Published : 07 Jan 2020 12:48 PM
Last Updated : 07 Jan 2020 12:48 PM

27 நட்சத்திரங்கள்... ஏ டூ இஸட் தகவல்கள்! 2 - புதிய தொடர் :  அஸ்வினி நட்சத்திரக்காரர்களின் குணங்கள்


- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.


இப்போது நட்சத்திரங்களின் தனித்தன்மையைப் பார்ப்போம்.


முதலில் நாம் பார்க்கப்போவது அஸ்வினி நட்சத்திரம்.27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம்.

ஏன் அஸ்வினி நட்சத்திரம் முதல் நட்சத்திரமாக இருக்கிறது?


இந்தக் கேள்வி பலருக்கும் வரலாம்.


இதற்குக் காரணம் உண்டு.


ஒவ்வொரு குழந்தையும் போது கிராமத்து மருத்துவச்சி முதல் நகரங்களில் உள்ள மருத்துவர் வரை அவர்களின் உதவியோடுதான் பிறக்கிறது. அதுமட்டுமல்ல தாய் மற்றும் குழந்தை என்னும் இரட்டை உயிர்களை பிரித்தெடுப்பதுதான் பிரசவம். இந்த இரட்டை உயிர் அம்சம்தான் அஸ்வினி குமாரர்கள்.


அஸ்வினி நட்சத்திரத்தின் அதிதேவதை - அஸ்வினி குமாரார்கள். இவர்கள் இரட்டையர்கள். தேவ மருத்துவர்கள்.


இவர்கள் இரட்டையர்களாக அழைக்கும் போதுதான் அஸ்வினி குமாரர்கள், இவர்களின் தனிப்பெயர்... ஒருவர் நாசத்யா. மற்றொருவர் தஸ்ரா.
உருவம் - குதிரை முகம்.


பாண்டவர்களில் நகுலனும் சகாதேவனும் இந்த அஸ்வினி குமாரர்களுக்குப் பிறந்தவர்கள். இதில் நகுலன் குதிரைகளைப் பற்றிய அனைத்து விபரங்களையும் அறிந்தவன். தங்களின் படைக்கு தேவையான குதிரைகளை நகுலனே தேர்ந்தெடுப்பான்.


சகாதேவன் ஜோதிடத்தில் மகா திறமைசாலி. அந்தக் காலத்தில் ஜோதிடம் அறிந்தவரே மருத்துவராக இருப்பார்.
இப்போது அஸ்வினி நட்சத்திரத்திற்கும் அஸ்வினி தேவர்களுக்குமான தொடர்பு உங்களுக்குப் புரிந்திருக்கும்.


அஸ்வினி நட்சத்திரத்தின் தேவதை சரஸ்வதி எனும் அறிவு தரும் அருட்கடவுள். ஒவ்வொரு குழந்தையும் “தாய்ப்பால் குடிப்பது முதல், சுயமாக நடக்க முடிவது” வரை அடிப்படை அறிவோடுதான் பிறக்கின்றன. இதற்குக் காரணம் சரஸ்வதி அன்னை.


அஸ்வினியின் உருவம் குதிரை வடிவம். மேலும் பல உரு பொருட்கள் அஸ்வினி வடிவத்திற்கு உள்ளன. அதில் முதன்மையானது, இரண்டாக வெட்டிப்பிரிக்கும் கத்திரிக்கோல் முதன்மையானது.


தாய் சேய் என்னும் ஒரே உயிராக இருந்ததை இரண்டாகப் பிரிக்கும் தொப்புள்கொடியை வெட்டிவிடுவது இந்த கத்திரிக்கோல் தான். எனவே முதல் அடையாளம் இந்த கத்திரிக்கோல்.


