Published : 22 Sep 2020 05:44 PM
Last Updated : 22 Sep 2020 05:44 PM

வீட்ல எலி, வெளில புலி; மனைவி சொல்லே மந்திரம்; எதிலும் லாபம்; ப்ளான் பண்ணி செயல்படுபவர்கள்; பூரட்டாதி நட்சத்திரக்காரர்களின் குணங்கள்!  27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 76; 

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

இந்தப் பதிவில் நாம் பார்க்க இருக்கும் நட்சத்திரம் “பூரட்டாதி” நட்சத்திரம்.

பூரட்டாதி நட்சத்திரம் குரு பகவானின் மூன்று நட்சத்திரங்களில் ஒன்று. நட்சத்திர வரிசையில் இது 25 வது நட்சத்திரம்.

பூரட்டாதி நட்சத்திரம் கும்ப ராசியில் மூன்று பாதங்களும், மீன ராசியில் ஒரு பாதமும் கொண்டிருக்கும். தன் வீட்டிலேயே தன் நட்சத்திரத்தை வைத்திருக்கும் ராசிகள் மற்றும் கிரகங்கள் இரண்டு மட்டுமே! ஒன்று சூரியன், சூரியன் தன் நட்சத்திரத்தில் ஒன்றான உத்திரத்தை சிம்ம ராசியில் கொண்டிருக்கும். மற்றொன்று குரு பகவான். குரு தன் நட்சத்திரமான பூரட்டாதியை மீன ராசியில் கொண்டிருக்கும். இந்த இரண்டு கிரகங்களைத் தவிர வேறெந்த கிரகத்திற்கும் இந்த சிறப்பு கிடையாது. அதனால்தான் சிம்ம உத்திரம் மிக தனித்தன்மையோடு இருக்கிறது. அதே போல பூரட்டாதி நட்சத்திரம் கும்பம் மற்றும் மீனத்தில் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது.

இந்த பூரட்டாதியில் தான் செல்வத்திற்கு அதிபதியான குபேரன் பிறந்தார், குபேரன் கொடுத்த கடனால்தான் திருப்பதி சீனிவாச பெருமாள் திருமணம் புரிந்தார். இன்றும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறார் என்கிறது திருப்பதி ஸ்தல புராணம்.

ஆனால் இதில் ஜோதிடப் பார்வையும் இருக்கிறது.

கும்பம் லாப ஸ்தானம் (ஜோதிட அடிப்படை தத்துவத்தின்படி), மீனம் விரய ஸ்தானம். ஒருவர் தான் சம்பாதித்த பணத்தை தனக்கு மட்டுமே வைத்துக்கொண்டால் அது பணம் அல்ல, வெறும் காகிதம் மட்டுமே! அந்தப் பணத்தை பலருக்கும் உதவியாகவோ, கடனாகவோ கொடுத்தால்தான் அந்த பணத்திற்கு மதிப்பு. அந்த பணமும் வட்டி அல்லது பங்கு என்ற பெயரில் மேலும் மேலும் வளரும். தானும் வளர்ந்து மற்றவரையும் வளர்த்துவிடும். இந்த பொருளாதார வளர்ச்சி என்னும் செயலைச் செய்வது பூரட்டாதி நட்சத்திரம் மட்டுமே! லாபம் என்னும் செல்வத்தை தன்னுள் வைத்திருப்பது கும்பம் என்னும் கலசத்தில். அதுவும் இந்த பூரட்டாதியில்தான்.

குபேரன் மட்டுமல்ல, மகாபாரத கர்ணன் எனும் கொடை வள்ளல் பிறந்ததும் பூரட்டாதியில்தான். கர்ணன் சூரிய புத்திரன். சூரியன் எப்படி தன்னுடைய நலம் மட்டுமே கருதாது தன் சூரியக் குடும்பத்தில் இருக்கும் கிரகங்களையும், அனைத்து மக்களுக்கும் தனது வெளிச்சத்தை தந்து உயிர் வாழ வைக்கிறதோ அதுபோல அவரது மகனும் தன்னலம் கருதாது பிறருக்காகவே வாழ்ந்து வந்தவன். கர்ணனின் தர்ம குணத்திற்கு முன் தர்மரே தோற்றுப்போனார் என்பது நாம் அறிந்ததுதான்.

ஆனால் தற்போது கலிகாலம். தர்மம் செய்ய யோசிக்க வைக்கும். மாறாக தர்மத்தை புண்ணியமாக பார்க்காமல், புகழாகப் பார்க்க வைக்கும். அந்த வகையில் பூரட்டாதியில் பிறந்தவர்கள், செல்வ வளத்தோடு வாழ்பவர்கள். சகல சௌபாக்கியங்களும் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் புகழ்ச்சியை அதிகம் விரும்புபவர்களாக இருப்பார்கள். ஜோதிடத்தில் 9ம் இடம் இயல்பான புகழ் கொடுக்குமிடம். பூரட்டாதி இருக்கும் 11ம் இடமான கும்பம் புகழைத் தேடித் தேடி அனுபவிக்க வைக்கும் இடம். அதாவது புகழ்ச்சி கிடைப்பதற்காக விளம்பர ஆர்ப்பாட்டங்களைச் செய்ய வைக்கும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், எல்லோரிடமும் தள்ளி நின்றே பேசுவார்கள். பேசும்போதே.., “தனக்கு எல்லாம் தெரியும்” என்ற உடல்மொழியைக் கொண்டவர்களாக இருப்பார்கள். புகழ் பெற்ற சினிமா வசனமான “இது என் கட்டளை... என் கட்டளையே சாசனம்” என்பது சினிமாவுக்கு பொருந்துகிறதோ இல்லையோ, நிச்சயம் பூரட்டாதி நட்சத்திரத்திற்குப் பொருந்தும்.

