத்தில் கணிசமாக ஆதாயமுண்டாகும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் கடுமை காட்ட வேண்டாம். புதிதாக அறிமுகமாகும் நபர்களை நம்பி எந்த ஒரு பெரிய முடிவுகளையும் எடுக்காதீர்கள். ஊழியர்களிடம் தொழில் சம்பந்தபட்ட ரகசியங்களை சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். வேலையில் எதிர்பார்த்து வராமல் போன பதவி உயர்வு ஆனி, ஆடி மாதங்களில் கிடைக்கும். அவ்வப்போது உழைப்புக்கான அங்கிகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். மேலதிகாரியுடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். இந்தப் புத்தாண்டு முற்பகுதியில் சின்னச் சின்ன இடர்பாடுகள் தந்தாலும், தைரியமாக எதிர்கொண்டு பிற்பகுதியில் சாதிக்க வைக்கும்.

பரிகாரம்

அருகிலிருக்கும் பெருமாள் சன்னதியில் அருள்பாலிக்கும் கருடாழ்வாருக்கு எலுமிச்சை சாறு அபிஷேகம் செய்து வணங்குங்கள். கிர்ணி பழத்தை தானமாகக் கொடுங்கள்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x