

'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே!
பரணி நட்சத்திரத்தின் குணாதிசயங்களையும் அவர்களின் தனித்தன்மைகளையும் பார்த்து வருகிறோம்.
கடந்த இரண்டு அத்தியாயங்களையும் படித்துவிட்டு, பரணி நட்சத்திரக்கார அன்பர் ஒருவர், செல்போனில் பேசினார். ’’எனக்கு சொந்த ஊர் நாமக்கல். பிஸ்னஸ் பண்ணிக்கிட்டிருக்கேன். நீங்க சொன்னது அப்படியே நூத்துக்கு நூறு பொருந்துது சார் எனக்கு. என் கேரக்டர்னு நான் நினைச்சிட்டிருந்தேனே. அதெல்லாம் பரணி நட்சத்திரத்தால ஏற்பட்ட கேரக்டர்னு புரிஞ்சிகிட்டேன்’’ என்று சொன்னார்.
பெண்மணி ஒருவர் போன் செய்தார். ‘’என் கணவர் பரணி நட்சத்திரம். அவரோட சொந்தக்காரங்களையும் சில நண்பர்களையும் நம்பி, காசுபணத்தையும் வீடுவாசலையும் இழந்து நிக்கிறோம். அவங்களெல்லாம் எந்தந்த நட்சத்திரம்னு நீங்க சொன்னதை வைச்சு, செக் பண்ணிப் பாத்தோம். அதிர்ச்சியாகிட்டோம். இந்த விஷயங்கள் முன்னாடியே தெரிஞ்சிருந்தா, வீடுவாசலை இழந்துருக்காம இருந்திருக்கலாம்’ என்று சொல்லிவிட்டு அழுதார்.
இன்னும் சிலர், தங்களுக்குத் தெரிந்த உறவுக்காரர்கள், நண்பர்கள் என பரணி நட்சத்திரம் கொண்டவர்களுக்கு இந்த அத்தியாயங்களை ‘ஷேர்’ பண்ணினோம் என்றும் தெரிவித்தார்கள்.
அந்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றி. நல்லவை நல்லவர்களைச் சேருவதே உலகியல் தத்துவம்.
சரி... பரணி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்குமான விளக்கங்களைப் பார்ப்போமா..
பரணி 1ம் பாதம்-
பரணி 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் கலையுணர்ச்சி உடையவர்கள். கட்டிடக்கலை வல்லுநர்களாக இருப்பார்கள். அதுமட்டுமல்ல கையில் கிடைக்கின்ற பொருட்களையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு அழகான படைப்பை உருவாக்வதுல் வல்லவர்கள்.
வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுபவர்கள். உதாரணமாக கிழிந்த சட்டையைக் கூட வண்ணவண்ண பூக்கள் கொண்ட எம்பிராய்டரிங் செய்து புதுவிதமான அழகைப் படைப்பார்கள். இவர்கள் அணியும் பொருட்கள் எல்லாம் மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும்.
சாதாரண நடைபாதைக் கடையில் வாங்கிய பொருட்கள் கூட இவர்களிடம் இருக்கும்போது ஏதோ வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள் போல் மதிப்புமிக்கதாய் மாறும்.
மேலும் மருத்துவராக, அதிலும் அறுவை சிகிச்சை நிபுணராக இருப்பார்கள். நிர்வாக உயர் அதிகாரிகளாக (IAS) இருப்பார்கள். பாரம்பரியம் மிக்க பரம்பரைத் தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். தங்கும் விடுதிகள், மலைப் பிரதேசங்களில் விடுதிகள் நடத்துதல், தேயிலை மற்றும் காபி எஸ்டேட், ஆபரண வியாபாரம், நவரத்தின கற்கள் வியாபாரம் இவையனைத்தும் பரணி 1ம் பாத நட்சத்திரத்துக்கே உண்டான தொழில்கள். .
இவர்களின் உணவுப் பழக்கத்தை மிகச்சரியாக வைத்துக்கொண்டால் மட்டுமே நோய்த் தாக்கங்களில் இருந்து தப்பிக்கலாம். மிக முக்கியமாக அல்சர் என்னும் குடல் புண், நெஞ்செரிச்சல், அசிடிட்டி என்னும் வாயுத் தொல்லை, கண்நோய், பார்வை குறைபாடு, இளவயதிலேயே கண்ணாடி அணிதல், பாலின சுரப்பிகள் பிரச்சினை. உடலில் நீர்க்கட்டிகள், பெண்ணின் கர்ப்பப்பை பாதையில் உண்டாகும் நீர்க்கட்டிகள் , ஆணின் விந்தில் உயிரணுக்கள் குறைபாடு என்பவை பரணி 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்.
இதற்கெல்லாம் பரிகாரம் இருக்கிறதா?
