Published : 22 Oct 2019 09:30 am

Updated : 22 Oct 2019 09:30 am

 

Published : 22 Oct 2019 09:30 AM
Last Updated : 22 Oct 2019 09:30 AM

இந்த வார நட்சத்திர பலன்கள் - அக்டோபர் 21 முதல் 27ம் தேதி வரை - விசாகம் முதல் உத்திராடம் வரை 

vaara-natchathira-palangal

- ஜோதிடர் ஜெயம் சரவணன்


விசாகம் -
வாரத் துவக்கத்தில் நற்பலன்களும், வாரத்தின் கடைசி இரண்டு நாட்கள் விரக்தியும் ஏற்படும். எதிர் பார்த்த பணம் கிடைக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். விரும்பிய பொருளை வாங்குவீர்கள். குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள். ஒரு சில முயற்சிகள் தாமதம் ஆகும்.

உத்தியோகம் - பணியில் நிறைவு உண்டாகும். பணியிடத்தில் பெரிய பிரச்சினைகள் ஏதும் இருக்காது. அலுவலகத்தின் சார்பாக மேற்கொள்ளும் பயணங்கள் பயன் தராது. ஏமாற்றம் மிஞ்சும். ஆனாலும் உத்தியோகத்தில் பாதிப்புகளும் பின்னடைவும் இருக்காது. அரசு ஊழியராக இருந்தால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். கட்டுமானத் தொழிலாளர்கள் உழைப்பு அதிகமாக இருக்கும். ஊதியம் தாமதமாக கிடைக்கும். ஆனால் சரியான நேரத்தில் தொகை கைக்கு வந்து சேரும்.

தொழில் - தொழில் வளர்ச்சி நோக்கிச் செல்லும். ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வங்கிக்கடன் இப்போது கிடைக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய இயந்திரங்கள் வாங்குவது பற்றி சிந்தனை தோன்றும், அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்கள் இந்தவாரம் அதற்கான ஆதாரங்களை, பொருளாதாரத் தேவைகளை பெறுவார்கள். வியாபாரத்திற்கு இடம் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது இடம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். நீண்டநாள் பிரச்சினையை இப்போது பேசித் தீர்த்து விடுவீர்கள்.

பெண்களுக்கு - மனம் மகிழும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் இருமடங்காகும். சொத்துச் சேர்க்கை உண்டு. சகோதர வழியில் ஆதரவு கிடைக்காது. அதேபோல சகோதரர்களிடம் வருத்தங்களும் நேரலாம்.

மாணவர்களுக்கு - கல்வியில் சிறப்பான முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் உதவிக்கு வருவார்கள். மதிப்பெண்கள் அதிகமாகப் பெறுவீர்கள்.

கலைஞர்களுக்கு - நிறைய வாய்ப்புகள் வரும். தகுதியானதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். வருமானம் இரு மடங்காக இருக்கும்.

பொதுப்பலன் - வாரத் துவக்கம் சிறப்பாக இருந்தாலும் வாரக்கடைசியில் சிரமங்கள் உண்டாகும். ஒருசிலருக்கு கழுத்து, தொண்டை போன்ற இடங்களில் வலி ஏற்படும். தொண்டையில் தொற்று ஏற்படலாம். அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். ஒரு சிலருக்கு திருமணம் நிச்சயமாகும். வீட்டிற்கு புதிய உறுப்பினர் வருவார். அதாவது குழந்தை பேறுக்கான வாய்ப்பு உண்டாகும்.
இந்த வாரம் திங்கள், புதன், வியாழன், சனி இந்த நான்கு நாட்களும் நல்ல பலன்களைத் தரும். பணவரவு உண்டாகும். ஒப்பந்தங்கள் கையெழுத்து இடலாம். பயணங்கள் லாபம் தரும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு இந்த மூன்று நாட்கள் பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். ஒப்பந்தங்கள் போட வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம் - எல்லை தெய்வங்களான காவல் தெய்வங்கள் அய்யனார், முனீஸ்வரன், கருப்பசாமி போன்ற காவல் தெய்வங்களை வணங்குவது பெரும் நன்மைகளைத் தரும்.

