Published : 18 Nov 2019 04:03 PM
Last Updated : 18 Nov 2019 04:03 PM

இந்த வாரம் இப்படித்தான் -  நட்சத்திரப் பலன்கள் : எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்?  பூரம் முதல் சுவாதி வரை - (நவம்பர் 18 முதல் - 24 வரை)


ஜோதிடர் ஜெயம் சரவணன்


பூரம் -
இனிமையான பலன்கள் நடக்கும் வாரம் . பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீடு வாங்கும் கனவு நனவாகும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இப்பொழுது வரும்.


உத்தியோகம் -
பணியிடத்தில் சகஜமான நிலைமை இருக்கிறது. எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் அலுவலகத்தில் நீங்கள் இருக்கும் இடத்தை மாற்றி அமைப்பீர்கள். குறித்த நேரத்திற்கு முன்பே வேலைகளை முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். விற்பனைப் பிரதிநிதிகள் அதிக இலக்குகளை எட்டுவார்கள். ஊக்கத் தொகை அதிகம் பெறுவார்கள். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் அதிக வாடிக்கையாளர்களைப் பெறுவார்கள்.


தொழில் -
தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். பலவித உதவிகள் கிடைக்கும். அரசு வழியில் இருந்த ஒரு பிரச்சினை இந்த வாரம் முடிவுக்கு வரும். புதிதாக தொழில் தொடங்குபவர்கள் இந்த வாரம் அதற்கான நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். பங்கு வர்த்தகத்தில் இருப்பவர்களுக்கு சரிவிலிருந்து இப்பொழுது வளர்ச்சியை நோக்கிச் செல்வார்கள். மொத்த வியாபாரிகள் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். நீண்ட நாளாக தொடங்குவதற்கு இடம் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல இடம் கிடைக்கும்., அது நகரின் மையப் பகுதியிலேயே கிடைக்கும்.


பெண்களுக்கு -
இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.சகோதர வகையில் ஆதாயம் கிடைக்கும். திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். திருமணம் ஆன பெண்களுக்கு இந்த வாரம் குழந்தை பாக்கியம் உண்டாக வாய்ப்பு உண்டு.


மாணவர்களுக்கு -
தடைப்பட்டிருந்த கல்வி இப்போது தொடரும் வாய்ப்பு ஏற்படும். தோல்வியடைந்த பாடங்களில் இப்போது தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவீர்கள்.


கலைஞர்களுக்கு -
எதிர்பாராத இடத்தில் இருந்து அழைப்பு வரும். ஒப்பந்தங்கள் ஏற்படும். பண வரவு உண்டு. சொத்துக்கள் வாங்குவீர்கள்.


பொதுப்பலன் -
கிரகங்கள் அனைத்தும் உங்கள் நட்சத்திரத்திற்கு சாதகமான நிலையில் இருக்கிறது, எனவே எந்த முயற்சி எடுத்தாலும் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பு திட்டங்களைத் தொடங்குவீர்கள். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. வெளி கடன்கள் தீரும், நீண்ட நாளாக விற்க முடியாத சொத்து இப்போது விற்க வழி கிடைக்கும்.


இந்த வாரம் -


திங்கள் - இன்று அலைச்சல் அதிகமாக இருக்கும். முடியுமா முடியாதா என்ற பதட்டத்தை ஏற்படுத்தி கடைசி நேரத்தில் வேலைகள் முடியும்.


செவ்வாய் - அதிக நன்மைகள் ஏற்படும். எடுத்த வேலைகள் அனைத்தும் எளிதாக முடியும். நீண்ட நாளாக முடிக்காத ஒரு வேலையை இன்று முடித்துக் காட்டுவீர்கள்.


புதன் - வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி ஆகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாளாக விற்க முடியாத சொத்து இன்று விற்பதற்கான வாய்ப்பு அதிகம்.


வியாழன் - திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடியே செய்வீர்கள். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அது குடும்ப நலன் சார்ந்ததாக இருக்கும். இடம் மாற்றம், வீடு மாற்றம், வாகன மாற்றம் போன்ற சிந்தனை உண்டாகும்.


வெள்ளி - நேற்று திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் இன்று முழுமையாக நடைபெறும். பணவரவு எதிர்பாராத வகையில் அதிக அளவில் இருக்கும். வங்கியில் எதிர்பார்த்த கடன் இன்று கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும்.


சனி- வீட்டு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். வாகனச் செலவுகள் ஏற்படும். உற்சாகம் குறைவாக இருக்கும். ஒருவித மந்த நிலை இருக்கும்.


