Published : 13 Oct 2020 03:09 PM
Last Updated : 13 Oct 2020 03:09 PM

பணம் சம்பாதிக்கத் தெரிந்தவர்கள்; பருத்த உடல்; கலையார்வம்; பொறாமை; இளகிய மனசு; உத்திரட்டாதி நட்சத்திர குணங்கள்! 27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் - 82; 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

உத்திரட்டாதி நட்சத்திரம் பற்றிய தகவல்களை தொடர்ந்து சொல்லி வருகிறேன். இந்த அத்தியாயத்தில், உத்திரட்டாதி நட்சத்திரத்தின் 4 பாதங்களைச் சேர்ந்தவர்களுக்குமான முழுமையான பலன்களையும் அவர்களின் குணங்களையும் பார்ப்போம்.

உத்திரட்டாதி நட்சத்திரம் 1ம் பாதம் :-

உத்திரட்டாதி 1- ம் பாதத்தில் பிறந்தவர்கள் நேர்மையானவர்கள்.

சிறப்பான தோற்றம் கொண்டவர்கள். சிக்கலான பிரச்சினைகளுக்கு எளிதாகத் தீர்வு காண்பவர்கள். அதிக உழைப்பு இல்லாமலேயே காரியங்களில் வெற்றி காண்பவர்கள். சொன்ன சொல்லைச் செயலாக்கிக் காட்டுபவர்கள்.

எந்த பிரச்சினை வந்தாலும் எளிதாகக் கடந்து செல்பவர்கள். பணத்திற்கு குறைவே இல்லாதவர்கள். தந்தை சொல்லை மீறாத கண்ணியவான்கள். தாயின் அரவணைப்பில் வளர்ப்பவர்கள். சகோதர வகையில் அதிக அளவிலான ஒற்றுமையும் பிரியமும் அன்பும் கொண்டவர்கள். குறிப்பாக, சகோதரிகளின் மீது அதிக பாசம் கொண்டவர்கள்.

அதிகாரமுள்ள வாழ்க்கைத்துணையைப் பெற்றவர்கள். வாழ்க்கைத்துணையின் குடும்பம் செல்வாக்கான குடும்பமாக இருக்கும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள், பெண் குழந்தைகள் கொண்டவர்களாக இருப்பார்கள். முதலில் பெண் குழந்தையும், இரண்டாவது ஆண் குழந்தையும் என்றிருப்பது வழக்கம்.

உறவினர்களிடம் மதிப்பும் மரியாதையும் பெற்றவர்கள். இவர்களுடைய பேச்சுக்கு ஒட்டுமொத்த குடும்பமும் செவிசாய்க்கும்.

இவர்களில் அதிகம் பேர் அரசுப் பணிகளிலும், தனியார் நிறுவனத்திலும் வேலை செய்பவர்களாக இருப்பார்கள். அதிலும் ஆளுமை மிக்க, அதிகாரம் மிக்க பதவிகளில் இருப்பார்கள். குறிப்பாக பயணம் தொடர்பான நிறுவனங்களில் பணிபுரிபவர்களாக இருப்பார்கள். போக்குவரத்துத் துறை, விமானத் துறை, கப்பல் போக்குவரத்து, சுற்றுலாத்துறை போன்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்களாக இருப்பார்கள்.

சொந்தத் தொழிலாக சுயசார்பு தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். சேவை சார்ந்த தொழில், காய்கறி வியாபாரம், மளிகை வியாபாரம், மொத்த கொள்முதல், தரகு, கமிஷன் தொழில், கட்டுமானத் தொழில், டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட் போன்ற தொழில், வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி மற்றும் விற்பனைத் தொழில், அரசு தொடர்பான ஒப்பந்ததாரர் தொழில், கனரக இயந்திரங்கள் தொழில் முதலான தொழில்களில் இருப்பார்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் முதலாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, நல்ல உணவின் மீது, சத்தான உணவின் மீது விருப்பம் இருக்கும். அதிலும் கார உணவின் மீதான விருப்பம் அதிகமாக இருக்கும். அதேசமயம், இனிப்பு உணவுகளில் அதிக நாட்டம் வைத்திருப்பார்கள். இதன் காரணமாகவே அல்சர், வாயில் புண், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

இறைவன் - திருவானைக்கா
விருட்சம் - வேப்பமரம்
வண்ணம் - இளஞ்சிவப்பு
திசை - வடகிழக்கு
*************************

உத்திரட்டாதி நட்சத்திரம் 2ம் பாதம்:-

உத்திரட்டாதி நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் கல்வியில் சிறந்தவர்கள்.

அதிக அளவு ஞானம் கொண்டிருப்பார்கள். புரியாத புதிர்களுக்கு விடை காண்பவர்களாக இருப்பார்கள். தன் தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்ளும் திறமை வாய்ந்தவர்கள். கற்ற கல்விக்கு மாறான வேலை அல்லது தொழில் செய்பவர்களாக இருப்பார்கள்.

எந்தவொரு பிரச்சினைக்கும் எளிதாகத் தீர்வு காண்பவர்கள். அதி புத்திசாலித்தனமாக இருப்பதாலேயே மற்றவர்களின் பொறாமைக்கும் எரிச்சலுக்கும் ஆளாவார்கள். எளிதில் அனைவரையும் கவர்ந்து விடுபவர்கள். நட்பு வட்டம் மிகப் பெரியதாக இருக்கும். ஆண் பெண் பேதம் இல்லாத நட்பு கொண்டிருப்பார்கள்.

உத்திரட்டாதி 2ம் பாதக்காரர்கள், சராசரி உயரம் உடையவர்கள். சற்று பருத்த உடல்வாகு கொண்டவர்கள். நேர்த்தியாக உடை அணிபவர்கள். இவர்கள் அணியும் உடையே, மனதில் இருக்கும் எண்ணத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். உறவு வட்டம் மிகப் பெரியதாக இருக்கும்.

உறவினர்களிடம் அதிக நெருக்கத்தையும், நட்பையும் வைத்திருப்பார்கள். பெற்றோரிடம் மதிப்பு மரியாதை அதிகம் கொண்டவர்கள். குறிப்பாக தந்தையிடம் அதிக நெருக்கத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள். சகோதரிகளுக்காக எதையும் செய்து கொடுக்கக் கூடிய இளகிய மனம் படைத்தவர்களாக இருப்பார்கள்.

உத்திரட்டாதி 2ம் பாதக்காரர்களின் வாழ்க்கைத்துணை அதிபுத்திசாலியாக இருப்பார்கள். ஆனாலும் வாழ்க்கைத்துணையுடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள், சிறிய அளவிலான சண்டை சச்சரவுகள் போன்றவை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். தற்காலிகப் பிரிவு அடிக்கடி ஏற்படும். ஒவ்வொரு முறையும் சமாதானம் செய்து குடும்பம் நடத்த வேண்டியதாக இருக்கும். பிள்ளைகளை கல்வியிலும், விளையாட்டுத் துறையிலும் கவனத்தை செலுத்த வைத்து சிறப்பாக ஆளாக்குவார்கள்.

இவர்களில் அதிகம் பேர் அரசுப் பணியிலும் தனியார் நிறுவனங்களில் நல்ல பதவிகளிலும் இருப்பார்கள். தகவல் தொழில்நுட்பத் துறை, பத்திரப்பதிவு துறை, நூலகம், ஆசிரியர், பேராசிரியர், கணித ஆசிரியர், கதை கவிதை இலக்கியம் போன்றவை படைப்பவர்களாக, கலைத் துறையில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். மருத்துவத்துறை, மருத்துவ ஆய்வு, குழுவாக சேர்ந்து பணியாற்றுதல், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆர்வம், அது தொடர்பான ஆராய்ச்சிகள் போன்றவை இருக்கும்.

நல்ல உணவு விருப்பம் இருக்கும். சுவையான உணவு எங்கு கிடைக்கும் என அறிந்து வைத்திருப்பார்கள். ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக உணவுகளைத் தேடி உண்பவர்களாக இருப்பார்கள். இதன் காரணமாகவே வாயுத் தொல்லை, செரிமானக் கோளாறுகள், ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

இறைவன் - வைத்தீஸ்வரன் கோயில், வைத்தியநாத சுவாமி

விருட்சம் - குல்மோகர்

வண்ணம் - இளம் பச்சை

திசை - தென்கிழக்கு
*********************

உத்திரட்டாதி நட்சத்திரம் 3ம் பாதம்:-

உத்திரட்டாதி நட்சத்திரம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள், ஆடம்பரத்தின் மீது அதிக நாட்டம் உடையவர்கள். பொருளாதாரப் பிரச்சினை என்றால் என்ன என்று அறியும் சூழ்நிலை இல்லாத வகையில் பொருளாதார பலம் கொண்டு வாழ்பவர்கள். தேவைக்கேற்ற வருமானம் இருந்து கொண்டே இருக்கும்.