******************************************************************************************************


அனுஷம் -
நிதானமாகச் செயல்பட்டு சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். இருந்தாலும் யாருக்கும் வாக்கு கொடுக்கக்கூடாது. ஜாமீன் தரக்கூடாது. இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மற்றபடி குழப்பங்கள் இருந்தாலும் தெளிவுகள் ஏற்படும். என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாகத் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம்.

உத்தியோகம் - உத்யோகத்தில் வழக்கம் போல வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். மற்றவர் வேலைகளையும் நீங்களே செய்ய வேண்டியது வரும். சக ஊழியர்கள் உயரதிகாரிகள் அனைவரிடமும் அனுசரித்துப் போவது நல்லது. வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம். உங்கள் கருத்து ஏற்கப்பட மாட்டாது. எனவே கருத்து சொல்வதை தவிர்த்துவிடுங்கள். நிதானமாகச் செயல்பட்டால் எந்த பிரச்சினைகளும் வராது. உடலுழைப்பு தொழிலாளர்கள் அதிக உழைப்பைத் தர வேண்டியது வரும்.

தொழில் - தொழிலில் ஏற்றங்களும் இறக்கங்களும் மாறிமாறி வரும். ஒரு நாள் போல மறுநாள் இருக்காது. நம்பிக்கை தந்த விஷயங்கள் ஏமாற்றத்தைத் தரும். கடன் அதிகமாகும். வங்கி நெருக்கடி, அரசின் நெருக்கடி அதிகமாகும். எனவே வளைந்து கொடுத்துச் சென்றால் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். வழக்குகளை முடிந்தவரை தள்ளிப்போடுங்கள். இல்லை என்றால் உங்களுக்கு எதிராகவே தீர்ப்புகள் வரும். புதிதாக தொழில் செய்யலாம் என்ற சிந்தனை உடையவர்கள் சற்று பொறுமையாக இருங்கள். காலம் காத்திருக்கிறது.

பெண்களுக்கு - கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். எவரிடமும் அளவாகப் பேசுங்கள். சேமிப்புகள் கரையும். பிரச்சினைகளை தீர்க்க அதிக கடன் வாங்க வேண்டியது வரும்.

மாணவர்களுக்கு - கவனம் திசை திரும்பாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் போகும். தவறான நட்பு ஏற்படும். அதைத் தவிர்க்க பாருங்கள்.


.
கலைஞர்களுக்கு - நிதானமாக இருந்தால் வெற்றியைத் தொடலாம். அலைச்சலைக் குறைத்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்.

பொதுப்பலன் - பயணங்களில் கூடுதல் கவனம் வேண்டும். பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்துங்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். சொத்துக்களை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். கடன் வாங்குவதை விட இப்படி சொத்துக்களை விற்பது தவறல்ல. காரணம் இப்போது கடன் வாங்கினால் திரும்பக் கட்ட முடியாது. காசோலைகளைத் திட்டமிட்டு தாருங்கள். ரத்த அழுத்தப்பிரச்சினை உள்ளவர்கள் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த வாரம் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிறு இந்த ஐந்து நாட்களும் நன்மைகள் தரும்.
வியாழன் மற்றும் சனி இந்த இரு நாட்களும் சாதகமாக இல்லை.

வணங்க வேண்டிய தெய்வம் - துர்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள். ஸ்ரீ துர்கா அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். குழப்பங்கள் தீரும். தைரியம் பிறக்கும். எதிரிகள் விலகுவார்கள்.

