Published : 11 Mar 2021 05:07 PM
Last Updated : 11 Mar 2021 05:07 PM

உங்கள் நட்சத்திரங்கள்... வரம் அருளும் தெய்வங்கள்! - 3  

- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்

ஜென்ம தாரை உபயோகம் பற்றி கடந்த பதிவில் எழுதியிருந்தேன். இதற்கு ஏராளமான வாசகர்களிடம் இருந்து நல்ல வரவேற்புகள் இருந்தன. உங்கள் புரிதலுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

இன்றைய கட்டுரையில் நாம் சம்பத்து தாரை பற்றியும் அதற்கான புராண உதாரணங்களையும் காணலாம்.

சம்பத்து தாரை
உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து எண்ணி வர 2, 11, 20 நட்சத்திரங்கள் சம்பத்து தாரைகளாகும். சம்பத்து என்றால் வளம் அல்லது செல்வம் என்று பொருள். இந்த சம்பத்து தாரை செல்வம் தருவதோடு அழியாப் புகழ் மற்றும் வெற்றியைத் தரும் என்கின்றன ஜோதிட நூல்கள்.

உதாரணமாக, ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் பரணி என்று வைத்துக் கொண்டால், அவருடைய சம்பத்து /அனு ஜென்ம சம்பத்து தாரை / திரி ஜென்ம சம்பத்து தாரைகள் முறையே கார்த்திகை, உத்திரம் மற்றும் உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் ஆகும்.

இந்த சம்பத்து தாரை வடிவங்களைக் கையாளுதல்/ தெய்வங்களை வழிபடுதல்/அதிதேவைதைகளை வழிபடுதல் முதலானவையெல்லாம் செல்வ வளத்தைத் தந்தருளும். சகல ஐஸ்வரியங்களையும் அள்ளித்தரும் என்கிறார்கள் ஜோதிடவியல் அறிஞர்கள்.

இதற்கான இரண்டு புராண உதாரணங்களைச் சொல்கிறேன்.

முருகனின் கையில் இருக்கும் வேல் சூட்சுமம்

சூரபத்மனை சம்ஹாரம் செய்ய உதித்தவர் முருகப் பெருமான். சூரனை வதம் செய்வதற்குக் கிளம்பினார் முருகக் கடவுள். முன்னதாக, தந்தையிடம் ஆசி பெற்றார் முருகப்பெருமான். அடுத்து அன்னையான பார்வதி தேவியிடம் ஆசி பெற்றார். அப்போது, முருகப் பெருமானுக்கு சில விசேஷ அம்பு அஸ்திரங்களை வழங்கியதோடு, அத்துடன் சிவசக்தி சொரூபமான பலம் பொருந்திய, எண்ணற்ற பிரம்மாஸ்திரத்திற்கு இணையானன "சக்தி வேல்" வழங்கி அருளினார் என்கிறது புராணம். சக்தி வேலுடன் இன்னபிற விசேஷ அஸ்திரங்களைப் பெற்ற இந்தச் சம்பவமானது தைப்பூசத்திருநாளில் நிகழ்ந்ததாக விவரிக்கிறது கந்தபுராணம்.

அதனால்தான் தைப்பூசத் திருநாளில் லட்சக்கணக்கான பக்தர்கள், கந்தனை தரிசிக்கிறோம். வணங்குகிறோம்.

ஜோதிட விளக்கம்

ஜோதிடத்தில் சிவ சொரூபம் என்று சூரிய பகவான் போற்றப்படுகிறார். இவர் தை மாதத்தில் கால புருஷ சக்கரத்தில் பத்தாமிடத்தில் மகரத்தில் அமர்ந்து "திக்பலம் " பெறுகிறார்.

சூரியனுக்கு ஏழாமிடமான (சப்தமத்தில்) கடகத்தில் சக்தி தேவி அல்லது பார்வதியின் வடிவான சந்திரன் பூசம் நட்சத்திரத்தில் ஆட்சி பெறுவதோடு கூடுதலாக "திக்பலம் " பெறுகிறார். இதனால் மிக பலம் பொருந்திய சிவ சக்தி சொரூபம் பிரஞ்சத்தில் பூசம் நட்சத்திரத்தில் உருவாகிறது.

