Published : 04 Sep 2020 21:17 pm

Updated : 04 Sep 2020 21:17 pm

 

Published : 04 Sep 2020 09:17 PM
Last Updated : 04 Sep 2020 09:17 PM

27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 71;  ‘அவிட்டம் தவிட்டுப்பானையை பொன்னாக்கும்?’

27-natchatirangal-a-to-z-71

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.


அவிட்டம் நட்சத்திரம் பற்றிய தகவல்களைப் பார்த்து வருகிறோம். இந்தப் பதிவில் அவிட்டம் 4 பாதங்களுக்குமான துல்லியமான தகவல்களைப் பார்ப்போம்.

அவிட்டம் 1ம் பாதம் :-

அவிட்டம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள், நேர்மையானவர்கள்.

மனசாட்சிக்கு கட்டுப்பட்டவர்கள். செயல்களில் நிதானம் காட்டி சாதிப்பவர்கள். குடும்பப் பெருமைகளைக் காப்பாற்றுபவர்கள், ஒழுக்கம் தவறாதவர்கள், விதிகளை மீறாதவர்கள், விமர்சனங்களையும் நிதானத்தோடு ஏற்றுக்கொள்பவர்கள்.

புகழ்ச்சியில் தலைக்கனம் ஏறாதவர்கள். குடும்ப ஒற்றுமை பேணுபவர்கள். பெற்றோர் மீது மரியாதையும் பக்தியும் கொண்டவர்கள். சகோதரப் பாசம் கொண்டவர்கள். வாழ்க்கைத்துணையின் அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள். தூய்மையான, நேர்த்தியான ஆடை அணிபவர்கள். உடல் வலு மிக்கவர்கள், அதிலும் வலுவான எலும்பு (Bone strength), உறுதியான, சீரான பல் அமைப்பு கொண்டவர்கள்.

இவர்கள், முடிந்த வரை கோபத்தை அடக்குபவர்கள். எல்லை மீறினால்... எதிரி இனி எழவே முடியாத அடியைக் கொடுப்பவர்கள். கோபம் வந்தால் வந்த வேகத்திலேயே காணாமல் போகும். கோபம் தீர்ந்ததும் குழந்தையாக மாறுபவர்கள். கண்டிப்பும் இருக்கும், கருணையும் இருக்கும். அடிக்கவும் தெரியும், அடிக்கு மருந்து போடவும் தெரியும். அதாவது, அரவணைப்பதிலும், அன்பு காட்டுவதிலும், பாசத்தைக் கொட்டுவதிலும் இவர்களுக்கு நிகர் இவர்களே!

அரசியல் ஆர்வம், தலைமைப் பண்பு, அதிகாரப் பதவிகளில் இருப்பார்கள். காவல்துறை, ராணுவம், மருத்துவம், வழக்கறிஞர், ஆசிரியர் பணி, அரசின் உயர்பதவிகள், அரசு ஒப்பந்ததாரர், பணி நிமித்தமாக குழுவுக்குத் தலைமை தாங்குதல், நியமனப் பதவிகள், கௌரவப் பதவிகள் முதலான பதவிகள் மற்றும் பணிகளில் இருப்பார்கள்.

தொழிலில் சுயமாக முன்னேறியவர்களாக இருப்பார்கள். தந்தையால் கைவிடப்பட்ட தொழிலை கையிலெடுத்து வெற்றிகரமாக மாற்றிக் காட்டுவார்கள். கட்டுமானத் தொழில், வாகனத் தொழில், விவசாயத் தொழில், மொத்த வியாபாரம், மளிகைக் கடை, பாத்திரக் கடை, வன்பொருள்(ஹார்டுவேர்ஸ்) விற்பனை, மின்சாரப் பொருட்கள் விற்பனை, மின்சாரப் பணி, செங்கல் சூளை, மணல் விற்பனை, மருந்துக் கடை, மருத்துவமனை நிர்வாகம், தங்கும் விடுதிகள், மரக்கடை, நிலக்கரி வியாபாரம், பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை, மோட்டார் வாகன ஆயில் விற்பனை, கனரக வாகன தொழில் போன்றவை அமையும்.

