Published : 25 Aug 2020 02:50 PM
Last Updated : 25 Aug 2020 02:50 PM

விட்டுக்கொடுக்கும் குணம், அம்மா கிழித்த கோடு; உணவுப்பிரியர், சகோதரப் பாசம்! 27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 68 ; திருவோண மகிமை

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


வணக்கம் வாசகர்களே. திருவோணம் நட்சத்திரம் பற்றி பார்த்து வருகிறோம். இந்தப் பதிவில் திருவோணம் நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்கும் தனித்தனியாக குணநலன்களையும் பலன்களையும் விரிவாகப் பார்ப்போம்.


திருவோணம் நட்சத்திரம் 1ம் பாதம்:-

திருவோணம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் செயல்வீரர்கள்.

எடுத்த காரியத்தை மிகச்சரியாக முடித்து காட்டுபவர்கள். தாயின் அன்பையும் அரவணைப்பையும் அதிகம் பெற்றவர்கள். தாயா தாரமா என்கிற நிலை வரும்போது தாயாருக்கே முக்கியத்துவம் தருபவர்கள். தாய்வழி உறவுகளிடம் அதிக அன்பையும் நெருக்கத்தையும் காட்டுபவர்கள். சகோதரப் பாசம் அதிகம் கொண்டவர்கள். சகோதரர்களுக்காக எதையும் செய்து கொடுப்பார்கள். வாழ்க்கைத் துணையிடம் நெருக்கமான அன்பையும், வெளிப்படையான குணத்தையும் காட்டுபவர்கள். குழந்தைகளை இறை நம்பிக்கையோடு வளர்ப்பவர்கள்.

திருவோணம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் கட்டுமானத் தொழில் தொடர்பான தொழில்களையும் அதில் வேலை வாய்ப்புகளையும் பெறுபவர்களாக இருப்பார்கள். அரசுப்பணி, அரசாங்கத்தில் உயர்பதவிகள், அரசியல் பதவிகள், அரசியல் ஆலோசகர்கள் அரசியல் மாற்றங்களில் நுணுக்கமான கண்ணோட்டம் வைத்துக் கொண்டே இருப்பவர்கள் முதலான பணிகளில் இருப்பார்கள்.

உணவகத் தொழில் பயணத்தில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்துதல்,வெளிநாடு செல்பவர்களுக்கு பயண ஏற்பாடுகளை செய்து கொடுத்தல்போன்ற தொழில் இவர்களுக்கு அமையும். இன்டீரியர் டெகரேட்டர் எனும் வீட்டு அலங்காரத் தொழில், பர்னிச்சர் தொழில், மளிகைப் பொருட்கள் மொத்த வியாபாரம், ஏற்றுமதி இறக்குமதி தொழில், சரக்கு வாகனத் தொழில் இது போன்ற தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் அமையப் பெறுவார்கள்.

திருவோணம் 1ம் பாதக்காரர்களுக்கு உணவு விருப்பமாக சூடான, காரமான, சுவையான உணவு விருப்பம் இருக்கும். காரமான உணவு உண்பதாலும் வயிற்றுப்புண், வாய்ப் புண் போன்ற பிரச்சினைகளும்,செரிமானப் பிரச்சினைகளும் இருக்கும். ஒரு சிலருக்கு மூலம் போன்ற உபாதைகளும் இருக்கும்.

இறைவன் - பார்த்தசாரதி பெருமாள், திருவல்லிக்கேணி

விருட்சம் - வெள்ளெருக்கு மரம்

வண்ணம் - அடர் சிவப்பு

திசை - தென்கிழக்கு
**********************

திருவோணம் 2ம் பாதம் :-

திருவோணம் 2வது பாதத்தில் பிறந்தவர்கள், தோற்றப்பொலிவு மிக்கவர்கள்.

புன் சிரிப்பாலே பலரையும் கவருபவர்கள். நல்ல செல்வ வளத்தோடு வாழ்பவர்கள். பொருளாதார பிரச்சினைகள் இல்லாமல் வாழ்பவர்கள். நேர்த்தியான உடை, மெலிந்த உடல்வாகு, அழகான தோற்றம் என்பவை இவர்களின் அடையாளம்.

ஆடை ஆபரணங்கள் அணிவதில் அதிக ஆர்வம் உடையவர்கள். தாயாரின் அன்பு அதிகம் கிடைக்கப் பெற்றவர்கள். இவர்கள் தாயாரிடம் காட்டும் அன்பு அளப்பரியதாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் அன்னையிடம் அடங்கிப் போவது மட்டுமல்லாமல், தாய் சொல்லை எப்போதும் தட்டாதவர்கள். தாயார் கிழித்த கோட்டை தாண்ட மாட்டார்கள்.

