Published : 27 Sep 2020 12:28 PM
Last Updated : 27 Sep 2020 12:28 PM

அஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4ம் தேதி வரை) 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அஸ்வினி -

நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம்.

கடந்த நான்கு மாதங்களாக எடுக்கின்ற முயற்சிகளில் இறுதிக்கட்டத்தில் காரியம் கை கூடாமல் தாமதம் அல்லது கை நழுவிப் போனது என இருந்திருக்கும். இனி எந்த முயற்சி எடுத்தாலும் முழுமையான வெற்றியைக் காண்பீர்கள்.

பணவரவு சிறப்பாக இருக்கும். ஆனாலும் பல தரப்பட்ட உதவிகள் செய்ய வேண்டியது இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். குடும்ப பிரச்சினைகளை சரி செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். தரகு மற்றும் கமிஷன் வியாபாரத்தில் சிறப்பான வருமானத்தைக் காணலாம்.

வேலையில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியில் ஈடுபட்டால் இப்போது முழுமையான வெற்றியைக் காண முடியும். அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடுங்கள்.

தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். திருமண முயற்சிகள் கைகூடும். சகோதர வழியில் தேவையான பொருளாதார உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
நன்மைகள் அதிகப்படியாக கிடைக்கக்கூடிய நாள். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பண உதவி இன்று கிடைக்கும். சகோதரர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தினர் தொழிலுக்கு பக்கபலமாக உதவி செய்யக்கூடிய நாள்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றியை தரும். முயற்சி எடுக்காத விஷயங்கள் கூட இப்பொழுது தானாக முடியும். நீண்ட நாளாக பேசி வந்த ஒரு பிரச்சினை இன்று பேசி முடிவு எடுக்கப்படும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய விஷயங்களில் முன்னேற்றமான தகவல் கிடைக்கும்.

புதன் -
தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உதவிகள் தேடிவரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தூரத்து உறவினர் ஒருவரால் நன்மைகள் நடைபெறும்.

வியாழன் -
எதிர்கால சிந்தனை அதிகரிக்கும். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது வியாபாரம் தொடங்குவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பலவித வாய்ப்புகள் தேடிவரும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

வெள்ளி -
நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஒரு சில உதவிகளைச் செய்து கொடுப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டு. வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். சுப விசேஷங்கள் பற்றிய நல்ல தகவல் உறுதி ஆகும்.

சனி -
செலவுகள் அதிகமாக இருக்கும். எதிலும் நிதானமாகவும் கவனமாகவும் இருந்தால் பிரச்சினைகளை எளிதாக சமாளிக்கலாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது.

ஞாயிறு -
நன்மைகள் அதிகமாக நடக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் தீரும். மருத்துவச் செலவு குறையும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீதுர்கை அம்மனை வணங்குங்கள். அம்மனுக்கு செவ்வரளி மாலை சூட்டி வணங்குங்கள். குறைகள் தீரும். நன்மைகள் நடக்கும்.
***********************

பரணி -

அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும் வாரம்.

எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். மனநிம்மதியும் மன நிறைவு தரக்கூடிய வாரமாக இருக்கும்.

உத்தியோகத்தில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. ஒரு சிலருக்கு அலுவலக ரீதியாக அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். தொழில் வளர்ச்சி நம்பிக்கைத் தரும். தேவையான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பயணம் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களும், திரவ தொழில் செய்து கொண்டிருப்பவர்களும் வருமானம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகளும் தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும்.

வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாகும். குழந்தைகளைப் பற்றிய கவலை நீங்கும்.

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த கடன் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனம் மாற்றச் சிந்தனை உருவாகும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது நல்ல பலனைத் தரும்.

செவ்வாய் -
நிதானம் அவசியம். பயணங்கள் ஏதும் செய்ய வேண்டாம். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். யாரிடமும் எதற்காகவும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

புதன் -
எடுத்துக் கொண்ட அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வியாழன் -
அலுவலகப் பணியில் பணிச்சுமை கூடும். கடுமையாக உழைத்து வேலைகளை முடிப்பீர்கள். தொழில் தொடர்பாக அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஒருசில முதலீடுகள் செய்யும் எண்ணம் தோன்றும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

வெள்ளி -
வியாபாரத்தில் லாபம் இருக்கும். தொழிலுக்காக எடுத்துக் கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்புக் காட்டிய நபர்கள் உங்களிடமே உதவி கேட்டு வருவார்கள். தொலைபேசி வழித் தகவல் மன மகிழ்ச்சி தரும். திருமணம் உள்ளிட்ட சுப விசேஷ நிகழ்வுகள் முடிவாகும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த பணம் இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

சனி -
நன்மைகள் அதிகமாக ஏற்படும். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். நெருங்கிய நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள், உங்களுடைய பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து தருவார்கள். மாமன் வகை உறவுகளால் அதிக நன்மைகள் கிடைக்கும்.