செலவுகள் செய்யத் தயங்காதவர்கள். ஆடம்பரச் செலவுகள், வீண் செலவுகள் செய்வதில் இவர்களை மிஞ்ச யாரும் இல்லை. ஆண் பெண் பேதம் இல்லாத நட்பு இருக்கும். நண்பர்களுக்காக செலவு செய்துகொண்டே இருப்பவர்கள்.

மிக எளிதாக பணத்தை சம்பாதிப்பது எப்படி என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். சொந்தத் தொழில் செய்தாலும், பணியில் இருந்தாலும் எப்படியும் மிகப்பெரிய உச்சத்தைத் தொடுபவர்களாக இருப்பார்கள்.

உத்திரட்டாதி 3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, குடும்ப உறவுகளிடம் அதிக ஒட்டுதல் இருக்காது. தாய் தந்தையரிடம் கூட ஓரளவுதான் நெருக்கமாக இருப்பார்கள். அறிவுரைகளை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். அறிவுரை சொல்பவர்களை விலக்கி வைப்பார்கள். சகோதர சகோதரிகளிடம் பாசம் இருந்தாலும் அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஆனாலும் அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் உடனடியாக ஓடி வந்து உதவி செய்பவர்களாக இருப்பார்கள்.

வாழ்க்கைத் துணையிடம் நல்ல அன்பையும் நெருக்கத்தையும் காட்டினாலும் ஏதோ ஒரு ஊடல் இருந்துகொண்டே இருக்கும். ஒரு சில கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். பிள்ளைகளின் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிள்ளைகளை ஆடம்பரமாக வளர்ப்பார்கள்.

சுய தொழில் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். பணியில் இருந்தாலும் அதிக உழைப்பு இல்லாத உத்தியோகமாகத்தான் இருக்கும். அரசுத் துறைகளில் இருப்பார்கள். தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பார்கள். ஆடை ஆபரண வியாபாரம், வெள்ளிப் பொருட்கள் தொடர்பான வியாபாரம், உணவுத் தொழில், உணவகங்கள், திரைத்துறை மற்றும் சின்னத்திரை, ஊடகங்கள், பத்திரிகை போன்ற பணிகளில் இருப்பார்கள்.

அழகு நிலையம், முடி திருத்தகம், ஆடம்பரப் பொருட்கள் விற்பனை நிலையம், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் விற்பனை நிலையம், மருத்துவத் துறை, மருத்துவத் தொழில், கால்நடை மருத்துவம், வழக்கறிஞர், நீதிபதி போன்ற தொழில் மற்றும் உத்தியோகத்தில் இருப்பார்கள்.

ஆடம்பரமான உணவுகளில் விருப்பம் கொண்டிருப்பார்கள். உணவுக்காக அதிகம் செலவு செய்பவர்களாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் தோல் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சினைகள், சர்க்கரை நோய், தைராய்டு பிரச்சினை, ஆண்மைக் குறைபாடுகள் போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

இறைவன் - மகாகாளேஸ்வரர் விழுப்புரம்.

விருட்சம் - சேராங்கொட்டை

வண்ணம் - இளநீலம்

திசை - வட மேற்கு
*****************************

உத்திரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம்:-

உத்திரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் கூர்மையான அறிவு மிக்கவர்கள். சிக்கனத்தை கடைபிடிப்பவர்கள்.

எந்தவொரு விஷயத்திலும் ஆழ்ந்த கவனம் செலுத்துபவர்களாகவும், பணம் சம்பாதிப்பதை ஒரு கலையாகக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மிக எளிதாக பணம் செய்யக்கூடிய தொழிலை எடுத்து செய்பவர்களாகவும் இருப்பார்கள். பணம் சம்பாதிக்க ஊர், நாடு என எங்கும் கடந்து செல்வார்கள். முக்கியமாக, பணம் சம்பாதிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவர்கள்.

எதிர்காலத்தை கருதி இப்போதே பலவித சொத்துகளை சேர்ப்பவர்கள். ஆடம்பரச் செலவுகள் செய்தாலும் அதிலும் ஆதாயம் இருக்கும்படியாக பார்த்துக் கொள்வார்கள். கச்சிதமான தோற்றம், நேர்த்தியான உடை, எவரையும் கவரக்கூடிய ஆளுமை, பேச்சில் தெளிவு போன்றவை இவர்களின் அடையாளம்.

பெற்றோரிடம் அதிக அன்பைக் கொண்டவர்கள். தாயாரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவர்கள். தந்தையிடம் அடங்கிப் போவார்கள். உறவினர்களை அதிகம் கண்டுகொள்ளமாட்டார்கள். சகோதர சகோதரிகளிடம் கூட அளவாகவே உறவு வைத்துக்கொள்வார்கள்.

சொத்துப் பிரச்சினைகளில் பிடிவாதமாக இருப்பவர்கள். தன் வாழ்க்கைத் துணையிடம் சதா நச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். இதன் காரணமாகவே இவர்கள் வாழ்க்கைத் துணை விஷயத்தில் .... ஒன்று... விலகி இருப்பார்கள் அல்லது அடங்கிப் போவார்கள். பிள்ளைகளை மிக கண்டிப்புடன் வளர்ப்பார்கள். அவர்களுக்கு சிக்கனத்தை போதிப்பவர்களாக இருப்பார்கள். விரும்பிய கல்வியைக் கற்றுக் கொடுப்பதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். ஆனால் எதுவும் ஒரு அளவுக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்வார்கள்.

சுயதொழில் செய்வதிலேயே அதிகம் ஆர்வம் காட்டுபவர்களாக இருப்பார்கள். பராமரிப்புத் தொழில் முதல் சேவை சார்ந்த தொழில் வரை எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள். தகவல் தொழில்நுட்பத்துறை, பயணங்கள் தொடர்பான தொழில், டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட், உழவுத்தொழில், காய்கறி வியாபாரம், பால், தயிர் வெண்ணெய் வியாபாரம், தண்ணீர் தொடர்பான தொழில், ரசாயனத் தொழில், வெடிமருந்து தொழில், ஆயுதங்கள் உற்பத்தி செய்தல், பட்டாசு தொழில், கட்டிடத் தொழில், பழைய பொருட்களை வாங்கி விற்பது, புதுப்பித்தல் பணி, வாகனத் தொழில், வாகனப் பராமரிப்பு தொழில் என பலதரப்பட்ட தொழில் அல்லது உத்தியோகத்தில் இருப்பார்கள்.

உத்திரட்டாதி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள், எந்த உணவையும் வீணடிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். எனவே உணவின் மீது அதிக விருப்பம் என்றெல்லாம் இருக்காது. கிடைத்ததை சாப்பிட்டு திருப்தியாக வாழ்பவர்கள். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளாக நரம்பு தொடர்பான கோளாறுகள், தேமல், படை போன்ற பிரச்சினைகள், நரம்புத்தளர்ச்சி போன்றவை இருக்கும்.

இறைவன் - அங்காள பரமேஸ்வரி

விருட்சம் - செம்மரம்

வண்ணம் - இளஞ்சிவப்பு

திசை - வடக்கு
******************

பொதுவாகவே, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கால்நடைகளுக்கு உணவளிப்பது நன்மைகளைத் தரும். குறிப்பாக, பசுமாட்டுக்கு உணவளிப்பது அதிகப்படியான நன்மைகளை பெற்றுத் தரும். வீட்டில் காமதேனு படத்தையோ சிற்பத்தையோ வைத்திருப்பது அதிக அளவிலான பலன்கள் தரக்கூடியதாக இருக்கும்.

அடுத்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம்.

நட்சத்திர வரிசையில் இதுதான் கடைசி நட்சத்திரம். இதற்கென்று மிக பெரிய அளவிலான சிறப்புப் பண்புகள் உண்டு.

எல்லோரும் எந்தவொரு பெயர்ச்சிக்கும் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், சனிப்பெயர்ச்சி என்றாலே மிகுந்த எதிர்பார்ப்பும், பதற்றமும் எல்லோருக்கும் ஏற்படுவது இயல்புதான். அந்த அளவுக்கு சனீஸ்வர பகவான், மிகவும் சக்தி வாய்ந்தவர்.

அப்பேர்ப்பட்ட சனீஸ்வர பகவான் பிறந்தது ரேவதி நட்சத்திரத்தில்தான்.

ரேவதி நட்சத்திரக்கார்களின் குணங்கள், கேரக்டர்கள், அவர்களுக்கான தொழில்கள், உத்தியோகங்கள், அவர்கள் பிளஸ் மைனஸ்... என்பதையெல்லாம் அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கிறேன்.

- வளரும்
******************************

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x