Published : 16 Oct 2020 05:20 PM
Last Updated : 16 Oct 2020 05:20 PM

சனீஸ்வரர் ஆயுளை எடுப்பவரா... காப்பவரா?; பெருமாள் பாதம்; பெருமாளின் சங்கு சக்கரம்; சுக்கிர பலம்; ரேவதி நட்சத்திர மகிமை;  27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 83

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


வணக்கம் வாசகர்களே.

இந்த அத்தியாயத்தில், நாம் பார்க்க இருக்கும் நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம். 27 நட்சத்திரங்களில் இதுதான் கடைசி நட்சத்திரம். அதாவது 27 வது நட்சத்திரம். ரேவதி நட்சத்திரம் புதனின் மூன்று நட்சத்திரங்களில் ஒன்று. இந்த நட்சத்திரம் மீன ராசியில் முழுமையாக இடம் பெற்றிருக்கக் கூடிய நட்சத்திரம். பரிபூரண சுப நட்சத்திரம் என்று ரேவதி நட்சத்திரத்தைச் சொல்லுவார்கள்.


ரேவதி நட்சத்திரத்தின் பண்புகள், குணங்கள் என்ன? வேறு என்னென்ன சிறப்புகள் இருக்கின்றன? என்பதையெல்லாம் பார்ப்போம்.

ரேவதி நட்சத்திரம் என்பது மனித உடலில் பாதத்தைக் குறிப்பிடுவதாகும். அதாவது நட்சத்திர வரிசைகளில் முதல் நட்சத்திரமான அஸ்வினி தலையைக் குறிக்கும். கடைசி நட்சத்திரமான ரேவதி நட்சத்திரம் பாதத்தைக் குறிக்கும். இந்தப் பாதம் என்பது நம் மனித உடலில் இருப்பதை குறிப்பது மட்டுமல்ல, இறைவனின் திருப்பாதத்தையும் குறிப்பிடுதுதான் சி\றப்பு!

ஸ்ரீரங்கம் ரங்கநாதரை, அனைவரும் கண்டிப்பாக தரிசித்திருப்பீர்கள். சயன திருக்கோலத்தில் இருக்கும் ரங்கநாதரின் பாதமானது கருவறையைத் தாண்டி இருக்கும். பாதத்தை மட்டும் தனியாக தரிசனம் செய்ய முடியும். ரங்கநாதரின் திருப்பாதத்தில் மகாலட்சுமி தாயார் பெருமாளுக்கு சேவை செய்து வருவதைத் தரிசிக்கலாம். இந்த அடையாளம் அப்படியே மீன ராசிக்கு பொருந்தும்.

எப்படி என்பதை விரிவாகவே சொல்கிறேன்.

நவக்கிரகங்களில் சுக்கிர பகவான் மீன ராசியில்தான் உச்சம் அடைவார். சுக்கிரன் மகாலட்சுமியின் அடையாளம். அப்படிப்பட்ட சுக்கிரன் ரேவதி நட்சத்திரத்தில்தான் உச்சம் எனும் அந்தஸ்தை அடைகிறார். ஆயில்யம், கேட்டை, ரேவதி இந்த மூன்று நட்சத்திரங்களும் புதனுக்கு சொந்தமான நட்சத்திரங்கள்.

ஆயில்யம் நட்சத்திரம் ஆதிசேஷன். கேட்டை நட்சத்திரம் பெருமாளின் சங்கு சக்கரம். ரேவதி பெருமாளின் திருப்பாதம் எனக் குறிக்கின்றன. மகாலட்சுமியின் அடையாளமான சுக்கிரன் பெருமாளின் ரேவதி என்னும் பாதத்தில் இருப்பது மிகச் சரியாக பொருந்தி வருகிறது அல்லவா!

ஒரு மனிதர் இறந்து விட்டால் நாம் என்ன சொல்லுகிறோம்... இறைவனடி சேர்ந்துவிட்டார். இறைவன் திருப்பாதத்தில் ஐக்கியமாகிவிட்டார் என்கிறோம். இறைவனிடம் சரணாகதி அடையும் வழியைத்தான் பக்தி சொல்லித் தருகிறது. ஆன்மிகம் சொல்லித் தருகிறது. சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன. மந்திரங்கள் நம்மை இறைவனின் திருப்பாதத்தில் இடம் பெறச் செய்கின்றன.

