

-’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
இந்த சார்வரி ஆண்டில் அற்புதமான பலன்கள் நடக்கப் போகிறது உங்களுக்கு!
குடும்ப உறவு பலப்படும். திருமணம் நடக்கும். மறுமணத்திற்காக வரன் தேடுபவர்களுக்கு இந்த ஆண்டு மறுமணம் உறுதியாக நடக்கும். விவாகரத்து வழக்கு போட்டவர்கள் வழக்கை வாபஸ் வாங்கி மீண்டும் ஒன்று சேர்வார்கள்.
குழந்தை பாக்கியம் இதுவரை இல்லாதவர்களுக்கு ஜூலை மாதம் குழந்தை பாக்கியம் உறுதியாகும். மருத்துவ உதவி இல்லாமலேயே இயற்கையாக குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள்.
சொத்துப் பிரச்சினைகள், சொத்து தொடர்பான வழக்குகள் அனைத்தும் முடிவுக்கு வந்து பாகப்பிரிவினைகள் ஒழுங்காகக் கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களிடம் ஏற்பட்ட பகை மறையும். திருமண வயதில் மகன் அல்லது மகள் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு : ஆட்குறைப்பு நடவடிக்கையில் தன்னுடைய வேலை பறிபோகுமோ என்ற அச்சத்தில் இருப்பவர்கள் கவலையே பட வேண்டாம். நிச்சயமாக உங்கள் வேலைக்கு எந்த ஆபத்தும் வராது. பதவி உயர்வு நிச்சயம் உண்டு. இதுவரை வேலையில்லாதவர்களுக்கு ஜூலை மாதத்தில் வேலை உறுதியாக கிடைக்கும்.
இதுவரை தொழில் செய்யாதவர்கள் கூட தொழில் செய்ய முனைவீர்கள். அதற்கான வாய்ப்பு தானாக தேடிவரும். மாற்று இனத்தவர் தொழில் தொடங்க உதவுவார்கள். ஏற்கெனவே தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இதுவரை இருந்த மந்தநிலை மாறும். தொழில் முன்னேற்றப் பாதைக்குச் செல்லும்.
கட்டுமானத் தொழில் செய்பவர்களா நீங்கள்? குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தொழில் அபரிமிதமான வளர்ச்சியை அடையும். அரசு சலுகைகள் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையும் இந்த காலகட்டத்தில் நல்ல வளர்ச்சியைப் பெறும்.
கலைஞர்களுக்கு : ஒரு சில நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் தொழில் செய்ய வேண்டிவரும். மிதமான வளர்ச்சியே இருக்கும்.
மாணவர்களுக்கு : கல்வியில் சற்று பின் தங்கி திடீர் வேகமடுப்பீர்கள். உயர்கல்வி பயில்பவர்கள் நல்ல தேர்ச்சி விகிதம் பெறுவீர்கள். படிக்கும்போதே வேலை உறுதியாகும்.
பெண்களுக்கு : அற்புதமான பலன்கள் நடக்கும். சொத்துக்கள் சேரும். கடன் முற்றிலுமாகத் தீரும். சுய தொழில் வாய்ப்பு உண்டாகும். திருமணம் நடக்கும். பிரிந்த தம்பதி மீண்டும் ஒன்று சேர்வார்கள். உங்களால் கணவருக்கு ஏற்றம் கிடைக்கும்.
உடல்நலத்தில் பெரிய பாதிப்பு ஏதும் வராது, மனதில் அச்ச உணர்வு இருந்துகொண்டே இருக்கும். தோல் நோய்கள் தோன்றி மறையும்.
சித்திரை மாதம் -
புதிய முயற்சிகளில் ஈடுபட எண்ணம் தோன்றும். நண்பர்களுடன் இணைந்து புதிய தொழில் செய்ய முற்படுவீர்கள். சொத்து பிரச்சினையை பேசி முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் பெரும் உதவி கிடைக்கும்.ஆரோக்கிய அச்சம் தோன்றும். செய்கின்ற வேலையில் சோம்பல் அதிகரிக்கும். அதன் காரணமாக வேலைகள் தேங்கும். தொழில் தொடர்பாக திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும்.
வைகாசி மாதம் -
புகழ் வெளிச்சம் கிடைக்கும். சொத்துக்கள் சேரும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் சலசலப்புகள் உண்டாகும். சம்பந்தமில்லாத பிரச்சினை வந்து மன சஞ்சலம் ஏற்படும். வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உறுதியாகும்.
