Published : 24 Mar 2021 09:54 AM
Last Updated : 24 Mar 2021 09:54 AM

ஐயப்பனுக்கு மணி ஏன்? திருமாலுக்கு பாம்பு ஏன்? ;  உங்கள் நட்சத்திரங்கள்... வரம் அருளும் தெய்வங்கள் - 5 

- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்

க்ஷேம தாரை பற்றி கடந்த பதிவில் தெரிவித்திருந்தேன். இதைப் படித்துவிட்டு, தாங்கள் கொடுத்த பேராதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றி. இப்போது, இந்தப் பதிவில், சாதக தாரை பற்றி பார்க்கலாம்.

சாதக தாரை என்பது பலநாட்களாக முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கும் முக்கிய நிகழ்வுகளை எளிதில் முடித்து வைக்கும் ஆற்றல் கொண்டது. உங்கள் நட்சத்திரத்தில் இருந்து எண்ணி வர கிடைக்கும் 6,15, 24வது நட்சத்திரங்கள் சாதக தாரை எனப்படும்.

உதாரணமாக, ஒருவரின் நட்சத்திரம் "சைத்திரா எனும் சித்திரை" என்றால் அவரது ஜென்ம/அனு ஜென்ம/ திரி ஜென்ம சாதக தாரைகள் முறையே மூலம், அஸ்வினி மற்றும் மகம் நட்சத்திரங்களாகும். இவை மூன்றும் கேது கிரகத்தை அதிபதியாக கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

சித்திரை நட்சத்திரத்தின் சாதக தாரைகள்
ஜென்ம சாதக தாரை மூலம்

அனு - ஜென்ம சாதக தாரை - அஸ்வினி
திரி - ஜென்ம சாதக தாரை - மகம்

சாதக தாரை என்பது ஜாதகரின் வாழ்வில் என்னென்ன மாற்றங்களையெல்லாம் தரும் என்று பார்க்கலாம்.


இக்கட்டான அல்லது கண்டம் தரும் சூழலில் சிக்கி இருக்கும் ஒருவருக்கு சாதக சூழல் நல்கும் நட்சத்திரம்தான் சாதக தாரை. அதாவது உங்களுக்கு சாதக தாரையானது மிகப்பெரிய பாதுகாப்பைக் கொடுக்கவல்லது. எதையும் பயமின்றி கடப்பதற்கு துணை நிற்கக் கூடியது.
பிறப்பு ஜாதகத்தில் இருக்கும் பலவித கடுமையான தோஷங்களையெல்லாம் போக்கும் வல்லமையும் சாததாரைக்கு இருக்கிறது. சாதக தாரை என்பது குறித்து ஜோதிட சாஸ்திரம் இப்படியெல்லாம் விளக்கியுள்ளது. ஆகவே சாதக தாரை தோஷம் போக்கும் தாரை என்றும் அழைக்கப்படுகிறது.

சாதக தாரை தரும் பலன்கள்
⦁ நீண்ட காலமாக இருந்துவரும் சிக்கலுக்கு தீர்வு
⦁ தோஷ நிவர்த்தி
⦁ சாதகமான சூழல்களை ஏற்படுத்திக் கொடுத்தல்
⦁ முடிவெடுக்கும் ஆற்றலை வளர்த்தல்

சாதக தாரைக்கான இரண்டு புராண உதாரணங்களைச் சொல்கிறேன்.

மணிகண்டனின் பெயர் ரகசியம்

மணிகண்டன் என்ற பெயரை மணி + கண்டம் என்று பிரிக்கலாம். கண்டம் என்றால் கழுத்து என்று பொருள். எனவே இந்தப் பெயரின் விளக்கம் மணியை தனது கழுத்தில் தாங்கியவர் என்பதாகும். இந்த மணி வடிவம் ஏன்? ஐயப்ப சுவாமி பிறக்கும்போதே அவரது கழுத்தில் மணி இருந்தது என்பதற்கான தாரை ரகசியத்தைக் காண பாற்கடல் கடையும் நிகழ்வையும் சொல்லவேண்டும்.

அமிர்தம் உண்டால் அமர வாழ்வு பெறலாம் என்ற நோக்கத்துடன் அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடைந்தனர். அவ்வாறு கடையும் போது முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அந்த விஷத்தில் இருந்து சிவபெருமான் உலகைக் காத்தார் என்கிறது புராணம். இந்த நிகழ்வின் கடைசியாக தன்வந்திரி பகவான் மூலம் அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டார்.

அமிர்த கலசம் வெளிப்பட்டதும் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அமிர்தம் உண்பதற்காக சண்டை ஏற்பட்டது. அப்போது அசுரர்களில் ஒருவரான ஸ்வர்ணபானு என்பவர் எவருக்கும் தெரியாமல் கலசத்தைக் கடத்திச் சென்றார். இதனால் அதிக வருத்தத்திற்கு தேவர்கள் உள்ளானார்கள்.
அமிர்த கலசம் திரும்பப் பெற வேண்டி தேவர்கள் திருமாலை வேண்டினார்கள். அவர்களது கோரிக்கையை திருமால் ஏற்று கொண்டு அனைவரையும் மயக்கும் அழகிய மோஹினி வடிவம் எடுத்தார்.