அவிட்டம் 1ம் பாதக்காரர்களுக்கு, வயிற்றுக்கோளாறுகள், உடல் உஷ்ணம், உயர் ரத்த அழுத்தம் முதலான பிரச்சினைகள் இருக்கும்.

இறைவன் - ஆரூரான்- திருவாரூர்

விருட்சம் - வன்னி மரம்

வண்ணம் - ஆரஞ்சு

திசை - கிழக்கு
************************

அவிட்டம் 2ம் பாதம் :-

அவிட்டம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள், தீர்க்கமான ஞானம், அறிவு உடையவர்கள்.

எதையும் ஆராய்ந்து பார்க்கும் குணம் உடையவர்கள். எப்பொருளிலும் மெய்பொருள் கண்டே ஏற்பவர்கள். கல்வியில் சிறந்தவர்கள், அறிவாளிகள், புத்திசாலிகள். அதாவது அறிவை எப்படி பயன்படுத்த வேண்டும், புத்தியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவுடையவர்கள். அறிவு.. படித்ததினால் பெற்றது.., புத்தி.. படித்ததை செயல்படுத்தும் திறமை என இரண்டும் கொண்டவர்கள்.

குடும்ப ஒற்றுமையை விரும்புபவர்கள். பெற்றோர் மீது பக்தி, சகோதர ஒற்றுமை, சகோதரத்திற்க்கு விட்டுக்கொடுக்கும் பண்பு, அதிபுத்திசாலியான வாழ்க்கைத்துணை என வாழ்பவர்கள். மாறா இளமை உடையவர்கள். மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ்பவர்கள்.

ஆசிரியர், பேராசிரியர், ஆராய்ச்சிக் கல்வி, வங்கியில் பணி, நூலகர், பத்திரப்பதிவுத் துறை, இன்சூரன்ஸ், அரசு உயர் பதவிகள், அரசியல் ஆலோசகர், கணித வல்லுநர், ஆடிட்டர், கணக்காளர், காசாளர், வரி மற்றும் நிதி மேலாண்மை, எழுத்தர், பயிற்ச்சி நிறுவனம், உயர்கல்வி ஆலோசகர், மனமகிழ் மன்றம், அயல்நாடுகளில் பணி போன்ற வேலை, தொழில் அமையும்.

தோல் வியாதிகள், நரம்பு தளர்ச்சி, பல் பிரச்சினை, இடுப்பு நோய்கள் முதலானவை இருக்கும்.

இறைவன் - ஸ்ரீசக்கரத்தாழ்வார் - ஸ்ரீரங்கம்.

விருட்சம் - கருங்காலி மரம்

வண்ணம் - இளம்பச்சை

திசை - தெற்கு
******************************


அவிட்டம் 3ம் பாதம் :-

அவிட்டம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள், இவர்கள்தான் தவிட்டுப்பானையும் பொன்னாகும் என்கிற ஜோதிட மொழிக்கு முழுமையாக பொருந்தக்கூடியவர்கள்.
செல்வவளம் மிகுந்தவர்கள், வாழ்நாளில் பெரிய அளவிலான கஷ்டங்களையோ, சோதனைகளையோ சந்திக்காதவர்கள். எந்தக் காரியத்தை எடுத்தாலும் முழுமையாக வெற்றியைக் காண்பவர்கள். அதிர்ஷ்டமான கரங்களுக்கு சொந்தக்காரர்கள். தந்தையின் வழிகாட்டுதலைச் சரியாக பின்பற்றுபவர்கள். தாயாரின் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ப்பவர்கள்.

சகோதர ஒற்றுமை உடையவர்கள். சகோதரர்களுக்கு பக்கபலமாக இருப்பவர்கள். சகோதரிகளுக்காக அளவிடாத உதவிகளைச் செய்து கொண்டே இருப்பவர்கள்.