பொதுவாக பூமியில் இருந்து பார்க்கும் போது, பூச நட்சத்திரமானது பல அம்புகள் சேர்த்து வைத்தது போல காட்சியளிக்கும். தைப்பூசத்திருநாளில், அதாவது பெளர்ணமி நன்னாளில், திக்பலம் பெற்ற சூரியனானது சந்திரனின் ஒளி வெள்ளத்தில் ஆகர்ஷண சக்தியுடன் பூமியில் இருக்கின்ற நம்முடைய கண்களுக்கு காட்சி தரும்.

ஆகாயத்தில் பூச நட்சத்திர வடிவம் தெரியும் தோற்றம் சக்தி தேவி முருகபெருமானுக்கு அளித்த அஸ்திரங்கள் முக்கியமாக சக்திவேல் முதலானவை பெளர்ணமி நிலவொளியில் காட்சியாக நம் கண்ணுக்குத் தெரியும் என்கிறது ஜோதிட அறிவியல். அதனால்தான் தைப்பூசத்தை விமரிசையாகக் கொண்டாடுகிறோம்.


தைப்பூசத்தில் வானில் தெரியும் சக்திவேல் வடிவத்தை தரிசனம் செய்வது ரொம்பவே முக்கியம். இப்படி வணங்கி வழிபட்டால், எதிரிகள் தொடர்பான பயமும் கலக்கமும் விலகும். புதிய வேலை கிடைக்கப் பெறலாம். வீடு வாகன யோகம் கிடைக்கும். சுகப்பிரசவம் நிகழும். மனதில் உள்ள கிலேசம், வருத்தம், துக்கமெல்லாம் பறந்தோடும். உடல்நலம் சீராகும். தீராத நோயும் தீரும். கந்தனின் கருணையை முழுவதுமாகப் பெறலாம்.

பெளர்ணமி நிலவொளியில், பூச நட்சத்திர வடிவம் என்பது அம்பு வடிவம். சக்தி தேவியானவள், முருகப் பெருமானுக்கு கொடுத்த சக்தி வேல் அல்லவா. ஆகவே, சிவ சக்தி அருளையும் பெறலாம். கந்தனின் அருளையும் பெறலாம்.
எனவே முருகவேல் வழிபாடு பூச வடிவம் எனபதால் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி சம்பத்து தரும் நட்சத்திரங்களாகின்றன.

பூராடமும் கதாயுதமும்

ஹனுமனும் கதாயுத ரகசியமும்
ஹனுமனின் ஜென்ம நட்சத்திரம் மூலம் என்பதை அறிவோம். ஹனுமன் எப்போதும் தன் கையில் கதாயுதம் ஏந்தி இருப்பதைக் காணலாம். அதாவது, மூல நட்சத்திரத்தின் சம்பத்து தாரைகள் பூராடம், பூரம் மற்றும் பரணி ஆகிய நட்சத்திரங்கள்.

பூராடம் என்பதன் இன்னொரு பெயர் பூர்வ ஆஷாட என்பதாகும். ஆஷாட என்றால் வெற்றி என்றும், பூர்வ என்றால் முந்தைய என்றும் பொருள். அதாவது முந்தித் தரும் வெற்றி பூராட நட்சத்திரம் ஆகும். அதாவது ஒரு கடமையைச் செய்து முடிப்பதற்கு உள்ளாகவே அதற்கான முழு வெற்றியும் பலனும் கிடைத்துவிடும். இது வானத்தில் நீண்ட கோலுடன் இணைக்கப்பட்ட உருண்டை வடிவமாகத் தெரியும். அதாவது கதாயுதம் வடிவத்துடன் இதை ஒப்பிடலாம்.

சம்பத்து தாரை என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். அடுத்து நாம் பார்க்க இருப்பது க்ஷேம தாரை. 27 நட்சத்திரங்களுக்கு உண்டான முழு தகவல்களையும் பின்னர் பார்க்கப் போகிறோம். அதற்கு முன்னதாக, ஒவ்வொரு தாரையையும் அவற்றின் குணங்களையும் வடிவங்களையும் நீங்கள் புரிந்து உணர வேண்டியது மிக மிக அவசியம்.

- வளரும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x