Published : 18 Nov 2019 02:13 PM
Last Updated : 18 Nov 2019 02:13 PM

இந்த வாரம் இப்படித்தான் -  நட்சத்திரப் பலன்கள் : எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்?  திருவாதிரை முதல் மகம் வரை - (நவம்பர் 18 முதல் - 24 வரை)


ஜோதிடர் ஜெயம் சரவணன்

திருவாதிரை -


குழப்பமான மனநிலையில் இருந்து வெளி வருவீர்கள். கற்பனை கண்ட விஷயங்கள் இப்பொழுது நனவாகத் தொடங்கும். திருமண முயற்சிகள் கைகூடும். வேலையிலிருந்த அழுத்தங்கள் இப்பொழுது குறைந்து மனநிம்மதி உண்டாகும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பாஸ்போர்ட் உள்ளிட்ட விஷயங்களில் இருந்த குளறுபடிகள் இப்பொழுது தீரும்.


உத்தியோகம் -
வேலையிலிருந்த அழுத்தங்கள் குறையும். வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல தகவல் வந்து சேரும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஊதிய உயர்வும் உண்டாகும். ஒருசிலருக்கு கிளைகளை நிர்வகிக்கும் பொறுப்பு கிடைக்கும்.


தொழில் -
தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த ஒப்பந்தம் இப்பொழுது கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நல்ல லாபத்தைப் பெற்றுத் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவார்கள். வரவேண்டிய பாக்கிகளும் வசூலாகும். அரசு பணியிலிருந்த நெருக்கடிகள் இப்பொழுது தீரும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல ஏற்றம் தரும் லாபம் கிடைக்கும். பெரு வியாபாரிகள், சிறு வியாபாரிகள் அனைவருக்கும் லாபகரமான வாரமாக இந்த வாரம் இருக்கிறது.


பெண்களுக்கு -
நீண்ட நாளாக விருப்பப்பட்டுக் கொண்டிருந்த பொருட்களை இப்போது வாங்குவீர்கள். உங்கள் சகோதரருக்கு இப்பொழுது திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகிடைக்கும்.


மாணவர்களுக்கு -
கல்வியில் முன்னேற்றம் உண்டு. பயிற்சி வகுப்புகளில் சேர்வீர்கள். புதிய மொழி கற்கும் ஆர்வம் ஏற்படும்.


கலைஞர்களுக்கு -
எண்ணற்ற வாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். சரியான வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து வெற்றியை ருசிப்பீர்கள்.


பொதுப்பலன் -
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்போது அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இப்பொழுது நல்ல வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். சேமிப்பு அதிகமாகும். வீடு வாங்கும் கனவு நனவாகும்.


இந்த வாரம் -
திங்கள் -
அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் அதிகமாகும். வாகனப் பழுது ஏற்படும். தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.


செவ்வாய் - நிலம் சம்பந்தப்பட்ட ஆதாயம் ஒன்று ஏற்படும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றியைத் தரும். பணவரவு திருப்தி தரும்.


புதன் - அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். நண்பர்கள் பணம் கேட்டு தொல்லை தருவார்கள்.


வியாழன் - வங்கியில் எதிர்பார்த்த கடன் இன்று கிடைக்கும். அல்லது நல்ல தகவல் வந்து சேரும். ஆதாயம் தரும் பயணங்கள் உண்டாகும். பணவரவு மனநிறைவைத் தரும்.


வெள்ளி - உங்கள் செயல் மற்றவர்களுக்கு எரிச்சலைத் தரும். அளவாகப் பேசுங்கள், தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். யாருக்கும் ஆலோசனை தரக்கூடாது.


சனி- நன்மைகள் அதிகமாக நடக்கும். எடுத்த முயற்சிகள் வெற்றி தரும். ஆதாயம் தரும் வேலை ஒன்றை செய்து முடிப்பீர்கள்.


ஞாயிறு - தொலைதூரப் பயணம் ஒன்று ஏற்படும். அதனால் ஆதாயம் உண்டாகும். பழைய நண்பர் ஒருவரை ஒருவரை சந்திப்பீர்கள். அவரால் லாபம் ஏற்படும் விஷயம் ஒன்று நடைபெறும்.


வணங்கவேண்டிய தெய்வம் -
விஷ்ணு துர்கைக்குசெவ்வரளி மலர் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். மனக்குறை நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

*******************************************************************************************************


புனர்பூசம் -
பிரச்சினைகள் தீர்ந்து மனநிம்மதி உண்டாகும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இப்போது கைக்கு வந்து சேரும். சொந்த வீடு வாங்குவதற்கான வங்கிக்கடன் இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றியைத் தரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.


உத்தியோகம் -
வேலையில் இருந்த பணிச் சுமைகள் நீங்கும். அதிக அழுத்தம் இல்லாத அல்லது பணிச்சுமை இல்லாத இடத்திற்கு மாற்றப்படுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும்.


விற்பனைப் பிரதிநிதிகள் தங்கள் இலக்குகளை எளிதாக எட்டுவார்கள். ஊக்கத் தொகை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவை ஏற்படும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும்.


தொழில் -
தொழிலில் இருந்த மந்தநிலை மாறும். உற்பத்தியான பொருட்கள் தேக்க நிலையிலிருந்து மாறி விற்பனை அதிகமாகும். புதிய கிளைகள் தொடங்குவது, புதிய தொழில் தொடங்குவது என பரபரப்பாக இந்த வாரம் இருக்கும். புதிதாக தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், முதலீட்டாளர்கள் கிடைப்பார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நல்ல லாபத்தைத் தரும். புதிய ஆர்டர்கள் பெறுவார்கள். பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபம் உண்டாகும்.


பெண்களுக்கு -
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொத்து சேர்க்கை ஏற்படும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. வேலை கிடைக்கும். பதவி உயர்வு உண்டாகும். திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.


மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. அயல்நாடு சென்று கல்வி பயிலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த வாரம் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.


கலைஞர்களுக்கு -
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் உண்டாகும். நண்பர்களால் பரிந்துரைக்கப்பட்டு ஒப்பந்தம் ஒன்று ஏற்படும்.


பொதுப்பலன் -
எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். பணவரவு திருப்தி தரும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு வேலை நீட்டிப்பு கிடைக்கும். குடியுரிமை சம்பந்தமான பிரச்சினைகள் தீர்ந்து குடியுரிமை கிடைக்கும்.


இந்த வாரம் -
திங்கள் - பேசி தீர்க்க வேண்டிய விஷயங்களை சுமுகமாகப் பேசித் தீர்க்க வேண்டும். தேவையற்ற பிடிவாதம் வேண்டாம்.


செவ்வாய் - ஆதாயம் பெருகும். நல்ல லாபங்கள் கிடைக்கப்பெறும். சொந்த வீடு கனவு நனவாகும் வாய்ப்புண்டு.


புதன் - நண்பர்களின் வேலை விஷயமாக உதவி செய்வீர்கள். எதிர்பார்த்த பணவரவு தள்ளிப் போகலாம்.


வியாழன் - இன்று எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக மாறும். வியாபாரம் வெற்றியாகும். புதிய தொழில் தொடங்கும் சிந்தனை உருவாகும்.


வெள்ளி - அலைச்சல் அதிகரிக்கும். ஒரு சில விஷயங்கள் ஏமாற்றத்தை தரலாம். முடிவுகள் எடுப்பதை தள்ளிப்போடுங்கள்.


சனி- பணவரவு உண்டு. ஒரு சில ஒப்பந்தங்கள் ஏற்படும். லாபகரமான வியாபாரம் ஒன்று ஏற்படும்.


ஞாயிறு - வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி ஆகும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்தி தரும்.


வணங்க வேண்டிய தெய்வம் -

விநாயகப்பெருமானுக்கு கொழுக்கட்டை நிவேதனம் செய்து, தானம் செய்யுங்கள். நன்மைகள் அதிகரிக்கும், நினைத்தது நிறைவேறும்.

*****************************************************************************************


பூசம் -
நன்மைகள் அதிகம் நடக்கும் வாரம் இது. மன அழுத்தம் தந்து கொண்டிருந்த ஒரு கடனை அடைப்பதற்கு இப்பொழுது நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் சொத்துக்களை அடமானம் வைத்து வங்கி கடன் பெறுவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு இப்பொழுது பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடைபெறும். குலதெய்வ வழிபாடு ஏற்படும்.