இருக்கிறது. நாம் ஏற்கெனவே பரணியின் விருட்சமான நெல்லி மரத்தை தலவிருட்சமாக கொண்ட ஆலயங்களை பார்த்திருக்கிறோம், நினைவிருக்கிறதுதானே.
இப்போது மேலும் சில பரிகார ஆலயங்களைப் பார்ப்போம்.
பரணி 1ம் பாதத்திற்கான. பரிகாரங்கள் :
விருட்சம் - நெல்லி. இந்த மரத்தை தல விருட்சமாகக் கொண்ட ஆலயங்கள், பழநி திரு ஆவினன்குடி,. திருநெல்லிக்கா - நெல்லிவனநாதர், பட்டீஸ்வரம் துர்கை ஆலயம் முதலானவை.
இறைவன் - சிவபெருமான். எல்லா சிவாலயங்களிலும் இருக்கிற ஈசனை வணங்கி வாருங்கள். .
வண்ணம் - இளஞ்சிவப்பு, பளீர் வெண்மை (classic white).
திசை- கிழக்கு
***********************************************************************
பரணி 2ம் பாதம் -
பரணி 2ம் பாதக்காரர்கள் கலையுணர்ச்சியோடு நகைச்சுவை உணர்வும்,கலகலப்பான குணமும் கொண்டவர்கள்.
ஆண் பெண் பேதமில்லாமல் அனைவருடனும் நட்பு பாராட்டுவார்கள். கலைத்துறை தொடர்பு இருக்கும். குறிப்பாக நடனக்கலைஞர்களாக இருக்கும் வாய்ப்பு உண்டு. பார்ப்பதற்கு விளையாட்டுத்தனமாக இருந்தாலும் படிப்பில் படுகெட்டி. ஆசிரியராக, கல்லூரி விரிவுரையாளர்களாக இருப்பார்கள்.
இவர்கள் பாடம் நடத்தினால் எந்த மாணவரும் அசையக்கூட மாட்டார்கள். அப்படி கட்டிப்போடுகிற ஈர்ப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். கதாசிரியர்கள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள் என இருப்பார்கள்.
பள்ளிக்கல்வியில் ஒருமுறையாவது தடைகள் ஏற்படும். ஆடை வடிவமைப்பும், ஆபரண வடிவமைப்பும் தொழிலாக அமையும். அச்சகத்தொழில், ஃபேஷன் டிசைனர், அழகு நிலையம், பலசரக்குக்கடை, சூப்பர் மார்க்கெட், காய்கறி வியாபாரம், பழரசக்கடை போன்ற தொழிலும் அமையும். பத்திரிகை, ஊடகம் போன்ற துறைகளில் பணியில் இருப்பார்கள்.
இவர்களுக்கு தோலில் ஒவ்வாமை, நரம்புத்தளர்ச்சி, வெரிகோஸிஸ் என்னும் நரம்புச் சுருட்டு நோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இவர்களுக்கான விருட்சம் - மஞ்சக் கடம்பு மரம்.இந்த மரத்தை தகுதியான இடங்களில் ( பள்ளி வளாகம், பூங்கா, ஆலய நந்தவனம், மலைப்பகுதிகள்) நட்டு வளர்த்து வந்தால், நன்மைகள் அதிகமாகும்.
இறைவன்- சிவா விஷ்ணு ஆலயங்கள் (ஒவ்வொரு ஊரிலும் நிச்சயம் இருக்கும்).
வண்ணம்- இளம் பச்சை, பிங்க் நிறம்.
திசை- தென் கிழக்கு
***********************************************************************************************************
பரணி 3ம் பாதம்-
பரணி 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் நேர்மையின் உதாரணமாகத் திகழ்வார்கள். பொருளாதாரத்தில் தன்னிறைவு கொண்டவர்கள். வசதி வாய்ப்புகள் தானாகவே வந்து சேரும். தந்தையிடம் இருந்து சற்று விலகியே இருப்பார்கள்.
இவர்கள் நிர்வாக ஆலோசகர்களாக, வழக்கறிஞர்களாக, நீதிபதிகளாக பணியில் இருப்பார்கள்.
இவர்களுக்கு நண்பர்கள் அதிகம். நண்பர்களுக்காக எதையும் செய்யும் மனம் உள்ளவர்கள். எளிதில் விட்டுக் கொடுப்பவர்கள். வரம்பு மீறியோ, சட்டத்துக்கு விரோதமாகவோ எதையும் செய்யமாட்டார்கள்.
நல்ல கல்வியாளர்கள். ஆனால் படித்து முடித்தவுடன் வேலைக்காக அதிகம் அலைபவர்கள், வேலை கிடைத்தவுடன் அதில் தங்கள் திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தி பேரெடுப்பார்கள்.