சிலர் கேட்கலாம்... கத்திரிக்கோல் என்பது நவீன கண்டுபிடிப்பு. ஜோதிடம் பல்லாயிரம் காலம் தொன்மை உடையது. இரண்டுக்கும் ஒத்துவரவில்லையே எனக் கேட்கலாம். உண்மைதான் ! கூர்மையான ஆயுதங்கள், வெட்டக்கூடிய ஆயுதங்கள் அனைத்தும் செவ்வாயின் அம்சம். இந்த செவ்வாய் மேஷ ராசியின் அதிபதி.


சரி... அஸ்வினியைப் பார்ப்போம்.


அஸ்வினியின் மற்ற வடிவங்கள் -
மலையின் உச்சி, தலை , தொப்பி, தலையில் கட்டும் உருமா, அழுகை, விசும்பல், தலை முடி , மொட்டை அடித்தல், மொட்டை மாடி, அன்னாசிப் பழம், காளான், இரு சக்கர வாகனம், பயணத்தின் புறப்பாடு, சூரிய உதயம் (அருணோதயம்) .இவையனைத்தும் அஸ்வினியின் அடையாளங்கள்.

“வெட்டு ஒன்று துண்டு ரெண்டு” எனப் பேசுவது. அந்த நொடியிலேயே முடிவெடுப்பது, குதிரையின் வேகம் அதாவது பின்விளைவுகளைப்பற்றி கவலைப்படாத அசுர வேகம். செயல்களில் அவசரம், முடிவெடுத்துவிட்டால் பின்வாங்காத குணம், அச்சம் என்பது துளிகூட இல்லாமல் இருப்பது இவையெல்லாம் அஸ்வினி குணங்கள்.

தோல்வி ஏற்பட்டால்கூட குதிரையின் வேகத்தில் சட்டென்று சுதாரித்து மீண்டும் எழுந்து ஓடும் வேகம். முயற்சிகளில் அதிதீவிரம். எளிதில் கை நீட்டி தாக்கும் குணம், அடுத்தவரை அலட்சியமாக பேசி காயப்படுத்துதல். தனக்கான தேவைகளை எப்படியும் அடைதல். விரைந்து பொருள் சேர்த்தல்.

தாய் மீது அளவு கடந்த பாசம், வாழ்க்கைத் துணை மீது அதிகாரம் செலுத்துதல். தன் குழந்தைகளுக்கு கட்டுப்படுதல். தன் பிள்ளைகள் கேட்காமலேயே அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து தருதல்.

அவை மட்டுமா? நண்பர்களிடம் எச்சரிக்கை உணர்வுடன் பழகுதல். அவர்களைக்கு அளவாக உதவி செய்தல். பணியிடத்தில் அதிகாரம் செய்வது. அதிகபட்சம் அதிகாரப் பதவிகளில் இருப்பது இவையெல்லாம் அஸ்வினி நட்சத்திரக்காரர்களின் குணங்கள்! சொந்தத் தொழில் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். கூட்டுத்தொழில் செய்வதில் ஈடுபடுவார்கள். சிறிய அளவிலாவது வட்டித்தொழில் செய்வார்கள்.

கட்டிடத்தொழில், கட்டுமான பொருட்கள் விற்பனை, உணவகம் தொடர்பான தொழில் செய்வார்கள். மருத்துவத்தில் உயர்நிலை பணியில் இருப்பார்கள். மருந்துக்கடை, இறைச்சி வியாபாரம். ஆடு, மாடு, கோழிப்பண்ணை என ஆர்வம் கொண்டிருப்பார்கள்.

பூமி தொடர்பான இயந்திரத் தொழில் (ஜேசிபி, பொக்லைன்) அகழ்வாராய்ச்சி. தூதரக பணி. அரசுப்பணி, அரசியல் ஆர்வம் கொண்டிருப்பார்கள்.

பூர்வீகச் சொத்தில் சிறிதேனும் அனுபவிப்பார்கள். சகோதர ஒற்றுமை குறைவாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் சண்டை சச்சரவுகள் அதிகமாக இருக்கும். இளைய சகோதரர் இவரை விட அதிகம் படித்தவராக இருப்பார். அதேசமயம் சகோதரியாக இருக்கும் பட்சத்தில் அவர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பார்.

அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்கள் பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம் முதலான நட்சத்திரங்களைக் கொண்டிருப்பார்கள்.

“இந்த நட்சத்திரங்களில் இல்லாதவர்கள் அஸ்வினி நட்சத்திரக்காரர்களின் நண்பர்களாக இருந்தால்... அந்த நட்பு நீடிக்காது, அல்லது கவனமாக இருக்க வேண்டும்.

இந்த நட்சத்திர நண்பர்களையே கூட்டுத்தொழிலுக்கும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எதிரிகளாக இருப்பவர்கள் யார்? அதிக எச்சரிக்கை அல்லது தவிர்க்க வேண்டிய நபர்கள்- கார்த்திகை, உத்திரம்,உத்திராடம் முதலான நட்சத்திரக்காரர்கள்.



அஸ்வினி நட்சத்திரக்காரர்களை வீண் பிரச்சினைகளில் சிக்க வைப்பவர்கள் புனர்பூசம், விசாகம்,பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள். எனவே இவர்களிடம் அளவோடு, ஒரு எல்லைக் கோடு போட்டு பழகவேண்டும்.

இந்த நட்பால் நன்மையும் இருக்காது தீமையும் இருக்காது, ஆனால் அடிக்கடி உதவி கேட்டு உங்களிடமே வந்து நிற்பார்கள்! யார் அவர்கள்?
மிருகசீரிடம், சித்திரை அவிட்ட நட்சத்திரக்காரர்கள். இவர்களால் பெரிய பிரச்சினைகள் இருக்காது, ஆனால் நச்சரிப்பு இருக்கும்.

அடுத்து மிக முக்கியமானது வேதை என்னும் எதிர்மறையான செய்கை தரும் நட்சத்திரம். அது தான் கேட்டை. இந்த கேட்டை நட்சத்திரக்காரர்களிடம் மிகமிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். திருமணத்தில் வாழ்க்கைத்துணையாக இந்த கேட்டை நட்சத்திரக்காரர்கள் வந்தால், அவர்களை அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தவிர்க்க வேண்டும். ஆலோசனை, மறுபரிசீலனைக்குக் கூட எடுத்துக்கொள்ளக் கூடாது.

சொந்த வீடு , வாகனம் என எப்படியும் தன் வாழ்நாளில் நல்ல நிலைக்கு வந்து விடுவார்கள் அஸ்வினி நட்சத்திரக்காரர்கள். .
வாழ்க்கைத்துணையாக வருபவர் நச்சரிப்பு செய்பவராக இருப்பார். ஆனால் அதிக பாசம் பற்று உடையவராக இருப்பார். சிற்றின்ப ஆர்வம் சற்று அதிகமாக இருக்கும். துணையின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்தால், வாழ்நாள் முழுவதும் எந்த பிரச்சினைகளும் இல்லாமல் சுமூகமாக இனிதே வாழலாம்.

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள், அதிக காரமான உணவுகளை விரும்புவார்கள். அதிலும் சூடாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். உணவுப்பிரியர்கள். புதிய வகை உணவுகளை அதிகம் விரும்புவார்கள். நல்ல உணவகம் எது என இவர்களிடம் கேட்டால் சரியாகச் சொல்வார்கள், அந்தளவுக்கு உணவுகளை தேடித்தேடி சுவைப்பார்கள்.

உடையில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள், இன்னும் சொல்லப்போனால் சரியாக தேரந்தெடுக்கத்தெரியாது, தேரந்தெடுத்த பின் “இன்னும் பெட்டராக எடுத்திருக்கலாமோ” என நினைப்பார்கள்.

அஸ்வினி நட்சத்திரத்துக்கான விருட்சம் (மரம்) - எட்டி மரம்.
எட்டியின் கசப்பு அனைவரும் அறிந்ததே. இவர்கள் எவ்வளவு உண்மையாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் மற்றவர்களால் ஒதுக்கப்படுவார்கள். காரணம், இவர்களின் வெளிப்படையான குணம்! இவர்களுக்கு இங்கிதம் என்னும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறத்தெரியாததுதான் அவற்றுக்கெல்லாம் காரணம். .