உத்தியோகம் -
எதிர்பார்த்த பதவி உயர்வு இப்பொழுது கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்திலிருந்து வரவேண்டிய பணம் இந்த வாரம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. வியாபார நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வேறு நிறுவனத்திற்கு மாறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொல்லை கொடுத்த சக ஊழியர் ஒருவர் வேலையை விட்டு விலகுவார் அல்லது மாற்றப்படுவார்.


தொழில் -
தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. புதிய நிறுவனங்களோடு இணைந்து செயல்படும் வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த வங்கிக் கடன் இப்பொழுது கிடைக்கும். அரசு வழியிலிருந்த பிரச்சினைகள் நீங்கும். வருமானவரி சம்பந்தமான பிரச்சினைகள் இப்பொழுது சுமூகமாக முடிவுக்கு வரும்.புதிதாக தொழில் தொடங்கும் ஆர்வம் உடையவர்களுக்கு இந்த வாரம் அதற்கான முதலீட்டாளர்கள் கிடைப்பார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நிறைய லாபம் ஏற்படும், அதிக ஆர்டர்கள் பெறுவார்கள். பங்கு வர்த்தகத்தில் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். கட்டுமானத் தொழில் லாபகரமாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.


பெண்களுக்கு -
திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உருவாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டு.


மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டு. தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கற்பவர்களுக்கு தேர்வுகளில் நல்ல தேர்ச்சி விகிதம் கிடைக்கும்.


கலைஞர்களுக்கு -
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாடு செல்லும் யோகமும் உண்டு. அயல்நாடுகளில் உங்கள் துறை சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடத்த ஒப்பந்தம் உண்டாகும்.


பொதுப்பலன் -
எதிரிகள் காணாமல் போவார்கள். எதிர்ப்புகள் என்பதே இனி இருக்காது. எதிர்பாராத பணவரவு உண்டு. பூர்வீக சொத்து விஷயங்களுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். வெகுநாளாக தாமதப்பட்டுக் கொண்டிருந்த திருமண முயற்சிகள் இப்பொழுது நல்ல விதமாக நடக்கும்.


இந்த வாரம் -


திங்கள் - முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். நல்ல வாய்ப்பு ஒன்று உங்களைத் தேடி வரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.


செவ்வாய் - இல்லத்தில் மகிழ்ச்சியான சம்பவம் நடக்கும். திருமணம் சம்பந்தமான தகவல் மனமகிழ்ச்சியை தரும். பணவரவு உண்டு.


புதன் - எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.


வியாழன் - ஆதாயம் தரும் வியாபாரம் ஒன்று நடைபெறும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வாகனம் மாற்றும் முயற்சி உண்டாகும்.


வெள்ளி - இன்று எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் மற்றவர்களுக்கு ஆதாயத்தை தரும். உங்களுக்கு மன நிறைவை மட்டும் உண்டாகும்.


சனி- எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. பெரிய கடன் ஒன்று தீரும். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்பு குறையும்.


ஞாயிறு - வீண் அலைச்சல்கள் ஏற்படும். ஆதாயங்கள் குறையும். வாகனச் செலவு உண்டு.


வணங்க வேண்டிய தெய்வம் -
காலபைரவர் வழிபாடு நன்மைகள் தரும்.பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

***********************************************************************************************************


ஆயில்யம் -
ஆதாயம் தரும் வாய்ப்புகள் தேடி வரும். பணவரவு மனநிறைவைத் தரும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். புத்திர பாக்கியம் இதுவரை இல்லாத தம்பதிகளுக்கு இப்பொழுது புத்திர பாக்கியம் உண்டாகும். ஆன்மிகப் பயணங்கள் உண்டாகும். அரைகுறையாக நின்றுபோன கட்டிடப் பணிகள் மீண்டும் தொடங்கும். சகோதரர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். ஒரு சிலர் வேலையை விட்டுவிட்டு சொந்தத் தொழில் தொடங்குவார்கள்.


உத்தியோகம் -
பணியிடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சக ஊழியர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலுவைத் தொகை இப்போது கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றி தரும். வெளிநாட்டில் வேலை எதிர்பார்த்தவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். அரசு வேலைக்கு தேர்வு எழுதி இருந்தால் இப்பொழுது அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.


தொழில் -
தொழிலில் எதிர்பாராத அளவுக்கு ஒரு முன்னேற்றம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு ஆதாயம் பெருகும். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு, இப்பொழுது தொழில் தொடங்கும் நேரம் ஆரம்பித்துவிட்டது. வியாபாரிகள் நல்ல லாபம் பார்ப்பார்கள், கிளைகள் தொடங்குவார்கள்.


தொழில் நிறுவனங்களுக்கு புதிதாக இயந்திரங்கள் வாங்குவார்கள். தொழிலகத்தில் புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவீர்கள்.


பெண்களுக்கு -
குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப பிரச்சினைகள் தீரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இப்பொழுது புத்திரபாக்கியம் உண்டாகும். சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டு.


மாணவர்களுக்கு -
கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டு. எந்த தேர்வு எழுதினாலும் அதில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.


கலைஞர்களுக்கு -
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பலவித ஒப்பந்தங்கள் உண்டாகும். பண வரவு உண்டு. சொத்துக்கள் வாங்குவீர்கள். வெளிநாடு செல்லும் யோகமும் உண்டு.


பொதுப்பலன் -
இதுவரை வாடகை வீட்டில் இருந்தவர்களுக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் ஆரம்பித்து விட்டது, இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் இருந்திருக்கும், இனி அந்த நிர்ப்பந்தம் இருக்காது. வேலையில் தொடர்வதற்கு சாதகமான நேரம் ஆரம்பித்து விட்டது. எனவே இனி கவலை தேவையில்லை.


இந்த வாரம் -


திங்கள் - எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்ல, எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உருவாகும்.


செவ்வாய் - வேலையிடத்தில் உங்கள் கருத்து ஏற்கப்படும். உங்களுக்கான மரியாதை கிடைக்கும். வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.


புதன் - எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. நீண்ட நாளாக வசூலாகாத பணம் இன்று வசூலாகும்.


வியாழன் - உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். தேவையற்ற விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.


வெள்ளி - நீண்ட நாளாக பேசி வந்த ஒரு விஷயம் இன்று நல்ல முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். கடன் விஷயமாக வங்கியில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும்.


சனி - நண்பர்களுக்காக சில உதவிகளை செய்து கொடுப்பீர்கள். ஒரு சில நண்பர்கள் பண உதவி கேட்டு தொல்லை கொடுப்பார்கள்.


ஞாயிறு - பேசப்படும் எந்த வியாபாரமாக இருந்தாலும் முழு வெற்றியைக் கொடுக்கும். லாபம் கிடைக்கும். ஒரு முக்கிய கடனை அடைப்பீர்கள்.


வணங்கவேண்டிய தெய்வம் -
அம்மன் ஆலயங்களுக்கு செல்லுங்கள். அது சிவாலயமாக இருப்பது சிறப்பு. அங்கு அம்பாளுக்கு சிவப்பு நிற புடவை சார்த்தி வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். எதிர்ப்புகள் குறையும். நினைத்தது நிறைவேறும்.

*************************************************************************************************


மகம் -
ஆச்சரியப்படும் வகையில் முன்னேற்றங்கள் ஏற்படும். இவ்வளவு நாள் பட்ட சிரமங்களுக்கு விடிவு காலம் பிறக்க ஆரம்பித்து விட்டது. இனி அனைத்தும் நல்லதே நடக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் சாதகமாக முடியும். விருப்பங்கள் நிறைவேறும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முற்றிலுமாக அகலும். இனி மருத்துவச் செலவு என்பதே இருக்காது. பணத்தேவைகள் பூர்த்தியாகும். சொந்த வீடு வாங்கும் கனவு இப்பொழுது நனவாகும். அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் இறங்குவீர்கள். இனி தயக்கத்திற்கு இடமில்லை, முழுமூச்சாக செயல்பட்டால் வெற்றி எளிதாகும்.


உத்தியோகம் -
தேவையில்லாமல் ஏற்பட்ட இடமாற்றம் ரத்து செய்யப்பட்டு, நீங்கள் விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். தடைபட்டிருந்த பதவி உயர்வு கிடைக்கும். வேலையில் இருந்த கவனக்குறைவு அகன்று வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். சக ஊழியர்கள் நட்புடன் இருப்பார்கள். ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக் கொள்வீர்கள். சேவை சார்ந்த ஊழியர்கள் வருமானம் இருமடங்காகும். நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். விற்பனைப் பிரதிநிதிகள், நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள், என அனைவருக்கும் இப்போது பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் நிறைய கிடைக்கும்.

தொழில் -
தொழிலில் இருந்த மந்தநிலை மாறும். தொழில் உச்ச நிலைக்கு செல்லும். ஒப்பந்தங்கள் பலவாறாக உண்டாகும். வெளிநாட்டிலிருந்து உதவி கிடைக்கும். உங்கள் தொழிலில் முதலீடு செய்ய நிறைய பேர் முன்வருவார்கள். தொழில் செய்யும் இடத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய தொழில் நிறுவனங்களை ஆரம்பிப்பீர்கள். புதிதாக தொழில் செய்ய முனைவோர்கள் நல்ல வாய்ப்பினை பெறுவார்கள். இந்த வாரம் தொழில் தொடங்குவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் உண்டு. பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் தரும் வாரம் இது.
வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள். புதிய கிளைகளைத் துவங்கும் ஆர்வம் உண்டாகும்.


பெண்களுக்கு -
ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தடைபட்டிருந்த திருமண முயற்சிகள் இப்போது நிறைவேறும். இந்த வாரம் பணவரவு உண்டு. அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. சொந்த வீடு வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.


மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகள் ஏதும் எழுதியிருந்தால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். அரசு வழியில் உதவி கிடைக்கும்.
கலைஞர்களுக்கு - நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இதுவரை இருந்த மந்த நிலை மாறும். விரக்தியிலிருந்து வெளியே வருவீர்கள். ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணவரவு மன மகிழ்ச்சி உண்டாக்கும்.


பொதுப் பலன் -
எண்ணங்கள் அனைத்தும் இப்பொழுது செயல்வடிவம் பெறும். தேவைகள் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். சேமிப்புகள் கரைந்திருக்கும், இனி சேமிப்புகள் கரையாது, சேமிப்புகள் உயரும் . எதிர்பார்த்த லாபத்தை விட அதிக லாபம் பெறுவீர்கள். பதவி உயர்வு உள்ளிட்டவை நீங்கள் எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும். இந்த வாரம் சாதகமாக இருப்பதால் பதவி உயர்வும் எதிர்பார்க்கலாம். வெளிநாடு செல்லும் முயற்சி முழு வெற்றியை தரும். இந்த வாரம் அதற்கான நல்ல தகவலை எதிர்பார்க்கலாம்.


இந்த வாரம் -


திங்கள் - அநேக நன்மைகள் ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து ஒரு நல்ல தகவல் வரும்.


செவ்வாய் - வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி பெறும். பயணங்களால் ஆதாயம் உண்டு. லாபம் தரும் ஒரு வியாபாரம் பேசி முடிக்கப்படும்.


புதன் - அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு. குடும்பத்தினர் தேவைக்காக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.


வியாழன் - எதிர்பாராத பணவரவு உண்டு. இன்ற எடுத்து செய்கின்ற அனைத்து முயற்சிகளும் முழு வெற்றியைத் தரும். குடும்பத்தினருடன் வெளியே சென்று வருவீர்கள்.


வெள்ளி - முக்கிய முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம். புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். காசோலை உள்ளிட்ட எதிலும் கையெழுத்து போடவேண்டாம்.


சனி - வீடு மனை போன்றவற்றால் லாபம் உண்டாகும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும். அதற்கான வங்கிக் கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.


ஞாயிறு - நண்பர்களுக்காக செலவு செய்வீர்கள். கஷ்டப்படும் நண்பர் ஒருவருக்காக உதவி செய்வீர்கள். முன்பின் தெரியாத ஒரு நபருக்கு உதவி செய்வீர்கள்.


வணங்கவேண்டிய தெய்வம் -

மகாலட்சுமி தாயாருக்கு வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வழிபடுங்கள். நன்மைகள் கூடுதலாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும், நினைத்தது நிறைவேறும்.
*****************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x