

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே.
பூசம் நட்சத்திரத்தை பற்றிய குணாதிசயங்களைச் சொல்லி வருகிறேன். இப்போது பூசம் நட்சத்திரத்தின் 4 பாதங்களுக்கும் உள்ள தனித்தனித் தன்மைகளை, கேரக்டர்களைச் சொல்கிறேன், கேளுங்கள்.
பூசம் 1ம் பாதம்-
பூசம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள்
மிகவும் நேர்மையானவர்கள் இவர்கள். ஒழுக்கம் நிறைந்தவர்கள். தர்மசிந்தனை கொண்டவர்கள். அதிகாரப் பதவிகளில் இருப்பவர்களாக இருப்பார்கள். அரசு மற்றும் அரசியல் பதவிகளில் இருப்பார்கள்.
எந்த ஒன்றையும் கேட்டுப் பெறுவதைவிடவும் உத்தரவிட்டுப் பெறுவார்கள் பூச நட்சத்திரக்காரர்கள் (குழந்தைகளாக இருந்தால் அசராத பிடிவாதம் பிடிப்பார்கள்). தங்கள் வீடு, பணிபுரியும் இடம் என எந்த இடத்திலும் அந்தந்த பொருள் அந்தந்த இடத்தில் சரியாக இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்புடன் இருப்பார்கள்.
பூச நட்சத்திரத்தில் முதலாம் பாதத்தில் பிறந்தவர்கள், தன் குடும்பம் மற்றும் தன் குடும்பத்தார் மீது அதீத பற்றும் பாசமும் கொண்டவர்கள். அதேசமயம் மிக கண்டிப்புடனும் ஒழுக்கத்துடனும் இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். அநீதி கண்டு பொங்கி எழுவார்கள். அக்கிரமத்திற்கு எதிராக குரல் கொடுப்பார்கள். ருசில நிமிடங்களிலேயே கூட்டத்தை கூட்டிவிடும் அட்ராக்ஷன் இவர்களிடம் உண்டு. வார்த்தை ஜாலம் இல்லாமல் உண்மையை உள்ளது உள்ளபடியே பேசுபவர்கள் இவர்கள்.
வழக்கறிஞர், நீதிபதி, அரசியல் பிரமுகர், கௌரவ தலைவர்,பொறுப்பு நிர்வாகம், சங்கம் அல்லது குழுவுக்கு தலைவர், நிதி நிர்வாகம், தூதரகப்பணி, மொழி பெயர்ப்பாளர் ( நாடாளுமன்றத்தில் இந்த மொழிபெயர்ப்பு பணிக்கு சிறப்பு படிப்பும் உதவித் தொகையும் உள்ளது) வனத்துறை, தீயணைப்புத் துறை, நிலக்கரிச் சுரங்கம், தங்கம் மற்றும் வைரச் சுரங்க வேலை, மரக்கடை, விடுதிகள், பரம்பரைத்தொழில், கண் மருத்துவம், ரத்தபரிசோதனை மையம் போன்ற தொழில் மற்றும் வேலை பூச நட்சத்திர முதலாம் பாதக்காரர்களுக்கு அமையும்.
உணவு விருப்பம்- மூன்று வேளையும் அப்போது சமைத்த உணவுகளை மட்டுமே உண்பார்கள், அளவாக உண்பார்கள்.
உடல்நலத்தில் இவர்களுக்கு வருகின்ற உபாதைகள் - வயிற்றுவலி, அசிடிட்டி பிரச்சினை, உயிர் பயம்( சின்ன பிரச்சினைக்கும் உயிர் போய்விடுமோ என அர்த்தமற்ற பயம் வரும்) மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் மற்றும் முதுகெலும்பு தேய்மானம் எனும் ஸ்பைனல்கார்ட் பிரச்சினை உள்ளிட்டவற்றை அதிகம் சந்திப்பவர்களாக இருப்பார்கள் இவர்கள்.