**************************************************************************************************************


கேட்டை -


தலைக்குள் யாரோ அமர்ந்து பேசுவது போல் இருக்கும். மன அழுத்தம் உண்டாகும்.விரக்தி மற்றும் ஒருவித வெறுமை ஏற்படும். விபரீத சிந்தனைகள் ஏற்படும். குலதெய்வத்தின் அருள் இருப்பதால் இதையெல்லாம் தாண்டி வருவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேருவதில் தாமதம் ஏற்படும். மனஅமைதிக்காக ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள். ஒரு கடனை அடைக்க வேறு கடன் வாங்குவீர்கள்.

உத்தியோகம் - வேலையில் அழுத்தங்கள் உண்டு. சகஊழியர்கள் வெறுப்பைக் காட்டுவார்கள். உங்கள் மீது தவறான கருத்துக்களை உயர் அதிகாரிகளிடம் போட்டுக் கொடுப்பார்கள். எடுத்துக்கொண்ட வேலைகள் உடனே முடியாது. தாமதங்கள் ஏற்படும். நேர விரயம் ஏற்படும். அழுத்தம் தாங்காமல் வேறு வேலைக்கு மாறும் சிந்தனை தோன்றும். இதற்கெல்லாம் ஒரே தீர்வு வெளிநாட்டு வேலைக்கு செல்வது தான். அயல்நாட்டுக்கு சென்றால் இந்த பாதிப்புகள் எதுவும் இருக்காது. இது அனைவருக்கும் பொருந்தும்.

தொழில் - சிரமம் இருந்தாலும் ஏதோ சமாளித்துக் கொண்டு இருப்பீர்கள். கடன்கள் நெருக்கடி கொடுக்கும். இருப்பதை இருப்பது போலவே கொண்டு சென்றால் ஒரு பிரச்சினையும் வராது. டிராவல்ஸ் டிரான்ஸ்போர்ட் நடத்துபவர்கள் வாகனங்களை சரியாக பராமரியுங்கள். இல்லை என்றால் நிறைய செலவுகள் ஏற்படுத்தும். வியாபாரிகளுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. வியாபாரம் செழிப்பாக இருக்கும். வர வேண்டிய பாக்கிகள் இப்போது வசூலாகும்.

பெண்களுக்கு - பெரிய சிரமங்கள் ஏதும் இருக்காது. பணப்புழக்கம் சீராக இருக்கும். உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

மாணவர்களுக்கு - கல்வியில் கூடுதல் கவனம் வேண்டும். அசட்டையாக இருந்தால் தேர்வில் கோட்டை விடுவீர்கள்.

கலைஞர்களுக்கு - சிறப்பான வாய்ப்புகள் வரும். அலட்சியத்தால் ஏமாற்றம் வரும். எனவே எந்த வாய்ப்பையும் நழுவ விட வேண்டாம்.

பொதுப் பலன் - மனக்குழப்பம் இருக்கும். எது சரி எது தவறு என உணர முடியாது. உங்கள் கஷ்டங்களை காது கொடுத்துக் கூட எவரும் கேட்க மாட்டார்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். சம்பந்தமில்லாத விஷயத்தில் கருத்து சொல்லாதீர்கள். கூட்டமாக இருந்தால் எட்டிப் பார்க்காதீர்கள். எட்டி பார்த்த குற்றத்திற்காக சாட்சியாக சேர்க்கப்படுவீர்கள். உடல் நலனில் கவனம் வேண்டும். வாயுத் தொல்லை, முதுகில் வாயுப்பிடிப்பு, இடுப்பு வலி வரும்.
இந்த வாரம் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், சனி இந்த ஐந்து நாட்கள் நன்மைகள் நடக்கும்.வெள்ளி மற்றும் ஞாயிறு சாதகமாக இல்லை.

வணங்க வேண்டிய தெய்வம் - காளி அல்லது பிரத்தியங்கரா தேவிக்கு அபிஷேகப் பொருட்கள் வாங்கித் தாருங்கள். பிரச்சினைகள் வராமல் காப்பற்றப்படுவீர்கள்.