அதேபோல வாழ்க்கைத் துணையிடமும் அதீத அன்பையும், நெருக்கத்தையும் கொண்டவர்கள். தாயையும் தாரத்தையும் சமமாக பாவிப்பவர்கள். தந்தையிடம் நெருக்கம் இருந்தாலும் அவருடைய பேச்சுக்குக் கட்டுப்பட மாட்டார்கள். குழந்தைகளிடம் அதிக பாசத்தை காட்டுபவர்கள். அவர்களுக்கு எல்லாவித வசதி வாய்ப்புகளையும் செய்து கொடுப்பவர்கள். குழந்தைகள் கேட்காமலேயே அனைத்தையும் செய்து தருபவர்கள். உறவினர்களுக்கு எல்லாவிதத்திலும் உதவிகளைச் செய்பவர்களாக இருப்பார்கள். சிரமத்தில் இருக்கும் உறவினர்களுக்கு பக்கபலமாக இருந்து தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பார்கள்.

திருவோணம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள், பெரும்பாலும் சுயதொழில் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுபவர்களாகவே இருப்பார்கள். அந்தத் தொழிலில் மிகப்பெரிய வளர்ச்சியை குறுகிய காலத்தில் அடைபவர்களாகவும் இருப்பார்கள். பணத்திற்கு பஞ்சமே இருக்காது. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் எந்த நேரத்திலும் உடனடியாக பணத்தை திரட்டும் ஆற்றல் உள்ளவர்கள் இவர்கள்.

சொந்தத் தொழில் செய்வதில் முதலிடத்தில் இருப்பது இவர்களுக்கு உணவகத் தொழில்தான். உணவுத் தொழில், பயணங்கள் தொடர்பான தொழில், ஆபரணம் உள்ளிட்ட தொழில், ஆயத்த ஆடைகள் உற்பத்தி மற்றும் வியாபாரம், அழகுசாதன பொருட்கள் விற்பனை, வெளிநாட்டுப் பொருட்கள் விற்பனை, பெண்களுக்கு தேவையான அழகு சாதன பொருட்கள் விற்பனை, பெண்களுக்கான ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் விற்பனை மையங்கள் நடத்துதல். விவசாயம் சார்ந்த தொழில்கள், டிரான்ஸ்போர்ட், டிராவல்ஸ் நிறுவனங்கள், மருந்து மற்றும் மருத்துவப்பொருட்கள் விற்பனை இது போன்ற தொழில், வேலை வாய்ப்புகள் அமையும்.

சுவையான உணவின் மீது அலாதி விருப்பம் இருக்கும். குறிப்பாக இனிப்பு உணவுகளில் அதிக நாட்டம் இருக்கும். எப்போது உணவு உண்டாலும் அதில் ஒரு இனிப்பு இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்வார்கள். இதன் காரணமாகவே இவர்களுக்கு பல் சொத்தை, பல் வலி போன்ற பிரச்சினைகளும் சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக பிரச்சினைகளும் இருக்கும்.

இறைவன் - திருமலை திருப்பதி சீனிவாச பெருமாள்

விருட்சம் - கருங்காலி மரம்

வண்ணம் - தூய வெண்மை மற்றும் இளநீலம்.

திசை - தெற்கு
*********************


திருவோணம் 3ம் பாதம் :-

திருவோணம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் கல்விமான்கள்.

அபார ஞாபக சக்தி உடையவர்கள். அழகான முகத்தோற்றம், கவர்ச்சிகரமாக உடை, கச்சிதமான உடல்வாகு, அகன்ற நெற்றி, குளிர்ச்சியான கண்கள், அகலமான காது போன்ற அமைப்பு உடையவர்கள்.

