Published : 24 Apr 2020 13:19 pm

Updated : 24 Apr 2020 13:19 pm

 

Published : 24 Apr 2020 01:19 PM
Last Updated : 24 Apr 2020 01:19 PM

27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் ; 33 - பூரம் நட்சத்திர 4 பாதங்களுக்குமான தனித்தனி கேரக்டர்கள்! 

27-natchatirangal-a-to-z-33

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


வணக்கம் வாசகர்களே.பூரம் நட்சத்திரம் பற்றிய தகவல்களைப் பார்த்து வருகிறோம். இப்போது பூரம் நட்சத்திரத்தின் ஒவ்வொரு பாதங்களுக்குமான தகவல்களையும் குணங்களையும் பலன்களையும் தெய்வங்களியும் பார்ப்போம்.


பூரம் 1ம் பாதம்-

பூரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள்-
வெள்ளை மனம், தங்கமான குணம் என்பதற்கு உதாரணமாக இருப்பவர்கள். அதீத சுறுசுறுப்பு, யாரும் நெருங்க முடியாத வேகம், எடுத்துக்கொண்ட கடமைகளை குறித்த நேரத்திற்கு முன்னமே முடிக்கக்கூடியவர்கள்.

அச்சம் என்பதே இல்லாதவர்கள். தன் தேவைகளைத் தானே பூர்த்தி செய்து கொள்பவர்கள். குடும்பட்தின் மீது பாசம் அதிகம் உள்ளவர்கள், குடும்பத்தினருக்காக அதிகம் உழைத்து சம்பாதிப்பவர்கள். குழந்தைகளின் மேல் அளவு கடந்த பாசம் கொண்டவர்கள். அவர்களுக்கு ஏதாவதென்றால் துடித்துப் போவார்கள். இயல்பாகவே செல்வவளம் மிக்கவர்கள். வசதியான வாழ்க்கை வாழ்வார்கள். அல்லது வசதியாக வாழத் தேவையான முயற்சிகளைச் செய்பவர்கள்.

பூரம் 1ம் பாதக்காரர்கள், பெரும்பாலும் அரசுப் பணியில் இருப்பார்கள். ஒரு கட்டத்தில் சொந்தமாகவும் தொழில் செய்வார்கள். அடிக்கடி தொழிலில் இழப்புகளையும் சந்திப்பார்கள். கட்டிடத்தொழில் பிடித்தமான துறையாக இருக்கும். அரசு கான்ட்ராக்ட் தொழில் செய்வதும் இருக்கும். குழுவாக பணிபுரிபவர்கள் அந்தக் குழுவுக்கு தலைமை தாங்குவார்கள்.


இங்கே, இந்த இடத்தில் ஒரு உண்மையைச் சொல்லவேண்டும்.
தனக்குச் சம்பந்தமில்லாத துறையாக இருந்தாலும், அதைப்பற்றி எதுவும் தெரியாதவராக இருந்தாலும், தனக்கு எல்லாம் தெரியும் என்று பலரையும் நம்பவைத்து அதில் தன்னை பொருத்திக்கொள்ளும் குணமும் சாமர்த்தியமும் இவர்களுக்கு உண்டு.

சூடான, சுவையான, அளவான உணவை உண்பார்கள். காரமான உணவு மீது விருப்பம் உடையவர்கள். அடிக்கடி வயிற்றில் வலி வரும். முதுகெலும்பு பிரச்சினை இருக்கும். நீர்க் கடுப்பு என்னும் சிறுநீர் தொடர்பான பிரச்சினையும் இருக்கும்.

பூரம் 1ம் பாதத்தற்கான இறைவன்- ராமேஸ்வரம் ராமநாத சுவாமி.

விருட்சம் - பலாமரம்

திசை - கிழக்கு

நிறம் - பளீர் வெள்ளை
**************************

பூரம் 2ம் பாதம்-

பூரம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள்.
கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள். அபார ஞாபகத் திறன் உள்ளவர்கள். நாள் கிழமை நேரம் என எதையும் மறக்காதவர்கள். கணக்கில் புலி இவர்கள்.
தீர்க்க முடியாத பிரச்சினைகளையும் எளிதில் தீர்ப்பவர்கள். பணம் எப்படி சம்பாதிப்பது என்பதில் திறமைசாலிகள். பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள். இவர்களில் பெரும்பாலும் அதிகம் உழைக்காமல் இருந்த இடத்திலிருந்தே பணம் பண்ணும் வித்தை அறிந்தவர்கள்.
அதிகபட்சம் பேர் தரகு, கமிஷன், ரியல்எஸ்டேட், மனை பிரித்து விற்பனை, மருத்துவர், சித்த மருத்துவம், வங்கிப் பணி, தங்கும் விடுதி, எழுத்தர், பத்திரப் பதிவு, இன்சூரன்ஸ், தகவல் தொழில்நுட்பம், கணித ஆசிரியர், விண்வெளித்துறை, காய்கறி மொத்த வியாபாரம் போன்ற தொழில் செய்பவர்களாக இருப்பார்கள்.