ஞாயிறு -
பயணங்களைத் தவிர்க்க வேண்டும். நிதானமும் பொறுமையும் மிக மிக அவசியம். குடும்பத்தாருடனும் நண்பர்களிடமும் பொறுமையாகப் பேசுங்கள். நிதானத்தை இழக்க வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமான் வழிபாடு செய்யுங்கள். சிவபெருமானுக்கு வில்வ இலையோடு, நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். மனதில் நம்பிக்கை பிறக்கும். நன்மைகள் கிடைக்கும்.
*****************************

கார்த்திகை -

இந்த வாரம் நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

இதுவரை தடைபட்டுக் கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் எளிதாக முடியும். செலவுகள் ஒருபுறம் இருந்தாலும் வருமானம் திருப்தி தருவதாக இருக்கும். மன வருத்தம் ஏற்பட்டு பிரிந்திருந்த உறவினர்கள் மீண்டும் தங்கள் தவறுகளை உணர்ந்து ஒன்றுசேர்வார்கள்.

உத்தியோகத்தில் மனத் திருப்தி உண்டாகும். தொழிலில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். உணவுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

கடன் பிரச்சினைகள் தீரும் அளவுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். ஒருசிலருக்கு புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும்.
பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். வீட்டிலிருந்தே செய்யக்கூடிய சிறு தொழில்களை செய்யும் ஆர்வம் ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.

மாணவர்கள் கல்வியில் சீரான வளர்ச்சியைக் காண்பார்கள். விரும்பிய கல்வி வாய்ப்பு கிடைக்கும். உயர்கல்விக்கான கல்விக்கடன் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். நண்பர்கள் பலவிதத்திலும் உங்களுக்கு உதவிகரமாக இருந்து வாய்ப்புகளைப் பெற்றுத் தருவார்கள்.

இந்த வாரம் -
திங்கள் -

பலவித நன்மைகள் நடைபெறக்கூடிய நாளாக இருக்கும். வருமானம் எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபார வளர்ச்சியில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழிலுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். குறிப்பாக அரசு வழியில் இதுவரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து இன்று நல்ல தகவல் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் மனநிறைவும் உண்டாகும். சக ஊழியர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.

செவ்வாய் -
எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாக கையாளவும். பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தாருடன் இணக்கமாக இருங்கள். தேவையில்லாத பிரச்சினைகளை நீங்களாகவே வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

புதன் -
எதிர்பாராத உதவிகள் கிடைக்கக் கூடிய நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றத்தையும் புதிய ஒப்பந்த வாய்ப்புகளும் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். மாலை நேரத்தில் தொலைபேசி வழியாக கிடைக்கக்கூடிய செய்தி மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.

வியாழன் -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இப்போது திரும்பக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. திருமண முயற்சிகள் முடிவாகும். புத்திர பாக்கியம் தொடர்பான செய்தி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.

வெள்ளி -
அதிக நன்மைகள் நடைபெறும். சுப காரிய பேச்சுக்கள் மனதிற்கு நிறைவைத்தரும். வருமானம் அதிகரிக்கும். தேவைகள் நிறைவேறும். தரகு தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும். பயணம் தொடர்பான தொழில்கள் அதாவது டிராவல்ஸ் டிரான்ஸ்போர்ட் போன்ற தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வருவாய் அதிகரிக்கும்.

சனி -
தொழில் தொடர்பான ஒரு சில பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவீர்கள். ஆதாயம் ஏற்படும். ஒரு வியாபார வருவாய் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தார் மீதான அக்கறை கூடும்.

ஞாயிறு -
நண்பர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு உதவிகள் செய்து கொடுப்பீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். வீட்டு பராமரிப்புச் செலவுகள் கூடும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் அன்னையை வணங்குங்கள். நன்மைகள் நடக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x