Published : 19 Mar 2021 04:58 PM
Last Updated : 19 Mar 2021 04:58 PM

பிலவ ஆண்டு 2021; தமிழ்ப்புத்தாண்டு பலன்கள்; மீன ராசி அன்பர்களே! சொந்த வீடு யோகம்; எதிரிகள் பலமிழப்பர்; சம்பள உயர்வு; கடன் தீரும்! 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மீன ராசி வாசகர்களே, உங்களுக்கு எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். மீன ராசிக்கு பிலவ ஆண்டின் தமிழ்ப் புத்தாண்டு என்ன மாதிரியான பலன்களைத் தர காத்திருக்கிறது என்பதை பார்ப்போம்..

முன்னதாக கிரக நிலைகளை ஆராய்ந்து விடுவோம்.

உங்கள் ராசியிலேயே புதன், இரண்டாம் இடத்தில் சூரியன், சந்திரன், சுக்கிரன் என மூன்று கிரக கூட்டு, மூன்றாம் இடத்தில் ராகு, 4-ம் இடத்தில் செவ்வாய், ஒன்பதாம் இடத்தில் கேது, 11-ம் இடத்தில் சனி, 12ம் இடத்தில் உங்கள் ராசிக்கு அதிபதியான குரு என கிரகங்கள் அணிவகுத்து நிற்கிறார்கள்.

ஏற்கெனவே முன்னதாக நடந்த சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப் பெயர்ச்சி இவை அனைத்தும் உங்களுக்கு முழுமையான நன்மைகளை தரக்கூடிய விதத்தில் பெயர்ச்சியாகி இருக்கிறது என்பதை அறிந்திருப்பீர்கள்.

இந்த பிலவ புத்தாண்டு காலமும் ஆண்டு முழுவதும் உங்களுக்கு மேலும் மேலும் நற்பலன்களை வாரிக் கொடுக்கக் கிரகங்கள் தயாராக இருக்கிறார்கள். அதை பெற்றுக் கொள்வதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

உங்கள் ராசியில் இருக்கும் புதன் நீச்சமாக இருந்தாலும் வக்கிரம் பெற்று உள்ளதால் நீச்சபங்க ராஜயோகம் ஆகி 4-ம் இடத்துக்கும் 7-ம் இடத்திற்கும் உண்டான பலன்களை வாரி வழங்கும், அதாவது சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். திருமண முயற்சிகள் கைகூடும். திருமணமான தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.

தாயாரின் உடல் நலத்தில் மிகச்சிறந்த முன்னேற்றம், தாய்வழி உறவுகளிடம் ஏற்பட்ட பகை உணர்ச்சி மாறி மீண்டும் உறவுகள் பலப்படும். நீண்டநாளாக விற்க முடியாமல் இருந்த அசையாச் சொத்துகளை விற்கும் யோகம் உண்டாகும். அப்படி விற்கப்பட்ட சொத்துகளின் மூலம் கிடைக்கும் பணத்தில் மேலும் பல மனைகளை வாங்கும் யோகம் என அற்புதமான பலன்களை அடைவீர்கள். அதுமட்டுமல்லாமல் இரண்டாம் இடத்தில் இருக்கும் உச்சம் பெற்ற சூரியன், பூர்வ புண்ணியத்திற்கு அதிபதியான சந்திரன், மூன்றுக்கும் எட்டுக்கும் அதிபதியான சுக்கிரன் ஆகியோரும் உங்களுக்கு நல்ல பலன்களைக் கொடுப்பார்கள்.

எதிரிகளே இல்லாத நிலை, ஆரோக்கிய பாதிப்புகளில் இருந்து முற்றிலுமாக குணமாகுதல், வழக்குகளில் வெற்றி பெறுவது, குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் என அனைத்தும் சிறப்பாக இருக்கும். எடுக்கின்ற அனைத்து முயற்சிகளிலும் முழுமையான வெற்றியைக் காணுதல், மன தைரியம் அதிகரித்தல், குழப்பங்களில் இருந்து மீளுதல், எதிர்பாராத பண வரவு, அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள், அபரிமித செல்வம் சேருதல் என இந்த இரண்டாம் இடத்தில் இருக்கும் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகிய 3 கிரகங்களும் உங்களுக்கு தந்தருளுவார்கள்.

மிக முக்கியமாக மூன்றாம் இடத்தில் இருக்கும் ராகு உங்களுடைய அனைத்துக் காரியங்களிலும் 100 சதவீத வெற்றியைத் தருவார் என்பதில் சந்தேகமே இல்லை. செல்வவளம், திடீர் அதிர்ஷ்டம் போன்றவற்றை நிச்சயமாகத் தருவார். சகோதரர்களிடம் ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்த்து வைத்து சமாதானம் செய்து வைப்பார். நான்காம் இடத்தில் இருக்கும் செவ்வாய் பகவான், பூமி யோகம் வீடு மனை யோகம் போன்றவற்றைத் தருவார். ஒன்பதாம் இடத்தில் இருக்கும் கேது உங்களுடைய பரம்பரைச் சொத்துகளில் உள்ள பிரச்சினைகளில் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தித் தருவார், அதேசமயம் தந்தையின் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும் என்பதையும் உணர்த்திக் கொண்டிருக்கிறார்.

லாபஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் உங்களுடைய வளர்ச்சிக்கும், செல்வச் சேமிப்புக்கும் உறுதுணையாக இருப்பார். 12ம் இடத்தில் இருக்கும் குரு, சுபச் செலவுகளை ஏற்படுத்தித் தருவார், சொந்தமாக வீடு வாங்குதல், வீடு கட்டுதல், வருமானம் வரக்கூடிய வழிவகைகளைச் செய்து தருதல், இல்லத்தில் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களைச் செய்து தருதல் என நிகழ்த்துவார்.

குடும்ப உறவுகள் பலமாக இருக்கும். குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தினர் தேவைகள் முழுமையாக பூர்த்தியாகும். சொந்த வீடு வாங்குவது நடக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை நிகழும்.

உத்தியோகத்தில் மிக உன்னதமான உயர்ந்த நிலைக்குச் செல்வீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவை எதிர்பார்க்காமலேயே கிடைக்கும். பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு கிடைக்கும். உங்கள் நிறுவனங்களின் சார்பில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் தன் பணியை விடுத்து சொந்தத் தொழில் தொடங்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். அலுவலகத்திலும், பொது வெளியிலும் எதிரிகளே இல்லை என்ற நிலையை உருவாக்கித் தரும். அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வு, அரசு கவுரவம் போன்றவை கிடைக்கும்.

தொழில் வளர்ச்சி மிக பிரம்மாண்டமாக இருக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். முதலீடுகள் அதிக அளவில் கிடைக்கும். தொழில் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகச் சிறப்பாக இருக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு மனநிறைவைத் தரும். உற்பத்தியாகும் பொருட்கள் உடனுக்குடன் விற்பனையாகும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். புதிதாக கடன் பெற்று வேறு ஒரு தொழிலை தொடங்கும் வாய்ப்பையும் தரும். இந்த தொழில் என்றில்லாமல் அனைத்து வகை தொழில் செய்பவர்களுக்கும் இந்த ஆண்டு முழுவதும் நற்பலன்கள் மட்டுமே நடக்கும். நீங்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு மதிப்பு கூடும். வெளிநாட்டு நிறுவனங்களோடு இணைந்து தொழில் செய்யும் வாய்ப்பு மிக எளிதாகக் கிடைக்கும். மிகப்பெரிய தொழில் ஒப்பந்தங்கள் உண்டாகும். மொத்தத்தில் மிகச் சிறப்பான வளர்ச்சியை நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவது, புதிய கிளைகள் தொடங்குவது போன்றவை நடக்கும். இதுவரை வியாபாரம் செய்யாதவர்கள் கூட இப்போது வியாபாரத்தில் ஈடுபட்டு வெற்றி காண்பார்கள். அனைத்து வகை வியாபார விஷயங்களும் மிக நல்ல வளர்ச்சியைப் பெறும். வருமானம் கூடும். வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய வியாபார வாய்ப்புகள் தேடி வரும். அயல்நாட்டு நிறுவனங்களோடு இணைந்த வியாபார வாய்ப்புகளும் கிடைக்கும். மிகப்பெரிய நிறுவனங்களின் வியாபார வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள். சிறு வியாபாரிகள் முதல் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் நடத்துபவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றம் தரக்கூடிய ஆண்டாக இந்த பிலவ ஆண்டு இருக்கும்.