********************************************************************************************************

மூலம் -


வரவுகளும் அதற்கேற்ற செலவுகளும் சமமாக இருக்கும். சுபவிரயங்கள் ஏற்படும். திங்கள், செவ்வாய், சந்திராஷ்டமம். எனவே இந்த இரண்டு நாட்கள் குழப்பமான மன நிலை இருக்கும். புதன் முதல் நல்ல பலன்கள் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

உத்தியோகம் - பணியிடத்தில் இறுக்கமான சூழ்நிலை இருக்கும். அது மெல்ல சகஜ நிலைக்கு மாறும். பணி இடமாற்றம் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இப்போது இடமாற்றம் உறுதியாகும். சக ஊழியர்களிடம்
எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் உங்களுக்கு எதிராக மாறக் கூடும். உடல் உழைப்பு தொழிலாளர்கள் உழைப்பும் அதற்கேற்ற வருமானமும் கிடைக்கப் பெறுவார்கள். பயணங்கள் அதிகம் உடையவர்கள், அலைச்சல் மிகுந்த வேலை செய்பவர்கள் இப்போது பதவி உயர்வு, ஊதிய உயர்வு பெறுவார்கள். வியாபார நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேறு நிறுவனம் மாறுவார்கள். கட்டுமான தொழில் ஊழியர்கள் ஊர் விட்டு ஊர் சென்று வேலை பார்ப்பார்கள்.

தொழில் - வளர்ச்சிப் பாதைக்கு செல்லும், இனி செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வீண் விரயங்கள், அலைச்சல்கள் குறையும். வெளிநாடுகளில் இருந்து ஒப்பந்தங்கள் அல்லது உதவிகள் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்வர்கள் கூட்டாளிகளிடம் அனுசரித்துச் செல்லுங்கள். வியாபார நிறுவனங்கள் நடத்துபவர்கள் அளவான லாபம் பார்ப்பார்கள். தரகு தொழில், கமிஷன் மண்டி, போக்குவரத்து நிறுவனங்கள் நடத்துபவர்கள் அதிகம் மெனக்கெட்டு அலைந்து பின் வருமானம் கிடைக்கப் பெறுவார்கள்.

பெண்களுக்கு - மூத்த சகோதர வழியில் ஆதாயம் கிடைக்கும். திருமணம் உறுதி செய்யப்படும். அயல்நாட்டு வரன் அமையும். அரசு வேலை கிடைக்கும். பதவி உயர்வு வாய்ப்பும் உண்டு.

மாணவர்களுக்கு - படிப்பைத் தவிர மற்ற அனைத்து ஆடம்பர விஷயங்களிலும் நாட்டம் ஏற்படும். கவனம் சிதறாமல் இருந்தால் சாதிக்கலாம்.

கலைஞர்களுக்கு - அதிக லாபம் உடைய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணத்தட்டுப்பாடு இருக்காது. நண்பர் ஒருவரால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.

பொதுப் பலன் - அலைச்சலும் விரயங்களும் இருந்தாலும் கடைசி நேரத்தில் பணம் கிடைத்துவிடும். வங்கியில் கடன் இப்போது எளிதாகக் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்யும் முயற்சியை சற்று தள்ளி வையுங்கள். சுய ஜாதகம் பலமாக இருந்தால் தடையில்லை. இந்த வாரம் புதன், வியாழன், வெள்ளி, ஞாயிறு இந்த நான்கு நாட்கள் மிக நல்ல பலன்கள் நடக்கும். வருமானம் பெருகும்.
திங்கள், செவ்வாய், சனி இந்த மூன்று நாட்களும் எதிர்மறையான விஷயங்கள் நடக்கும். எனவே இந்த மூன்று நாட்களையும் அமைதியாக கடந்து செல்வதே நல்லது.

வணங்க வேண்டிய தெய்வம் - ஸ்ரீபைரவருக்கு செவ்வரளி மாலை சூட்டி, தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் பெருகும். தடைகள் விலகும்.