அரசில் உயர் பதவிகள், அதிகாரப் பதவிகள் போன்றவற்றில் இருப்பவர்கள். அரசு தொடர்பான பணிகளைச் செய்பவர்கள். அதிகாரத்தில் இருப்பவர்களின் நிழலாக இருப்பவர்கள். யாராலும் சாதிக்க முடியாத காரியங்களைச் சாதித்துக் காட்டுபவர்கள்.

பரம்பரையாகச் செய்து வரும் நிறுவனங்கள் அல்லது தந்தையால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களை நிர்வாகம் செய்பவர்கள். இவர்களில் அதிகமானவர்கள் வியாபாரம் செய்பவர்களாக இருப்பார்கள்.

மொத்த வியாபாரம், கமிஷன் வியாபாரம், பெரிய அளவிலான முதலீடுகளைச் செய்து சில்லறை வியாபாரம் செய்தல், ஜெனரல் ஸ்டோர், மளிகைக் கடை, ஆடை ஆபரணக் கடை, நவரத்தின கற்கள் விற்பனை என பணிகளிலும் தொழிலிலும் இருப்பார்கள்.

பெண்களுக்கான ஆடை ஆபரணங்கள் வியாபாரம், அழகு சாதன பொருட்கள் விற்பனை, சிகை அலங்காரம், அழகுக்கலை நிபுணர், மனோதத்துவ நிபுணர், மருத்துவர், வழக்கறிஞர், நீதிபதி, மத்தியஸ்தர், பேச்சாளர், இசை வித்தகர், நடன நாட்டியக் கலைஞர் போன்ற துறைகளில், தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பார்கள்.

இவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகள், சிறுநீரகக் கல், கருத்தரித்தல் பிரச்சினைகள், எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுக்க முடியாத வாழ்க்கைத் துணை அமைவது போன்ற பிரச்சினைகள் இருக்கும். இதன் காரணமாகவே ஒரு சிலர் ரகசிய துணையை நாடுபவர்களாக இருப்பார்கள்.

இறைவன் - திருவதிகை வீரட்டானேஸ்வரர். பண்ருட்டி, கடலூர்.

விருட்சம் - சீத்தா மரம்

வண்ணம் - இளநீலம்

திசை - தென்மேற்கு
****************************


அவிட்டம் 4ம் பாதம் :-

அவிட்டம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள், கவலை என்பது துளியளவும் இல்லாதவர்கள்.

எந்தப் பிரச்சினையையும் எளிதாக சமாளிப்பார்கள். எதிரிகளும் எதிர்ப்புகளும் இல்லாதவர்கள். சுய முயற்சியில் முன்னேற்றம் காண்பவர்கள். எப்போதும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டவர்கள். அந்த முதலிடத்தைப் பெறுவதற்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள்.

குடும்ப ஒற்றுமையில் அதிக அக்கறை காட்டுபவர்கள். தாயின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவர்கள். தந்தையின் அன்பும், உதவியும் எப்போதும் பெற்றவர்கள். சகோதரப் பாசம் இருந்தாலும் பெரிய அளவில் ஒட்டுதல் இருக்காது. சகோதரிகளிடம் அதிகப் பாசத்தைக் காட்டுபவர்கள். சகோதரிகளுக்காகத் தொடர்ந்து உதவிகளைச் செய்து கொண்டே இருப்பவர்கள்.

இவர்கள், நல்ல வளர்ச்சியை அடைந்த பின் திருமணம் செய்யலாம் என திருமணத்தை தள்ளிப்போடுவார்கள். திருமணம் நடந்தாலும் இதையே காரணமாகக் காட்டி குழந்தைப் பிறப்பையும் தள்ளிப் போடுபவர்கள்.

இந்த குணத்தை அவர்கள் மாற்றிக் கொள்வது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது. ஆனாலும் யாருடைய பேச்சையும் ஏற்காதவர்கள். தன் சுய சிந்தனை மீது அதிக நம்பிக்கை வைப்பவர்கள். ஏமாந்தாலும், தோற்றுப் போனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடுத்த முயற்சியில் உடனே இறங்குபவர்கள். வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவர்கள். சாதித்தும் காட்டுவார்கள்.