பூரம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள், கலகலப்பானவர்கள். நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர்கள். கமெடியன்கள், சர்க்கஸ் பபூன், மனமகிழ் மன்றம், மரம் செடி பறவை ஆராய்ச்சி, புகைப்பட நிபுணர், சினிமா கதாசிரியர் இயக்குனர் போன்ற ஏதேனும் ஒரு துறையில் இருப்பார்கள். ஆண்பெண் பேதமில்லாத நட்புக்கு சொந்தக்காரர்கள். ஆணாக இருந்தால் பெண் தோழமைகளும் பெண்ணாக இருந்தால் ஆண் நண்பர்களும் அதிகம் இருப்பார்கள். உள்ளத்தில் இருப்பதை மறைக்காதவர்கள். வெளிப்படையான குணம் கொண்டவர்கள்.

வெறும் சாப்பாடு இவர்களுக்குப் பிடிக்காது, உணவில் நான்குவகை கூட்டு பொரியல் என்றெல்லாம் இருக்கவேண்டும். நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இதனாலேயே இவர்களுக்கு வயிற்றுக்கோளாறு பிரச்சினைகள் இருக்கும். அதேபோல ஒவ்வாமை(அலர்ஜி) பிரச்சினைகளும் இருக்கும்.

இவர்களுக்கான இறைவன் - மகாலட்சுமி தாயார்

விருட்சம் - வாகை மரம்

திசை - தென்கிழக்கு

நிறம் - வெள்ளை மற்றும் பச்சை
***************************

பூரம் 3ம் பாதம்-

பூரம் 3ம் பாரதத்தில் பிறந்தவர்கள்.
வசதி வாய்ப்புகளுக்கு குறைவில்லாதவர்கள். பணம் பல வழிகளிலும் தேடி வரும். வராவிட்டாலும் தேடி எடுத்து வருவதில் கில்லாடிகள். எப்படியும் பணக்காரனாகி விடவேண்டும் என்பதுதான் இவர்களின் லட்சியம். அதற்காக எவ்வளவு உழைக்கவும் தயங்கமாட்டார்கள். அதேபோல எந்த வாய்ப்பையும் நழுவ விடமாட்டார்கள். மிகச்சிறிய வாய்ப்பாக இருந்தாலும் அதைச் செய்தால் மிகப்பெரிய வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்பதை முழுமையாக நம்பி செயலில் இறங்குவார்கள்.

எனக்குத் தெரிந்த ஒருவர் சேவை சார்ந்த தொழில் செய்கிறார். அதாவது வீட்டைப் புனரமைக்கும் பணி செய்பவர். அவர் ஒரு வீட்டில் மிகச்சிறிய வேலை ஒன்றை செய்தார்.
அது என்ன வேலை? குழாயில் நீர் சொட்டிக்கொண்டே இருந்தது. அதை ஒரு வாசர் போட்டு சரி செய்தார், அதற்காக அவர் கேட்ட ஊதியம் இருபது ரூபாய். ஆச்சரியபட்ட உரிமையாளர் “நான் இருக்கும் நாட்டில் இதற்கான ஊதியம் குறைந்தது ஆயிரமாவது வாங்கியிருப்பார்கள். உங்கள் நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது” என்று சொன்னவர், அந்தப் பணியாளருக்கு கொடுத்த மொத்த கான்ட்ராக்ட் பல லட்சங்களில்! ஏறக்குறைய வாழ்வில் ஓரளவு செட்டில் ஆகும்படியாக இருந்தது என்றே சொல்லவேண்டும்.
இப்படித்தான் பூரம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் சிறிய வாய்ப்பையும் நழுவவிட மாட்டார்கள்.

குடும்ப உறவுகளின் மேல் பாசம் அதிகமிருந்தாலும் குடும்ப நலனுக்காக குடும்பத்தைப் பிரிந்து வெளியூர், வெளிநாடுகளில் பணிபுரிவார்கள். தந்தை மீதான மரியாதை அதிகமிருக்கும். ஆனால், அதிகம் ஒட்டமாட்டார்கள். எல்லாமே அம்மாதான். சகோதர ஒற்றுமை அளவோடு இருக்கும். மனைவி சொல்லே மந்திரம். கணவரே கண் கண்ட தெய்வம். இப்படித்தான் பூர நட்சத்திரத்தின் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் இருப்பார்கள்.

இவர்களில் பலரும் வியாபாரம் செய்பவர்களாக இருப்பார்கள். பெரும் தொழிலதிபர், அயல்நாடு தொடர்புடைய ஏற்றுமதி் இறக்குமதி, அயல்நாட்டு வங்கிப்பணி, இன்சூரன்ஸ், பெரிய அளவிலான வியாபாரங்களில் இடைத்தரகர், வழக்கறிஞர், நீதிபதி, அரசியல் பதவி, அரசின் உயர் பதவி போன்ற துறைகளில் இருப்பார்கள்.

சுவையான, பிடித்தமான உணவை மட்டுமே உண்பார்கள். நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு மிக அதிகம். ரத்த சர்க்கரை அளவை சரியாக பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் அதிக பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும்.

இறைவன் - உப்பிலியப்பன்

விருட்சம் - ருத்திராட்சம் மரம்

வண்ணம் - வெள்ளை மற்றும் கருநீலம்

திசை - வடமேற்கு
****************************


பூரம் 4ம் பாதம்-

பூரம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள்.
நல்ல வசதி வாய்ப்புகளை எப்படியும் பெற்றுவிடுவார்கள். சுயநலம் அதிகமிருக்கும். தன் தேவைக்கு பிறகுதான் மற்றதெல்லாம் என நினைப்பவர்கள். பணம் சம்பாதிக்க எந்த வழியிலும் முயற்சிப்பார்கள். அது நேர்வழி குறுக்குவழி என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்க மாட்டார்கள். அதேபோல அவர்கள் தேவை முடிந்தவுடன் உடனே மறந்து விடுவார்கள்.

தன் குடும்பத்தைப் பற்றிய பாசம் அதிகமிருக்கும். இன்னும் சொல்லப்போனால் தன் குடும்பத்திற்காக எதையும் செய்வார்கள். குழந்தைகளின் மீது அதீத அக்கறை எடுத்துக்கொள்வார்கள். கணவன் / மனைவி ஒருவொருக்கொருவர் நன்கு புரிந்து வைத்திருப்பார்கள். கண் அசைவிலேயே மன ஓட்டத்தை அறிந்து கொள்வார்கள்.

இவர்களுக்கு இந்த வேலைதான் என்றில்லை... எந்த வேலையும் செய்யத் தயங்காதவர்கள். பயணங்களில் ஆர்வம் உடையவர்கள் இவர்கள். ஓட்டுநர், நடத்துனர், டிரான்ஸ்போர்ட், டிராவல்ஸ், மருத்துவம், மருந்துக்கடை, ஆராய்ச்சியாளர், ரசாயனப் பொருள் விற்பனை, விவசாய உற்பத்தி போன்ற துறைகளில் இருப்பார்கள்.

உணவில் விருப்பம் என்று எதுவும் இருக்காது. சிக்கனமான சாப்பாடு, எளிமையான உணவு என இவர்கள் விருப்பம் மிகக் குறைவுதான். இவர்களுக்கும் வயிற்றுப்போக்கு பிரச்சினை, ஆண்மைப் பிரச்சினை, கர்ப்பப்பை ரச்சினைகள் இருக்கும்.

இறைவன் - காளியம்மன்

விருட்சம் - பலாமரம்

வண்ணம் - இளம் சிவப்பு

திசை - வடகிழக்கு

அடுத்து, உங்களுக்கு நான் சொல்ல இருக்கும் நட்சத்திரம் எது தெரியுமா?
ஒருவீட்டுக்கு அஸ்திவாரம் எப்படி முக்கியமோ... அதேபோல், மேற்பகுதியான உத்திரமும் மிக மிக முக்கியம்.
ஆமாம்... உத்திரம் நட்சத்திரப் பெருமைகளையும் அந்த நட்சத்திரக்காரர்களின் கேரக்டர்களையும் விவரமாகச் சொல்கிறேன்.
- வளரும்


தவறவிடாதீர்!

27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் ; 33 - பூரம் நட்சத்திர 4 பாதங்களுக்குமான தனித்தனி கேரக்டர்கள்!சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்ஏ டூ இஸட் தகவல்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x