Published : 06 Oct 2020 10:42 AM
Last Updated : 06 Oct 2020 10:42 AM

சனி பகவான்; மகாலக்ஷ்மி; பத்மாவதி தாயார்; காமதேனு;அம்மாவே தெய்வம்; அப்பாவே வழிகாட்டி; உத்திரட்டாதியின் சிறப்புகள்!   27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள்   - 80 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

உத்திரட்டாதி நட்சத்திரம் எனும் மிகச் சிறப்பு வாய்ந்த உன்னதமான நட்சத்திரத்தைப் பற்றி பார்க்க இருக்கிறோம்.

உத்திரட்டாதி நட்சத்திரம் சனி பகவானின் மூன்று நட்சத்திரங்களில் ஒன்று. உத்திரட்டாதி நட்சத்திரம் மீன ராசியில் இடம் பெற்றிருக்கும் சுப நட்சத்திரம். நட்சத்திர வரிசையில் இது 26வது நட்சத்திரம்.

எண்கணிதப்படி சனி பகவானுக்கு உரிய எண் 8, நட்சத்திர வரிசைகளில் சனியின் நட்சத்திரமான உத்திரட்டாதி 26 வது நட்சத்திரம், இதன் கூட்டு எண் 8. ஆச்சரியம் என்னவென்றால் ’27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள்’ தொடரில் உத்திரட்டாதி குறித்து இப்போது நான் எழுதுவது 80வது அத்தியாயம். இதன் மதிப்பு எட்டு. இந்த தொகுப்பிலேயே ஒரு விஷயம் புரிந்திருக்கும்... கிரகங்களின் ஆதிக்கம் மிகச்சரியாகவே வெளிப்படுகிறது என்பதாக உணர்ந்தேன்.

உத்திரட்டாதி நட்சத்திரம் வானில் பார்ப்பதற்கு மீன் பிடிக்க பயன்படும் தூண்டில் போலவும், குழந்தையின் கால் பாதம் போலவும் இருக்கும்.

திருப்பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த..... கேட்டதையெல்லாம் தரக்கூடிய காமதேனு பிறந்தது உத்திரட்டாதி நட்சத்திரத்தில்தான். அது மட்டுமல்ல, திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு துணைவியாக இருக்கும், அலமேலுமங்காபுரத்தில் வீற்றிருக்கும் பத்மாவதி தாயார் பிறந்ததும் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தான்.

சனியின் மூன்று நட்சத்திரங்கள் பூசம், அனுஷம், உத்திரட்டாதி. இந்த மூன்று நட்சத்திரத்திற்கும் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. பூசம் திருப்பாற்கடலில் கிடைத்த அமிர்தம் இருக்கக்கூடியது இந்த பூசம் என்னும் கலசத்தில்தான். மகாலட்சுமி தாயார் அவதரித்த அனுஷம் நட்சத்திரம் சனி பகவானுக்கு உரியது. கேட்டதையெல்லாம் தரக்கூடிய காமதேனு பிறந்தது உத்திரட்டாதியில்தான், இப்படி சனிபகவானின் மூன்று நட்சத்திரங்களும் பெருமைக்குரியதாக இருப்பது சிறப்பு மிக்க விஷயம்!

மேலும், இறைவனுக்கு நிவேதனம் சமைக்கும் இடமான மடப்பள்ளி என்னுமிடத்தை குறிப்பதும் இந்த உத்திரட்டாதி நட்சத்திரமே. வீட்டின் சமையல் அறையும் உத்திரட்டாதி நட்சத்திரம் தான். அரசு சட்டங்கள், அரசு உத்தரவு, நெற்றியில் பூசும் விபூதி, வைரகிரீடம், பலசரக்குக் கடை, ஸ்டோர் ரூம், சமையல் கலை, பாம்புப் புற்று, பால், தயிர், மோர், வெண்ணெய், கால்நடைத் தீவனங்கள், துளசி, வைரம், பட்டாடைகள், கொலுசு, மெட்டி, காலணிகள் இவை அனைத்தும் உத்திரட்டாதி நட்சத்திரம்.

மேலும் இருசக்கர வாகனம், காதல் திருமணம், இருதார யோகம், கணவன் மனைவி இடையே ஏற்படும் பிரிவு, பாதயாத்திரை, தேச சஞ்சாரம், பயனில்லாத அலைச்சல், சுப காரியச் செலவுகள், பொதுப்பணிகள், வீடு கட்ட எடுக்கும் முயற்சிகள், அதனால் ஏற்படும் செலவுகள் இவை அனைத்தும் உத்திரட்டாதி நட்சத்திரம்.