கூட்டுக்குடும்ப வாழ்க்கை வாழவே ஆசைப்படுபவர்கள் இவர்கள். குடும்ப உறுப்பினர்கள் எவரையும் விட்டுத்தர மாட்டார்கள். தாயன்பை அதிகம் பெற்றவர்கள். தாயாரிடம் பணிந்து செல்பவர்கள். தாயாரின் முயற்சியாலேயே கல்வியில் சிறப்பானவர்களாக மாறி இருப்பார்கள். சகோதர ஒற்றுமை பலமாகக் கொண்டவர்கள். சகோதரிகளிடம் அதிகப்படியான அன்பைக் காட்டுபவர்கள். அவர்களுக்காக எதையும் செய்து கொடுப்பவர்களாக இருப்பார்கள். தாய்மாமன் வகை உறவுகளிடம் அதிக நெருக்கம் இருக்கும். தாய்மாமன்கள் உதவியால் மிகப்பெரிய உச்சத்தைத் தொடுவார்கள். தந்தையின் அறிவுரையும், தந்தையின் வழிகாட்டுதலால் நல்வழியில் செல்பவர்களாகவும் இருப்பார்கள். தந்தையின் சொல்லுக்கு மிகவும் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களில் பெரும்பாலும் சொந்தத் தொழில் செய்பவர்களாக இருந்தாலும், பத்திரிகை மற்றும் ஊடகத் துறைகளில் இருப்பார்கள். தொலைத்தொடர்புத் துறை, தகவல் தொழில்நுட்பம், மனிதவள மேம்பாடு, பயணம் தொடர்பான தொழில், உணவு சம்பந்தமான தொழில், மளிகைப் பொருட்கள் வியாபாரம், நோட்டுப் புத்தகம் விற்பனைக் கடை. புகைப்படம் எடுத்தல், போட்டோ காப்பி தொழில், இசையார்வம், நடன நாட்டிய ஆர்வம், அது தொடர்பான பயிற்சிப் பள்ளிகள் நடத்துதல், கூரியர் சர்வீஸ், டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட் தொழில். ஆசிரியர், பேராசிரியர், வழக்கறிஞர், வங்கிப் பணி, கணக்காளர், காசாளர், ஆடிட்டர் போன்ற பணிகளில் இருப்பார்கள்.

பலவித சுவையான உணவுகள் மீது விருப்பம் இருக்கும். குறிப்பாக நண்பர்களோடு சேர்ந்து உண்ணுதல், குடும்பத்தோடு சேர்ந்து உண்ணுதல் போன்ற குணம் இருக்கும்.

ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளாக தேமல், வெண்படை, தோலில் கரும்புள்ளிகள், நரம்புக் கோளாறுகள், நரம்புச் சுருட்டல் நோய், நெஞ்சு சளி, வறட்டு இருமல், நுரையீரல் தொற்று போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

இறைவன் - சயன கோலத்தில் இருக்கும் பெருமாள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மற்றும் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள்.

விருட்சம் - சிறுநாகப்பூ மரம்

வண்ணம் - இளம்பச்சை மற்றும் இளநீலம்

திசை - தென்மேற்கு
************************


திருவோணம் 4ம் பாதம்:-

திருவோணம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள், அதிகப்படியான இரக்க குணம் உடையவர்கள்.

கருணை வடிவானவர்கள். கண்களில் கருணை பொங்கும். முகத்தோற்றத்தில் மிக எளிமையானவராக, எளிதாக பழகக் கூடியவர்களாக இருப்பார்கள். யாரையும் எளிதில் நம்பிவிடுவார்கள். தானதர்ம விஷயங்களில் அதிக ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள். தன் தேவையை சுருக்கிக் கொண்டு மற்றவர்களுக்கு உதவுவதில் தாராள மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

குடும்ப ஒற்றுமையில் அதிக நம்பிக்கை உடையவர்கள். கூட்டுக்குடும்ப வாழ்க்கை வாழ்வதில் அதிக விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள். ஒரு உறவு பிரிந்து சென்றாலும் தாங்கிக்கொள்ளும் சக்தியற்றவர்களாக இருப்பார்கள். எந்த உறவுகளிடமும் பகைத்துக்கொள்ள மாட்டார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வதில் மற்ற எல்லோருக்கும் முன்மாதிரியாக இருப்பவர்கள். இவர்களிடம் இருக்கும் பலமும் இதுதான், பலவீனமும் இதுதான்.

தாயாரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவர்கள். தாய் சொல்லைத் தட்டாதவர்கள். தந்தையிடம் அதீத அன்பு, பாசம், நெருக்கம் அனைத்தும் இருக்கும். ஆனாலும் தாயாரிடம் ஒரு படி அதிகமான பாசப்பிணைப்பு இருக்கும். சகோதர ஒற்றுமை பலமாக இருக்கும். சகோதரர்களை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காதவர்களாக இருப்பார்கள். சகோதரிகளிடமும் இதே நிலைதான். அளவற்ற பாசம் கொண்டிருப்பார்கள்.
தந்தைவழி உறவுகளிடம் நல்ல நட்பையும் பாசத்தையும் காட்டுபவர்களாக இருப்பார்கள். சொத்துகள் தொடர்பான விஷயங்களில் விட்டுக்கொடுத்துச் செல்வார்கள். சுய உழைப்பில் அதிக நம்பிக்கை இருப்பதால், பரம்பரைச் சொத்து அல்லது தந்தை வழி சொத்துகளில் அதிக ஆர்வம் காட்டுபவர்களாக இருப்பார்கள்.

