

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே.
பூராட நட்சத்திரத் தகவல்களைப் பார்த்து வருகிறோம்.
தொடர்ந்து பூராட நட்சத்திரத்தின் 4 பாதங்களுக்கும் விளக்கமாக தகவல்களைப் பார்ப்போம்.
பூராடம் 1ம் பாதம் :-
பூராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள், முழுமையான இறைவனின் அருளைப் பெற்றவர்கள். விரும்பிய எதையும் எந்த சிரமமும் இல்லாமல் எளிதாகப் பெற்றுவிடும் பாக்கியசாலிகள், இறைவனின் கடைக்கண் பார்வையில் இருப்பவர்கள்.
அதிக உழைப்பு இல்லாதவர்கள். எல்லோரும் கட்டிமுடித்த ஒன்றை, ரிப்பன் வெட்டி திறந்துவைத்து பேர் வாங்கிச் செல்பவர்கள். தன் மரியாதை, கௌரவம் எதையும் இழக்கும்படியாக நடந்து கொள்ளமாட்டார்கள். தன் உறவுகளுக்கு தகுந்த மரியாதையும் தருவார்கள். அதேபோல் மரியாதையையும் தனக்குத் தரவேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள்.
சகோதரர்களிடம் அன்பைப் பொழிவார்கள். அவர்களுக்காக எதையும் விட்டுக்கொடுக்கவும் தயங்கமாட்டார்கள். தாயன்பு இருந்தாலும் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என தந்தை மீது பாசமும் மரியாதையும் அதிகம் வைத்திருப்பார்கள். தன் குழந்தைகளின் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். அவர்களுக்காக எதையும் செய்து கொடுப்பார்கள்.
இவர்களுக்கு தர்ம காரியங்களில் அதிக ஆர்வம் இருக்கும். சுயநலம் இல்லாத, பிரதிபலன் பாராத செயல்பாடுகளைக் கொண்டவர்கள். யாரும் அறியாத வண்ணம் பலருக்கும் உதவிகள் செய்பவராக இருப்பார்கள். மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை ஆதரவற்றவர்களுக்காக செலவு செய்வபவராகவும் இருப்பார்கள்.
அரசுப் பணி, நிதி நிர்வாகம், அரசியல் பதவிகள், பஞ்சாயத்து தலைவர் முதல் நாடாளுமன்றப் பதவி வரை என ஏதாவதொரு பதவியில் இருப்பார்கள். வழக்கறிஞர், நீதிபதி, தொழிற்ச் சங்க நிர்வாகி, கௌரவப் பதவி, மருத்துவர், மனிதவள மேம்பாடு, கல்வியாளர், சேவை மையம், தங்கநகை விற்பனை, அடகுக் கடை, நிதி நிறுவனம், சிட்பண்ட், தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகள், சேவை சார்ந்த பராமரிப்புப் பணிகள் போன்ற துறைகளில் இருப்பார்கள்.
இவர்கள் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டோடு இருப்பார்கள். அளவான உணவு, சுவையான உணவு, சூடான உணவு, உணவில் கொஞ்சமேனும் இனிப்பு இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள். ஆரோக்கியப் பிரச்சினையாக வயிறு தொடர்பான பிரச்சினைகள், கல்லீரல் தொற்று, இதய நோய், கணையம் தொடர்பான நோய்கள் முதலானவை இருக்கும்.
இறைவன் - ஜம்புகேஸ்வரர் (திருவானைக்கா)
விருட்சம் - வஞ்சி மரம்
வண்ணம் - சிவப்பு மற்றும் மஞ்சள்
திசை - கிழக்கு
***************************************
பூராடம் நட்சத்திரம் 2ம் பாதம் :-
பூராடம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் கல்வியில் சிறந்தவர்கள்.
அதிபுத்திசாலிகள், கணக்கில் புலி, பலவிதமான மொழிகள் அறிந்தவர்கள், பாரபட்சம் இல்லாத நட்பு வட்டம் கொண்டவர்கள். ஆண்பெண் பேதமில்லாமல் எல்லோரையும் சமமாக பாவிப்பவர்கள். பேச்சிலே இனிமை, தான் சொல்ல வந்ததைச் சரியாக சொல்லும் பாங்கு, அபாரமான கற்பனை வளம், ஆராய்ச்சி ஈடுபாடு, புதியதாக எதையேனும் கற்றுக்கொண்டே இருத்தல் என இருப்பார்கள்.
