Published : 21 Aug 2020 10:49 AM
Last Updated : 21 Aug 2020 10:49 AM

வாழ்க்கைத் துணை யார்? நண்பர்கள் யார் யார்? சிக்கலில் சிக்கவைப்பவர்கள் யார்? திருவோண நட்சத்திரக்காரர்களின் தொழில், வேலைகள் என்னென்ன? 27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 67 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

திருவோணம் நட்சத்திரம் பற்றியும் அந்த நட்சத்திரக்காரர்களைப் பற்றியுமான தகவல்களைப் பார்த்து வருகிறோம். தொடர்ந்து பார்ப்போம்.

வாமனர் மற்றும் வேங்கடவன் அவதரித்த நட்சத்திரம் திருவோணம் என பார்த்தோம். இனி இந்த திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு என்ன தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள், திருமணபந்தம், நண்பர்கள் போன்ற தகவல்களைப் பார்ப்போம்.

பொதுவாக இவர்கள், உத்தியோகத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் நிச்சயமாக தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். அதிலும் கூட்டுத்தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். கூட பணிபுரிபவர்கள், நண்பர்கள் அல்லது அறிமுகமானவர்கள் என யாருடனாவது கூட்டாக தொழில் செய்வார்கள்.

ஆனால் பணமாக முதலீடு செய்யாமல் தங்கள் திறமையை முதலீடாக வைத்து ஒர்க்கிங் பார்ட்னர் என்ற வகையில் செயலாற்றுவார்கள். உத்தியோகம் கூட நிர்வாகம் தொடர்பாகத்தான் இருக்கும். அரசுப் பணிகள், காவல்துறை, ராணுவம், ஆயுதங்களைக் கையாளுதல், உளவுத் துறை, சுரங்கப் பணி, கைவினைத் தொழில், மரச்சிற்பம், உலைகலன் பணி, டயர் ரீடிரேடிங், வாகனப் பராமரிப்புத் தொழில், இயந்திரங்கள் உற்பத்தித் தொழில், கனரக வாகனத் தொழில், விவசாய இயந்திரங்கள் தொழில், பெட்ரோலியத் தொழில், எண்ணெய் உற்பத்தி மற்றும் வியாபாரம், உரக்கடை, கட்டுமானத் தொழில், கட்டிடப் பொருள் விற்பனை, வர்ண வியாபாரம், தகவல் தொழில்நுட்பப் பணி, சங்கேத வார்த்தைகள் உருவாக்குதல், கணிணி மென்பொருள் பொறியாளர் போன்ற தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் அமையப் பெறுவார்கள்.

இன்னொரு விஷயம்...

இந்தத் துறைகளில் பணிபுரிந்தாலும், ஏதாவதொரு காலகட்டத்தில் அந்தத் துறைகளில் தொழில் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். பணியில் ஓய்வு, தொழிலில் ஓய்வு என்பதே இவர்களுக்குக் கிடையாது, இறுதிவரை ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டே இருப்பார்கள். ஒரு பிரச்சினையில் தீர்வு என்ன என்பது அறிந்து வைத்திருப்பார்கள்.

ஆனால் யாரும் கேட்காதவரை அந்தத் தீர்வை சொல்லமாட்டார்கள், அதாவது... கேட்டால் கிடைக்கும். கேட்கவில்லையா.. கிடைக்காது, பிரச்சினை பிரச்சினையாகவே முடிந்தாலும் சரி... கவலைப்படமாட்டார்கள். இவர்களை பொருத்தவரை ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உண்டு என்பதுதான் இவர்களின் பாலிஸி. ஓசி அட்வைஸ் தரமாட்டார்கள். இவர்களும் ஓசியில் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். “கையில காசு வாயில தோசை” என்ற பழமொழியே இவர்களை பார்த்துத்தான் சொல்லியிருப்பார்கள் என நான் நினைக்கிறேன்.

சரி, இவர்களின் வாழ்க்கைத்துணையாக வரக்கூடிய நட்சத்திரங்கள் எவை என்று பார்க்கலாம்.

மிருகசீரிடம் (ரிஷபம்), சித்திரை (கன்னி), அவிட்டம் (மகரம்) 90%

இந்த நட்சத்திரங்களைக் கொண்டவர் வாழ்க்கைத்துணையாக அமைவது சிறப்பான எதிர்காலத்தையும், சிறந்த முன்னேற்றத்தையும், வளமையான வாழ்வையும் தரும்.

புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி :-

இந்த நட்சத்திர வாழ்க்கைத்துணை அமைவதும் நல்ல பலன்களைத் தரும். இயல்பான சொத்து சேர்க்கை நிகழும். தன்னலம் கருதாமல் உங்கள் நலம் பற்றியே சிந்திக்கும் துணையாக இருக்கும். 85%.

ஆயில்யம் - கேட்டை - ரேவதி :-

இந்த நட்சத்திர வாழ்க்கைத்துணை அமைவது, தொழில் வளர்ச்சி, உத்தியோக மேன்மை, சொத்து சேர்க்கை, அமைதியான வாழ்வு எனச் சிறப்பாக இருக்கும். 87%

பரணி - பூரம் - பூராடம் :-

இந்த நட்சத்திர வாழ்க்கைத்துணை அமைவது சொத்து சேர்க்கை முதல் லாபகரமான யோகங்கள் வரை என்று பலவித நன்மைகளைத் தரும். 75%


கார்த்திகை (ரிஷபம்), உத்திரம் (கன்னி), உத்திராடம் (மகரம்)

இந்த நட்சத்திர வரன்கள் திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்க்கைத் துணையாக வரும் பட்சத்தில் கண்ணை மூடிக்கொண்டு சம்மதம் தெரிவிக்கலாம். மனமொத்த தம்பதியாய் வாழ்வாங்கு வாழ்வார்கள். 85%

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள் :-

திருவாதிரை - சுவாதி - சதயம் - ரோகிணி - அஸ்தம் - திருவோணம் இந்த நட்சத்திரங்களை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

கார்த்திகை (மேஷம்) உத்திரம் (கன்னி) உத்திராடம் (தனுசு) மிருகசீரிடம் (மிதுனம்), சித்திரை(துலாம்) அவிட்டம் (கும்பம்) இந்த நட்சத்திரங்களையும் தவிர்க்க வேண்டும்.

இதில் இடம்பெறாத நட்சத்திரங்களை ஜோதிடரிடம் ஆலோசனைப் பெற்றுக்கொள்ளுங்கள்.


அடுத்து... நல்ல நண்பர்கள் யார்? பார்ப்போம்...

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம் :-

இந்த ஆறு நட்சத்திரக்கார நண்பர்களும் திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு எல்லாவிதத்திலும் உதவி செய்வார்கள். எந்த பிரதிபலனும் பாராமல், குடும்ப நலன் பேணுபவர்களாகவும், பொருளாதார உதவிகளைச் செய்பவர்களாகவும், சுகதுக்கங்களில் பக்கத் துணையுடனும் இருப்பார்கள். நீங்கள் வேண்டாம் என்று மறுத்தாலும் உங்களுக்கு உதவி செய்வதை அவர்கள் நிறுத்த மாட்டார்கள்.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி :-

இந்த நட்சத்திர நண்பர்கள் அமைவதால் உங்களுக்குத்தான் நன்மை!

காரணம்?

நீங்கள் எந்த உதவியும் செய்து தராவிட்டாலும் சளைக்காமல் உங்களுக்கு உதவிகளைச் செய்து கொண்டே இருப்பார்கள். தேடிப்பிடித்து நண்பர்களாக்கிக்கொள்ளுங்கள்.


ஆயில்யம், கேட்டை, ரேவதி :-

இந்த நட்சத்திர நண்பர்கள் அமைந்தால் கஷ்டத்தில் உதவுவது மட்டுமல்ல, உங்களை கைதூக்கி விடுவதிலும் உண்மையாக இருந்து உதவுவார்கள். உங்களின் ரகசியத்தைக் காப்பவர்கள், குடும்பத்தில் ஒருவராகவே இருப்பார்கள்.


பரணி - பூரம் - பூராடம் :-

இந்த நட்சத்திர நண்பர்களை நீங்கள்தான் பயன்படுத்திக் கொள்வீர்கள். அவர்கள் உருண்டுபுரண்டாவது உங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருவார்கள். நீங்கள்தான் அவர்களை அலட்சியப்படுத்துவீர்கள்.

நட்பாக இருக்கக்கூடாத நட்சத்திரங்கள் :-

திருவாதிரை - சுவாதி - சதயம் :-

இந்த நட்சத்திரக்காரர்களை விலகி இருப்பதே நல்லது. வேண்டாத பிரச்சினையை கூட்டி வந்து உங்கள் நிம்மதியைக் கெடுப்பார்கள். விலகி இருங்கள். நிம்மதி கிடைக்கும்.

பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி :-

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களால் உங்களுக்கு எந்த நன்மையும் ஆதரவும் அன்பும் கிடைக்காது. மாறாக, நீங்கள்தான் அவர்களுக்கு உதவிகளை செய்து கொண்டே இருக்கக் கூடிய நிலை ஏற்படும்.

அஸ்வினி - மகம் - மூலம் :-

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை விட்டு திருவோண நட்சத்திரக்காரர்கள் விலகி இருப்பதே நல்லது. ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் சரியான இக்கட்டில் உங்களைச் சிக்க வைத்து விட்டு அவர்கள் தப்பி விடுவார்கள். நீங்கள் இந்த நட்சத்திரக்காரர்களால், பொருளாதார இழப்பு, மரியாதை இழப்புகளைச் சந்திக்க வேண்டியது வரும்.

திருவோண நட்சத்திர தேவதை - திருமால்

அதிதேவதை - ஹயக்கிரீவர்

விருட்சம் - எருக்கு

மலர் - வெள்ளை அல்லி

மிருகம் - பெண் குரங்கு

பட்சி - நாரை

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிலேத்தும உடல்வாகு பெற்றவர்கள். அதாவது குளிர்ச்சியான உடல் கொண்டவர்கள். எனவே இவர்கள் சூடான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். குளிர்ச்சியான உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். உடல்நலத்தில் தீராத சளித்தொல்லை, இருமல், நரம்புப் பிடிப்பு, சுளுக்கு, மனக்கற்பனை, சீரற்ற பல் வரிசை முதலான பிரச்சினைகள் இருக்கும். திருமலை திருப்பதி சென்று தரிசிக்கவேண்டும். ஹயக்கிரீவர் வழிபாடு செய்து வரவேண்டும்.

அடுத்த பதிவில் திருவோண நட்சத்திர 4 பாதங்களுக்கும் உண்டான முழுத் தகவல்களையும் பலன்களையும் பார்ப்போம்.


- வளரும்
***************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x