தமிழ்ப் புத்தாண்டு பிலவ வருட ராசி பலன்கள்: கடக ராசி வாசகர்களே (14.04.2021 முதல் 13.04.2022 வரை)

தமிழ்ப் புத்தாண்டு பிலவ வருட ராசி பலன்கள்: கடக ராசி வாசகர்களே (14.04.2021 முதல் 13.04.2022 வரை)
Updated on
2 min read

வீடு வாசல் என்று அடங்கிவிடாமல் நாடு நகரம் என யோசிப்பவர்களே! ஆர்ப்பாட்டம் செய்யாமல் அகிம்சைவழியில் சென்று நினைத்ததை அடையும் நீங்கள், எதிரியின் உணர்வுக்கும் மதிப்பளிப்பவர்கள். ஆறாவது அறிவுக்கு அடிக்கடி வேலை தரும் நீங்கள், நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். உங்களது 10-வது ராசியில் இந்த பிலவ ஆண்டு பிறப்பதால் உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். இதுநாள் வரை நீங்கள் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கெல்லாம் நல்ல பலன் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய உத்தியோகம் அமையும்.

அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும். ஆவணி மாதத்தில் அரசுக் காரியங்கள் முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டிட வரைபடமும் அப்ரூவலாகும். சொந்தபந்தங்களின் சுய ரூபத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப இனிச் செயல்படுவீர்கள். நவீன ரக வாகனம் மற்றும் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை வாங்குவீர்கள்.

இந்தப் புத்தாண்டு தொடக்கம் முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும் வரை குரு எட்டாம் இடத்தில் அமர்வதால் அரசு விவகாரங்கள், வழக்குகளில் அலட்சியப் போக்கு கூடாது. வி.ஐ.பி.க்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். சிலரின் சதியால் சொத்தை இழக்க நேரிடும். உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். ஆனால் 14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு ஏழாம் இடத்தில் நிற்பதால் குடும்பத்தில் நல்லது நடக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். பழைய கடனைக் கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். வெளியூர்ப் பயணங்கள் திருப்திகரமாக அமையும். இக்காலகட்டத்தில் வரும் வருமானத்தை அதிகமாகச் சேமித்து வைத்துக் கொள்வீர்கள்.

20.3.2022 வரை லாப வீட்டில் ராகு நிற்பதால் எதிலும் மகிழ்ச்சி பொங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கேது ஐந்தாமிடத்தில் நிற்பதால் பிள்ளைகளுடன் மனவருத்தங்கள் வந்து நீங்கும். படபடப்பு, கெட்ட கனவுத்தொல்லை வரக்கூடும். 21.3.2022 முதல் 10-ல் ராகு நுழைவதால் அடுத்தடுத்து வேலைச்சுமை இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. கேது நான்காம் இடத்தில் நுழைவதால் புதிய முயற்சிகள் தடைபட்டு வெற்றியடையும். இந்த ஆண்டு முழுக்க கண்டகச் சனியாக அமர்வதால் சிறுசிறு வாகன விபத்துகள், ஏமாற்றங்கள், பண இழப்புகள் வந்து போகும். யாருக்கும் கடன் உத்திரவாதக் கையெழுத்திட வேண்டாம்.

அரைகுறையாக நின்ற கட்டிட வேலைகள் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் முழுமையடையும். வெளிநாட்டுப் பயணம் தேடி வரும். நீரிழிவு நோய், மூட்டு வலி, நெஞ்சு வலி ஆகியவை விலகும். வாகன வசதி பெருகும். சித்திரை, ஆவணி மாதங்களில் லாபம் கணிசமாக உயரும். புதிய சலுகைகளையும் அறிமுகப்படுத்துவீர்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு ஆவணி, புரட்டாசி மாதங்களில் கிட்டும். சக ஊழியர்களை அன்பால் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள். வேலைகளைத் தேங்கவிடாமல் அவ்வப்போது முடிக்கப் பாருங்கள். இந்தப் புத்தாண்டு தன் கையே தனக்குதவி என்பதை உணர வைப்பதாக அமையும்.

பரிகாரம்

அருகிலுள்ள கோயிலில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானை சஷ்டி திதி நாளில் சென்று சந்தன அபிஷேகம் செய்து வணங்குங்கள். எலுமிச்சைப் பழச் சாறு தானமாகக் கொடுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in