பூச நட்சத்திர முதலாம் பாதக்காரர்களுக்கான
இறைவன்- அண்ணாமலையார்
விருட்சம் - அரசமரம் (விருட்சங்களை நடுவதும் தண்ணீர் ஊற்றி வளர்ப்பதும் கவலைகளைப் போக்கும்; நன்மைகளை அள்ளித்தரும்).
வண்ணம் - இளம் சிவப்பு
திசை- கிழக்கு
************************************************************
பூச நட்சத்திரத்தின் 2ம் பாதக்காரர்கள்
பூசம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள்
மிகவும் கலகலப்பான பேர்வழிகள். கவலை என்பதே இல்லாதவர்கள். எந்த பிரச்சினையையும் தன் மனதிற்குள் புகுத்திக்கொள்ளாதவர்கள். எது நடந்தாலும் நன்மைக்கே என நினைப்பவர்கள். ஆண்பெண் பாகுபாடு இல்லாமல் நட்பு கொள்பவர்கள் இவர்கள். எளிதில் காதல் வசப்படுபவர்கள். மெத்தப் படித்தவர்கள். அறிவாளிகள். கணிதத் திறமையாளர்கள், தங்கள் வீட்டையும் பணிபுரியும் இடத்தையும் கலைநயத்தோடு வைத்திருக்கும் ரசனையாளர்கள்.
கலைத்துறையில் இருப்பவர்கள் பூசம் 2ம் பாதக்காரர்கள். ஆடிட்டர், கணக்காளர், கணித ஆசிரியர், எழுத்தாளர், இன்னிசை நிகழ்ச்சியாளர், பின்னணிப் பாடகர், டப்பிங், கதை கவிதை ஆர்வலர்கள், வங்கிப்பணி, அமைச்சர், சித்த மருத்துவம், புத்தக பதிப்பாளர், ரியல்எஸ்டேட், கமிஷன் ஏஜென்ட், புத்தகக் கடை, மளிகை வியாபாரம், டிபார்ட்மென்ட் ஸ்டோர், பழக்கடை, பழரசக்கடை, காய்கறி கடை, கவரிங் கடை, நகை பாலீஷ், வளையல் வியாபாரம், பூக்கடை (பொக்கே ஷாப்), தையல்கடை போன்ற தொழில் அல்லது வேலையில் இருப்பார்கள்.
உணவு விருப்பம்- கொஞ்சம்தான் சாப்பிடுவார்கள். ஆனால் விதவிதமாக உண்பவர்கள். இனிப்புப் பிரியர்கள், குளிர்பானம் அதிகம் குடிப்பவர்களாக இருப்பார்கள்.
உடல்நலம் - நரம்புத் தளர்ச்சி, சோரியாஸிஸ், தேமல், சர்க்கரை நோய், அதிக காம வேட்கை கொண்டவர்கள் என்பதால் அது தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களாகவும் இருப்பார்கள்.
பூச நட்சத்திரம் 2ம் பாதக்காரர்களின் இறைவன்- மதுரை மீனாட்சி சொக்கநாதர்
விருட்சம்- ஆச்சா மரம் (விருட்சங்களை நடுவதும் தண்ணீர் ஊற்றி வளர்ப்பதும் கவலைகளைப் போக்கும்; நன்மைகளை அள்ளித்தரும்).
வண்ணம்- கரும் பச்சை
திசை- தெற்கு
********************************************************
பூச நட்சத்திரத்தின் 3ம் பாதக்காரர்கள்
பூசம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள்
அழகான தோற்றம் உடையவர்கள். பணப்பற்றாக்குறை என்பதே இல்லாதவர்கள். செல்வவளம் குன்றாதவர்கள். தேவையான உதவி தேவையான நேரத்தில் இவர்களுக்குக் கிடைத்துவிடும். எந்த ஒரு விருப்பமும் தேடாமலேயே கிடைக்கப்பெறுவார்கள் இந்த நட்சத்திரக்காரர்கள்.