குடும்பப் பாசம், சகோதரப் பாசம், முக்கியமாக வாழ்க்கைத்துணை மேல் அளவு கடந்த காதல் இருக்கும். தாயாரின் அன்பை அதிகம் பெற்றவர்கள். தந்தையிடம் சற்று விலகியே இருப்பார்கள். தன் குழந்தைகளின் வளர்ப்பில் மற்றவர்களைவிட வித்தியாசப்படுவார்கள். குழந்தைகளை அதன் போக்கிலேயே சென்று அவர்களுக்கு எதில் ஆர்வமோ அதைச் சரியாக நிறைவேற்றித் தருவார்கள்.
அரசின் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற பதவிகளில் இருப்பார்கள். மாநில அளவில் கூட உயர் பதவிகளில் இருப்பார்கள். பேராசிரியர், கணித வல்லுநர், மொழி பயிற்றுநர், கல்வி தொடர்பான புத்தகம் உருவாக்குதல், ஆராய்ச்சி கல்வி, திரைத்துறை, கதை கவிதை எழுதுதல், கலை தொடர்பான பயிற்சி, கல்விக்கூடங்கள், சிறப்புக் கல்வி பயிற்சி, டுடோரியல் சென்டர், ஆடை உற்பத்தி மற்றும் வியாபாரம், நகை உற்பத்தி, கவரிங் நகை, வெள்ளிப் பொருட்கள் உற்பத்தி மற்றும் வியாபாரம், பெண்களுக்கான அழகு சாதனப் பொருட்கள் விற்பனை போன்ற துறைகளில் இருப்பார்கள்.
இவர்கள், சுவையான உணவு மட்டுமே உண்பவர்கள். அதிலும் பலரோடு சேர்ந்து உண்பதையே விரும்புவார்கள். ஆரோக்கிய பாதிப்புகளாக தோல் வியாதி, சோரியாஸிஸ், நரம்புச் சுருட்டல், இடுப்புப் பகுதியில் ஒவ்வாமை பிரச்சினை போன்றவை இருக்கும்.
இறைவன் - அப்பிரதீஸ்வரர் (திருச்சி லால்குடி)
விருட்சம் - கடற்கொஞ்சி மரம்
வண்ணம் - இளம் பச்சை
திசை - தென்கிழக்கு
*************************
பூராடம் நட்சத்திரம் 3ம் பாதம் :-
பூராடம் 3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒரே குறிக்கோள், ஒரே லட்சியம்... மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.... மகிழ்ச்சியாக மட்டுமே இருக்கவேண்டும் என்ற குறிக்கோள் உடையவர்கள். பணம் இவர்களுக்கு பொருட்டல்ல. அதை எப்படிச் சம்பாதிக்க வேண்டும்? என்பது இவர்களுக்கு நன்றாகத் தெரியும். நிமிட நேரத்தில் பணம் புரட்டக்கூடிய திறமை வாய்ந்தவர்கள். தன் (அழகு) முகத்தோற்றத்தாலும், பேச்சுத் திறமையாலும் எந்தக் காரியத்தையும் சாதிப்பவர்கள். இவர்களால் முடியாத காரியம் என்று எதுவுமே இல்லை.
இவர்கள், குடும்ப அமைப்பில் சிறப்பாக இருப்பவர்கள். உடன்பிறந்தோரிடம் இணக்கமாக இருப்பார்கள். தாய் தந்தை இருவரின் அன்பைப் பெற்றவர்கள். தாய்மாமன் ஆதரவை அதிகம் பெற்றவர்கள். கள்ளம்கபடமில்லாத மனதுக்குச் சொந்தமானவர்கள். ஒரு செல்போனில் அடக்க முடியாத அளவுக்கு நண்பர்களைக் கொண்டவர்கள். எதிர்பாலின நண்பர்கள்தான் இவர்களுக்கு அதிகமிருக்கும். உடை நேர்த்தி, ஆபரணங்கள் அணிவதில் அலாதி மகிழ்ச்சி கொண்டவர்கள்.
கலைத்துறை, நடன நாட்டிய ஆர்வம், ஆடம்பரப் பொருட்கள் விற்பனை, அழகு சாதனப் பொருட்கள் விற்பனை, அழகு நிலையம். அக்குபஞ்சர் மருத்துவம், வர்ம சிகிச்சை, வழக்கறிஞர், நீதிபதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர், செயற்கை கருத்தரித்தல் மையம், ஆய்வகம்(லேப்), மருந்துக்கடை, அரசியல் தொடர்புகள், பினாமியாக இருத்தல், ஆடை ஆபரணத் தொழில் போன்ற தொழில் வாய்ப்புகள் இருக்கும்.