இவை அனைத்தும், மீனராசிக்கு முழுமையாகப் பொருத்தும். அதிலும் குறிப்பாக இந்த ரேவதி நட்சத்திரத்திற்கு முழுக்க முழுக்கப் பொருந்தும். எனவே, ரேவதி என்பது மோட்ச நட்சத்திரம். அதுமட்டுமல்ல... அறிவு, ஞானம், புத்திசாலித்தனம் அனைத்திற்கும் சொந்தமானது ரேவதி நட்சத்திரம்!

ஆனால், இதே மீன ராசியில்தான் புதன் நீச்சம் என்கிற அந்தஸ்தையும் அடைகிறார். அதற்குக் காரணம்... என்ன கல்வி கற்றாலும், எவ்வளவு செல்வங்கள் சேர்த்தாலும், இறைவனின் முன் நாம் எதுவும் இல்லை என்பதன் அடையாளமே இங்கு புதன் நீச்சம் அடையக் காரணம்.

இங்கு சுக்கிரன் உச்சம், புதன் நீச்சம் என்பதன் அடையாளம், மனித வாழ்வில் எப்படி வெளிப்படும் என்றால்... ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எவ்வளவு பெரிய கல்வி கற்றாலும், தான் கற்ற கல்விக்கு மாறான பணிகளையே செய்வார்கள். கற்ற கல்வி என்பது அறிவை வளர்ப்பதற்கு மட்டுமே பயன்படும். உத்தியோகத்திற்கு, தொழில் செய்வதற்கு கல்வி பயன்படாது. ரேவதி நட்சத்திரக்காரர்களை கவனித்தால் இதை எல்லோருமே புரிந்துகொள்ளலாம். நிச்சயம் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் மாற்றமே இல்லை.

ரேவதி நட்சத்திரத்தில்தான் அபிமன்யூ பிறந்தான். மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான அபிமன்யு, சக்கர வியூகத்தை கருவில் இருக்கும்போதே கற்றுக்கொண்டான் என்கிறது மகாபாரதம். இந்த சக்கர வியூகத்திலிருந்து வெளிவருவதற்கான வித்தையை அறிவதற்கு முன் கிருஷ்ணரால் தடைப் பட்டுப்போனதும், குருக்ஷேத்திரப் போரில் அபிமன்யூ சக்கர வியூகம் அமைத்து போர் முறைகளைக் கையாண்டான். பல சாதனைகளைச் செய்தான். கடைசியில் உயிர் தியாகமும் செய்தான் என்றெல்லாம் படித்திருக்கிறோம்.

நான் மேலே சொன்னபடி.. தான் கற்ற கல்வி இறுதியில் பயன்படாமல் போகும் என்பதற்கு அபிமன்யூவின் பிறப்பும், இறுதியும் ஒரு சான்றாகும்.

அது மட்டுமல்ல... இதே ரேவதி நட்சத்திரத்தில்தான் நம்முடைய விதிகளை, விதிப் பயன்களை, பூர்வ புண்ணியங்களை... கணக்கிட்டு நம் ஆயுளை கண்காணிக்கும் சனீஸ்வர பகவான் பிறந்தார். நாம் எல்லோரும் நினைப்பது போல் சனீஸ்வர பகவான் ஆயுளை எடுப்பவர் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவர் ஆயுளைக் காப்பாற்றுபவர். நம்முடைய கர்ம வினைகள் முடிந்துபோவதற்கு முன்னதாக, நாம் இறந்து போகாமல் நம்மைக் காப்பாற்றக் கூடியவர் சனீஸ்வர பகவானே! எனவேதான் இவர் ஆயுள்காரகன் என்று சொல்லப்படுகிறார். அதாவது, நம் கடமை முடியும் வரை, கடன் அடையும் வரை, கர்மா நிறைவுறும் வரை ஆயுளைக்காப்பவர். ஆயுளை முடிப்பவர் இல்லை அவர்!

நம்முடைய கர்மவினைகளை முழுமையாகக் கரைத்து, நம்முடைய விதிப்பயன் முடிந்ததும் நமது கர்மாவை, நமது ஆன்மாவை ரேவதி எனும் மகா விஷ்ணுவின் திருப்பாதத்தில் கொண்டு சேர்க்கும் வேலையை சனீஸ்வர பகவான் செய்கிறார். அதனால்தான் சனீஸ்வர பகவான் ரேவதி நட்சத்திரத்தில் அவதரித்தார்.

ரேவதி நட்சத்திரம் குறித்து இன்னும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன.

அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

- வளரும்

****************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x