சொந்த வீடு வாங்கும் முயற்சி கூட எளிதில் நிறைவேறும். ஆடம்பரமாக வாழ்வார்கள். தங்கள் பையில் இருக்கும் கடைசி ரூபாய் வரை செலவழிக்கத் தயங்க மாட்டார்கள். நட்பு வட்டம் பெரிய அளவில் இருக்கும். அரசியல் பிரமுகர்கள், கலைத்துறையினர் இவர்களிடம் நட்பாக இருக்க விரும்புவார்கள்,
இவர்களில் பெரும்பாலானோர் கலைத்துறை, நடிப்பு, நாடகம், இசைத்துறை, நாட்டியம், அரசு பணி, வழக்கறிஞர், நீதிபதி, அழகுப் பொருட்கள் விற்பனை, பெண்களுக்கான ஆடை அலங்கார பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை, நகைக்கடை, ஆபரண உற்பத்தி, வைர வியாபாரம், அழகு நிலையம், மசாஜ் சென்டர், அக்குபஞ்சர், பிசியோதெரபி, பெரிய நிறுவனங்களில் தலைமைப் பதவி, மனிதவள மேம்பாடு, தர்ம ஸ்தாபனம், திருமணமண்டபம், சேவை நிறுவனங்கள், தனியார் வேலைவாய்ப்பு மையம், பத்திரிகை போன்ற தொழில் மற்றும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.
உணவு விருப்பம் - இருப்பதிலேயே உயர்தரமான உணவுகளை விரும்புவார்கள். சுவையான உணவு எங்கு கிடைக்குமோ அங்கே தேடித்தேடிச் சென்று சாப்பிடுபவர்கள்.
உடல்நலம் - சர்க்கரை நோய், பால்வினை பிரச்சினைகள், கர்ப்பப்பை அடைப்பு, ஆண்களின் உயிரணுக்கள் பிரச்சினை தாம்பத்திய ஏமாற்றம் போன்ற பிரச்சினைகளை சந்திப்பவர்களாக இருப்பார்கள். மேலும் சைனஸ், சளித்தொல்லை, டான்சில்ஸ், தைராய்டு போன்ற பிரச்சினைகள் வரும் வாய்ப்புகளும் உள்ளன.
இறைவன்- சயன கோல பெருமாள்
விருட்சம்- இருளா மரம் (விருட்சங்களை நடுவதும் தண்ணீர் ஊற்றி வளர்ப்பதும் கவலைகளைப் போக்கும்; நன்மைகளை அள்ளித்தரும்).
வண்ணம்- மினுமினுப்பான வெள்ளை
திசை- வடமேற்கு
**************************************************************
பூச நட்சத்திரம் 4ம் பாதக்காரர்கள்
பூசம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள்
எளிதில் ஏமாறக்கூடியவர்கள் இவர்கள். இவர்களிடம் காரியம் ஆக வேண்டுமென்றால் இவர்களின் முகத்திற்கு நேரே புகழ்ந்து பேசினாலே போதும்... தங்கள் கையில் பையில் இருப்பதை எல்லாம் எடுத்துத் தந்து விடுவார்கள்.
அதேசமயம் அதிக சுயநலக்காரர்களாகவும் இருப்பார்கள். சுயமாக முடிவெடுக்க முடியாதவர்கள். அப்படி முடிவெடுத்தால் தப்பும் தவறுமாக எடுப்பார்கள். சற்று மனதளவில் பிரச்சினை உடையவர்களாகவே இருப்பார்கள். அர்த்தமற்ற கற்பனையில் திளைப்பவர்கள். எந்தச் செயலிலும் தீவிரமாக செயல்படுபவர்கள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் கிடைக்கப்பெறுவார்கள்.
வியாபார உத்தி அறிந்தவர்கள் பூச நட்சத்திர 4ம் பாத அன்பார்கள். தன் குடும்பம் மட்டுமே என வாழ்பவர்கள், குடும்ப பாசத்தில் இவர்களை மிஞ்ச ஆளே கிடையாது. எந்தக் கவலையும் இல்லாவிட்டாலும் ஏதாவதொரு கவலையை இவர்களே உருவாக்கி மீண்டும் மீண்டும் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
தியாக உள்ளம் படைத்தவர்கள். இவர்கள் துவக்கி வைக்கும் தொழில், வியாபார நிறுவனம் உட்பட எதுவும் ஆலமரமாய் விரிவடையும்.