நிதானமான செயல்பாடுகள், இரு வேறு சிந்தனைகள், மூக்குக்கண்ணாடி, கால் பாதத்தில் ஏற்படும் பிரச்சினைகள், வீட்டிலுள்ள படிக்கட்டு, வீட்டுக்கூரை, குற்றம் சாட்டப்பட்டவர் என்பதும் உத்திரட்டாதியின் அடையாளமே.

குடும்பப்பற்று, பாசம் என அனைத்தும் இருந்தாலும் அதை வெளிப்படுத்தத் தெரியாது, இதனாலேயே இவர்களை மற்றவர்கள் நெருங்கவே யோசிப்பார்கள். ஆனால், மிகவும் மென்மையான மனம் படைத்தவர்கள் இவர்கள். பெற்றோரின் மீது அதிகப்படியான பிரியத்தை வைத்திருப்பார்கள். தாயாரை தெய்வமாக நினைப்பவர்கள். தந்தையின் வழிகாட்டுதலை அப்படியே ஏற்றுக் கொள்பவர்கள். சகோதரர்களிடம் அதிகப்படியான நெருக்கத்தையும், அன்பையும் வெளிப்படுத்துபவர்கள்.

சகோதரிகளுக்காக எதையும் செய்து தரும் குணம் கொண்டவர்கள். எந்த வகையிலும் சகோதரி சிரமப்படக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். தன் ஆயுள் காலம் வரையிலும் சகோதரிகளுக்காக உதவிகளைச் செய்து கொண்டே இருப்பார்கள். நட்பு வட்டம் பெரிய அளவில் இருக்கும். சிக்கன நடவடிக்கையும் இருக்கும். தேவையான இடத்தில் செலவு செய்யவும் தெரியும்.

தன் வாழ்நாளில் பணப்பிரச்சினை, பொருளாதாரச் சிக்கல்கள் என எதையும் எப்போதும் சந்திக்க மாட்டார்கள். நினைத்த மாத்திரத்தில் பணம் சம்பாதிக்கவும் தெரியும். தேவைகள் ஏற்படும் போது பணத்தை உடனடியாக ஏற்பாடு செய்யவும் தெரியும். நம்பிக்கையான நண்பர்களையும், உறவுகளையும் பெற்றவர்கள் இந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தினர்.

உத்திரட்டாதி நட்சத்திரம் வானில் மீன் தூண்டில் போல் இருக்கும் என்று சொன்னேன் அல்லவா. எனவே உழைப்பும், அந்த உழைப்புக்கான முயற்சிகளும் உத்திரட்டாதியின் தன்மை; குணம்!

பொதுவாகவே, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுய உழைப்பின் மூலம் முன்னுக்கு வருபவர்கள். தொழிலதிபர்களாக இருப்பார்கள். பணிகளில் இருந்தால் உயர் பதவிகளில் இருப்பார்கள். குழுவுக்குத் தலைமை தாங்குபவராகத் திகழ்வார்கள். நிதி நிர்வாகம், மனிதவள மேம்பாடு போன்ற பணிகளில் இருப்பார்கள். அரசுக்கு ஆலோசகராகவும், அரசு செயல்களை செயல்படுத்தும் அதிகாரிகளாகவும் இருப்பார்கள். அதேபோல வீட்டுப் பராமரிப்பு பணிகளை செய்யும் கான்ட்ராக்ட் தொழில், வர்ணம் பூசும் தொழில், வாகனங்களைப் பராமரிக்கும் தொழில், வாகனங்களைப் புதுமையாக மாற்றும் திறமை, கடல் கடந்த தொழில், வியாபாரம், பணிபுரிவது இவை அனைத்தும் உத்திரட்டாதியில் பிறந்தவர்களுக்கு கிடைக்கும்.

உத்திரட்டாதியில் பிறந்தவர்கள் உணவு தொடர்பான தொழில் செய்வது மிகச் சிறந்த வளர்ச்சியைத் தரும். ஹோட்டல், கேட்டரிங் தொழில், சமையல் செய்யத் தேவையான பொருட்கள் தொடர்பான வியாபாரம் செய்தல், உணவுப் பொருட்கள் உற்பத்தி, உழவுத் தொழில் செய்வது நல்ல பலன்களை தரும். வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும்.

மேலும் சில தகவல்களையும், வாழ்க்கைத் துணையாக எந்த நட்சத்திரக்காரர்கள் அமைவது சிறப்பான நன்மைகளைத் தரும் என்பதையும் அடுத்த பதிவில் பார்ப்போம்.

- வளரும்
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x