எளிதில் பதவி உயர்வைப் பெறுபவர்கள். கலைத்துறையிலும் ஆதிக்கம் செலுத்துபவர்கள். எதிரிகளை மறைமுகமாக பழி தீர்ப்பவர்கள். காம உணர்ச்சிகள் அதீதமாகக் கொண்டவர்கள். . எனவே வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும்போது போக ஸ்தானம் அறிந்து தேர்ந்தெடுப்பது மிக மிக அவசியம்.
இவர்களுக்கு ஆண்மை தொடர்பான பிரச்சினைகள், மர்மஸ்தானத்தில் காயம், தழும்புகள் ஏற்படுதல், பால்வினை நோய் போன்ற பிரச்சினைகள் வர வாய்ப்புகள் உள்ளன.
இவர்களின் விருட்சம்- விளா மரம் - இந்த மரத்தின் செடியை உரிய இடத்தில் நட்டு வளர்த்து வாருங்கள்.
இறைவன் - அர்த்தநாரீஸ்வரர், திருச்செங்கோடு
வண்ணம் - வெண்மை , இள நீலம்
திசை - தென்கிழக்கு
***************************************************************************************************************************
பரணி 4ம் பாதம்-
பரணி 4ம் பாதத்தில் பிறந்தவர்கள், தங்களுடைய வேலையில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.
தன் வேலை முடிந்தபின்னரே அடுத்தவர் வேலை மீது கவனம் செலுத்துவார்கள். . தன் வீடு, தன் குடும்பம், தன் பிள்ளைகள் என ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்பவர்கள்.
சுயநலம் அதிகமாக இருக்கும். ஆனால் உதவ வேண்டும் என முடிவெடுத்துவிட்டால் எதுவும் செய்து கொடுப்பார்கள். அப்படி உதவி பெற்றவர் நல்ல உயரத்திற்கு வந்துவிட்டால் (நிச்சயமாக உயர்வார்கள்) என்னால்தான் வளர்ந்தான் என சொல்லிக்காட்டுவார்கள்.
மருந்துவம் சார்ந்த தொழில் செய்பவர்கள், ரசாயனப் பொருட்கள், உரக்கடை, பட்டாசு தொடர்பான தொழில், மருந்து தயாரிப்பு, வேளாண்மைத்தொழில், மருந்துக்கடை, செயற்கை உடல் உறுப்பு தொழில், உணவகங்கள், தேநீர் கடை, இறைச்சிக்கூடம், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களே இந்த பரணி 4ம் பாதக்காரர்களுக்கு அமையும்.
உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசியம். அடிக்கடி வயிற்றுக்கோளாறு, ஜீரண மண்டல பாதிப்பு, சிறுநீரகத் தொற்று, பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான பிரச்சினை, வயதான பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் வரும் வாய்ப்புகள் உள்ளன.
இவர்களுக்கான விருட்சம் - நந்தியாவட்டை மரம். இந்த மரத்தை வளர்த்து வர பிரச்சினைகளின் தீவிரம் குறையும்.
இறைவன்- திருவானைக்கா ஈசன்.
வண்ணம்- சாம்பல் நிறம், இளம் சிவப்பு
திசை- வடகிழக்கு
இனிய வாசக அன்பர்களே!
நீங்கள் பரணி நட்சத்திரமாக இருக்கலாம். உங்கள் வீட்டில் எவரேனும் பரணி நட்சத்திரக்காரர்களாக இருக்கலாம். உங்கள் நட்பு வட்டத்தில், வேலை செய்யும் இடத்தில், உறவினர்களில் பரணி நட்சத்திர அன்பர்கள் இருக்கலாம். அவர்களுக்கு நீங்கள் படித்துத் தெரிந்து, அறிந்து, புரிந்து, தெளிந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
அன்பினிய வாசகர்களே!
கார்த்திகை என்று சொல்லும்போதே, மனதில் ஓர் சுடர் வெளிச்சம் பரவும். உணர்ந்திருக்கிறீர்களா.
ஆமாம். அடுத்து கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் குறித்த குணங்கள், கேரக்டர்கள், அவர்களின் நண்பர்கள், எதிரிகள், தொழில், உத்தியோகங்கள் ஆகியவற்றைச் சொல்ல இருக்கிறேன். கார்த்திகை நட்சத்திரக்காரர்களே... உங்களைப் பற்றி இந்த நட்சத்திர குணங்கள் குறித்து, ஜோதிட சாஸ்திரம் சொல்லும் உண்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். ஆச்சரியப்படுவீர்கள்.
அதற்கு முன்னதாக ஒரு விஷயம்...
கத்தி என்பது வெட்டவும் பயன்படும். ஒரு பொருளை சீராக்கவும் செய்யும். அதை நாம் எப்படிக் கையாளுகிறோம் என்பதைக் கொண்டுதான் எல்லாமே இருக்கிறது.
அடுத்த அத்தியாயத்தில் நாம் பார்க்க இருக்கும் கத்தி என்ன செய்யும்?
பார்க்கலாம்!
- வளரும்
********************************************