இந்த நிலை மாற எட்டி மரத்தை ஊரின் எல்லையிலோ, பள்ளிக்கூட வளாகங்களிலோ, ஆறு,ஏரி,குளக்கரைகளிலோ வளர்த்து வந்தால், நன்மைகள் ஏற்படும். அல்லது எட்டி மரத்திற்கு தண்ணீர் விட்டு வந்தாலும் நன்மைகள் உண்டாகும்.

இந்த எட்டி மரத்தை தல விருட்சமாக உள்ள ஆலயம் - வேலூர் ஆற்காடு அருகே உள்ள மேல்விஷாரம் என்னும் ஊரில் உள்ள ஶ்ரீவால்மீகீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்திற்கு உங்கள் நட்சத்திர நாளில் சென்று வாருங்கள்.

மேலும் அஸ்வினி நட்சத்திரம் அக்னி தத்துவம் கொண்டது. எனவே திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சென்று வாருங்கள்.

அஸ்வினி நட்சத்திரத்தின் அதிதேவதை சரஸ்வதி. எனவே கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்திற்கு வருடம் ஒருமுறையாவது சென்று வாருங்கள்.

சரஸ்வதியின் அம்சமாக இருக்கும் நோட்டு புத்தகம், எழுது பொருட்களை மாணவர்களுக்கு வாங்கித்தாருங்கள்.

அஸ்வினி நட்சத்திர அன்பர்களுக்கு, வெண்மை நிறம் மிகுந்த நன்மைகளைத் தரும். உடையில் அதிகம் வெண்மை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

மலர்களில் வெண்மை நிறமான மல்லிகை, முல்லை, வெண்தாமரை மலர்களை வீட்டு பூஜையில் பயன்படுத்துங்கள்.

அதிர்ஷ்ட எண்களாக 1,9,3 போன்ற எண்களை தேர்ந்தெடுங்கள்.

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள், கோபத்தைக் குறைக்க வேண்டும். பதட்டம் என்பது இருக்கக்கூடாது. உடலுக்கு தேவையான அளவு ஓய்வு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உயர் ரத்த அழுத்தம். இதய நோய், பக்கவாதம், எலும்பு தேய்மானம், முதுகு தண்டுவட பிரச்சினை போன்றவை வரும்.

இவற்றுக்கெல்லாம் தியானம், யோகா, பிராணாயாமம், மூச்சுப்பயிற்ச்சி போன்றவையே நல்ல தீர்வு. இவை நோய் இல்லாத நிலையைத் தரும்.

காரமான உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.மிளகாய் தவிர்த்து மிளகு சேர்த்துக்கொள்ளலாம். குளிர்ச்சியான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவை அனைத்தும் அஸ்வினியின் தன்மைகள்.

மேலும் சில தகவல்கள்-

அஸ்வினி நட்சத்திரத்துக்கு பரிகார ஆலயங்கள் - காளஹஸ்தி, கீழ்பெரும்பள்ளம்.

பட்சி (பறவை) - ராஜாளி

திசை - வடமேற்கு

அர்ச்சனை மலர் - செவ்வரளி

தானியம்- கொள்ளு

சுவை - புளிப்பு, புளியோதரை நிவேதனம், தானம் செய்தல் சிறப்பு.

உலோகம்- துருக்கல்

நோய்- பித்தம்

உள் அங்கம் - நகக்கண்

வஸ்திரம் - பலவண்ண வஸ்திரம்

இவை அனைத்தும் அஸ்வினியின் பொதுக்குணங்கள்.

அடுத்த பதிவில்... அஸ்வினியின் 4 பாதங்களுக்கும் தனித்தனியாக விளக்கங்களைப் பார்ப்போம்.
- வளரும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x