ராகு - கேது பெயர்ச்சி; மேஷ ராசி அன்பர்களே! வீடு வாங்குவீர்கள்; நல்ல வேலை; நண்பர்களால் சிக்கல்! 

ராகு - கேது பெயர்ச்சி; மேஷ ராசி அன்பர்களே! வீடு வாங்குவீர்கள்; நல்ல வேலை; நண்பர்களால் சிக்கல்! 
Updated on
3 min read

- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மேஷ ராசி அன்பர்களே வணக்கம்.

இதுவரை உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் இருந்து உங்களின் அனைத்து முயற்சிகளையும் வெற்றியாக்கி தந்துகொண்டிருந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு 2ம் இடத்திற்கு வரப்போகிறார்.

இதுவரை துணிச்சலாக பல செயல்களை செய்திருப்பீர்கள். அந்தச் செயல்கள் மூலம் ஆதாயத்தையும் அடைந்திருப்பீர்கள். இனி இரண்டாமிடத்து ராகு என்ன செய்வார் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்.

இரண்டாமிடம் என்பது தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம். அந்த குடும்ப ஸ்தானத்தில் ராகு பகவான் வரும்போது தனம் என்னும் பண வரவு அபரிமிதமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். சொந்த வீடு வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடக்கும். திருமணம் முடிவாகும்.

குடும்பத்திற்கு புதிய உறுப்பினர் வந்து சேர்வார். அது திருமணத்தின் மூலமாகவும் இருக்கும். குழந்தை பிறப்பாகவும் இருக்கும். ஆமாம்... புத்திர பாக்கியம் ஏற்படும் காலம் இது. எதிர்பார்த்ததை விட அதிகப்படியான வருமானம் வருவதால் வீடு வாகனம், ஆபரணச் சேர்க்கை முதலானவை இந்த ராகு - கேது பெயர்ச்சிக் காலத்தில் ஏற்படும்.

இதுவரை நல்ல வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியாகும். இளைய சகோதரரிடம் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். கடுமையான வீழ்ச்சியை சந்தித்த உங்கள் சகோதரர் இப்போது வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருவார்.
வியாபாரிகளின் வருமானம் இரட்டிப்பாக உயரும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைச் செய்து, வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு வியாபார வளர்ச்சிக்கு வித்திடுவீர்கள்.

விவசாயிகளுக்கு இதுவொரு பொற்காலம் என்றே சொல்லவேண்டும். உங்களின் மதிப்பு மரியாதை உயரும். விளை பொருட்களுக்கு மதிப்பு கூடும். மழை பொழிவு திருப்தியாக இருப்பதால் தங்கு தடையின்றி விவசாயப் பணிகளைத் தொடர முடியும்.

சுய தொழில் செய்பவர்களுக்கும், பெரிய தொழில் நிறுவனங்கள் வைத்திருப்பவர்களுக்கும் இந்த ராகு - கேது பெயர்ச்சி உன்னதமான காலம். ஊழியர்கள் பற்றாக்குறை நீங்கும். ஊழியர்களின் உழைப்பு அதிகமாகும். புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உற்பத்தியான பொருட்கள் மளமளவென விற்றுத் தீரும். புதிய தொழில்நுட்பம் வாய்ந்த இயந்திரங்கள் வாங்குவீர்கள்.

இந்த இரண்டாமிடத்து ராகுவால் செய்யக்கூடாதவற்றைப் பார்ப்போம்.

யாருக்கும் வாக்கு கொடுக்கக்கூடாது. வாக்கு கொடுத்தால் காப்பாற்ற முடியாமல் சங்கடங்களை சந்திக்க வேண்டியது வரும். உற்றார் உறவினர், உயிர் நண்பர் என்று யாராக இருந்தாலும் ஜாமீன் கொடுக்காதீர்கள். ஜாமீன் கொடுத்தால் உங்கள் தலையில்தான் வந்து விடியும். காசோலைகளை பத்திரமாக பராமரிக்க வேண்டும். யாருக்கேனும் காசோலை தருவதற்கு முன்னதாக, ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து பிறகு கொடுக்க வேண்டும். பண விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள்.

அரசியலில் இருப்பவர்கள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது, ஆர்ப்பாட்ட அரசியல் செய்யாதீர்கள். எதிரிகள் ஏற்கெனவே வெறும் வாயை மென்று கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வாய்க்கு அவல் கொடுப்பதைப் போல் உங்கள் செயல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பெண்களுக்கு திருமணம் நடக்கும். நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். தாமதப்பட்ட புத்திரபாக்கியம் கிடைக்கும். சுயதொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும். விவாகரத்தானவர்களுக்கு மறுமணம் நடக்கும். தந்தையின் சொத்தில் உரிய பங்குகள் கிடைக்கும். பொருளாதாரச் சிக்கல்கள் அறவே தீரும்.

மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். ஆடம்பர விஷயங்களில் கவனம் திரும்பாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கவனம் திரும்பினால் கல்வி முழுமையாக பாதிக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

கலைஞர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தீரும் அளவுக்கு வருமானம் கிடைக்கும். காத்திருந்த வாய்ப்புகள் இனி தேடிவரும். எந்தவொரு வாய்ப்பையும் தவறவிட வேண்டாம்.


கேதுவால் ஏற்படும் பலன்கள் -
இதுவரை 9ம் இடத்தில் இருந்து உங்கள் பாக்கியத்தை அதாவது அதிர்ஷ்ட வாய்ப்புகளை தடுத்துக்கொண்டும், தந்தையின் உடல்நலத்தை கெடுத்துக்கொண்டும், தந்தை வழி சொத்துக்களில் வில்லங்கத்தை ஏற்படுத்தி மன உளைச்சலைத் தந்து கொண்டும் இருந்தார் கேது பகவான். இப்போது அவர் 8ம் இடத்துக்கு வருகிறார்.
இந்த எட்டாமிடத்து கேது என்ன செய்வார்.

ஒருவகையில் அஷ்ட ஸ்தானத்தில் பாவ கிரகம் மறைவது நல்லதுதான். இனி தந்தையின் உடல்நலம் தேறும். சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். தடைப்பட்ட பாக்கியங்கள் இனி தடையில்லாமல் கிடைக்கும். இரண்டாவது புத்திர பாக்கியம் உண்டாகும். உயர் கல்விக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கி உயர் கல்வி சிறக்கும்.

அதேசமயம், ஆரோக்கியத்தில் முழு அக்கறை காட்ட வேண்டும். கெட்ட பழக்கங்களை முழுவதுமாக நிறுத்த வேண்டும். சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடக்கூடாது, தலையிட்டால் வழக்குகளைச் சந்திக்க வேண்டியது வரும். திடீர் மருத்துவச் செலவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது, எனவே கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களை ஓட்டும்போது எச்சரிக்கை உணர்வு மிக மிக அவசியம். இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -

அருகில் இருக்கும் ஆலயத்தில் உள்ள சயனகோல பெருமாளை வழிபாடு செய்யுங்கள். ஶ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்யுங்கள். இன்னும் பல வளங்களைத் தந்தருள்வார் பெருமாள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in