இவர்களில் பெரும்பாலும் அரசுப் பணிகளில் இருப்பவர்களாக இருப்பார்கள். சுயதொழில் செய்பவர்கள் இருப்பார்கள். அரசுப்பணிகளில் எல்லாத்துறைகளிலும் பரவலாக இருப்பார்கள். தனக்கு தொடர்பில்லாத துறைகளிலும் சாதித்துக் காட்டுபவர்களாக இருப்பார்கள்.

அரசுப்பணி, அரசு தொடர்பான தூதர், அரசியல் பதவிகள், அரசின் கவுரவ நியமனப் பதவி, அரசு நிர்வாகத்தில் ஆலோசகராக இருத்தல் போன்ற பணிகளில் இருப்பார்கள். சுயதொழில் என பார்த்தால் அனைத்து விதமான தொழில்களிலும் தங்கள் திறமையைக் காட்டி முன்னேறுபவர்களாக இருப்பார்கள்.

பயணம் தொடர்பான தொழில், உணவகம் தொடர்பான தொழில், மளிகை சாமான்கள் விற்பனை, காய்கறி மொத்த வியாபாரம், தரகு மற்றும் கமிஷன் தொழில், நிலத் தரகர், வீட்டுத் தரகர், மனை பிரித்து விற்பனை, திரவம் தொடர்பான தொழில், அயல் நாடுகளுக்குச் சென்று பணிபுரிதல், அயல் நாடுகளுக்கு ஆட்களை அனுப்புதல், பயணச்சீட்டு விற்பனை தொழில், ஏற்றுமதி இறக்குமதி தொழில், அயல்நாட்டுப் பொருட்கள் விற்பனை, துறைமுகப் பணி, கப்பல் பணி, ஆசிரியர், வழக்கறிஞர், இசைப் பயிற்சி ஆசிரியர், நடிப்பு, நடனம், நாடகம் போன்ற துறைகளில் இருத்தல், கதை, கவிதை, கட்டுரை எழுதுதல், திரைத்துறை தொடர்பான பணிகள் இதுபோன்ற தொழில் அல்லது வேலை வாய்ப்புகள் அமையும்.

சுவையான உணவு விருப்பம் இருந்தாலும் கிடைப்பதைக் கொண்டு திருப்திபடுகிற மனம் கொண்டவர்கள். ஆகவே எந்த உணவையும் வீணாக்காமல் உண்பவர்கள். பழைய சாதமாக இருந்தாலும் பெரும் விருந்தாக இருந்தாலும் அளவாகவே உண்பார்கள்.

ஆரோக்கியப் பிரச்சினையாகச் சொல்வதென்றால், தீராத சளித் தொல்லை, இருமல், நெஞ்சக நோய், காது மூக்கு தொண்டை போன்ற இடங்களில் பிரச்சினைகள் இருக்கும்.

இறைவன் - பிரசன்ன வெங்கடேச பெருமாள், திருப்பாற்கடல்,

விருட்சம் - பாக்குமரம்

வண்ணம் - வெண்மை மற்றும் நீலம்

திசை - வடக்கு மற்றும் வடகிழக்கு

பொதுவாக, திருவோண நட்சத்திரக்காரர்கள் தான தர்ம காரியங்கள் செய்யச் செய்ய வாழ்க்கையில் மேலும் மேலும் உயரத்திற்கு வருவார்கள்.

அடுத்து... அவிட்டம் நட்சத்திரம் குறித்துப் பார்ப்போம்.

அவிட்ட நட்சத்திரம் பலவித சிறப்புகளைக் கொண்டது. "அவிட்ட நட்சத்திரம் தவிட்டுப் பானையும் பொன்னாகும்" என்ற பழமொழி இந்த நட்சத்திரத்தின் பெருமையை எடுத்துச் சொல்லக் கூடியது.

அப்பேர்ப்பட்ட அவிட்ட நட்சத்திரத்தையும் அந்த நட்சத்திரக்காரர்களின் குணங்களையும் அவர்களுக்கான பலன்களையும் பார்ப்போம்.

- வளரும்

********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x