இவர்களில் பெரும்பாலோர் கடல் கடந்து செல்பவர்களாக இருப்பார்கள். அயல்நாடுகளில் நிரந்தரமாக குடியேறுபவர்கள் இவர்கள். மேலும் ஆராய்ச்சியாளர்களாக, விஞ்ஞானிகளாக இருப்பார்கள்.
மருந்துக்கடை, விற்பனை பிரதிநிதி, விளம்பர நிறுவனம், பெட்ரோலியம், பிளாஸ்டிக் இன்ஜினியரிங் , கட்டுமானத் தொழில், செக்யூரிட்டி நிறுவனம், டிரைகிளீனிங், நாட்டு மருந்துக்கடை, ஈமகாரியங்கள் நடத்தித் தருபவர், உணவகங்கள், காய்கறி விற்பனை, தேநீர் கடை, துப்பறியும் நிறுவனம், உரக்கடை, ரசாயனப் பொருள் உற்பத்தி மற்றும் வியாபாரம், பட்டாசு உற்பத்தி மற்றும் வியாபாரம், அலுவலக உதவியாளர், சாலை பணி, ராணுவ சிப்பாய், சந்தை வியாபாரி, ஊர்ஊராக அலையும் உத்தியோகம், கனரக வாகன ஓட்டுநர், டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட், சுமை தூக்கும் வேலை, தபால்காரர், கட்டிடத் தொழிலாளர் போன்ற தொழில் மற்றும் வேலைகளில் பூச நட்சத்திரத்தின் 4ம் பாதக்காரர்கள் இருப்பார்கள்.
உணவு - எந்த உணவையும் பாகுபாடு இல்லாமல் உண்பார்கள் இவர்கள். அது தடபுடல் விருந்தாகவும் இருக்கலாம். வெறும் தயிர் சாதமாகவும் இருக்கலாம்.
இதனாலேயே அடிக்கடி வயிற்றுக்கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள், கல் அடைப்பு, மலச்சிக்கல், கர்ப்பப்பை பிரச்சினைகள், மாதவிடாய் பிரச்சினைகள் என அடிக்கடி ஏற்படும். ஒரு அறுவை சிகிச்சையாவது நிச்சயம் உண்டு, ஆண்மை பிரச்சினை, மூலம், நகச் சுத்தி, காலில் ஆணி, மனநல பிரச்சினை போன்றவையும் வர வாய்ப்புகள் உள்ளன.
பூச நட்சத்திரம் 4ம் பாதக்காரர்களுக்கான இறைவன்- துர்கை அம்மன்
விருட்சம் - நொச்சி மரம் (விருட்சங்களை நடுவதும் தண்ணீர் ஊற்றி வளர்ப்பதும் கவலைகளைப் போக்கும்; நன்மைகளை அள்ளித்தரும்).
வண்ணம் - சிவப்பு மற்றும் பலவண்ணக் கலவை
திசை - வடக்கு
****************************************************
இவற்றில் இருந்து ஒன்றைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
பூசம் பரிபூரணமான சுப நட்சத்திரம் தான். ஆனால் பாதங்களின் அடிப்படையில் குணாதிசயங்கள், மன ஓட்டம், தொழில், வேலை என அனைத்தும் மாறுபடுவதை உணர்ந்திருப்பீர்கள்.
நீங்கள் பூசம் நட்சத்திரமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் உங்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் என யாராவது பூசமாக இருப்பார்கள். அவர்களுக்கு இந்தப் பதிவு உதவும். அவர்களுக்கு இந்தக் கட்டுரையைப் பகிருங்கள்.
அடுத்த பதிவு 25 வது பதிவு.
ஆதிசேஷன் மற்றும் ஸ்ரீராமனின் நிழலாகவே வாழ்ந்த லட்சுமணன் பிறந்த ஆயில்யம் நட்சத்திரம் பற்றி விரிவாகச் சொல்கிறேன்.
- வளரும்