விவசாயிகளுக்கு சிறந்த நற்பலன்கள் நடைபெறக்கூடிய ஆண்டு இது. விவசாய விளை பொருட்கள் நல்ல விலைக்கு விற்று அதிக லாபம் கிடைக்கும். விளை பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதிக விலை கிடைக்கும். இயற்கை விவசாய முயற்சியில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய ஆண்டாக இருக்கும். இயற்கை விவசாயத்தின் வளர்ச்சி என்பது நீங்களே எதிர்பாராத வகையில் இருக்கும். விவசாய இயந்திரங்களை வைத்து தொழில் செய்பவர்களுக்கும் நல்ல வளர்ச்சியைத் தரக்கூடிய ஆண்டாக இந்த வருடம் இருக்கும் என நம்பலாம்.

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்கள் மிகப்பெரிய சாதனை செய்யக்கூடிய ஆண்டு இது. மிக முக்கியமான பிரச்சினைகளைக் கையாண்டு உலகின் பார்வை உங்கள் மீது படும் வண்ணம் இருக்கும். எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் அது உங்களுக்கு நிச்சயமாக நல்ல பெயரையும், புகழையும் தரக்கூடியதாக இருக்கும். புதிய செய்தி நிறுவனங்கள் ஆரம்பிப்பது, பத்திரிகைகள் தொடங்குவது போன்றவை முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். நல்ல வளர்ச்சியைப் பெறுவீர்கள். எழுத்தாளர்கள் அரசின் அங்கீகாரம், விருதுகள் பதவிகள் கிடைக்கப் பெறுவார்கள்.

பெண்களுக்கு நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிக்கக் கூடிய ஆண்டாக இருக்கும். குடும்ப உறவுகள் பலப்படும். சகோதரர்களிடம் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தந்தைவழி சொத்துகள் சேரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும்.
திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். புத்திர பாக்கியத்திற்காக மருத்துவச் செலவு செய்தவர்களுக்கு நிச்சயமாக மருத்துவத்தின் மூலமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் இருப்பவர்களுக்கு இரட்டை பதவி உயர்வு, இரட்டை ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும்.

சுய தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும். வியாபார விஷயங்கள் அனைத்தும் சாதகமாகும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். பெற்றோரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். கணவர் நல்ல ஒத்துழைப்பைத் தருவார், உங்கள் மனதைப் புரிந்து கொண்டு செயல்படுவார். கணவர் வீட்டாரும் உங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு தருவார்கள். இதுவரை ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அவை அனைத்தும் முடிவுக்கு வரும். மொத்தத்தில் மிகச் சிறப்பான நன்மைகளைத் தரக்கூடிய ஆண்டாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் சாதனை புரிய கூடிய ஆண்டாக இருக்கும். விரும்பிய கல்வி விரும்பியபடியே கிடைக்கும். நுழைவுத் தேர்வுகளில் தோல்வியுற்றவர்கள் இந்த ஆண்டு நுழைவுத் தேர்வில் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் அதிகப்படியான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைவார்கள். வேலைவாய்ப்பும் உடனடியாக கிடைக்கும். வெளிநாடு சென்று கல்வி கற்கும் விருப்பம் உள்ளவர்களுக்கு அந்த எண்ணம் இப்போது ஈடேறும். கல்வி உதவித் தொகை, வங்கிக் கடன் போன்றவை கிடைக்கும்.

பொதுவாக மீன ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியப் பிரச்சினைகள் என்பது இருக்காது. ஆனாலும் ஒரு சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக காரமான உணவுகளை தவிர்க்கவேண்டும். அதிகப்படியான சூடான உணவுகளையும் தவிர்க்க வேண்டும். மிதமான சூட்டில் இருக்கும் உணவையே உட்கொள்ள வேண்டும். இல்லையென்றால் வயிற்றுப்புண், வாய்ப்புண், கழுத்து, காது போன்ற இடங்களில் பிரச்சினைகள் வரும். குடல் வால் பிரச்சினைகள் வரும் வாய்ப்பும் உண்டு. அதற்காக சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது வரலாம்.

வணங்க வேண்டிய தெய்வம் -
திருச்சி உறையூர் வெக்காளி அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசித்து வாருங்கள். அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபடுங்கள். வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆலயங்களில் வெள்ளிக்கிழமைகளில் துர்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி, செவ்வரளி மாலை சூட்டி வணங்குங்கள். உங்கள் எண்ணங்கள் ஈடேறும். வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x