விதவிதமான உணவுகள் மீது விருப்பம் இருக்கும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டவேண்டியவர்கள் இவர்கள். சர்க்கரை நோய், நரம்பு தளர்ச்சி, பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்சினைகள், சிறுநீரகக் கல், ஆண்களின் விந்து நீர்த்துப் போகும் பிரச்சினைகள் இருக்கும்.
இறைவன் - மகாகாளேஸ்வரர் (திண்டிவனம் - புதுச்சேரி வழி)
விருட்சம் - சந்தன மரம்
வண்ணம் - இளநீலம்
திசை - வடமேற்கு
******************************
பூராடம் நட்சத்திரம் 4ம் பாதம் :-
பூராடம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள், அசாத்திய திறமை வாய்ந்தவர்கள். கண் பார்த்தால் கை வேலை செய்யும் திறன் கொண்டவர்கள். எடுத்துக்கொண்ட காரியங்களில் எந்த காரணத்திற்காகவும், எந்தச் சூழ்நிலையிலும் பின்வாங்காதவர்கள். இவர்களுக்கு பிடிவாதம் அதிகமிருக்கும். சோம்பல் குணம் அதிகம் கொண்டவர்கள். மன அழுத்தம், வீண் கற்பனை அதிகமிருக்கும்.
குடும்ப அமைப்பில் சிற்சில சலசலப்புகள் இருந்து கொண்டே இருக்கும். தாயாரின் செல்லம் அதிகம் இருப்பதால் அலட்சிய குணமும், பிடிவாத குணமும் அதிகமிருக்கும். தந்தையும் இதேபோல எதையும் கண்டுகொள்ளாதவராகவே இருப்பார். சகோதர ஆதரவு அதிகமிருக்கும். வாழ்க்கைத்துணையின் அன்புக்கு கட்டுப்பட்டவராக இருப்பார்.
கலைத்துறை ஆர்வம், கதை கவிதை எழுதுதல், பயணம் தொடர்பான தொழில், வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்ட தொழில், பணமாற்றுத் தொழில், விவசாய இடுபொருள் தொழில், கட்டுமானப் பொருட்கள் விற்பனை, மனை விற்பனை, கமிஷன் தொழில், காய்கறி வியாபாரம், உணவகம், தேநீர் கடை, திரவத்தொழில், வாசனைப் பொருட்கள் விற்பனை, மருந்துக் கடை, மருத்துவர், செவிலியர், பணிவிடை, நவரத்தின விற்பனை, அரிய பொருட்கள் விற்பனை, ஆடம்பரப் பொருட்கள் விற்பனை, பழுது நீக்கும் தொழில், வாகன விற்பனை, டயர் விற்பனை, பஞ்சர் கடை, பாலியல் நோய் மருத்துவர், மனநல மருத்துவர், விளம்பரத் தொழில், தரகு தொழில், திருமண ஏற்பாட்டாளர், பெண்களுக்கான வளையல் கம்மல் விற்பனைக் கடை, ஆடை வடிவமைப்பாளர், டிரை கிளீனர்ஸ் போன்ற தொழில் வாய்ப்புகள் அமையும்.
உணவு நேரம் தவிர மற்ற நேரங்களில்தான் சாப்பிடுவார்கள். அதாவது சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளமாட்டார்கள். இனிப்பு உணவில் ஆர்வம் இருக்கும். குளிர்பானங்கள் மீது அலாதி பிரியம் இருக்கும்.
சர்க்கரை நோய், பாலியல் நோய், ஆண்மைக் குறைவு, கர்ப்பப்பை பிரச்சினைகள், மாதவிடாய் பிரச்சினைகள் போன்றவை இருக்கும்.
இறைவன் - ஆகாசபுரீஸ்வரர் (தஞ்சை கடுவெளி)
விருட்சம் - எலுமிச்சை மரம்
வண்ணம் - சிவப்பு
திசை - வடக்கு
பொதுவாகவே, பூராடத்தில் பிறந்தவர்கள் சொகுசான வாழ்வு அமைந்தாலும் சேமிப்பு மிகமிக அவசியம் என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். வீண் செலவுகள் குறைக்க வேண்டும். முதியவர்களுக்கும், வறியவர்களுக்கும் முடிந்த அளவு உதவுங்கள். இந்த பண்புகள் சிறப்பான வாழ்வை தரும் என்பது உறுதி.
அடுத்ததாக... விக்கினங்களை தீர்க்கும் விநாயகர் பிறந்த நட்சத்திரமான உத்திராடம் நட்சத்திரம் பற்றி பார்ப்போம்.
- வளரும்
*****************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |