Published : 12 Mar 2021 03:12 AM
Last Updated : 12 Mar 2021 03:12 AM

செங்கல்பட்டு மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி பூசலால் - திருப்போரூரை பாமகவுக்கு ஒதுக்கிய அதிமுக

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில், அதிமுகவின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதிக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மற்றும் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் தண்டரை மனோகரன் மற்றும் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராகவன் ஆகியோர் விருப்ப மனு வழங்கினர். திருப்போரூர் தொகுதியை கைப்பற்ற மூவரிடையே போட்டி நிலவியதால், ஒன்றிய நிர்வாகிகள் இடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மேற்கண்ட மூவரில் யாருக்கு சீட் வழங்கினாலும் கோஷ்டி பூசல் ஏற்பட்டு தோல்வியை தழுவ நேரிடும் எனக்கருதிய அதிமுக தலைமை, கூட்டணி கட்சியான பாமவுக்கு திருப்போரூர் தொகுதியை வழங்கியதாக அதிமுக தொண்டர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

சிறுபான்மையினர் வாக்குகள் நிறைந்த திருப்போரூர் தொகுதியில் பாமக வேட்பாளர் நிறுத்தப்படுவதால் வெற்றி பெறுவதில் கடும் சிரமம் ஏற்படும் எனவும் அதிமுக தொண்டர்கள் கருதுகின்றனர்.

இதேபோல், செய்யூர் (தனி) சட்டப்பேரவை தொகுதிக்கு முன்னாள் எம்எல்ஏ தனபால் விருப்ப மனு வழங்கினார். ஆனால், மதுராந்தகம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மரகதம் குமரவேல் மற்றும் கணிதா சம்பத் இடையே கோஷ்டி பூசல் நிலவுவதால், மதுராந்தகம் தொகுதியில் தோல்வியை தழுவ நேரிடும் எனக்கருதி, கோஷ்டி பூசலை தவிர்ப்பதற்காக விருப்ப மனுக்கூட தாக்கல் செய்யாத கணிதா சம்பத்தை செய்யூர் தொகுதியின் வேட்பாளராக அதிமுக தலைமை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சித்தாமூர், லத்தூர் ஒன்றியத்தில் இருதரப்பினரின் ஆதரவாளர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதால், செய்யூர் தொகுதி அதிமுகவிலும் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளதாக அதிமுக தொண்டர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

இதனால், மேற்கண்ட தொகுதிகளில் திமுக மற்றும் விசிக வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பில் சிரமம் இருக்காது என திமுக வட்டாரங்கள் கருதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x