ஞாயிறு - சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் இன்று பேசி முடிக்கப்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். உற்சாகமும் அதிகமாகும்.


வணங்கவேண்டிய தெய்வம் -
பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்த காரியம் நிறைவேறும். பண வரவு உண்டாகும்.

***********************************************************************

உத்திரம் -


வருமானமும் வருமானத்திற்கு ஏற்ற செலவுகளும் சமமாகவே இருக்கிறது. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். அலைச்சல்கள் அதிகரிக்கும்.


அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறு சிறு பிரச்சினைகள் வரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். வீட்டு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். ஒரு சிலர் தங்கள் வீடுகளை புதுப்பித்தல் போன்ற பணிகளை செய்வார்கள்.


உத்தியோகம் -
பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாகும். வேலை மாற்ற சிந்தனை உருவாகும். வேறு நிறுவனங்களுக்கு சேர்வதற்காக இப்போது விண்ணப்பம் செய்வீர்கள். அதற்கான முயற்சிகளில் இறங்குவார்கள். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் உழைப்பு அதிகமாகும். ஆதாயம் குறையும்.
விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சல் அதிகமாகும். தங்கள் இலக்குகளை வாரக் கடைசியில் தான் எட்டுவார்கள். அரசு ஊழியர்களாக இருந்தால் இடமாற்றம் கண்டிப்பாக ஏற்படும். அது நீங்கள் விரும்பாத இடமாக இருக்கும்.


தொழில் -
தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டு. அதிக ஆதாயம் கிடைக்கும். ஆனால் அலைச்சல் அதிகமாகும். கடுமையானப் போராட்டங்களை சந்திக்க வேண்டியது வரும். வெளிநாட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும். வெளிநாடு தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு வளர்ச்சி இருக்கும். ஒரு சில நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களோடு தங்களை இணைத்துக் கொள்வார்கள். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.


பங்கு வர்த்தக துறையில் இருப்பவர்கள் நன்கு சிந்தித்து ஆலோசனைகளைப் பெற்று அதன் பிறகு முதலீடு செய்யவும். வியாபாரிகளுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். கிளைகள் ஆரம்பிப்பார்கள்.


பெண்களுக்கு -
ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் உண்டாகும். குறிப்பாக கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் வலி உண்டாகும். மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. சகோதர வழியில் ஆதாயம் கிடைக்கும். பூர்வீக சொத்து விஷயங்கள் சுமுகமான தீர்வு கிடைக்கும்.


மாணவர்களுக்கு -
உயர்கல்வி மாணவர்களுக்கு எதிர்பார்த்த தேர்ச்சி விகிதம் கிடைக்கும். அரசின் உதவி கிடைக்கும். கல்விக்கடன் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு - உற்சாகமாக இருப்பீர்கள். பணவரவு மனநிறைவைத் தரும். ஒப்பந்தங்கள் ஏற்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.


பொதுப்பலன் -
அலைச்சல் அதிகமாக இருப்பதும் அதன் காரணமாக உடல் நலப் பாதிப்பும் உண்டாகும். எனவே எந்த வேலை செய்வதாக இருந்தாலும் சரியாக திட்டமிட்டு செய்தால் இந்த பிரச்சினையில் இருந்து வெளியே வரலாம். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமாக தீர்வு கிடைக்கும். ஒரு சிலர் தங்கள் சொத்துக்களை விற்க முயற்சி எடுப்பார்கள். கடன்கள் தீர்வதற்கான வழி கிடைக்கும்.


இந்த வாரம் -


திங்கள் - வங்கிக் கடன் கிடைக்கும். ஒரு பெரிய கடன் ஒன்றை தீர்க்க முயற்சி எடுப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.


செவ்வாய் - அலைச்சல் அதிகமாக இருக்கும். உடல் பலவீனமாக இருக்கும். மருத்துவச் செலவுகள் ஏற்படும். தேவையில்லாத சிந்தனைகள் தோன்றும்.


புதன் - நண்பர்களிடமிருந்து உதவி கிடைக்கும் . சொத்து சம்பந்தமாக லாபம் ஏற்படும். மருத்துவ செலவு குறையும்.


வியாழன் - வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.


வெள்ளி - அலைச்சல்கள் அதிகரிக்கும். பரபரப்பாக இருப்பீர்கள். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.


சனி- திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் கச்சிதமாக முடியும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் பற்றிய விஷயங்கள் பேசி முடிக்கப்படும்.


ஞாயிறு - பயணங்கள் எதுவும் வேண்டாம். பேச்சு வார்த்தைகள் எதுவும் ஈடுபடாதீர்கள், அது உங்களுக்கு எதிராக போகும்.


வணங்கவேண்டிய தெய்வம் -
யோக நரசிம்மரை வணங்குங்கள். நினைத்ததெல்லாம் நிறைவேறும். தடைகள் அகலும். ஆரோக்கிய பிரச்சினைகள் வராது. செலவுகள் கட்டுப்படும்.

*************************************************************************************************************************

அஸ்தம் -


நல்ல பலன்கள் அதிகமாகவும் சில விஷயங்களில் பின்னடைவும் சந்திப்பீர்கள்.
அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆனால் ஆதாயம் ஓரளவுக்கு கண்டிப்பாக கிடைக்கும். மருத்துவச் செலவுகள் உண்டு. குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை அதிகமாகும்.


தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு உண்டாகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சுமுகமாக முடியும். வீடு மாற்றச் சிந்தனை உண்டாகும். வாகன மாற்றமும் ஏற்படும் .


உத்தியோகம் -
வேலையில் பெரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை. பணிச்சுமை சற்று கூடுதலாகும். சக ஊழியர்கள் ஓரளவுக்கு உதவுவார்கள். உயரதிகாரிகள் பாராமுகமாக இருப்பார்கள். வேலையில் இடமாற்றத்தை வேண்டி நீங்களே விண்ணப்பம் செய்வீர்கள். ஒரு சிலர் வேலையை விட்டு விட்டு சொந்தத் தொழில் தொடங்கலாமா என்கிற சிந்தனை மேலோங்கும். சிறு நிறுவனங்கள், கடைகள் போன்றவற்றில் வேலை செய்பவர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறுவார்கள். அதற்கான முயற்சியை இந்த வாரம் எடுப்பார்கள்.


தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் தீரும். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து உதவி கிடைக்கும், உங்களை நம்பி முதலீடு செய்வார்கள். பங்கு வர்த்தகத் துறையினர் வளர்ச்சி பெறுவார்கள், ஆதாயம் அதிகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல வளர்ச்சி உண்டு. கிளை நிறுவனங்கள் ஆரம்பிப்பீர்கள்.


பெண்களுக்கு -
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்கள் வருகை அதிகமாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றி ஆகும். திருமண முயற்சிகள் கைகூடும்.


மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. குறிப்பாக உயர்கல்வி மாணவர்களுக்கு தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும். புதிய கல்வி கற்கும் ஆர்வம் உண்டாகும்.


கலைஞர்களுக்கு -
வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. அங்கு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணவரவு திருப்தி தரும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.


பொதுப்பலன் -
சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். பூர்வீகச் சொத்துக்களை விற்பது சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிற்சில பிரச்சினைகள் வந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். சுயமாக மருந்து எடுக்கக்கூடாது, மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.


இந்த வாரம் -


திங்கள் - நண்பர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும் ஒரு சில வேலைகளை செய்து கொடுப்பீர்கள். அலைச்சல் அதிகமாகும்.


செவ்வாய் - வீடு மனை போன்ற வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். லாபம் ஏற்பட கூடிய அளவில் பேச்சுவார்த்தைகள் நடக்கும். நல்ல முடிவுகள் எடுப்பீர்கள்.


புதன் - அலைச்சலும் அதனால் உடல் சோர்வும் ஏற்படும். தேவையில்லாமல் கோபப்படுவீர்கள். எரிச்சல் ஏற்படுத்தும் அளவுக்கு உங்களை மற்றவர்கள் நடத்துவார்கள்.


வியாழன் - எதிர்பார்த்த நன்மைகள் அனைத்தும் கிடைக்கும். பண வரவு மனநிறைவைத் தரும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும்.
வெள்ளி - வெளிநாடு செல்லும் முயற்சி முழு வெற்றியைத் தரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். பல வகையிலும் உதவிகள் கிடைக்கும்.


சனி- பரபரப்பாக இயங்கி, பலவித விஷயங்களை முடிப்பீர்கள். ஆதாயம் ஏற்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.


ஞாயிறு - இந்த வாரம் திட்டமிட்டிருந்த அனைத்து வேலைகளையும் இன்று செய்து முடிப்பீர்கள். பணவரவு மனநிம்மதியைத் தரும். ஒரு பெரிய கடன் தீர்ப்பதற்கான வழி கிடைக்கும்.


வணங்கவேண்டிய தெய்வம் -
விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள். தடைகள் அகலும். ஆரோக்கியம் மேம்படும். பணவரவு மனநிறைவைத் தரும்.

**************************************************************************************************************

சித்திரை -


பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் வெற்றியை தரும். எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் அதிக சிரமம் இல்லாமல் நடக்கும். குடும்பக் கவலைகள் தீரும். தம்பதிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். திருமண முயற்சிகள் கைகூடும். நிலம் வீடு சம்பந்தப்பட்ட வகைகள் ஆதாயம் தரக்கூடியதாக இருக்கும்.


உத்தியோகம் -
வேலையில் எந்த பிரச்சினைகளும் இருக்காது. அலுவலகத்தில் சுமுகமான நிலையே இருக்கிறது. ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். அல்லது அலுவலகத்திற்கு உள்ளேயே இடமாற்றம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. அலுவலகத்தில் உங்கள் அறையை மாற்றி அமைப்பீர்கள். அரசு ஊழியராக இருந்தால் பொறுப்புகள் அதிகமாகும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு ஆதாயம் தரக்கூடிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்., பெரிய அளவில் ஒரு வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் ஊதிய உயர்வு பெறுவார்கள்.


தொழில் -
எதிர்பார்த்த ஒரு ஒப்பந்தம் இந்த வாரம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த உதவிகள் கிடைக்கும். உங்களோடு இணைந்து தொழில் செய்ய பலரும் முன் வருவார்கள். முதலீடுகள் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயம் தரக்கூடியதாக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்கள் அதிக ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவார்கள். பங்கு வர்த்தகத் துறையினருக்கு ஏற்றம் தரும் வாரம் இது. வியாபாரிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கும், தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தில் புதிய வேலையாட்களை பணிக்கு அமர்த்துவீர்கள்.


பெண்களுக்கு -
தடைபட்டிருந்த திருமணம் முயற்சிகள் இப்பொழுது நடந்தேறும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு இப்பொழுது புத்திர பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்து வகையில் ஒரு ஆதாயம் ஏற்படும்.


மாணவர்களுக்கு -
கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். எந்த தேர்வு எழுதினாலும் சிறந்த மதிப்பெண் பெறுவீர்கள்.


கலைஞர்களுக்கு -
பலவிதமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதை ஏற்பது எதை விடுவது என்ற குழப்பம் வரும். சிறந்ததையே நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள். பணவரவு மனநிறைவை உண்டாக்கும்.


பொதுப்பலன் -
பணவரவு திருப்தியாக இருக்கிறது. முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். தந்தையின் உடல்நலம் மட்டும் சிறு பாதிப்பு ஏற்படும். சரியான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சேமித்த பணத்தை வேறு நல்ல முதலீடுகளில் முதலீடு செய்வீர்கள்.


இந்த வாரம் -


திங்கள் - எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். ஆதாயம் ஏற்படும் வகையில் ஒரு பயணம் ஏற்படும். ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறும்.


செவ்வாய் - மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த ஒரு விஷயம் தள்ளிப் போகலாம். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.


புதன் - பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். மருத்துவச் செலவுகள் குறையும். ஒரு பெரிய கடனை அடைப்பதற்கு வழி கிடைக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.


வியாழன் - அலைச்சல் சற்று அதிகரிக்கும். அலைச்சலால் உடல்நலம் சிறு பாதிப்பு ஏற்படும்.
அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்.


வெள்ளி - நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பு உயரும் . செலவுகள் கட்டுப்படும்.


சனி - வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. பயணங்களால் ஆதாயம் ஏற்படும். ஒரு வியாபாரம் ஒன்று பேசி முடிப்பீர்கள்.


ஞாயிறு - உங்களைப் பற்றிய சுய பரிசோதனை செய்வீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை தோன்றும். முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். செலவுகளை கட்டுப்படுத்த திட்டமிடுவீர்கள்.


வணங்கவேண்டிய தெய்வம் -
காவல் தெய்வங்களாக இருக்கக்கூடிய முனீஸ்வரன், கருப்பசாமி போன்ற தெய்வங்களை வணங்கி வருவது நல்ல பலனைத் தரும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். எடுத்த காரியம் வெற்றி ஆகும்.

******************************************************************************************************
சுவாதி


தங்குதடை இல்லாமல் எல்லா வேலைகளையும் ஒரே மூச்சில் செய்து முடிப்பீர்கள். ஆதாயம் தரும் வேலையை மட்டுமே தேர்ந்தெடுப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஒரு சில கடன்களை அடைப்பீர்கள். சொந்த வீடு வாங்கும் யோகமும் உண்டு. காலி மனை போன்றவை வாங்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். மருத்துவச் செலவுகள் குறையும். உடல் நலம் சார்ந்து சில நல்ல விஷயங்களை கடைபிடிக்க ஆரம்பிப்பீர்கள்.


உத்தியோகம் -
பணியில் எந்த பிரச்சினையும் இல்லை. சுமூகமான நிலையை தொடர்கிறது . இடமாற்றம் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உண்டு. பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். ஊதிய உயர்வும் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு, வேறு பெரிய நிறுவனங்களுக்கு மாறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஊதிய உயர்வு கிடைக்கும். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு ஊக்கத் தொகை அதிகம் கிடைக்கும். அதிக அளவுக்கு இலக்குகளை எட்டுவார்கள்.


தொழில் -
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த ஒரு நல்ல தகவல் இந்த வாரம் கிடைக்கும். சிலர் வலிய வந்து உங்களுக்கு உதவுவார்கள். முதலீடுகள் அதிகம் கிடைக்கும். எதிர்பார்த்த ஒரு பெரிய கடன் தொகை கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் செயலாகும். புதிய கிளைகளைத் தொடங்குவது போன்ற விஷயங்கள் எளிதாக நடக்கும். புதிதாக தொழில் தொடங்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள், முதலீட்டாளர்கள் கிடைப்பார்கள். வியாபாரிகளுக்கு நல்ல ஆதாயம் தரக்கூடிய அளவுக்கு வியாபாரம் விரிவடையும்.. பங்கு வர்த்தக துறையில் எதிர்பாராத அளவுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அதிக ஒப்பந்தங்கள் ஏற்படும்.


பெண்களுக்கு -
கனவுகள் நனவாகும். நீங்கள் வெகுநாளாக யோசித்து வைத்த ஒரு விஷயம் இந்த வாரம் சுபமாக முடியும். வேலை இல்லாத பெண்களுக்கு இந்த வாரம் வேலைக்கான நேர்முகத் தேர்வுகள் நடக்கும், அதில் தேர்வு செய்யப்படுவீர்கள்.


மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தோல்வியடைந்த பாடங்களை இப்பொழுது எழுதி வெற்றி பெறுவீர்கள். சக மாணவர்களின் உதவி கிடைக்கும்.


கலைஞர்களுக்கு -
நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். முன்பணமாக ஒரு பெரிய தொகை பெறுவதற்கும் வாய்ப்புண்டு.


பொதுப் பலன் -
முன்னேற்றமான விஷயங்கள் நடக்கும். முயற்சிகள் வெற்றி தரும். சேமிப்புகள் அதிகமாகும். கடன்கள் குறையும். சொந்த வீடு கனவு நனவாகும். திருமண முயற்சிகள் வெற்றி தரும். விவாகரத்து ஆனவர்களுக்கு மறுமணம் நடக்கும். வேலை செய்து கொண்டிருப்பவர்கள் வேலையை விட்டுவிட்டு தனியாக தொழில் செய்யவோ, நண்பர்களோடு கூட்டாக தொழில் செய்யவோ வாய்ப்புகள் உண்டாகும்.


இந்த வாரம் -


திங்கள் - அலைச்சல்கள் அதிகரிக்கும். வாகனப் பழுது ஏற்படும் .புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உண்டாகும். அதற்கான முயற்சியில் இறங்குவீர்கள்.


செவ்வாய் - ஆதாயங்கள் அதிகமாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரம் வெற்றியாகும்.


புதன் - தூரத்து உறவினர் ஒருவருக்காக ஒரு முக்கியமான வேலையை செய்து கொடுப்பீர்கள். உங்களுக்கு உதவிய ஒரு நபருக்கு, பிரதி உபகாரமாக அவருக்கு ஒரு நன்மை செய்து கொடுப்பீர்கள்.


வியாழன் - கடன்களை அடைக்க வழி கிடைக்கும். ஒரு பெரிய தொகை கைக்கு வந்து சேர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


வெள்ளி - முக்கியமான முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். அதேபோல முக்கியமான சில விஷயங்களை தள்ளிவைப்பது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.


சனி - எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். அது உங்களுக்கு சாதகமாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.


ஞாயிறு - அயல்நாட்டு நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். இன்று அவர்களோடு பேசும்பொழுது அவர்களாகவே சில உதவிகளை செய்து தருவதாக உறுதி அளிப்பார்கள். மனமகிழ்ச்சி ஏற்படும் வகையில் இந்த நாள் அமையும்.


வணங்க வேண்டிய தெய்வம் -
அருகிலிருக்கும் ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். ஐயப்பனின் அபிஷேகத்திற்கு நெய் வாங்கித் தாருங்கள். உங்கள் கவலைகள் தீரும். கஷ்டங்கள் நீங்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

*********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x