***********************************************************************************************

பூராடம் -

மனதிற்கு இனிய சம்பவங்கள் நடக்கும். முயற்சிகள் வெற்றியாகும். இதுவரை இருந்த மனபாரம் அகலும். வேலை இல்லாமல் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். தேவைக்கேற்ப பணப்புழக்கம் இருக்கும். கடன்கள் ஓரளவு தீரும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். திருமணம் உறுதிசெய்யப்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

உத்தியோகம் - உத்தியோகத்தில் மன நிம்மதி உண்டாகும். குறித்த வேலைகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பதவி உயர்வு கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு இப்போது நல்ல பதில் கிடைக்கும். ஒருசிலருக்கு பணி ஒப்பந்தம் ஏற்படும். அயல்நாடுகளில் வசிப்பவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். குடியுரிமை பெறவும் வாய்ப்புகள் உள்ளன. உழைப்பாளர்கள் நல்ல ஊதியம் பெறுவார்கள். அரசு வேலைக்கு முயற்சி செய்தவர்கள் இப்போது அதற்கான பணி ஆணை பெறவும் வாய்ப்பு உள்ளது.

தொழில் - மெல்ல வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும். தடைகள் படிப்படியாக அகலும். எதிர்பார்த்த வங்கிக்கடன் இப்போது கிடைக்கும். தொழிலில் பலவிதமான ஒப்பந்தங்கள் ஏற்படும். அயல்நாட்டு நிறுவனத்துடன் இணைந்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். பெரும் தொழில் அதிபர்கள் வெளிநாடுகளில் தங்கள் கிளைகளை திறக்கவும் வாய்ப்புண்டு. புதிய தொழில் முனைவோர் நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். வியாபாரிகள் கணிசமான லாபம் பார்ப்பார்கள். டிராவல்ஸ் மற்றும் டிரான்ஸ்போர்ட் நடத்துபவர்கள் செலவுகள் குறைந்து லாபம் அதிகமாக பெறுவார்கள். ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி பெறும், நீண்ட நாளைய பேச்சுவார்த்தைகள் இப்போது முடிவுக்கு வந்தது வியாபாரம் முடியும். வீட்டு வேலை சார்ந்த சேவை நிறுவனங்கள் நடத்துபவர்களுக்கு பலவிதமான வாய்ப்புகள் கிடைத்து நிறுவனத்தின் வளர்ச்சியை பார்ப்பார்கள்.

பெண்களுக்கு - மனம் மகிழும் சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சகோதரர்கள் உதவுவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

மாணவர்களுக்கு - கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. மறதி என்பது மறந்துபோகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

கலைஞர்களுக்கு - வாய்ப்புகள் நாலாபக்கமும் வரும். நல்லதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நண்பர்களால் நிறைய உதவிகள் பெறுவீர்கள். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். ஒரு சிலர் வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்பு உண்டு.

பொதுப்பலன் - வாய்ப்புகள் வரும்போது அதைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். விரயங்கள் இருந்தாலும் அவை முதலீடுகளுக்கான அறிகுறி என்பதை உணருங்கள். சொந்தவீடு வாங்கும் கனவு இப்போது நிறைவேற வாய்ப்புகள் கிடைக்கும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். செவ்வாய் மற்றும் புதன் சந்திராஷ்டம நாட்கள், இந்த இரு நாட்களைத் தவிர மற்ற நாட்கள் நல்ல பலன்களைக் கொடுக்கும். குறிப்பாக வியாழன் வெள்ளி, சனி மூன்று நாட்களும் நல்ல பலன்களை தரும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் - ஸ்ரீஅனுமனுக்கு துளசியால் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வழிபடுங்கள், மேலும் நற்பலன்கள் நடப்பதைக் காண்பீர்கள்.

*****************************************************************************************************************************

உத்திராடம் -
சுறுசுறுப்பாக செயலாற்றி சாதனைகளை புரிவீர்கள். இதுவரை இருந்த தேக்க நிலை மாறி சிறப்பான நேரம் துவங்கிவிட்டது, இனியும் தாமதிக்காமல் சுறுசுறுப்பாகப் பணியாற்றினால் எல்லாம் வெற்றியாகும். நீண்ட நாள் கனவு இப்போது நிறைவேறும். சொந்த வீடு வாங்குவீர்கள். திருமணம் நடக்கும். விவாகரத்து ஆனவர்களுக்கு இப்போது நல்ல வரன் அமையும். குழந்தை இல்லாமல் ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

உத்தியோகம் - பணியிடத்தில் இருந்த அழுத்தங்கள் தீரும். அனைவரும் உங்களுக்கு பக்கத் துணையாக இருப்பார்கள். உயரதிகாரிகள் உங்களிடம் கரிசனம் காட்டுவார்கள். பதவிஉயர்வு சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். தேவையற்ற இடமாற்றம் இப்போது ரத்து செய்யப்படும். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு வரும். கட்டுமான நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வருமானம் இருமடங்காக உயரும் . விற்பனைப் பிரதிநிதிகள் இந்தவாரம் தங்களுடைய இலக்கை எட்டுவார்கள். அரசு உத்தியோகம் எதிர்பார்த்தவர்களுக்கு இப்போது பணி ஆணை கிடைக்கும்.

தொழில் - வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும். நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும். நிறைய ஆர்டர்கள் பெறுவீர்கள். கூட்டாளிகள் ஒத்துப் போவார்கள். புதிய தொழில் தொடங்குவது, கிளை நிறுவனங்கள் தொடங்குவது என அனைத்தும் சாதகமாக இருக்கும். அரசு வழி அனுமதிகள் எளிதாக கிடைக்கும். அரசு வழியில் இருந்த சச்சரவுகள்,வழக்குகள் தீர்வதற்கான வழி கிடைக்கும். மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடும்போது உங்கள் நிறுவனம் லாபகரமாக இருக்கும். வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபார விஷயம் ஒன்று சுமூகமாக முடியும்.

பெண்களுக்கு - எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். சகோதரர்கள் உதவுவார்கள். சொந்த வீடு வாங்குவீர்கள். ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். குழந்தைபாக்கியம் கிடைக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியம் மேம்படும்.

மாணவர்களுக்கு - கல்வியில் அசாத்திய முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு சென்று கல்வி பயிலும் வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்கள் உதவுவார்கள்.

கலைஞர்களுக்கு - திரைத்துறை சின்னத்திரை மற்றும் இசை, நாட்டியக் கலைஞர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் உருவாகும். அரசு வழி ஆதரவுடன் சாதனைகளை நிகழ்த்துவீர்கள். வெளிநாடு சென்று பணம் ஈட்ட வாய்ப்புகள் உருவாகும்.

பொதுப்பலன் - நல்ல நேரம் நடக்கும்போது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அந்தவகையில் இப்போது பொன்னான நேரம் நடப்பதால் சொத்து சேர்க்கைகளை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். சிக்கனமாக செலவு செய்யவேண்டும், சொந்தவீடு, இடம் பூமி வாங்கிப் போடுதல், விவசாய நிலம் வாங்குதல், அதில் விவசாயம் செய்தல் போன்றவை நடப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. திருமணம் நிச்சயமாகும். இந்த வாரம் புதன், வியாழன், வெள்ளி க்கிழமை காலை வரை சந்திராஷ்டமம் இதைத் தவிர்த்து மற்ற நாட்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவும் நற்பலன்களும் நடக்கும் வண்ணமாகவும் உள்ளன.

வணங்கவேண்டிய தெய்வம் - திருமலை திருப்பதி சீனிவாச பெருமாளை வணங்கி வாருங்கள். நன்மைகள் அதிக அளவில் நடக்கும். தடைகள் அகலும். நிம்மதி பிறக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

இந்த வார நட்சத்திர பலன்கள் - அக்டோபர் 21 முதல் 27ம் தேதி வரை - விசாகம் முதல் உத்திராடம் வரைவார நட்சத்திரப் பலன்கள்ஜோதிடர் ஜெயம் சரவணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author