ஸ்வர்ணபானுவிடம் இருந்து அமிர்த கலசத்தைப் பெற வேண்டி மோஹினி வடிவத்துடன் அவர்கள் முன் தோன்றினார் திருமால். அவர்களை மயக்கும்படி நடனம் செய்து அமிர்த கலசத்தை மீட்டார் திருமால். இருப்பினும் ஒரு துளியளவு அமிர்தத்தை உண்ண முயன்ற ஸ்வர்ண பானுவை தனது சக்கராயுதத்தால் தலை வேறு உடல் வேறாக வெட்டி சம்ஹாரம் செய்தார். இருப்பினும் அமிர்தம் உண்டதால் ஸ்வர்ணபானுவின் தலை மற்றும் உடல் உயிர்ப்புடன் இருந்தது. அதாவது வெட்டப்பட்ட தலை தனியாகவும் உடல் தனியாகவும் இருந்தது; உயிர்ப்புடனும் இருந்தது.
இதைக் கண்ட திருமால், பாம்பின் தலையை ஸ்வர்ணபானுவின் உடலுக்கும், பாம்பின் உடலை ஸ்வர்ணபானுவின் தலைக்கும் பொருத்தினார். இவை ராகு மற்றும் கேது என்று பெயர்கொண்டு நவக் கிரகங்களில் இருவரும் சேர்ந்தனர்.

இந்த நிகழ்வுக்குப் பின்னர் மோஹினி அவதாரத்தின் நோக்கம் முடிந்தது என்று நினைத்தார் பெருமாள். அப்போது அங்கே வந்த சிவபெருமான் மஹிஷி என்ற அரக்கியைப் பற்றியும் அவள் பெற்ற விசித்திர வரத்தைப் பற்றியும் விவரித்தார். அந்த அரக்கி பெற்ற வரம் தெரியும்தானே?
திருமாலுக்கும் சிவ பெருமானுக்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே தனது இறப்பு நிகழ வேண்டும் என்ற இயற்கைக்கு மாறான அரிய வரத்தை பிரம்மனிடம் இருந்து பெற்று இருந்தாள் மஹிஷி. ஆகவே மோஹினி வடிவான திருமாலும், சிவனும் கூடிப் பிறந்தவர்தான் மணிகண்டன் எனும் ஐயப்பன். பல்குணி (பங்குனி) மாதம் உத்திர நட்சத்திரத்தில் உதித்தவர் மணிகண்டன்.

மணிகண்டன் அவதரித்தவுடன் அவரை கானகத்தில் விட்டு புறப்படும் முன்னர், அவரது கழுத்தில் மணி ஒன்றை அணிவித்தார் சிவ பெருமான். உத்திரம் என்ற நட்சத்திரத்தின் சாதக தாரைகள் முறையே அனுஷம், உத்திரட்டாதி மற்றும் பூசம் ஆகும். அனுஷம் என்ற நட்சத்திர வடிவம் மணி. கானகத்தில் விலங்குகள் மூலம் வரும் ஆபத்தில் இருந்து பாதுகாக்க, அனுஷ நட்சத்திர வடிவான மணி உதவியது. இதன் மூலம் சாதக தாரை ஜாதகரை இக்கட்டான சூழலிலும் பாதுகாப்பு தரும் என்பதை உணரமுடிகிறதுதானே!

பெருமாளும் நாக வடிவமும்
பெருமாளின் நட்சத்திரம் திருவோணம் என்று புராணங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளின் திருவோணம் நட்சத்திரத்தின் சாதக தாரைகள் ரேவதி, ஆயில்யம் மற்றும் கேட்டை ஆகும். இதில் ஆயில்யம் என்ற நட்சத்திரத்தின் வடிவம் படம் எடுத்த பாம்பின் வடிவம் ஆகும். ஆகவே பெருமாள் தான் படுத்துறங்கும் நட்சத்திரமாக அனந்தன் என்ற படம் எடுத்த பாம்பின் வடிவத்தை தேர்ந்தெடுத்தார்.

மேலும் பெருமாள் எடுத்த கிருஷ்ண அவதாரத்தில், மதுரா நகரத்தின் சிறையில் இருந்து வசுதேவர், குழந்தை கிருஷ்ணரை கூடையில் வைத்து கோகுலம் நோக்கி புறப்பட்டார். அப்போது காரிருள் சூழ்ந்த நள்ளிரவு, அத்துடன் கடும் மழையும் பெய்து கொண்டிருந்தது.

அதேசமயம் யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. இந்த இக்கட்டான சூழலில் பச்சைக்குழந்தையான கிருஷ்ணரை கூடையுடன் தனது தலையில் வைத்து யமுனையை கடக்க எத்தனித்தார் வசுதேவர். அப்போது யமுனை நதியில் இருந்து ஆதிசேஷ நாகம் வெளிப்பட்டு, குடை போல படம் எடுத்து குழந்தை கிருஷ்ணரை சூழ்ந்து பாதுகாத்தது. இதனால் மழை மற்றும் வெள்ள நீரினால் கிருஷ்ணர் எந்தப் பாதிப்பும் அடையாமல் வந்துசேர்ந்தார்.

கிருஷ்ணர் பிறந்த ரோகிணி நட்சத்திரத்திற்கு ஆயில்யம் என்ற படம் எடுத்த பாம்பின் வடிவம் சாதக தாரை என்பதால், இக்கட்டான சூழலில் இருந்து படம் எடுத்த பாம்பு கிருஷ்ணரைக் காத்தது.

அடுத்த கட்டுரையில் பரம மித்ர தாரை எனப்படும் அதி மித்ர தாரை பற்றி விரிவாகச் சொல்கிறேன்.

- வளரும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x