இதற்கு முந்தைய பதிவில் (பதிவு - 70) நாம் சொன்னதைப் போல இவர்களுக்கு இன்னதுதான் தொழில் என்று எதையும் நிர்ணயம் செய்ய முடியாது. எந்தத் தொழிலையும், எந்த வியாபாரத்தையும் தைரியமாக எடுத்து செய்பவர்கள். இவர்களை சறுக்கு மரத்தோடு ஒப்பிடலாம். சறுக்கு மரத்தில் எத்தனை முறை சறுக்கி கீழே வந்தாலும் விடா முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பார்கள்.

பயணம் தொடர்பான தொழில்/ ஆட்டோமொபைல், டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட், வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் தொழில், அயல்நாடு தொடர்பு உடைய ஏற்றுமதி இறக்குமதி தொழில், விவசாயம் சார்ந்த தொழில் உர விற்பனை ரசாயனம் தொடர்பான தொழில் பட்டாசு கெமிக்கல் போன்ற தொழில், ஆடைகளுக்கு வண்ணம் ஏற்றும் தொழில் (சாயப்பட்டறை), ஆடை உற்பத்தி, கைத்தொழில் அதாவது பொம்மை தயாரித்தல், மெழுகுவத்தி தயாரித்தல் போன்ற குடிசைத் தொழில்கள், உலர் சலவையகம், சிகை அலங்காரம், உணவகம், உணவு தொடர்பான தொழில், (கேட்டரிங்), பால் மற்றும் எண்ணெய் வியாபாரம், தேநீர்க் கடை, திரவத் தொழில் போன்றவை அமையும்.

தாய் சேய் மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க மருந்து நிபுணர், கால்நடை மருத்துவர் மருந்துக் கடை, சித்த மருத்துவம், பரம்பரை வைத்தியம் இதுபோன்ற தொழில்களும் அமையும்.

பொதுவாக இவர்களுக்கு ஜீரணக் கோளாறு, பிறப்புறுப்பில் பிரச்சினைகள், கர்ப்பப்பைக் கோளாறுகள், ஆண்மைக் குறைவு போன்ற பிரச்சினைகள், பால்வினை நோய்கள், தோல் அலர்ஜி முதலானவை இருக்கும்.

இறைவன் - திருவண்ணாமலையில் இருக்கும் ஈசான்ய லிங்கம்.

விருட்சம் - ஜாதிக்காய் மரம்

வண்ணம் - சிவப்பு

திசை - வடக்கு

பொதுவாக அவிட்ட நட்சத்திரக்காரர்கள் சிவபெருமானையும், முருகப்பெருமானையும் வணங்கி வருவது நல்ல பலனைத் தரும். பெண்களுக்கு மறுமணம் தொடர்பான விஷயங்களில் உதவிகள் செய்வதும், அல்லது மறுமணத்தை ஏற்படுத்தித் தருவதும் சிறப்பான நன்மைகள் கிடைக்கும்.


அடுத்த பதிவில் "சதயம்" நட்சத்திரம் பற்றி பார்ப்போம்.

சதயம் பெருமைக்குரிய நட்சத்திரம்.

எப்படி...? உலகின் பிறப்பு, இறப்பு இரண்டையும் சமநிலையில் வைத்திருக்க மிகவும் உதவிகரமாக இருப்பவர் எமதர்மன். அந்த எமதர்மன் பிறந்த நட்சத்திரம்தான் சதயம். இந்த சதய நட்சத்திரத்திற்கு இன்னும் பல பெருமைகள் இருக்கின்றன.

அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

- வளரும்
*********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 71;  ‘அவிட்டம் தவிட்டுப்பானையை பொன்னாக்கும்?’27 நட்சத்திரங்கள்ஏ டூ இஸட் தகவல்கள் 71அவிட்ட நட்சத்திரக்காரர்கள்அவிட்டம் தவிட்டுப்பானையை பொன்னாக்கும்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x