ஆனி மாதம் -
அனைத்து முயற்சிகளும் வெற்றியாகும். லாபம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும். அரசு நிர்ப்பந்தம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் சற்றே பாதிக்கப்படும். குழந்தைகள் மந்தமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். வேறு வேலைக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும்.
ஆடி மாதம் -
சொத்துக்கள் சேரும். சொத்து வழக்குகள், பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். இடமாற்றம் ஏற்படும். ஒருசில மருத்துவச் செலவுகள் உண்டாகும். வீடு மற்றும் தொழிலகத்தில் பராமரிப்புச் செலவுகளும், எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.
ஆவணி மாதம் -
சொந்த வீடு வாங்கும் வாய்ப்பு உண்டு. திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். மன நிம்மதி உண்டாகும். எல்லாவிதமான யோகங்களும் கிடைக்கும். வேலை கிடைக்கும். நோய் நீங்கும். சொத்துக்கள் சேரும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
புரட்டாசி மாதம் -
தேவையில்லாத குழப்பங்கள் உருவாகும். தவறான முடிவுகள் எடுக்க நேரிடும். கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். எப்படியாவது சமாளித்துவிட்டால் கடன் வாங்காமல் தப்பிக்கலாம். ஆனால் தொழில் தொடர்பாக வங்கிக் கடன் கிடைக்கும். அது நன்மையாகவே முடியும். வீட்டுக்கடன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் சிறு அச்சுறுத்தல் உண்டாகும்.
ஐப்பசி மாதம் -
குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடக்கும். குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல் முதலான நேர்த்திக்கடன் , காது குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும். வழக்குகள் முடிவுக்கு வரும். வாக்குறுதி கொடுக்கும்போது கவனம் தேவை.
கார்த்திகை மாதம் -
வேலையில் இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படும். பிள்ளைகளால் சங்கடங்கள் உருவாகும். ஒருசிலருக்கு அவமானங்களும் ஏற்படலாம். எதிர்பாலினத்தினரோடு இனக்கவர்ச்சி ஏற்படும். கவனம் தேவை!
மார்கழி மாதம் -
கடந்த சில மாதங்களாக இருந்த பிரச்சினைகள் இந்த மாதம் முடிவுக்கு வரும். செலவுகள் அதிகமிருக்கும். உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். கடன் நெருக்கடி இருக்கும். ஆரோக்கிய செலவுகள் ஏற்படும்.
தை மாதம் -
தொழில் தொடங்க உகந்த மாதம் இது. சேமிப்பு உயரும். சொத்துகளால் லாபம் உண்டாகும். திருமணம் உறுதியாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டு பயணம், அயல்நாட்டில் வேலை கிடைக்கும். தந்தை மகன் உறவில் விரிசல் ஏற்படும்.
மாசி மாதம் -
எல்லாவிதத்திலும் லாபம் கிடைக்கும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். வேலையில் இடமாற்றம் ஏற்படும். ஒருசிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும். குடும்பத்தை விட்டு வேறு ஊர் செல்ல நேரிடும். தொழிலில் போட்டி அதிகரிக்கும். தொழிலில் ஒருசில இழப்புகள் நேரிடும்.
பங்குனி மாதம் -
சுப செலவுகள் ஏற்படும். சேமிப்பு குறையும். அதிகப்படியான பயணங்கள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். குலதெய்வ வழிபாடு நடக்கும். ஒருசிலருக்கு அறுவை சிகிச்சை நடக்கும். சொத்துகளால் லாபம் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். அயல்நாட்டு பயணங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்- சிவப்பு, மற்றும் இளம் நீலம்
அதிர்ஷ்ட எண் - 1,3,7,9
செய்ய வேண்டிய பரிகாரம்-
வெல்லம், பொட்டுக்கடலை கலந்து எறும்புப் புற்றில் அடிக்கடி தூவி அவற்றுக்கு உணவிட்டு வாருங்கள். எறும்புகளுக்கு உணவளிக்க நன்மைகள் பன்மடங்கு கிடைக்கப் பெறுவீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் -
திருச்செந்தூர் முருகனை வழிபாடு செய்யவும். மேலும் மாதந்தோறும் பெளர்ணமியின் போது திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லுங்கள்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |