Published : 11 Nov 2019 01:11 PM
Last Updated : 11 Nov 2019 01:11 PM

இந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திர பலன்கள் - எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? (நவம்பர் - 11 முதல் 17 வரை ) பூரம் முதல் சுவாதி வரை

ஜோதிடர் ஜெயம் சரவணன்

பூரம் -
வெற்றிகள் தொடரும் வாரமாகவே உள்ளது. எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் பெரிய உதவிகள் ஏதும் இல்லாமலேயே தானாகவே நடக்கும். சொந்த வீடு வாங்குவது முதல், உயர்கல்வி கற்கும் வாய்ப்புகள் வரை; நல்ல வேலை கிடைப்பது முதல், நல்ல வாழ்க்கைத் துணை அமைவது வரை; கடன்கள் அனைத்தும் தீர்ந்து மன நிறைவு ஏற்படுவது முதல், சேமிப்புகள் எதிர்பாராத அளவுக்கு உயர்வது வரை; என அனைத்துமே உங்களுக்கு சாதகமாகவே இருக்கிறது.
உத்தியோகம் - கடந்த சில மாதங்களாக இருந்த .அழுத்தங்கள் எல்லாம் மாறி தற்போது சகஜ நிலைக்கு வந்து இருப்பீர்கள். விரும்பிய இடமாற்றம் இப்போது ஏற்படும். தாமதமாகிக் கொண்டிருந்த பணி உயர்வு இப்பொழுது கிடைக்கும். ஊதியத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலுவைத் தொகைகள், இந்த வாரம் கிடைக்கும். இதுவரை நல்ல வேலை கிடைக்காதவர்களுக்கு, இந்த வாரம் நல்ல நிறுவனத்திலிருந்து நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வரும். ஒரு சிலர் வெளிநாடு செல்லும் முயற்சிகளுக்காக தற்போது இறங்குவீர்கள். அரசு ஊழியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு இடமாற்றம் வேண்டி விண்ணப்பிப்பவர்கள், அந்த இடம் மாற்றம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

தொழில் - தொழில் வளர்ச்சி மிதமாக இருக்கிறது. தொழிலில் புதிய முயற்சிகளை கையாண்டு பரிசோதனை செய்து பார்ப்பீர்கள்., அந்த பரீட்சார்த்த முறை வெற்றியைத் தரும். கட்டுமான தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகளை கொடுத்து விற்பனையை அதிகப்படுத்துவது நடக்கும். ரியல் எஸ்டேட் துறையினர் தங்கள் லாபத்தை சிறிது குறைத்து மீண்டும் விற்பனைகளைத் தொடங்குவார்கள். மொத்த வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த ஆட்களை சேர்த்தல், வாகனங்களை வாங்குதல் போன்றவற்றை செய்வார்கள். பங்கு வர்த்தகத் துறையில் மிதமான வளர்ச்சி உண்டு.
பெண்களுக்கு - குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் இல்லத்தில் நடக்கும் சுப விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். இதுவரை திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். நீண்ட நாட்களாக தாமதப்பட்டு வந்தபுத்திர பாக்கியம் இப்போது உண்டாகும். சகோதரர்களிடம் இருந்த மனவருத்தங்கள் அகலும்.
மாணவர்களுக்கு - உயர்கல்வி கற்பவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. பட்டய படிப்பு படிப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு - நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு ஒப்பந்தங்கள் உண்டாகும். திரைத்துறையினரும் சின்னத்திரையினரும் நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டு.
பொதுப்பலன் - ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும். உடல் நலம் சீராகும். மருத்துவச் செலவுகள் அறவே இல்லாமல் போகும். நீண்ட நாட்களாக படுக்கையில் இருந்தவர்கள், இனி எழுந்து நடமாட ஆரம்பிப்பார்கள். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் இப்போது சொந்த வீடு வாங்கும் நேரம் வந்துவிட்டது,. அதற்கான முயற்சிகளில் தாராளமாக இறங்கலாம். திருமண முயற்சிகள் கைகூடும். புத்திர பாக்கியமும் உண்டாகும். ஒரு சில தம்பதிகளுக்கு மருத்துவ சிகிச்சையின் உதவியோடு புத்திர பாக்கியம் உண்டாகும்.
இந்த வாரம் -
திங்கள் – அதிக நன்மைகள் நடைபெறும். பல இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி முழு வெற்றி பெறும்.
செவ்வாய் - பயணங்கள் கூடும். அலைச்சல்கள் அதிகரிக்கும். அதற்கு தகுந்த ஆதாயம் கிடைக்கும். உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
புதன் - எடுத்துக் கொண்ட அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடியும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். நல்ல வாய்ப்புகள் தானாக தேடி வரும்.
வியாழன் -அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். பயணங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். இன்றைய தினம் யாருக்கும் ஜாமீன் தராதீர்கள்.
வெள்ளி - சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றி ஆகும். சொந்த வீடு வாங்குவதற்கு உண்டான சூழல்கள் அமையும். வங்கிக்கடன் முதலானவை எளிதாகக் கிடைக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும்.
சனி - இன்று நீங்கள் செய்யும் செயல்கள் யாவும் உங்கள் மனதிற்கு திருப்தியையும், மனநிறைவையும் தரும். பண ஆதாயம் ஏதும் இருக்காது. உங்களுக்கு வரவேண்டிய பண ஆதாயம் வேறு ஒருவர் தட்டிச் செல்வார்.
ஞாயிறு - கடன்களை அடைக்க வழி கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட கடனை இன்று அடைப்பீர்கள், அல்லது ஒரு சிறிய தொகையாவது செலுத்துவீர்கள். இடம் பூமி சம்பந்தப்பட்ட ஆதாயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
வணங்கவேண்டிய தெய்வம் - சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடுங்கள். ஸ்ரீருத்ரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும், எதிர்ப்புகள் காணாமல் போகும், லாபங்கள் அதிகரிக்கும்.

******************************************************************************************************************

உத்திரம் -
நீங்கள் எடுக்கின்ற முயற்சிகளில் மூன்றில் ஒன்று நிறைவேறும். மற்ற இரண்டும் தாமதமாகலாம், அல்லது கை விட்டுப் போகலாம். எனவே எதையும் நிதானமாக யோசித்து கவனமாக செயல்படுங்கள். அலைச்சல்களை குறைத்துக் கொள்ளுங்கள். பயணங்கள் அதிகரிக்கும். பயணங்கள் அதிகரிப்பதால் ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல்கள் வரும். எனவே சிறு பிரச்சினையாக இருந்தாலும் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். சுயமாக மருந்து எடுத்துக் கொள்வது கூடவே கூடாது. தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். சிறிய பிரச்சினை என்றாலும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் பெரிய பாதிப்புகள் ஏதும் வராது, எனவே கவலை வேண்டாம்.
உத்தியோகம் - வேலையில் அழுத்தங்கள் அதிகரிக்கும். அடுத்தவர் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். மூன்று நான்கு பேரோடு சேர்ந்து செய்த வேலையை இப்போது நீங்கள் தனி ஒருவராக செய்யவேண்டியது வரும். இதன் காரணமாக உடல் நல பாதிப்புகள் வரலாம். எனவே வேலையிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தாமல், சற்று தளர்வாக இருங்கள், கண் காது தொண்டை போன்றவற்றிற்கு ஓய்வும் சில பயிற்சிகளும் தரவேண்டும்.
தொழில் - தொழில் வளர்ச்சிக்காகவும், தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்காகவும், ஏதாவது ஒரு சொத்தை அடமானம் வைக்க வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். அல்லது ஒரு சிலர் சொத்தின் ஒரு பகுதியை விற்க வேண்டிய நிலை வரலாம். ஆனால் தொழிலில் ஏதாவது ஒரு உதவிகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். குறிப்பாக அயல்நாட்டில் இருந்து ஒரு சில உதவிகள் கிடைக்கப் பெறலாம். ஒரு சில நிறுவனங்கள் தங்கள் தொழிலை மற்றொரு நிறுவனத்தோடு இணைத்து செயல்படவும் வாய்ப்பு இருக்கிறது. புதிய தொழில் முயற்சிகள் தொடங்கும் எண்ணம் உடையவர்கள் இன்னும் ஒரு சில காலம் பொறுமையாக இருக்க வேண்டும். மொத்த வியாபாரிகள் திடீர் தேக்க நிலையை கண்டு கலக்கம் அடைவார்கள். சிறு வியாபாரிகளுக்கு போட்டிகள் உருவாகும். பங்கு வர்த்தகத் தொழிலில் இருப்பவர்கள் மார்க்கெட் நிலவரம் நன்கு அறிந்து முதலீடு செய்ய வேண்டும்.
பெண்களுக்கு - குடும்பத்தில் சின்ன சின்ன சச்சரவுகள் ஏற்படும். சற்று பொறுமையாக இருந்து அனுசரித்துச் செல்லுங்கள். நீங்களும் உணர்ச்சிவசப்பட்டால் பெரிய பிரச்சினையாக மாறிவிடும். மற்றபடி பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை. சகோதரர்கள் தேவையில்லாமல் உங்கள் மீது வருத்தம் கொள்வார்கள். எல்லாம் சில காலம்தான், நிதானமாக இருந்தால் அனைத்தும் மாறும். ஒரு சில பெண்களுக்கு சொந்தமாகத் தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகும். சுயஜாதகத்தின் அடிப்படையில் தொழில் தொடங்க சாதகமாக இருந்தால், தடை ஏதும் இல்லை.
மாணவர்களுக்கு - உயர்கல்வி மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. சாதனை படைக்கும் மதிப்பெண் பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பு உயரும் .


கலைஞர்களுக்கு - நல்ல வாய்ப்புகள் அனைத்தும் தேடிவரும். முழு முயற்சி எடுத்தால் நிறைய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். பணத் தட்டுப்பாடு இருக்காது.
பொதுப்பலன் - இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். ஒரு சிலர் சொத்துக்களை அடமானம் வைக்கவோ, அல்லது விற்பனை செய்வதோ போன்ற சூழ்நிலைகள் உருவாகும். உறவினர்களிடம் தேவையற்ற விரிசல் ஏற்படும். இது அனைத்தும் சில வாரங்களுக்கு நீடிக்கும். ஆனாலும் இந்த வாரம் சற்று அழுத்தங்களும் மனதைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மனபாரமும் ஏற்படும். காரணம் இந்த திங்கள் மற்றும் செவ்வாய் சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று கூடுதலாகவே பிரச்சினைகள் வரலாம். எனவே எதிலும் கவனமாக இருக்கவேண்டும். செயல்களில் தெளிவு இருக்கவேண்டும்.
இந்த வாரம் -
திங்கள் - சந்திராஷ்டம தினம் கவனமாக இருக்கவேண்டும். பேச்சில் நிதானம் தேவை. செயல்களில் அசட்டையாக இருக்கக்கூடாது. கை பொருட்களில் கவனம் வேண்டும், தொலைவதற்கும் வாய்ப்பு உண்டு.
செவ்வாய் - இன்று மதியம் வரை சந்திராஷ்டமம் இருக்கிறது. மதியத்திற்கு மேல் உங்களுடைய வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம். மதியத்திற்கு மேல் உதவிகள் கிடைக்கும். பணவரவு ஓரளவு இருக்கும்.
புதன் - இன்று அலைச்சல் அதிகரிக்கும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.
வியாழன் - கமிஷன் போன்ற வியாபாரங்கள் லாபம் ஏற்படும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். ஒரு முக்கிய பிரச்சினையை இன்று முடிவுக்கு கொண்டு வருவீர்கள்.
வெள்ளி - தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும். உடல் உழைப்பு அசதி தரும்.
சனி- கடன் சம்பந்தமான பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவீர்கள். ஒரு பெரிய கடனை எதிர்பார்த்து மற்ற சிறிய கடன்களுக்கு வாய்தா வாங்குவீர்கள்.
ஞாயிறு - அலுவலக வேலை விஷயமாக அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்கள், உறவினர்கள் இவர்களுக்காக முக்கிய வேலை ஒன்றை முடித்து கொடுப்பீர்கள். இன்று ஆதாயம் எதுவும் இல்லை.
வணங்க வேண்டிய தெய்வம் -
மகாலட்சுமி தாயாருக்கு வெண்தாமரை மலர் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வழிபடுங்கள். பணவரவில் தடை ஏதும் வராது, பிரச்சினைகள் பாதிப்பை உண்டாக்காது.

*******************************************************************************************************************

அஸ்தம் -
விடாமல் முயற்சி செய்து பல சாதனைகளை இந்த வாரம் செய்வீர்கள். தனவரவு திருப்தி தரும். அலைச்சல்கள் அதிகரிக்கும். வாரத்தின் முதல் பகுதி அதாவது புதன்கிழமை வரை அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்சினைகள் உங்களை நோக்கி வரும். வியாழக்கிழமைக்கு மேல் நன்மைகள் நடக்கத் தொடங்கும். தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும்.
உத்தியோகம் - வேலையில் அழுத்தங்கள் அதிகரிக்கும். குறைகளைக் கண்டுபிடித்து சுட்டிக் காட்டுவார்கள். சக ஊழியர் ஒருவர் அலுவலகத்தை விட்டு வெளியேறுவதால், அவர் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். வேலை மாற்று சிந்தனை அதிகமாகும். வீட்டுப் பிரச்சினைகளை நினைத்துக்கொண்டு அலுவலகப் பணிகளில் நிறைய குளறுபடிகள் செய்வீர்கள். வங்கியில் பணிபுரிவோர் பணத்தை கையாளும் போது கவனம் வேண்டும். இல்லையென்றால் நீங்கள் நடவடிக்கைக்கு ஆளாவீர்கள். சேவை சார்ந்த வேலைசெய்வோர் வாடிக்கையாளர்களிடம் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே நிதானமாக இருக்கவேண்டும். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும், இலக்குகளை எட்ட அதிகம் போராட வேண்டியது வரும்.
தொழில் - தொழிலில் ஓரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணம் ஓரளவுக்கு நன்மை தரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். மேலும் பல நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடுவீர்கள். வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் ஒருநாள் போல் ஒருநாள் இருக்காது, ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டே இருக்கும். வணிகர்கள் ,பெரு வியாபாரிகள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள்.
பெண்களுக்கு - குடும்பத்தில் சில சர்ச்சைகள் உருவாகும், பொறுமையும் விட்டுக் கொடுத்தால் பிரச்சினையை தீர்க்க உதவும். பிடிவாதம் பிடித்தால் மேலும் பிரச்சினைகள் அதிகமாகும். பூர்வீகச் சொத்து பாகப்பிரிவினை ஏற்படும். ஒருசிலருக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். உணவுக் கட்டுப்பாடு அவசியம்.
மாணவர்களுக்கு - ஆரம்பக்கல்வி மாணவர்கள் படிப்பில் கவனம் இருக்காது,விளையாட்டுத்தனமாக இருப்பார்கள். உயர்கல்வி படிப்பவர்கள் ஞாபக மறதி அதிகமாக இருக்கும். பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு பிரச்சினைகள் பெரிதாக ஏதுமில்லை.
கலைஞர்களுக்கு - ஆதாயம் தரும் ஒப்பந்தங்கள் ஏற்படும். புதிய நபர் ஒருவரின் அறிமுகம் கிட்டும். அவர் மூலமாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டு பயணங்கள் ஆதாயம் தரும்.


பொதுப்பலன் - ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் வரும். அலைச்சல்களை குறைத்துக் கொள்வது நல்லது. தொலைதூரப் பயணங்கள் ஏற்படும். வீட்டு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வாகனப் பழுது ஏற்படும். தாயாரின் ஆரோக்கியத்தில் சில பின்னடைவுகள் ஏற்படும், மருத்துவ ஆலோசனைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும். பொறுமை காக்க வேண்டும்.
இந்த வாரம் -
திங்கள் - நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரவு ஓரளவு உண்டு.
செவ்வாய் - இன்று சந்திராஷ்டமம். புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாதீர்கள்.
புதன் - அலைச்சல்கள் அதிகரிக்கும். குழப்பமான மனநிலை நீடிக்கும். முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள்.
வியாழன் - பணவரவு திருப்தி தரும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார முயற்சிகளில் ஆதாயம் ஏற்படும். இன்று அனைத்து வேலைகளும் வெற்றிகரமாகவே முடியும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.
வெள்ளி - பயணங்களை தள்ளிப்போடுவது நல்லது. வாகனப் பழுதுகளை சரி பார்க்க வேண்டும். சாலை விதிகளை சரியாக கடைபிடிக்க வேண்டும்.
சனி- வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்குவீர்கள். ஆதாயம் தரும் விஷயங்கள் நடைபெறும்.
ஞாயிறு - பேச்சுவார்த்தைகள் ஏதும் இருந்தால் தள்ளிப்போடுங்கள். இல்லையென்றால் தோல்வியில் முடியும். உங்கள் பெயரை பயன்படுத்தி இன்னொருவர் ஆதாயம் அடைவார்.
வணங்கவேண்டிய தெய்வம் - அருகிலிருக்கும் ஐயப்பன் கோயிலுக்கு சென்று வாருங்கள். ஐயப்பனுக்கு அபிஷேகத்திற்கு நெய் வாங்கித் தாருங்கள். பிரச்சினைகள் தீரும். கவலைகள் மறையும். பணவரவு மனநிறைவு உண்டாக்கும்.

************************************************************************************************************

சித்திரை -
வரவுகளும் செலவுகளும் சமமாக இருக்கும். முயற்சிகளில் ஓரளவு வெற்றி ஏற்படும். முயற்சி எடுப்பதற்கே சிறு தடைகள் வரும். திட்டங்களை வகுத்து விட்டு அதை செயல்படுத்த முடியாமல், ஒரு நம்பிக்கையின்மை உண்டாகும். ஆதாயம் இல்லாத ஒரு விஷயத்திற்குத் தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். பணத்தேவைகள் கடைசி நிமிடத்தில் பூர்த்தியாகும். பல்வேறு விதமான திட்டங்கள் மனதில் உருவாகும், அதில் எந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்படும். சகோதரர்களிடம் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். மனவருத்தங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்சினை முடிவுக்கு வருவதில் சிக்கல் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது வரும். செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள்.
உத்தியோகம் - வேலையில் இடமாற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு தொலைதூர இடமாற்றம் ஏற்படும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி எடுப்பீர்கள். ஒரு சிலர் அயல்நாடு செல்ல முற்படுவீர்கள், அது தொடர்பான முயற்சிகளில் இறங்குவீர்கள். சக ஊழியர்களிடம் தேவையற்ற சச்சரவுகள் ஏற்படும். உயரதிகாரிகளிடம் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். வங்கி பணியாளர்கள் பணத்தை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும். அரசு ஊழியர்கள் பணியில் கவனமாக இல்லாவிட்டால், உயரதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு ஆளாக வேண்டியது வரும். சேவை சார்ந்த வேலை செய்வோர் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும்.
தொழில் - தொழிலில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டு. அலைச்சல்கள், பயணங்கள் ஏற்படும். ஒரு சிலர் தொழிலை விரிவுபடுத்த கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். சொத்துக்களை அடமானம் வைக்க வேண்டியது வரும். லாபங்கள் கணிசமாக குறையும். கட்டுமானத் தொழில் செய்பவர்கள் விற்பனையை அதிகரிக்க நிறைய சலுகைகளை அறிவிப்பார்கள். ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்கள் அசலுக்கு விற்றால் போதும் என்ற நிலைக்கு வருவார்கள். பங்கு வர்த்தகத் துறை சார்ந்தவர்கள் ஓரளவு லாபம் பெறுவார்கள்.


பெண்களுக்கு - பொறுமை அவசியம். குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும். அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும். ஒரு சிலர் தனிக்குடித்தனம் போக முயற்சிப்பார்கள், சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு முடிவெடுங்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த வாரம் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
மாணவர்களுக்கு - கல்வியில் சராசரி முன்னேற்றம் இருக்கும். கவனம் தடுமாறும் . தேர்வுகள் ஏதும் இருந்தால் மதிப்பெண்கள் எதிர்பார்த்ததைவிட குறையும்.
கலைஞர்களுக்கு - ஒரு சில ஒப்பந்தங்கள் ஏற்படும். அது மன நிறைவைத் தரக் கூடியதாகவே இருக்கும். பண வரவு திருப்தியாக இருக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும்.
பொதுப்பலன் - முடிவெடுக்கும் விஷயத்தில் மற்றவர்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளுங்கள், அல்லது அவர்களுடைய கருத்தை அறிந்து கொள்ளுங்கள், அதன் பிறகு முயற்சி செய்யுங்கள். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். எனவே இந்த வாரம் அந்த முயற்சிகளில் இறங்குங்கள். உங்களுக்கு ஏற்கனவே உதவிய ஒரு நபர் இப்பொழுது, உங்களிடம் உதவி கேட்டு வருவார். உங்கள் சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் நடந்து கொள்ளுங்கள்.
இந்த வாரம் -
திங்கள் - பயணங்கள் ஏற்படும். அலைச்சல்கள் அதிகரிக்கும். சேமிப்புகள் கரையும்.
செவ்வாய் -வேண்டாத பிரச்சினைகள் வரும். பொறுமை அவசியம். நிதானம் தேவை.
புதன் - இன்று சந்திராஷ்டமம் கவனமாக இருக்க வேண்டும். பேச்சில் நிதானம் தேவை. கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
வியாழன் -தனவரவு திருப்தி தரும்.உதவிகள் கிடைக்கும் நண்பர்கள் உதவுவார்கள்.
வெள்ளி - பயணங்களால் ஆதாயம் ஏற்படும். ஒரு சில விஷயங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆதாயம் தரும் ஒரு விஷயம் சாதகமாக இருக்கும்.
சனி - தேவைகள் பூர்த்தியாகும். முயற்சிகள் வெற்றியாகும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.
ஞாயிறு - தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். சமூக வலைதள பயன்பாட்டை இன்று நிறுத்தவேண்டும். தேவையற்ற சர்ச்சைகள் உருவாக நீங்களே காரணமாக இருப்பீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் - மாரியம்மன் ஆலயத்திற்கு செல்லுங்கள். நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அம்மனை வழிபடுங்கள். சிவப்பு நிற புடவையை அம்மனுக்கு சாற்றி உங்கள் வேண்டுதலை வையுங்கள். அன்னை அனைத்தையும் செய்து தருவாள்.

**********************************************************************************************

சுவாதி -
பலவிதமான சிந்தனைகள் உருவாகும். தெளிவாக முடிவெடுக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். பணவரவில் தடை ஏதும் இருக்காது. வரவுகளும் செலவுகளும் சமமாக இருக்கும். ஒரு சிலருக்கு மருத்துவச் செலவு ஏற்படும். உறவினர்களின் விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள், அவர்களுக்காக ஒரு சில சுபச் செலவுகளை செய்ய வேண்டியது வரும். வீடு, நிலம் போன்றவற்றை வாங்குவதற்கும் அல்லது முதலீடு செய்வதற்கும் வாய்ப்புகள் உண்டு.
உத்தியோகம் - அலுவலக விஷயமாக அலைச்சல்கள் ஏற்படும். பணிச்சுமை கூடும். ஆனால் பாதிப்புகள் ஏதும் இருக்காது. சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் கருத்துக்கள் பரிசீலனைக்கு உட்படும் .சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் அலைச்சல் அதிகரிக்கும், ஆதாயம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவார்கள். பெரிய ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். வெளிநாடுகளில் வேலை தேடும் முயற்சிகள் வெற்றியை தரும். சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாற முயற்சி எடுப்பார்கள், இந்த முயற்சி வெற்றி பெறும்.
தொழில் -நல்ல வளர்ச்சி ஏற்படும். முன்னேற்றமான தகவல்கள் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகள் வெற்றி தரும். புதிய நிறுவனங்களை ஆரம்பிக்க இது சரியான நேரம். புதிய தொழில் தொடங்கும் ஆர்வமுள்ளவர்கள் இப்போது அந்த முயற்சியைத் தொடங்கலாம். ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்கள் வளர்ச்சியைக் காண்பார்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு சராசரி வளர்ச்சி ஏற்படும். மொத்த வியாபாரிகள் நல்ல லாபம் பார்ப்பார்கள். சிறு வியாபாரிகள் தங்கள் கடைகளை விரிவுபடுத்துவீர்கள்.
பெண்களுக்கு - திருமண முயற்சிகள் கைகூடும். திருமணமான பெண்களுக்கு இப்பொழுது குழந்தை பாக்கியம் உண்டாகும். உங்கள் கணவருக்கு இப்பொழுது இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை ஏற்படும். உறவினர்களின் சுப விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.
மாணவர்களுக்கு - கல்வியில் சராசரி வளர்ச்சி உண்டு. தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி முயற்சிகள் வெற்றியாகும்.
கலைஞர்களுக்கு - ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு சிலர் அயல்நாடுகளுக்குச் சென்று கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தன வரவு திருப்திகரமாக இருக்கிறது.
பொதுப்பலன் - அலைச்சல் அதிகமாக இருந்தாலும் ஆதாயம் ஏற்படும். தனவரவு திருப்தி தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்கள் இல்லங்களில் நடக்கும் சுப விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். சொத்து சம்பந்தமான பாகப்பிரிவினைகள் சுமுகமாக நடைபெறும், பிடிவாதங்கள் பிடித்தால் தேவையற்ற சர்ச்சைகள் உருவாகி பாகப்பிரிவினைகள் தள்ளிப் போகலாம்.


இந்த வாரம் -
திங்கள் - உறவினர்கள், நண்பர்கள் சம்பந்தபட்ட விஷயங்களுக்காக நீங்கள் அதிகம் உழைக்க வேண்டிவரும். அலைச்சல்கள் அதிகரிக்கும்.
செவ்வாய் - பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்த முயற்சி வெற்றி பெறும். வங்கிக்கடன் எதிர்பார்த்தால் இன்று நல்ல தகவல் கிடைக்கும்.
புதன் - அமைதியாக இருப்பது நல்லது. வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். உங்கள் செயல் மற்றவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்.
வியாழன் -இன்று சந்திராஷ்டமம். அமைதியாக இருப்பது நல்லது. வீண் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். வாக்குவாதத்தை தவிர்த்துவிடுங்கள்.
வெள்ளி - அதிக நன்மைகள் ஏற்படும். பலவிதமான உதவிகள் தேடி வரும். தனவரவு திருப்தி தரும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.
சனி -அலைச்சல்கள் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்களுக்காக செலவு செய்ய வேண்டியது வரும்.
ஞாயிறு - எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் நடக்கும். வெற்றிகள் குவியும் . முயற்சிகள் அனைத்தும் சாதகமாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் - ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள், நன்மைகள் அதிகமாகும். எதிர்ப்புகள் குறையும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x