யாரிடமும்.. எவரிடமும்... பணிந்து போவது, தாழ்ந்து போவது என்பது இவர்கள் அகராதியிலேயே இல்லை. ஒன்லி ஆர்டர்தான். மதிப்பு தராத இடத்தில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் கண நேரம் கூட இருக்க மாட்டார்கள்.

அதேசமயம்... பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம்.

எப்படி?

இவர்களுக்கு முகஸ்துதி வாசித்தாலே போதும். கையில் பையில் உள்ளதை எல்லாம் அள்ளித் தந்து விடுவார்கள். புகழுக்கு மயங்கிவிடுவார்கள் இவர்கள்.

பணத்தை எப்படி சம்பாதிக்க வேண்டும், அதை எப்படி முதலீடாக மாற்றவேண்டும், அப்படி முதலீடாக மாற்றியதை எப்படி வருமானம் தரக்கூடியதாக வளர்க்க வேண்டும் என்பதில் மிகுந்த திறமையானவர்கள். ஆடம்பரச் செலவுகள் செய்தாலும், அதில் ஆதாயம் வரும்படியாக பார்த்துக்கொள்வார்கள். உதாரணமாக... சில ஆயிரம் செலவில் பார்ட்டி போன்ற விசேஷங்கள் செய்து அன்பளிப்பாக பல லட்சங்களை அடைவார்கள்.

செய்கின்ற தொழிலில் மிக கச்சிதமாகத் திட்டமிட்டு, செய்பவர்கள். மூலப்பொருள், உற்பத்திச் செலவு, ஊழியர்கள் ஊதியம், மின்செலவு, இதர செலவு .. என அனைத்துச் செலவுகளும் 65% சதம் மட்டுமே இருக்கும்படியாகவும், மீதி 35% சதம் லாபமாக இருக்கும்படியாகவும் பார்த்துக்கொள்வார்கள்.

இந்தக் கணக்கில் சிறிய தவறு நேர்ந்தாலும், அந்தத் தவறை உடனடியாக சரிசெய்துவிடுவார்கள். அதை மீறி செலவுகள் கட்டுப்படுத்த முடியாவிட்டால் சிறிதும் யோசிக்காமல் அந்தத் தொழிலை அப்படியே கை கழுவிவிடுவார்கள்.

மற்றபடி, பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், சிறந்த மனிதர்கள். அறிவாளிகள். புத்திசாலிகள். நிர்வாகத் திறமை வாய்ந்தவர்கள். எந்த நிலையிலும் தடுமாறாமல் நிதானமாகச் சிந்தித்து செயல்படுபவர்கள். அனுபவங்களைப் பாடமாக கற்பவர்கள். கற்ற வித்தையை மிகச் சரியாக பயன்படுத்துபவர்கள்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், குடும்ப அமைப்பிலும் சிறந்த நிர்வாகிகளாக இருப்பார்கள். குடும்பத்தாரின் தேவைகளை தாமே அறிந்து, புரிந்து அவர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்து தருபவர்கள். குழந்தைகளின் மேல் அளவற்ற பாசம் வைப்பவர்கள். அவர்களை சிறந்த கல்விமான்களாக வளர்ப்பவர்கள். பெற்றோரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசமாட்டார்கள். சகோதர வகையில் பாசம் அதிகம் கொண்டவர்கள். அவர்களுக்காக பலவித உதவிகளைச் செய்து தருபவர்கள்.

வெளியிடங்களில் கெத்தாக, கம்பீரமாக காட்டிக்கொள்ளும் குணம் கொண்டவர்கள் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள். அதேசமயம், வீட்டில் வாழ்க்கைத்துணையிடம் அடங்கிப் போவார்கள். குறிப்பாக மனைவியிடம். காதல், காமம் இரண்டிலும் கடைசிவரை அடங்காதவர்கள்.

நிறைவான தூக்கம் கொண்டவர்கள். உலகம் முழுதும் சுற்றுபவர்கள் இவர்கள். உலக போகங்கள் அனைத்தையும் அனுபவிப்பவர்கள். உள்ளூர் நட்பைவிட அயல்நாட்டு நட்புகளே அதிகம் கொண்டிருப்பார்கள். ஆடம்பரப் பொருட்கள் எவையெல்லாம் விற்பனைக்கு வந்தாலும் அதை முதலில் வாங்கி அனுபவிக்கக் கூடியவர்கள்.

இவை அனைத்தும் இருந்தாலும், இதற்கெல்லாம் நேர்மாறாக ஆன்மிகத்தில் உச்சத்தைத் தொடுபவர்கள், பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள். நல்ல ஆசான், குரு, வழிகாட்டி என யாராவது இவர்களுக்குத் துணையாக இருப்பார்கள். எவரும் புரிந்து கொள்ளமுடியாத தத்துவங்களைக் கூட எளிதாகப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர்கள்.
பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், ஜோதிடத்தில் இருந்தால் வாக்கு பலிதம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஜோதிடத்தில் இல்லாவிட்டாலும் சொன்னது அப்படியே பலிக்கும் வாக்கு வன்மை பெற்றவர்கள். இவர்கள் ஞானம் தேடுபவர்கள். ஞானத்தை அடைபவர்கள்.

இன்னும் இருக்கின்றன பூரட்டாதி நட்சத்திரக்கார்களின் சிறப்பம்சங்கள்.

அடுத்த பதிவில் இவர்களின் தொழில்.. வேலைவாய்ப்பு... வாழ்க்கைத்துணை என பல விஷயங்களைப் பார்ப்போம்.

- வளரும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x